திருமுருகன் காந்தி தொலைபேசியை மோடி அரசு உளவு பார்த்ததற்கான ஆதாரம் வெளியானது!
பல நாடுகளின் அரசுகள் தங்கள் நாட்டை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசியை, பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்னும் செயலியின் மூலம் உளவு பார்த்துள்ளதாக உலகின் முன்னணி பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. அதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் ஒன்று என்னும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
பெகாசஸ் ஸ்பைவேர் என்பது ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன் செயலி (App) ஆகும். இதனை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. (NSO) என்னும் கண்காணிப்பு நிறுவனம் உருவாக்கி, தான் விரும்பும் அரசிற்கு அல்லது அரசு நிறுவனத்திற்கு உளவு பார்ப்பதற்காக வணிகரீதியாக வழங்குகிறது. அப்படியாக, பல்வேறு நாடுகளின் அரசுகள், உளவு பார்க்க வேண்டும் என்று வழங்கிய தொலைபேசி எண்களில் 50,000-க்கும் அதிகமான தொலைபேசி எண்கள் சில மாதங்களுக்கு முன்பு கசிந்துள்ளன. இதனை ஆராய்ந்து, இந்தியாவின் தி வயர் (The Wire), இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் தி வாசிங்டன் போஸ்ட் உட்பட உலகின் முன்னணி பத்திரிக்கைகள் பல 18-07-2021 அன்று இரவு செய்தியாக வெளியிட்டுள்ளன. அதில், இந்தியாவை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் மொபைல் எண்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று தான் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசி எண்.
Activist & founder of May 17 movement @thiruja name figures in the list of those who have been targeted by using #pegasus in Tamil Nadu. pic.twitter.com/zAL59nob7x
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) July 18, 2021
தோழர் திருமுருகன் காந்தி, தமிழீழ விடுதலை மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை சிக்கல்களை முன்வைத்து போராடி வரும் தமிழ்த்தேசிய அமைப்பான மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். தமிழீழ இனப்படுகொலைக்கான நீதி, காவிரி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, கூடங்குளம் அணுஉலை, நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு வாழ்வுரிமை போராட்டங்கள், ஆணவப்படுகொலைகள், நீட் தேர்வு உள்ளிட்ட சமூகநீதி செயல்பாடுகள் போன்றவற்றை முன்வைத்து போராடி வரும் தமிழ்த்தேசிய அமைப்பாக மே பதினேழு இயக்கம் இருக்கிறது. இவ்வாறு மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பல்வேறு போராட்டங்கள், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ளும் தமிழின விரோத அரசியலுக்கு இடையூறாக உள்ளது. மேலும் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், ஒன்றிய பாஜக அரசின் தமிழின விரோத போக்கை தமிழர்களிடையே அம்பலப்படுத்துவதும், தமிழர்களை எளிமையாக அரசியல்படுத்தும் வேலையை செய்வதும், தமிழ்நாட்டில் பாஜக அரசியல் எடுபடாமல் போகிறது. பாஜக அரசியலுக்கு தடையாக இருக்கும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை முடக்கிவிட்டால், தமிழ்நாட்டு அரசியலை மாற்றிட முடியும், தமிழ்நாட்டு அரசியலில் இலகுவாக செயல்பட முடியும் என்ற நோக்கத்திலேயே தான், அவரது தொலைபேசியை உளவு பார்த்து அவரது தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேற்கண்ட காரணங்களினால், 2017 முதல் தோழர் திருமுருகன் காந்தி உட்பட மே 17 இயக்கத் தோழர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாடு அளவில் முன்னெடுத்து செல்வதற்கு மே 17 இயக்கம் காரணமாக இருந்தது. ஆகையால், ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் நடத்தி வரும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை 2017 மே மாதம் நடத்தியதற்காக தோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 100 நாட்களுக்கு மேலாக சிறைவாசத்திற்கு பிறகு, குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது வெளியே வந்து தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக, 124-A பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குகள் பதியப்பட்டன. நச்சு வாயுவை வெளியிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே மாதம் தூத்துக்குடி மக்கள் போராடிய போது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, ஸ்னோலின் உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டதை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தோழர் திருமுருகன் காந்தி பதிவு செய்தார். இதற்காக தேடும் நபராக அறிவிக்கப்பட்டு, நாடு திரும்பிய போது பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து உபா (UAPA) என்னும் கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 53 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். அவரது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி மீது அடுத்தடுத்து 40 வழக்குகளுக்கு மேல் பதியப்பட்டன. பின்னர் அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை சந்திக்க இன்றளவும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்று வருகிறார்.
தோழர் திருமுருகன் காந்தி மீதி பாஜக அரசு கொண்ட வன்மம் அக்கட்சியின் தலைவர்கள் மூலமாக வெளிவந்தது. தொலைக்காட்சி விவாதங்களில் தோழர் திருமுருகன் காந்தியை எதிர்கொள்ள முடியாத பாஜகவினர், அவரை ஊடகங்கள் அழைக்கக் கூடாதென நெருக்கடி கொடுத்தனர். பாஜக அரசின் நெருக்கடியை சந்தித்ததால், தோழர் திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்களை ஊடகங்கள் புறக்கணிப்பும் செய்தன. மே பதினேழு இயக்கம் தொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருப்பது, இரட்டடிப்பு செய்வது போன்றவையும் நடந்தேறின. அதேபோல், மே பதினேழு இயக்கத்தோடு இணைந்து போராட்டங்களில் பங்கேற்ற பல்வேறு தோழமை அமைப்புகள் மீது சிபிசிஐடி நெருக்கடி கொடுத்தது. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் தலைமையில் 2019 டிசம்பரில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு, மே பதினேழு இயக்கத்தின் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், தோழர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த காலகட்டத்தில் தான், தோழர் திருமுருகன் காந்தியின் தொலைபேசி மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும். தோழர் திருமுருகன் காந்தியை முடக்கினால் மே பதினேழு இயக்கதை முடக்கிவிடலாம் என்பதே பாஜகவின் எண்ணம். மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என தற்போது வெளிவந்துள்ள பட்டியலில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசி எண் உள்ளது என்ற செய்தி, மே பதினேழு இயக்கத்தை முடக்க பாஜக அரசு முயல்கிறது என்பதையே காட்டுகிறது. மேலும், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தற்போது தொலைபேசி உளவு பார்க்கப்பட்டவருள் ஒருவரான ரோனா வில்சன் என்பவது மடிக்கணினி ஹேக் (Hack) செய்யப்பட்டு போலியான மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியது போல் நிறுவப்பட்டது. அதனை அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்றும் உறுதிபடுத்தியது. ஆனாலும் என்ஐஏ மறுத்தது. இப்படியாக போலியான தரவுகள் மூலம் பீமா கோரேகான் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ரோனா வில்சன் உட்பட பலர் பிணை கூட வழங்கப்படாமல் மூன்று ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் உள்ளனர். அதேபோல், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியிலும் போலியான தகவல்களை நிறுவி, தோழர் திருமுருகன் காந்தி அவர்களை சதியின் மூலம் ஏதேனும் ஒரு வழக்கில் சிக்க வைக்கும் பாஜக அரசின் கீழ்த்தரமான முயற்சி என்றே தெரிகிறது. உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் 2018 காலகட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி மீது அரசு சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டதை “ஆபரேசன் டிஎம்ஜி” என்று நக்கீரன், விகடன் போன்ற பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி எழுதின என்பதையும் நினைவுகூர வேண்டும்.
பெகாசஸ் உளவு விசயத்தில் வெளிவந்துள்ள பெயர்களில் பெரும்பாலானவை பாஜகவிற்கு எதிராக விமர்சனப் பார்வை கொண்டிருப்பவர்கள் என்பதை அரிய முடிகிறது, தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் அப்படியான விமர்சனப் பார்வை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இரண்டு அமைச்சர்களின் தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. சொந்த கட்சியில் உள்ளவர்களை மேற்கொண்டு வளரவிடாமல் தடுக்க, அல்லது சந்தேகத்தோடு அணுவதையே இது காட்டுகிறது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் கூட முக்கிய துறைகளை பார்த்து வந்த பல மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அப்படியான முடிகள் எடுக்க இது போன்ற உளவு வேலைகளை மோடி அரசு செய்யக்கூடும். இந்த பட்டியலில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரது தொலைபேசி எண்ணும் உள்ளது, நீதிபதி லோயா மரணம் தொடர்பான சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் முடித்துவைக்கப்பட்ட பிறகு நீதித்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பாஜக அரசிற்கு சாதகமாக அமைந்தன என்பதும், பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீரின் ஆர்டிகிள் 370 உள்ளிட்ட பல முக்கியமான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பாஜக அரசியலுக்கும், மோடி அரசிற்கும் சாதகமாக அமைந்ததை இதன் பின்னணியில் காண வேண்டும். அம்பானி அதானிகளை உலக பணக்காரர் பட்டியலில் கொண்டு வர மோடி கடுமையாக உழைக்கும் நிலையில், பல தொழிலதிபர்களின் தொலைபேசிகளும் உளவு பார்க்கப்பட்டுள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
பெகாசஸ் உளவு வேலை செய்தி வெளிவந்த உடனே, அப்படியான எவ்வித உளவு செயலையும் மேற்கொள்ளவில்லை என இந்திய ஒன்றிய பாஜக அரசு மறுத்துள்ளது. தனிநபர் உரிமையை மதிப்பதாகவும், சட்டவிரோதமாக உளவு பார்க்கும் செயலில் பாஜக அரசு ஒருபோதும் ஈடுபடாது என்று விளக்கம் அளித்துள்ளது. அதேவேளை தனது நாட்டை சேர்ந்த பல முக்கிய நபர்களின் தனிப்பட்ட தரவுகள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் செயலியின் மூலம் திருடப்பட்டுள்ளது குறித்து பாஜக அரசு எவ்வித கவலையோ வருத்தமோ தெரிவிக்கவில்லை. மேலும், பெகாசஸ் செயலியின் நிறுவனமான என்.எஸ்.ஓ., தான் தேர்ந்தெடுத்த அரசு மற்றும் அரசு நிறுவனங்களுடன் மட்டுமே வணிக தொடர்பு வைத்திருப்பதாக உறுதிபட கூறியிருக்கிறது. இதன் மூலம், மோடி அரசு இச்செயலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. தோழர் திருமுருகன் காந்தியின் கைப்பேசி தரவுகளை மோடி அரசு திருடியிருக்க கூடும் என்பதையும் இதன் மூலம் உறுதிபட கூற முடியும்.
அரசு ஒருவரை உளவுபார்ப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. இந்திய தந்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் இதற்கான வழிமுறைகளை சட்டப்பூர்வமாக அளிக்கிறது. ஆனால், ஒருவரது தொலைபேசியில் அவருக்கு தெரியாமல் அவரது தனிப்பட்ட தகவல்களை திருடும் செயலியை நிறுவுவது, இதே சட்டத்தின் கீழ் சட்டவிரோத செயலாகும். அரசை விமர்சிப்பவர்களை முடக்க அரசே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாகும். மேலும், மோடி அரசை விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சியினர் உட்பட நூற்றுக்கணக்கான நபர்களின் கைபேசி, பெகாசஸ் செயலியின் மூலம் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற செய்தி, ஜனநாயகத்தை முடக்கும் முயற்சியாகும். இது, மோடி அரசு பாசிசத்தை நோக்கி செல்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. மோடி அரசின் இத்தகைய ஜனநாயக விரோத, பாசிச போக்கு மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை. இது போன்ற செயல்ககளை ஜனநாயகவாதிகள் கண்டிக்காமல் கடந்து செல்வது பாசிசத்தை வளர்க்கவே செய்யும். நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து மோடி அரசின் இந்த பாசிச போக்கை கண்டிக்க முன்வர வேண்டும். குறிப்பாக, இந்த உளவு செயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களை காக்க, அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். அரசின் ஜனநாயக விரோத செயல்களை அம்பலப்படுத்தி, அரசின் அடக்குமுறையை அறத்துடன் எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வேரறுக்க முடியும் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்.
தோழர் திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்கள் யாரும் அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சியதில்லை. தோழர் திருமுருகன் காந்தி அவர்களை முடக்க முயலும் பாஜக அரசின் இது போன்ற முயற்சிகள் தோல்வியில் தான் முடியும். திருமுருகன் காந்தி மீதான அடக்குமுறையை தனிநபர் மீதான அரசின் அடக்குமுறை என்று நாம் கடந்து சென்று விட முடியாது. இன்று திருமுருகன் காந்தி என்றால், நாளை நீங்கள். பாசிசத்தின் பிடி இவ்வாறாகவே இருகும். ஸ்டேன் சாமி அவர்களை இழந்ததை போல, பாசிசத்தின் கோர பசிக்கு தோழர் திருமுருகன் அவர்களை இழந்துவிட முடியாது. தோழர் திருமுருகன் காந்தி அவர்களை காப்பது ஜனநாயகத்தை காப்பதற்கு ஒப்பாகும். பாசிசத்தின் பக்கமா இல்லை ஜனநாயகத்தின் பக்கமா என்று ஒவ்வொருவரும் நிலைப்பாடு எடுக்க வேண்டிய சூழல் இது. உங்கள் குரல் பாசிசத்தை தகர்க்கட்டும்.