
அரசியல் பயிற்சி, கொள்கைத் தெளிவற்று ரசிகத்தன்மை மட்டுமே கொண்டவர்களால் மழுங்கடிப்படும் அரசியல் உணர்வு பற்றியும், அரசியல் கோரிக்கைக்காக திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒழுங்கு பற்றியும், கட்சி அரசியலைக் கடந்த இயக்க அரசியலே மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதைப் பற்றியும் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூக வலைதளத்தில் செப்டம்பர் 28, 2025 அன்று பதிவு செய்தவை
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் மெரினாவில் குழுமி இருந்தனர். சென்னை மட்டுமல்ல, மதுரை-திருச்சி-கோவை என மக்கள் லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் திரளாத நகரங்கள் இல்லை. இங்கெல்லாம் எவ்வித நெருக்கடியோ, நெரிசல் சிக்கலோ நடிகர்கள் வந்த போதும் உருவாகவில்லை. இங்கெல்லாம் மக்களை ஒழுங்குபடுத்த போதுமான காவல்துறை இல்லை, கட்சி பொறுப்பாளர்களென எவரும் இல்லை. ஆயினும் ஒழுங்கு இருந்தது, நேர்த்தி இருந்தன.
அரசியல் கோரிக்கைக்காக லட்சிய உறுதியுடன் மக்கள் திரளும் பெருங்கூட்டங்கள் அரசியல் மாற்றங்களை கொண்டு வருகின்றன. அன்றும் அரசியல் பேசினோம், ஆண்-பெண்-குழந்தைகள் என ஒன்றுகூடினோம். நடிகர்-நடிகைகள் வந்தார்கள், இயக்குனர்கள், கலைஞர்கள் குழுமினார்கள். சாமானியருக்கான மரியாதையே அவர்களுக்கும் இருந்தது. மக்கள் நடிகர்கள் பின்னால் ஓடவில்லை, மாறாக அவர்களை மக்கள் பொருட்படுத்தவே இல்லை. நானும், நடிகர் சிம்புவும், நடிகர் ராகவா லாரன்சும், இயக்குனர்கள் ராம், கார்த்திசுப்புராஜ் என ஒன்றாக நின்று மக்களிடத்தில் உரையாற்றிய சமயத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களில் ஒருவர் கூட முண்டியடித்து முன்னே வர முயற்சிக்கவில்லை.
கொள்கை-கோரிக்கைகாக அணிதிரளும் பொழுதில், இதே சாமானிய மக்கள் இராணுவ ஒழுங்குடன், ஒருவரையொருவர் நெருக்கி துன்புறுத்தாத வகையில் திரண்டு நின்றார்கள். திருட்டு, பாலியல் சீண்டல்கள், நசுக்குதல் என எவையும் அங்கில்லை. இதுபோல ஒருநாள் அல்ல, கிட்டதட்ட 7 நாட்களாக மக்கள் தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டனர். காவல்துறை தேவைப்படவில்லை, தலைவனும் தேவைப்படவில்லை.
அரசியல்நெறி இல்லாமல், ரசிகத்தன்மையை முதன்மையாக வைக்கும் பொழுது, அணிதிரட்டல் இல்லாமல் கும்பலாக சகமனிதர் மீதான அக்கறையில்லாமல் இதே சாமானிய மக்கள் ஒன்றுதிரள்கிறார்கள். அரசியலாக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல், event managers கொண்டு நடத்தப்படும் வணிகக் கச்சேரிகளாக மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்கள். ரசிகர் மனநிலையை வளர்த்தும் விதமாக ஊடகங்கள் சிறு-சிறு அசைவையும் ஹீரோயிசமாக காட்சிப்படுத்தி வர்ணிக்கின்றன.
நினைவில் கொள்ளுங்கள் ஜல்லிக்கட்டில் மக்களிடத்தில் நாங்கள் உரை நிகழ்த்தியபோது, இதே ஊடகங்கள் ‘தீவிரவாதிகள் ஊடுறுவல்’ என செய்தி வெளியிட்டார்கள். இன்று விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் சினிமாத்தனமான செய்திகளாக்குகிறார்கள். வளர்த்தப்படுவது அரசியல் அல்ல, ரசிகத்தன்மையும், ஹீரோயிசமும். இதை மிகக் கவனமாக திட்டமிட்டு செய்கிறார்கள்.
கரூரில் நடந்த துயரத்திற்கு யார் காரணமெனும் விசாரணை சுதந்திரமாக நடத்தப்படுதல் அவசியம். த.வெ.க கட்சி பொறுப்பாளர்களின் அனுபவமின்மை-பொறுப்பின்மையா, அல்லது திமுக அரசின் அலட்சியபோக்கா என்பதெல்லாம் ஊகங்களாக வெளிப்படுவதைவிட கள ஆய்வுகளாக, முறையான விசாரணை மூலம் உண்மை வெளியாகட்டும்.
தவெக கட்சியினருக்கு, திமுக அரசை எதிர்க்க பலவழிகள் உண்டு, திமுகவின் தவறுகளை எதிர்கொள்ள போராட்ட வழிமுறைகள் உண்டு. அந்த வழிமுறைகளைக் கொண்டு, கட்சியை அரசியலாக வலுபடுத்தி அரசியலாக்கப்பட்ட இரண்டாம் கட்ட தலைமைகள் வளர்த்தெடுக்கப்படாமல், மாநிலம் முழுமைக்குமான அரசியல்பயிற்சிகள் அளிக்கப்படாமல் திமுகவை எப்படி எதிர்கொள்வார்கள்? அரசியலாக தொண்டர்களை வளர்க்காமல் எவ்வகையில் திமுக-அதிமுக-பாஜக போன்ற கட்சி-நிறுவனங்களை எதிர்கொண்டு வீழ்த்துவார்கள்? கொள்கை பயிற்சி, அரசியல் பயிற்சி, மக்கள் திரள் அரசியல் ஆகியவற்றை நெறிப்படுத்தி வளர்த்தெடுக்காமல் ஆட்சி-அதிகாரத்திலிருக்கும் கட்சிகளை வெல்ல இயலாது என்பது அடிப்படை அரசியல். பிறகு ஏன் ரசிக-ஹீரோயிச வகை அரசியல் முன்னெடுக்கப்படுகிறது?
அரசியல் பயிற்சி, கொள்கை தெளிவில்லாமல் ரசிகத்தன்மையோடும், ஹீரோயிச மனப்பாங்குடன் ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தால் எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு போன்ற அரசியல் உணர்வு மிக்க, ஒழுங்கமைக்கப்பட்ட எழுச்சியை தமிழர்களால் உருவாக்க இயலாது போகும். 2009ல் நடந்த இன அழிப்பு அரசியலால் உந்தப்பட்ட இளைஞர்கள் அரசியல் உணர்வு பெறாமல், இதே ஹீரோயிசம், கும்பல் மனப்பான்மையோடு நாம்தமிழர் கட்சியின் சீமானால் வளர்த்தெடுக்கப்பட்டார்கள். ஈழ போராட்டத்தினை-இந்திய அரசின் சூழ்ச்சிகளை பற்றி எவ்விதமான அரசியல் கல்வியை அளிக்காமல், போலியாக, மேலோட்டமாக, கடமையுணர்வில்லாமல் சினிமாத்தனமான ஹீரோயிச கதைகளை கொண்டு ஒரு கட்சியை வளர்த்தெடுத்தார்கள்.
ஈழ அரசியல் உண்டாக்கிய தமிழ்த்தேசிய எழுச்சி ஒரு சினிமா வசன கதாசிரியனால் முடக்கப்பட்டுவிட்டது. 16 ஆண்டுகளாக இந்த எழுச்சியை அடக்கி சிதைத்த பின்னர் அடுத்த போலி அலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாஜக போன்ற மதவெறி கட்சியை, திமுக, அதிமுக போன்ற முதலாளித்துவ கட்சிகளை, நாதக, தவெக போன்ற ரசிகர் கட்சிகளால் வென்றுவிட முடியாது.
புரட்சி நிகழவேண்டுமென்றால், மக்களை அணிதிரட்டும் இயக்கங்களே அவற்றை சாத்தியப்படுத்தும். மக்கள் இயக்கங்களே, நிரந்தர மாற்றங்களைக் கொண்டுவரும். ஜல்லிக்கட்டு எழுச்சி பாஜகவை படுகுழிக்குள் தள்ளியது, அதிமுகவை அன்னியப்படுத்தியது. இதை சாதித்தவர்கள் அரசியல் உணர்வு கொண்ட சாமானிய தமிழர்கள். சாமானிய அன்பிற்கினிய தமிழர்களே நமக்கென்று போராட்ட பாரம்பரியம் உண்டு. நமக்கென்று புரட்சிகர உணர்வுண்டு. அதை எந்தத் தலைவனிடத்திலும் தேடாதீர்கள். கட்சி அரசியலைக் கடந்து வாருங்கள். இழப்பை தவிர்ப்போம், இழந்ததை மீட்போம்.
படங்கள்: ஜல்லிக்கட்டு எழுச்சியில் திரண்ட தமிழர்கள்.