
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கும் முன்னர் சங்கரமடம் சென்று ஆசி வாங்கி வந்திருக்கிறார் சீமான். மேலும் பிராமணர்களுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அவர்களின் சேகவராகவும் மாறியிருக்கிறார். பிராமண கடப்பாரையைத் தூக்குவதாக ஆர்.எஸ்.எஸ் மேடையில் பேசிய சீமானின் போலித் தமிழ்த்தேசியம் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது.
தமிழ் மீது மற்றவர்களை விட அதிகமாக பற்றுள்ளவராக காட்டிக் கொள்ளும் சீமான், தமிழை நீச மொழி என்று பேசிய சங்கராச்சாரி வழித்தோன்றர்களிடம் மண்டியிடாத மானத்தை விலை பேசி விட்டு வந்திருக்கிறார். பார்ப்பனர்கள் வீட்டில் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்காகவே பார்ப்பனர்களை தமிழர்கள் என்று சொன்னால், தமிழை நீச மொழி என்று சொன்ன சங்கராச்சாரியாரை எந்த இடத்தில் வைப்பது?, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இதுவரை எழுந்து நிற்காத கும்பலை தமிழ் தேசியவாதியாக சீமான் ஏற்கிறாரா?, திருவள்ளுவரை காசியில் கொண்டுபோய் குப்பையில் போட்ட பார்ப்பனர்களை என்ன வரையறைக்குள் சீமான் வைக்கிறார் போன்ற கேள்விகளுக்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை.

தமிழ் மொழியின், தமிழர்களின் வளர்ச்சியை நேசித்த பெரியார், ”தமிழ்நாடு தமிழருக்கே” என இறுதி காலம் வரை முழங்கிய பெரியார், தமிழின் வளர்ச்சியின்மைக்கு ஆதங்கப்பட்டுப் பேசிய ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு, பெரியாரை எப்பொழுதும் கொச்சையாக பேசுகிற சீமான், தமிழைத் தீட்டாக பார்த்த இடத்திற்கு சென்று ஆசி வாங்கி வந்ததில் பெருமிதம் கொண்டிருக்கிறார்.
மேலும், அவர் சங்கரமடத்துக்கு தனது தொண்டர்களுடன் இணைந்து செல்லவில்லை. திருப்பரங்குன்றப் பிரச்சனைக்கும் காரணமானவரும், இந்து தமிழர் கட்சியின் மாநிலத் தலைவருமான ராம ரவிக்குமாருடன் சேர்ந்து சென்று சங்கரமடக் கடவுள்களை வழிபட்டு, பிராமணப் பூசாரிகளை வணங்கி, கோமாதாக்களை தரிசித்து, தன்னை சங்கிகளின் சக நண்பரெனக் கூறியதை உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.
தமிழ் சமூக விடுதலையும், சாதி ஒழிப்புமே தமிழ் தேசியத்தின் அடிப்படையானது. தோழர் தமிழரசன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் போன்ற தமிழ்த் தேசியத் தலைவர்களும், போராளிகளும் இந்த தமிழ்த் தேசிய இலக்கிற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். தமிழ்த்தேசிய நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகயிருந்த இந்தியப் பெருந்தேசியத்தை எதிர்த்து நின்றனர். இந்தியத்துடன் சமரசம் செய்து கொள்வது தமிழ் சமூக விடுதலைக்கு எதிரானது என்றனர். ஆனால் இந்தியத்துடன் சமரசம் செய்து கொள்ளும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு தமிழ் சமூக விடுதலையை கைகழுவியவர் சீமான்.
தமிழ்த் தேசியத்தின் மற்றொரு அடிப்படையான சாதி ஒழிப்பையும் தூக்கி எறிந்துவிட்டு சாதிகளைக் ’குடி’ என்று அடையாளப்படுத்தினார் சீமான். ஆரிய வருகைக்கு முன்னர் தமிழ் சமூகம் சமத்துவ சமூகமாக இருந்த போது தொழிற் பிரிவுகளின் அடிப்படையில் குடி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆரியத்தினால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் புகுத்தப்பட்ட பின்பு, இன்றுள்ள சாதியப் பெருமிதங்களுக்கான காரணங்களைக் களையாமல் வெறும் பெயரை மட்டும் மாற்றி குடிப்பெருமையாக்கி விட்டார். தமிழ் சமூகத்தில் சாதியை புகுத்திய பார்ப்பனர்களையும் பிராமணக் குடி என்ற அடையாளம் கொடுத்து, இந்த சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஆறு தொகுதிகளை வழங்கியும் இருக்கிறார். பாஜக முதற்கொண்டு பெரிய கட்சிகள் எதுவும் பார்ப்பன வேட்பாளர்களை இத்தேர்தலில் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் அலுவலகத்தில் முதன்மை செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் முதற்கொண்டு முக்கிய உயர் அதிகாரிகள் என 88% பார்ப்பனர்கள். இந்தியாவின் அதிகாரம் மிக்க உயர்பதவிகளில் 80% மேல் பார்ப்பனர்களே இருக்கிறார்கள். வெறும் 3% மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் 97% மக்கள் தொகையினரின் உரிமையை அடைய விடாமல் தடுக்கின்றனர். இந்திய அதிகாரம் அனைத்தும் பார்ப்பனிய வலைப்பின்னலில் இருப்பதை உணர்ந்தே திராவிடக் கொள்கைத் தலைவர்கள் இந்தியப் பார்ப்பனிய அதிகாரத்தை எதிர்த்தனர். இந்த சமூக அநீதியை எதிர்த்தே நூற்றாண்டு காலப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிற்குரிய சட்டமியற்றும் சட்டமன்ற பதவிகளிலாவது தமிழர்கள் உரிமையுடன் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தே தமிழக அரசியலின் பிரதிநிதித்துவ போட்டியில் பார்ப்பனர்களைத் தவிர்த்தனர்.
திராவிடக் கட்சிகளின் சார்பில் கடந்த காலங்களில் ஓரிரு பார்ப்பனர்கள் நிற்க வைக்கப்பட்டாலும், பிராமண சாதிகளுக்கு என்று தொகுதிகளை ஒதுக்கும் கொள்கை முடிவாக, முன்பு எப்பொழுதும் நடந்ததில்லை. தமிழ்நாட்டின் அரசியல் மரபையே தலைகீழாகத் திருப்பிப் போடும் பிராமணக் கைக்கூலியாக இந்த வேலையை செய்திருக்கிறார் சீமான்.
இந்திய அதிகார மட்டப் பதவிகள் பார்ப்பனர்களுக்கு சொந்தமாக இருப்பதைக் குறித்து எந்த சலனமும் இல்லாத சீமான், அப்பதவிகளுக்கான இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதைக் குறித்து எந்த கேள்வியும் இல்லாத சீமான், தமிழர்களின் சட்டமன்ற பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பதவிகளில் இடஒதுக்கீடை புகுத்தும் நியாயவானாகக் காட்டிக் கொள்கிறார். இந்திய அதிகாரப் பதவிகளில் சமூக நீதி முறையாகப் பின்பற்றப்பட்ட பின்பே, அரசாங்கம் அமைக்கும் பதவிகளிலும் இடஒதுக்கீடு தரமுடியும் என்பதே தமிழ்நாட்டின் திராவிடக் கொள்கையாளர்கள் வகுத்த சமூகநீதிக் கொள்கை..

இந்தியாவின் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உயர் பதவிகளில் இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்ற வேண்டும், அனைத்து சமூகத்தினருக்கும் அந்த இடங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று போராடும் திராவிடத்தை எதிரியாகக் கட்டமைக்கும் பணியை செவ்வனே செய்தவர் சீமான். திராவிடம் என்றால் தெலுங்கு என்று தமிழர்களின் கவனத்தை திசை திருப்பும் பணியை ஆர்.எஸ்.எஸ்.சின் கூலியாளாக செய்து கொண்டிருக்கிறார்.
இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் பார்ப்பனர்களாக இருப்பதைக் குறித்தும் அவருக்கு எந்த கேள்வியுமில்லை. ஈழத்தின் மீது நடந்த இனப்படுகொலைக்கு காரணமானக் கொள்கையை தீட்டியவர்கள் பார்ப்பனர்கள். இதை அறியாதவரில்லை சீமான். ஆனாலும் இதனையெல்லாம் புரிந்து இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற திராவிட அமைப்புகளை எதிரியாக கட்டமைத்தாரே தவிர, பார்ப்பனர்களை எதிர்த்து எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. அவர்களை அம்பலப்படுத்தும் பணியையும் செய்யவில்லை.
இந்திய அமைதிப்படையை ஈழத்திற்கு அனுப்புவதற்கு காரணமாக ஒரு செய்தியை அப்படையின் தளபதியாக இருந்த சுந்தர் ஜி என்பவர் கூறியதாக அவருக்கு கீழ் கர்னலாக பணிபுரிந்தவர் ட்விட்டர் வலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தார். தமிழர்களுக்கு தனி நாடு அமைவது இந்தியப் பார்ப்பனர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவே அமைதிப்படையை ஈழத்திற்கு அனுப்பும் முடிவை இந்திய அரசை வைத்து எடுக்க வைத்தனர் என்பதே சுந்தர் ஜி அவரிடம் பகிர்ந்த செய்தி. அப்போதே இந்த முக்கிய செய்தியை வெளிப்படுத்தியதோடு, மே 17 இயக்கம் அதனை முக்கிய ஆதாரமாக அனைத்து இடங்களிலும் பதிவு செய்கிறது. ஆனால் சீமான் இது குறித்தான எந்தத் தகவல்களையும் பொதுவெளியில் மட்டுமல்ல, தங்கள் தொண்டர்களிடம் கூட பேசியதே இல்லை.
விடுதலைப் புலிகளை முன்னிறுத்தியே திராவிடத்தை எதிர்க்கிறார் சீமான். ஆனால் தங்களை திராவிட இனத்தை சார்ந்தவர்கள் என்று வரலாற்று ரீதியான ஆய்வைப் படித்தறிந்து அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் விடுதலைப் புலிகள். சாதி ஒழிப்பையும், தமிழ் சமூக விடுதலையும் அடிப்படையாகக் கொண்டு, சுதந்திரத் தமிழீழ அரசு அமையப் போரிட்ட விடுதலைப் புலிகளின் தமிழ்த் தேசியக் கொள்கைக்கு சீமானின் தமிழ் தேசியம் சிறிதும் பொருத்தமற்றது. இவரின் போலித் தமிழ்த் தேசியத்தைப் பற்றி புரிதலற்ற சில ஈழத் தமிழ் அமைப்புகளும் இவருக்கு ஆதரவைத் தருவதாகக் கூறும் துயரமும் நிகழ்கிறது.
மனித குல வரலாற்றில் இனவியல் ரீதியாக, மொழியியல் ரீதியாக மூத்த இனமாக தமிழினத்தை கொண்ட ஆதி இனம் திராவிடம். பார்ப்பனியம் திணித்த சாதி மத எதிர்ப்பு, மூடத்தன எதிர்ப்பு, பெண் அடிமைத்தன எதிர்ப்பு போன்றவைகளை எதிர்த்த நூற்றாண்டு காலப் போராட்டமாக உருவானது திராவிடக் கொள்கை. இந்தக் கொள்கைகளை அரவணைத்துக் கொண்டு முன்னோக்கி சென்றடையும் இலக்கே தமிழ் தேசியம்.
பிராமணியத்தை அரவணைத்துக் கொண்டு, குடிப் பெருமையை தேசியமாகப் பற்றிக் கொண்டு தமிழ்த் தேசிய இலக்கை அடைய முடியாது. பார்ப்பனியத்தின் ஆன்மீக அதிகார மையமான சங்கர மடத்தின் ஆசியைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தில் பார்ப்பனியத்தை கலக்கும் சீமானின் போலித் தமிழ்த்தேசியம் ஆபத்தானது. எனவே தமிழர்கள் சீமானை இந்த தேர்தலில் புறக்கணிப்பார்கள் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.