மே தின போராட்ட வரலாறும், தோழர் சிங்காரவேலரும்!

Chennai_LabourStatue

“தொழிலாளர்களாகிய நாம் அடிமைச் சங்கிலி உடைத்தெறிவோம். சுதந்திரம் பெறுவோம், வறுமையையும் அச்சத்தையும் துடைத்தெறிவோம். சோசலிசம் என்பது தனிப்பட்டவர்களை எதிர்ப்பதல்ல, ஒரு சில கோடீசுவரர்களையும், மிகப்பெரிய வறியவர்களையும் உருவாக்குகின்ற இந்த அமைப்பை அழிப்பதாகும்”

– ஏ.பி.பாசன்ஸ்

(எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி ஹே மார்க்கெட்டில் நடந்த தொழிலாளர் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காகத் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்ட போராளி.)

1800 காலகட்டத்தில் ஸ்காட்லாந்து நீதிமன்றத்தில் மூன்று தொழிலாளிகள் குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தனர்.   தொடர்வண்டியின் காவலாளி,  தொடர்வண்டியை இயக்குபவர்,  தொடர் வண்டி சமிக்கைகளைக் கண்டறிந்து முடிவுகளெடுக்கும் தொழிலாளி ஆகிய மூவரும் ஒரு கோர விபத்திற்குக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.  நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து போன அந்த விபத்திற்கு  இத்தொழிலாளிகள் தங்கள் வேலையைச் சரிவரச் செய்யாததே காரணம் என்று  வாதிடப்பட்டது. அந்த தொழிலாளிகள் ஏறத்தாழ 30லிருந்து 40 மணி நேரம் உறங்காமல் வேலையில் ஈடுபட்டதன் விளைவாக  அவர்களுடைய மூளை வேலை செய்ய மறுத்து கண்களை இருட்டடிப்பு செய்துவிட்டது என்பது விசாரணையின் பொழுதுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.

இது போன்ற நூற்றுக்கணக்கான செய்திகள் 1800கள்  காலகட்டத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தன.   இதன் விளைவாகவே தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாக இன்று நாம் முன்வைக்கும் எட்டு மணி நேர வேலை,  8 மணி நேர ஓய்வு உறக்கம்,  8 மணி நேர குடும்பம் மற்றும் சமூக செயல்பாடு என்கின்ற காலவரையறைக்கான குரல்கள் எழத் தொடங்கின. 

இதன் உச்சபட்சமாக, 1886 ஆம் ஆண்டு மே நான்காம் தேதி சிகாகோ நகரில் அமைந்திருந்த “ஹே மார்க்கெட்” என்ற சதுக்கத்தில் தங்கள் உரிமைக்காக முழக்கமிட்டுக் கூடிய 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மத்தியில் வெடிகுண்டை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் காவல்துறை பல தொழிலாளர்களைக் கொன்றது.   மேலும், ஏராளமான தொழிலாளர்கள் காயமடைந்தனர்.  அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் நாள் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

HaymarketRiot
ஹே மார்க்கெட்” படுகொலை சம்பவம்.

ஹே மார்க்கெட்”  படுகொலை சம்பவம் ஓர் தனித்த சம்பவமாக இருக்கவில்லை.   சிகாகோ நகரை மையப்படுத்தி நீண்ட காலமாக நடைபெற்று வந்த தொழிலாளர் போராட்டங்களும் அதன் மீது செலுத்தப்பட்ட மிகக் கடுமையான வன்முறைகளின் தொடர்ச்சியாகவே இச்சம்பவம் நடைபெற்றது.

1855ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி சிகாகோ நகர மன்றத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற ஜெர்மானிய தொழிலாளர்கள் மீது நகர மேயர் பூன் துப்பாக்கி ஏந்திய காவலாளிகளை ஏவினார். அங்கிருந்த ஒரு பாலத்தைத் தொழிலாளர்கள் கடக்க முயன்ற போது பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து  காவலர்களை நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

1872ஆம் ஆண்டு பட்டினியால் வாடும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின்  உணவுக்காக வசூல் செய்யப்பட்ட பணத்தை வைத்திருந்த “ரிலீப் அண்ட் ஏய்டு சொசைட்டி” (Relief and Aid Society) என்கிற தொழிலாளர் உதவி அமைப்பின் கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் சென்ற பொழுது சிகாகோ நதிக்கரையின் அருகிலிருந்த சுரங்கப்பாதைக்கு விரட்டி அடிக்கப்பட்டு அங்கே தடி அடியும் நடத்தப்பட்டது.   இது வரலாற்றில் ரொட்டிக் கலவரம் (Bread Riot)  என்று அழைக்கப்படுகிறது.

1877ஆம் ஆண்டு ரயில் பாதை அமைக்கும் நிறுவனங்களின்  முதலாளிகள் நிகழ்த்திய சுரண்டலைக் கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட உழைப்பாளர்கள் மீது காவல்துறை வன்முறை நிகழ்த்தியது.  இதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  இதைத்தொடர்ந்து நடந்த போராட்டங்களில் சிகாகோ டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியரான ஆல்பர்ட்  பார்சன்ஸ் பங்கேற்று ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக, நகர முன்னாள் மேயரின் உத்தரவின்  பேரில், அவர் ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். 

இதே காலகட்டத்தில் 8 மணி நேர வேலை தொடர்பான  பேச்சுவார்த்தைக்காக  முதலாளிகளுடன் பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தொழிலாளர் கூட்டத்திற்குள் புகுந்த காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில் ஒரு  தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.   இதற்காக நடத்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் காவல்துறைக்கு வெறும் ஒரு டாலர் அபராதம் விதித்து தங்கள்  முதலாளிகள் மீதான விசுவாசத்தை நிரூபித்தது. 

இவை அனைத்தும் வரலாறு பதிவு செய்திருக்கும் ஒருசில சம்பவங்கள்  மட்டுமே.  சிகாகோ நகரின் தொழிலாளர்கள் தினம் ஒரு போராட்டத்தை  முன்னெடுப்பதும், அவர்கள் மீது தொடர்ச்சியான வன்முறையை காவல்துறை கட்டவிழ்ப்பதும் என்று ஏறத்தாழ 50 வருடங்களுக்கும் மேலாக தங்கள் உரிமைக்காகச் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்த பொழுதும், களத்திலிருந்து பின்வாங்காமல் நின்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் இன்னுயிரைப்  பறிகொடுத்து வென்றெடுத்தது தான்  8 மணி நேர வேலை உரிமை. அந்த ஈகத்தை முன்மொழியும் நாளே “மே தினம்” என்று அழைக்கப்படும் உழைப்பாளர் நாள்!

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் தொழிலாளர்களின்  வேலை நேர உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை மீட்டெடுக்கப் பல கட்ட  போராட்டங்களும்,  அதன் காரணமாகப் பல சட்டங்களும்  இயற்றப்பட்டிருந்தன.  தொழிற்சாலை சட்டம் 1833, தொழிற்சாலை சட்டம் 1844, மற்றும் தொழிற்சாலை சட்டம் 1847 ஆகிய சட்டங்கள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட குறிப்பிடத்தக்கச் சட்டங்களாகும்.  இச்சட்டங்கள் முழுமையான கோரிக்கைகளை நிறைவேற்றாத கண்துடைப்பு சட்டங்களாக  இருந்த பட்சத்தில் கூட இங்கிலாந்து முதலாளிகள் இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகச் சட்டசபை  முதல் தொழிற்சாலையில் அரசை ஏமாற்றும் முயற்சிகள் வரை பல தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.  1886ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில், 8 மணி நேர வேலையை வலியுறுத்தி, 1572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்று இருந்தன.

singaravelar
சிந்தனை சிற்பி ஐயா சிங்காரவேலர்.

இந்திய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதன் முதலில் உழைப்பாளர் நாளை கொண்டாடிய பெருமை தமிழ்நாட்டையே சேரும். தமிழ்நாட்டைச் சேர்ந்த பொதுவுடமைவாதி சிந்தனை சிற்பி ஐயா சிங்காரவேலர் அவர்களின் முன்முயற்சியால் சென்னையில் முதல் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்பட்டது. இளம் வயது முதலே பொதுவுடைமை அரசியலில் ஆர்வம் கொண்டு மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் அரசியல் பயின்ற ஐயா சிங்காரவேலர் அவர்கள் இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எத்தகைய பொதுவுடைமை பார்வை தேவை என்பதை விளக்கியவர் ஆவார்.

பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்ட சிங்காரவேலர் அவர்கள் பலமுறை சிறை சென்று வந்தார்.  தந்தை பெரியாரோடு  நட்பின் அடிப்படையிலும்,  சித்தாந்தத்தின் அடிப்படையிலும்,  இலக்கின் அடிப்படையிலும் நெருங்கிய  உறவு கொண்டிருந்த ஐயா சிங்காரவேலர் அவர்கள், பெரியார் நடத்தி வந்த “குடியரசு”, “புரட்சி” போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக பொதுவுடைமை சித்தாந்தங்கள் தாங்கிய கருத்துக்களை எழுதியும் வந்தார்.

“மதங்களால் உண்டாகும் பொருளாதார நஷ்டங்களுக்கு அளவே கிடையாது. கோவில்கள் எத்தனை! விக்கிரகங்கள் எத்தனை! தேர்கள் எத்தனை! தெப்பங்கள் எத்தனை! கோவில்களில் உழைப்பின்றி வாழும் சிப்பந்திகள் எத்தனை! தாசி வேசிகள் எத்தனை! இவ்வளவு செல்வமும் யாருக்குமே நற்பிரையோஜனம் இன்றி போவதைக் கவனித்தால், தொழிலாளர் உழைப்பின் பயன் எவ்வளவு விரயத்தில் செலவாகிறது என்பது விளங்குமென்றோ!”

(குடியரசு, 1931)

 என்று கூறிய சிங்காரவேலர் அவர்கள்,

“இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் பெயர்களே இல்லாமல் போக வேண்டும். பொருளாதார வேற்றுமையும், சாதி வேற்றுமையும், மத வேற்றுமையும் இல்லாத வாழ்வை மனித வாழ்வு என்று உணர்ந்து அவ்வித வாழ்வை நமது இந்திய நாடு அடையுமாறு உழைப்போமாக.”

(குடியரசு, 1932)  என்றும்  முழங்கினார்.

1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் அன்று இந்தியாவில் முதல்  உழைப்பாளர் நாள் கொண்டாட்டத்தைச் சென்னையில் தமிழர் “மெரினா” கடற்கரைப் பகுதியில் ஐயா  சிங்காரவேலர் முன்னெடுத்தார். 1918ல் சென்னை தொழிலாளர் சங்கம் திரு.வி.க அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை தென் மராட்டிய ரயில்வே தொழிலாளர் சங்கம்,  டிராம்வே  தொழிலாளர் சங்கம்,  மின்சார ஊழியர் தொழிலாளர் சங்கம்,  ரொட்டித் தொழிலாளர் சங்கம்,  மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம்,  தெரு கூட்டுவோர் சங்கம்,  வீட்டு வேலை செய்வோர் சங்கம்,  நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் சங்கம்,  கோயமுத்தூர் பஞ்சாலை தொழிலாளர் சங்கம் போன்ற சங்கங்கள் தமிழகத்தில் தோன்றின.   இத்தொழிலாளர் சங்கங்கள் உருவாவதற்குத்  திரு.வி.க, வ.உ.சி உள்ளிட்ட பலருடன் சேர்ந்து முன்கள போராளியாக பணியாற்றியவர் ஐயா சிங்காரவேலர் ஆவார்.

தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொழிற்சங்கங்கள் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல கட்டமாக நடந்து வருகிறது.   1873ஆம் ஆண்டு  பக்கிங்காம் ஆலையில் தொடங்கிய வேலை நிறுத்தம்,  1889ஆம் ஆண்டு கர்னாடிக் ஆலையில் நடந்த வேலை நிறுத்தம் போன்றவை தொடக்கக் கால தொழிலாளர் போராட்டங்களாக அமைந்தன.  வேலை நேரம்,  வாரத்தில் ஒரு நாள் விடுப்பு, ஊதியம்,  மருத்துவ பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் தொழிலாளர்கள் போராடி வந்திருக்கின்றனர். அதற்காகத்  தொழிலாளர்கள் களப்பலியும் கொடுத்துள்ளனர். 9.12.1920 அன்று பக்கிங்காம் & கர்னாடிக் ஆலை தொழிலாளர்கள் ஒற்றுமையைக் குறைப்பதற்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது.   இதில், பாபு ராவ் என்கிற 10 வயது சிறுவனும், முருகேசன் என்ற தொழிலாளியும் கொல்லப்பட்டனர்.   இது குறித்து திரு.வி.க அவர்கள் “தொழிலாளர் இயக்கத்திற்கென்று முதன் முதலில் பலியானவர்கள் இவர்கள்” என்று தனது நூலில் எழுதுகிறார்.  இந்த இருவருடைய உடலையும் சுமந்து சென்று தொழிலாளர் ஒற்றுமையை நினைவு கூர்ந்தவர் ஐயா சிங்காரவேலர் ஆவார். 

இதனைத் தொடர்ந்து பக்கிங்காம் & கர்னாடிக் ஆலை   தொழிலாளர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபொழுது 29.8.1921  அன்று  ஆங்கிலேயக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உள்பட ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.   அதே ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி மற்றும் அக்டோபர் 15ஆம் தேதி மீண்டும் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 1927ஆம் ஆண்டு  பர்மா ஆயில் கம்பெனி என்ற தொழிற்சாலையில் நடைபெற்ற எண்ணெய் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திலும் ஆங்கிலேயக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. 1928ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தில் கடுமையான காவல்துறை தடியடியும், துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தப்பட்டது. 

தொழிலாளர் நலன் சார்ந்து பேசவும் எழுதவும் போராடவும் செய்த சிந்தனை சிற்பி சிங்காரவேலர் மீது அன்றைய ஆங்கிலேய அரசு அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.  போராடிய காரணத்திற்காகப் போலி வழக்கில் குற்றம் சாட்டி சிறைத் தண்டனை விதித்தது.  1924ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கான்பூர் போல்ஷவிக்  சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில்  சிங்காரவேலர் அவர்கள் பெயரையும் சேர்த்து கைது செய்ய உத்தரவிட்டது.   உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் வீட்டுச் சிறையிலேயே இருக்கும்படி உத்தரவிட்டது. 1927ஆம் ஆண்டு பர்மா ஆயில் கம்பெனி எண்ணெய் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தூண்டியதற்காக ஐயா சிங்காரவேலர் மீது வழக்கு தொடரப்பட்டது. 1928ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்த வழக்கில் ஏறத்தாழ 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவை எதுவும் அவரது உறுதியை அசைக்கவில்லை.

தென்னிந்திய  மாகாணங்களில் கம்யூனிசத்தின் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் என்றால் மிகையாகாது.   இன்றளவும் சென்னையின் உழைக்கும்  பூர்வீக மக்கள் வாழும்  வடசென்னை பகுதியில் சிங்காரவேலர் அவர்களின் புகழ் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.   சிங்காரவேலன் பெயரில் நற்பணி மன்றங்களும், அரசியல் இயக்கங்களும்,  வாகன ஓட்டுநர் சங்கங்களும், தொழிலாளர் சங்கங்களும் இயங்கிய வண்ணமே இருக்கின்றன என்றால் இம்மாகாணத்தின் தொழிலாளர்கள் இடையே சிங்காரவேலர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய புகழுக்குரிய தமிழ்நாட்டில் தான்,   உழைப்பாளர் தினம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட தமிழ்நாட்டில் தான்,  முதல் உழைப்பாளர் சங்கம் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டில் தான்  இன்றைய ஆளும் திமுக அரசு உழைப்பாளர்களின் அடிப்படை உரிமையான  ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை  என்ற  நிலையைப் பன்னாட்டு நிறுவன முதலாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க 12 மணி நேர வேலையாக உயர்த்தியிருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயங்கி வந்த அரசு நிறுவனமான சென்னை அரசு அச்சக நிறுவனத்தில் பணிபுரிந்த  அச்சகத் தொழிலாளர்கள் காலகட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு இங்குக் குறிப்பிடப்பட வேண்டிய நிகழ்வாகும்.   இந்நிறுவனத்தில் காலவரையின்றி உழைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து 1895ஆம் ஆண்டு வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இக்குற்றச்சாட்டு அன்றைய ஆங்கிலேய அரசு சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டது (As quoted by the Government spokesperson, “The hours being indefinite and excessive”). ஆனாலும், அக்கோரிக்கை ஏற்கப்படாதது மட்டுமல்லாமல் அன்றைய அச்சக கண்காணிப்பாளராக இருந்த ஆங்கிலேயர் ஹில் என்பவர்,  தொழிலாளர்களின் வேலை நேரத்தை மேலும் அதிகரிக்கத் திட்டம் தீட்டியிருந்தார். 

அதன்படி இட்டபணி வேலை முறை (Task Work System) என்ற முறை அரசு அச்சகத்தில் திணிக்கப்பட்டது.   இதன்படி தொழிலாளர்களுக்குக் கொடுத்த வேலையை, எவ்வளவு காலநேரம் ஆனாலும் சரி, முடித்தால் மட்டுமே அச்சகத்தை விட்டு வெளியேற முடியும்;  செய்த உழைப்பிற்கான கூலியும் கிடைக்கும் என்பதாக இத்திட்டம் அமைந்திருந்தது. இதன் அடிப்படையில் தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்றிருந்த மிகைவேலை நேரம் (Work Over Time)  வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களது உழைப்பு சுரண்டப்பட்டது. வார இறுதி விடுமுறை மறுக்கப்பட்டு,  வேலை நேரத்திற்கு இடையிலான உணவு இடைவேளை குறைக்கப்பட்டு,  மற்ற இடைவேளைகள் அறவே ஒழிக்கப்பட்டு தொழிலாளர்கள் சிரமத்திற்கு  உள்ளானார்கள்.

இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தங்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தன

  • தினசரி வேலை நேரம் காலை 9 மணி முதல் 5 மணி வரை என வரையறுக்கப்பட வேண்டும்.
  • மிக நேர வேலை தவிர்க்க முடியாவிட்டால் அது காலை  7 முதல் 9 மணி வரையிலும் மாலையில் 7 மணிக்கு பிறகுமாக இருக்க வேண்டும். காலை 9 மணிக்கு 15 நிமிடங்கள் ஓய்வு இடைவேளையும் மாலை 9 மணிக்கு மேல் தொடர்ந்து வேலை நடக்க வேண்டும் என்று நிலை ஏற்பட்டால் 5 மணிக்கு 15 நிமிட ஓய்வு இடைவேளையும் தர வேண்டும்.   அதே நேரம் மிக நேர வேலைகளுக்குத் தனியான தொழிலாளர்களை நியமிப்பதன் மூலம் இச்சுமையை மற்ற தொழிலாளர்களிடமிருந்து  நீக்க முயல வேண்டும்.
  • மருத்துவ சான்றிதழ்  கேட்காமல் முழு சம்பளத்துடன் தற்செயல் விடுப்பு (Casual Leave)  எடுக்க அனுமதிக்க வேண்டும்.
  • இந்து சமய விடுமுறை நாட்கள் அரசு ஆணைப்படி அனுமதிக்கப்பட வேண்டும்
  • மாதத்தின் கடைசி சனிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும்
  • தொழிலாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் அரசு விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இருப்பினும் அன்றைய ஆங்கிலேய அரசு அதன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வேறு பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து அச்சு வேலைகளில் ஈடுபடச் செய்ததன் மூலமாகத் தொழிலாளர்களின் போராட்டங்கள் நலிவடைந்தன.   தொடர்ச்சியாகப் போராட முடியாத அளவிற்கு வறுமையும், தொழிலாளர்களின் இடையே ஒற்றுமையின்மையும்  நிலவி வந்தது.   தொழிற்சங்கங்கள் தொடங்கப்படாத காலங்கள் என்பதால், ஒரு நிறுவனத்தில் நடைபெறுகின்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இன்னொரு நிறுவனத்திலிருந்து தொழிலாளர்களை ஒன்று திரட்ட இயலாமலும் போனது.

இன்னும் பல முறைப்படுத்தப்படாத போராட்டங்களுக்குப் பிறகு 1918 ஆம் ஆண்டு சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union) தொடங்கப்பட்டு தொழிலாளர் போராட்டங்கள் முறைப்படுத்தப்பட்டன. இது சென்னை   நகரம் மட்டுமல்லாமல்  மாகாணம் முழுவதும் பரவி கோயமுத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொழிற்சங்கங்கள் உருவாகக் காரணமாய் இருந்தது.  

குறிப்பாக, திருநெல்வேலி பகுதியில் இயங்கி வந்த கோரல் பஞ்சு நூற்பாலை  தொழிலாளர்களின்  வேலைநிறுத்தப் போராட்டம்  தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத தொழிலாளர் போராட்டமாக அமைந்திருந்தது.  கோரல் ஆலையின் தொழிலாளர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வு கேட்டுப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்கள்  தொழிலாளர்களுக்குத் தோழராக நின்றார்.   குறிப்பாகப் போராட்டம் நடத்தி வரும்  தொழிலாளர் குடும்பங்களின் வறுமை காரணமாக இந்த போராட்டம் கைவிடப்படக்கூடாது என்பதில் உறுதியாக நின்றார்.   அக்குடும்பங்களுக்கு உணவு தங்குதடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்திருந்தார்.  அதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குத் தற்காலிகமாக வேறு பணிகள் கிடைப்பதற்கும் முன் முயற்சி எடுத்தார்.   இதன் விளைவாக “பட்டினியின் காரணமாகப் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள்” என்று நினைத்திருந்த ஆங்கிலேய அதிகாரிகளின் எண்ணத்தில் மண் விழுந்தது. 

இந்தப் போராட்டம்  திருநெல்வேலி கோரல் மில்லோடு நிற்காமல் மதுரையிலிருந்த அதே நிறுவனத்தின் நூற்பாலைக்கும் பரவத் தொடங்கியது. திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முடி திருத்தும் பணியைச் செய்து வந்திருந்த தொழிலாளர்கள் கோரல் ஆலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து “ஆங்கிலேயர்களுக்கோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்களுக்கோ  இனி முடி திருத்தப் போவதில்லை” என்று முடிவெடுத்திருந்தனர்.  இந்தப் போராட்டம் ஆங்கிலேய அரசை அசைத்துப் பார்த்தது.   தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கூலி உயர்வைக் கொடுத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நிலைக்கு ஆங்கிலேய ஆலை நிர்வாகமும் தள்ளப்பட்டது.   ஐயா வ.உ.சிதம்பரனார் மீது கடுமையான காழ்ப்புணர்ச்சி கொண்டு ஆயுள்  சிறைத் தண்டனை  கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேய அரசு செயல்பட்டதற்குக் கோரல் மில் போராட்டத்தில் அவரது பங்களிப்பு மிக முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. 

இவ்வாறு பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான எட்டு மணி நேர வேலையைத் தான் இப்பொழுது திமுக அரசு காவு கொடுத்திருக்கிறது.   உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல் என்கின்ற மேற்கத்திய  நாட்டு பெரு முதலாளிகளின்  தொழில் வசதிக்காக ஏற்படுத்தப்படும் நவீன பொருளாதார சுரண்டல் மற்றும் தொழிலாளர் அடிமைமுறைகளை செல்வனே நடத்திக் காட்டிட அவர்களுக்குத் தேவைப்படுகிற நெகிழ்வுத்தன்மை தான் இந்த 12 மணி நேர வேலை என்கிற கொடிய திட்டம்.   இதைத் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் அமைத்து லாபத்திலும், நிலத்திலும் பங்கு வேண்டும் என்று கேட்ட தந்தை பெரியார் பெயரை முன்மொழிந்து கொண்டு “திராவிட மாடல்”  என்ற பெயரில் தனது “திமுக முதலாளிகளின் மாடலை” நிறைவேற்றியுள்ளது தமிழ்நாட்டின் திமுக அரசு. 

12 மணி நேரம் ஒரு தொழிலாளியை வேலை வாங்குவது என்பதற்கு அடுத்ததாகப் பன்னாட்டு முதலாளிகளுக்கு மிகவும் விரும்பத்தக்கச் சட்டமாக இருப்பது ஒப்பந்த தொழிலாளர் முறை.   அதாவது பணி நிரந்தரமற்ற, நிரந்தர பணியாளர்களுக்கு  சட்டப்படி தரப்பட வேண்டிய வேலை உத்தரவாதம், சம்பள அளவு, விடுமுறைகள்  உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை  மறுத்து ஒப்பந்த  தொழிலாளர்களை உருவாக்குவதாகும். இதன் மூலம் பெருத்த லாபத்தை அடையலாம் என்கின்ற முறை உலகமயமாக்கலுக்குப் பிறகு  வேகமாகத் திணிக்கப்படும் ஓர் சுரண்டல் முறையாகும்.  தற்போதைய திமுக அரசு இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் முறையைத் தனியார்த் துறைகளில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு அரசு அலுவல் துறைகளிலும் செயல்படுத்தி வருகிறது. 

இந்த ஒப்பந்த தொழிலாளர் முறை என்பதும் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டு இருந்த  ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின்  செயல்திட்டங்களில் ஒன்று தான்.  1639ஆம் ஆண்டு சென்னையில் குடியேறிய ஆங்கிலேயக் குடும்பத்தினருக்குச் சலவை செய்யும் தொழிலாளர்கள் தேவைப்பட்ட பொழுது அத்தொழிலாளர்களை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தி வேலை வாங்கிக் கொள்ளும் முறை ஆங்கிலேயர்களிடம் இருந்தது.   ஒப்பந்தத்தின் படி முன்பணம் கொடுத்து சலவை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டிய தேவையில்லை என்றும்,  இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் பணம் கொடுக்கப்படும் என்றும்,  துணி துவைப்பதற்கான கூலியும் வெகுவாக குறைக்கப்பட்டும் ஒப்பந்தம் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நம்மைச் சுரண்டி தின்ற ஆங்கிலேய வியாபாரி கூட்டம் முன்னெடுத்த வேலை நேர அதிகரிப்பு மற்றும் ஒப்பந்த தொழிலாளர் முறையை அறிமுகப்படுத்திவிட்டு உழைப்பாளர் நாளாகிய மே நாளை கொண்டாடுவது எத்தகைய இரட்டை நிலைப்பாடு என்பதைத் தமிழகத்தை ஆளும் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.   

உலகம் முழுவதும் இருக்கும் முதலாளித்துவ அரசுகள் தங்களது வீழ்ச்சியைச்  சந்திப்பதையும்,   முதலாளிகளின்   இலாப வெறிக்கு எலும்புத் துண்டுகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்த வங்கிகள் திவால் ஆகுவதையும்  கண்டாவது  முதலாளித்துவம் ஒரு நாள் இம்மண்ணில் விழுந்தே தீரும் என்பதை ஆளும் அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.   அதன் முதற்கட்டமாக தற்பொழுது நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டிருக்கும் 12 மணி நேர வேலை சட்டத் திருத்தத்தைத் திரும்பிப் பெற்றுக் கொள்வதுடன் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும்  கொள்கை முடிவுகளைக் கைவிட வேண்டும்.   இதுவே  இவ்வருட உழைப்பாளர் தினத்தில்  எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி உயிர் நீத்த  அனைத்து தேசத்தின் தொழிலாளர்களுக்கும் நாம் செலுத்தக்கூடிய மரியாதையாக அமையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »