பாலியல் குற்றத்தை மறைக்கும் பாஜகவின் தேசபக்தி

பெண் என்பவள் போற்றத்தகவள், மதிக்கத்தக்கவள், அவர்கள் கண்ணியம் காக்கப்பட வேண்டும், பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வார்த்தைக்கு வார்த்தை நாகூசாமல் பேசும் பாஜகவினர், ஏதோ இவர்கள் மட்டும் தான் நாட்டுப்பற்றுக்கு சொந்தக்காரர்கள் போல் நாடகம் ஆடும், நாட்டு மக்களின் நலன்-நமது வீரர்கள் என மூச்சுக்கு மூச்சு வாங்க பேசும் இந்துத்துவ பாஜக கும்பல்கள் தான், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான ‘பிரஜ்பூசன் சரண் சிங்’ 10க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அந்த மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே ஜனவரி 18, 2023 அன்று, மல்யுத்த வீரர் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தின் போது உள்துறை அமைச்சர் ‘அமித்சா’ வை சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதனால் எந்த பயனும் இல்லை என்று இன்று தெரிகிறது. மேலும் வீராங்கனைகளின் போராட்டத்தின் விளைவாக ‘மேரி கோம்’ தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் எவ்வகையான முன்னேற்றமும் இல்லாததால் தற்போது (ஏப்ரல் மாதம்) வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வீரர் வீராங்கனைகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக சகவீரர்களும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் நீரவ் சோப்ரா, அபிநாத் இந்திரா மற்றும் சானியா மிர்சா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

நாட்டில் பெரும்பாலான விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரம்மிக்க அதிகாரிகள், உயர்சாதி என்று சொல்லி கொள்ளும் பார்ப்பன சமூகப் பிரிவினரை சார்ந்தவர்கள் தான் அதிகாரிகளாக அதிகளவில் உள்ளனர். குறிப்பாக அவர்கள் தலைமையில் தான் விளையாட்டு துறையே இருக்கிறது. அது மட்டுமல்ல இந்த விளையாட்டு உலகில் மேலிருந்து கீழ் வரை அதிகார படிநிலை மட்டுமே இருந்து வருகிறது.

போட்டிகள் நிறைந்த உலகில் சாதனை படைக்கும் வீரர் வீராங்கனைகள் தங்களது பலம், செயல், கடின பயிற்சி மூலம் வெற்றிவாகை சூட விரும்பும் முனைப்பால் உழைத்து வருகின்றனர். ஆனால் பாலியல் சுரண்டலால் அந்த வெற்றி முனைப்பு முடங்கி விடுகிறது; கவனம் சிதைந்து விடுகிறது; உணர்வு, மனம் ஒத்துழைப்பு இல்லாமல் போகிறது. அப்புறம் எப்படி பயிற்சியில் ஈடுபட முடியும்? எப்படி போட்டிகளில் வெல்ல முடியும்? நன்கு மக்கள் அறிந்த மற்றும் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கே இந்நிலைமை என்றால், மற்ற துறைகளில் விளக்கம் தேவையில்லை. இந்த விடயம் இதுக்கு மட்டும் விதிவிலக்கு இல்லை. எல்லா துறைகளிலும் பெண்களின் நிலைமை இது தான்.

நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்று வரும் போது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், பதவிகள் மட்டும் கொடுத்தால் போதுமா? அவர்களுக்கு ஒரு பிரச்சனை, பாதிப்பு, பாலியல் சுரண்டல் வரும்போது பிரதமர், விளையாட்டு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஏன் மௌனம் காக்கின்றனர்? இந்த போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், “பிரதமர் அவர்களே, பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோம் என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருவரின் மனதின் குரலையும் கேட்கிறீர்கள். எங்களின் மனதின் குரலை உங்களால் கேட்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பல நாட்களாக கொசுக்கடிக்கு மத்தியில் சாலையிலேயே சாப்பிட்டு உறங்கிக்கொண்டு போராடிக் கொண்டிருக்கும் தங்களை ‘மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திக்காதது ஏன்’ என்றும் சாக்சி மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். ‘பிரிஜ்பூஷண் சரண் கைது செய்யப்படும் வரை நாங்கள் இங்கிருந்து நகரப்போவதில்லை’ என்று மற்றொரு வீராங்கனையான பஜ்ரங் புனியா கூறியுள்ளார். “மூன்று மாதங்களாக முயற்சித்துவிட்டோம். விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள்கூட எங்களுக்கு பதிலளிப்பதில்லை. எங்கள் தொலைபேசி அழைப்பை யாருமே ஏற்பதில்லை. இந்த தேசத்திற்காக பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறோம். ஆனால் இன்று எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது” என்று வினேஷ் போகத் கூறியுள்ளார்.

மேலும், “டெல்லி கனாட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் ஒரு மைனர் பெண் உள்பட மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளனர். இதில் இன்னமும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இது சட்டவிரோதமானது. இவ்விவகாரத்தில் காவல்துறை டெல்லி மகளிர் ஆணையத்திற்கு 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.” என்று கூறினார். உச்சநீதிமன்றம் அனுமதி பெற்ற பிறகு தான் பாஜக எம்பி ‘பிரஜ்பூசன் சரண் சிங்’ மீது போஸ்கோ உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

2010 முதல் 2020 வரை இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு 45 புகார்கள் வந்துள்ளன. அதில், 29 புகார்கள் பயிற்சியாளர்களுக்கு எதிரானவையாக உள்ளன. ஒரு பெண் பயிற்சியாளர் இல்லாததும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. பெண் பயிற்சியாளரை நியமிப்பதும் இல்லை. ஆண் பயிற்சியாளர் இருந்தால் கூட உதவியாளர் அளவில் பெண் ஒருவர் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. ஆனால் நடப்பது அப்படி அல்ல. ஓர் அமைப்பின் நல்ல நிர்வாகி, நம்பிக்கையான சூழலுடன் கூடிய சகோதர உறவு கொண்டிருக்க வேண்டும். மாறாக, அதிகாரத்தின் மூலம் அடிபணிய வைக்க பாலியல் இச்சை, தண்டனை, அபராதம் போன்ற நடவடிக்கைகள் வீரர் வீராங்கனைகள் மீது பாய்கின்றது. இதே நிலை நீடித்தால் எப்படி சிறந்த வீரர் வீராங்கனைகள் உருவாக்கப்படுவார்கள்? உடல் மனம் மற்றும் உணர்வு ரீதியான சவால்களை சந்திக்கும் போது அதிகாரிகள் எல்லை மீறுவது வெற்றியை பாதிக்கும் அல்லவா?

பாலியல் தொல்லை புகார் கையாள பாலியல் தொல்லை தடுப்பு ஆணையம் அமைப்பது கட்டாயம், ஆனால் இந்திய விளையாட்டு அமைப்புகளில் பெரும்பாலும் அந்த ஆணையமே இல்லை. ஒரு சில அமைப்புகளில் ஆணையம் இருந்தாலும் அவை விதிகளை முழுமையாக பின்பற்றுவதில்லை.

இப்போது நடந்த போராட்டத்தின் போது, பாஜகவின் எம்பியும் முன்னாள் வீராங்கனையுமான இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பிடி உஷா அவர்கள், “விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவரும் வரை வீரர்கள் அமைதி காத்திருக்க வேண்டும். இது நாட்டுக்கும் விளையாட்டுக்கும் நல்லதல்ல, இது ஒரு எதிர்மறையான அணுகுமுறை. இந்த போராட்டம் ஒழுக்கமின்மைக்கு சமம்“ என்று வீரர்களின் போராட்டத்தை விமர்சித்துள்ளார். இது எவ்வகையான கண்டன அறிக்கை? இதில் எங்கிருந்து ஒழுக்கம் என்ற வார்த்தை வருகிறது. தவறு செய்தவனுக்கு உரிய தண்டனை கிடைத்தால் மக்களோ அல்லது வீரர் வீராங்கனைகளோ ஏன் போராட வரப் போகிறார்கள்? இது எப்படி நாட்டுக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள்? பெண்கள் தைரியமாக போராடுவதை கொச்சைப் படுத்தும் நோக்கிலே இந்த அறிக்கை அமைகிறது. ஒரு பெண்ணாக இருந்து அவர்கள் வேதனையை பகிராதது வேதனைக்குரியது.

அரசும் அதிகாரிகளும் அமைச்சர்களும் யாரும் போராடக் கூடாது, தவறு செய்தாலும் வெளியில் தெரியக்கூடாது, தெரிந்தாலும் பரவலாக்கம் கூடாது, ஒற்றுமை ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் மட்டும் கவனம் செலுத்துவதை விட, தவறு செய்யாமல் காப்பதே அரசின் கடமை. மீறி செய்தால் குற்றச்சாட்டு எழுந்தால் விசாரணை நடத்தி தண்டனை வாங்கி கொடுப்பது தான் அரசின் கடமை.

பெண்களுக்கு பாதுகாப்பு என கூவிக்கொண்டிருக்கும் பாஜக கட்சியினர் சார்ந்தவரே குற்றசாட்டுக்கு உள்ளானபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது ஏன்? இதுதான் பாஜகவின் அரசியல் நிலைப்பாடு, நாட்டுப்பற்று, நாட்டு மக்கள் பற்று, பெண்களிடம் காட்டும் மரியாதை, சமத்துவம், கண்ணியம், பாதுகாப்பு என எடுத்துக் கொள்ளலாம்.

நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கிட்டத்தட்ட 7 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் கூட்டு பாலியல் வன்கொடுமை கொலையில் உத்திரப் பிரதேசம் தான் முதலிடம். பெண்கள் குழந்தைகள் வாழ தகுதியற்ற மாநிலமாக உபி விளங்குகிறது. இந்துத்துவ கொள்கை கொண்ட நபர்கள் நாட்டை ஆள்வதானால் மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறி வருவதை நாம் நம் கண் முன்னே பார்த்து கொண்டு தான் வருகிறோம்.

அரசு சொத்துக்களான விமான நிலையம், துறைமுகம், வங்கி எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பது பாரதிய ஜனதாவுக்கு நாட்டுப்பற்றாளர், ஒழுக்கமானவர்கள், ஆனால் நாட்டுக்காக விளையாடும் வீரர் வீராங்கனைகள் ஒழுக்கமற்றவர்கள், இயற்கையை வளத்தை சுரண்டும் பெரும் முதலாளிகள் நாட்டுப்பற்றாளர்கள், அதை தட்டி கேட்கும் மக்களோ போராளிகளோ நாட்டுக்கு விரோதிகள் என சொல்கிறது மோடி அரசாங்கம். வேறு எந்த சாதனையும் வளர்ச்சியையும் சொல்ல முடியததால் தான் இவர்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகிறோம் என கூவிக் கொண்டே இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »