
தந்தை பெரியார் மீதான வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்புவதால் ‘தமிழ்த்தேசியத்தை உருவாக்க முடியாதென சீமானுக்கும், அய்யா மணியரசனுக்கும் நன்கு தெரியும். இவர்கள் பெரியாரை எதிர்க்க ஒற்றைக்காரணம், பெரியார் ‘சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர். இந்தத் தமிழ்த்தேசிய கோரிக்கையை சொல்லும் துணிச்சல் இவர்கள் இருவருக்கும் கிடையாது. இருவரும் ‘சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கைக்கு எதிரானவர்கள். பெரியாரை எதிர்க்க திமுக-அதிமுகவை காரணம் காட்டுவார்கள். அக்கட்சிகளின் சறுக்கல்களை சுட்டிக்காட்டி நியாயப்படுத்துவார்கள். ஆனாலும் எவ்விடத்திலும் தமிழ்த்தேசியத்தின் அடிப்படை கோரிக்கை என்ன என்பதை பேசமாட்டார்கள். அந்த கோரிக்கையை பேசினால் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால், பெரியார் மீது அவதூறை பரப்பி தம்மை காத்துக்கொள்பவர்கள்.
திமுக-அதிமுக கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளில் செய்த சறுக்கல்களையும், சமரசங்களையும், கடந்த 15 ஆண்டுகளில், ‘ஒரு கவுன்சிலர் பதவிகூட பெறாத’ சீமான் செய்துவிட்டார். சீமானுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தால் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களை அரசாங்க பணியாக்கிவிடமாட்டாரென அய்யா மணியரசனால் கூட உறுதி கூற இயலாது. இருந்த போதிலும் இருவரும் ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொள்வார்கள், புகழ்ந்துகொள்வார்கள்.
கடந்த காலங்களில் திமுகவும், எம்.ஜி.ஆரும் அடையாளத்திற்காகவாவது தமிழீழ கோரிக்கைக்கு போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் இக்கட்சிகளின் துரோகத்தை முன்வைத்து பேசுவதாக சொல்லும் சீமான், கடந்த 16 ஆண்டுகளில் ஒருமுறைகூட பெரும்-மக்கள் திரள் போராட்டத்தை நடத்தி இந்திய-இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்ததில்லை, இந்த கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுத்ததில்லை, ஆனால் முதல்நபராக ஜெயலலிதா அம்மையார் முதல் அய்யா ஸ்டாலின் வரை நேரில் சென்று சந்தித்து, சமரசம் செய்து துண்டு போட்டுக்கொள்வார். இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் தீவிரமடைந்த போதெல்லாம் அப்போராட்டங்களை கலைப்பதற்கான உள்ளடி வேலைகளை செய்தவர் சீமான். (இதை மே17 இயக்கம் ஆதாரங்களோடு எந்த மேடையிலும் முன்வைக்கும். இதுகுறித்து வரும் நாட்களில் விரிவான கருத்தரங்கையும் ஏற்பாடு செய்யும். )
அய்யா மணியரசன் அவர்கள் ‘சுதந்திர தமிழ்நாடு’ மட்டுமே தமிழர் ஆட்சியமைக்க உதவும் என்ற தந்தை பெரியாரின் முழக்கத்தை நிராகரிக்கவே, பெரியாரின் மீதான அவதூறுகளை பரப்புகிறார். ஒருவேளை அவர் நம்புவதுபோல ‘பெரியார் தமிழருக்கு எதிரியெனில்’, அய்யா மணியரசன் அவர்களே துணிந்து ‘சுதந்திர தமிழ்நாடே தமிழ்த்தேசியத்தின் முழக்கம்’ என அறிவிக்கட்டும், போராடட்டும். இந்திய அரசுக்கு எதிராக, அல்லது திமுக-அதிமுகவிற்கு எதிராக மக்களை திரட்டட்டும். ஆனால் அதை செய்யமாட்டார். அவருக்கு திமுக-அதிமுகவிடம் முரண்படுவதை விட பெரியாரை அவதூறு செய்வது பாதுகாப்பானது, டில்லிக்கு சாதகமானது.
ஆனால் தமிழ்த்தேசிய ஆளுமைகளான ஒப்பில்லாவீரன் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், பாவலரேறு பெருஞ்சித்தனார் ஆகிய தமிழ்த்தேசியர்கள் ‘இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுதலை பெறட்டும்’ என முழங்கி, இயக்கம் கட்டினர். இதற்காக உயிர் கொடுத்தனர். எண்ணற்ற போராளிகளை உருவாக்கினர். திராவிடர் இயக்கம் மீது, பெரியார் மீது இவர்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தனர். இவற்றை திராவிடர் இயக்கத்தார், தோழமை விமர்சனமாகவே ஏற்றனர். எவ்விடத்திலும் அய்யா மணியரசன் போன்று வன்ம அரசியலை பெரியார் மீது முன்வைக்கவில்லை. அதற்கான காரணம், தந்தை பெரியார் தன் இறுதிநாள் வரை ‘தமிழ்நாடு விடுதலை வேண்டும்’ என மக்களிடத்தில் செய்த பரப்புரை. இப்பரப்புரையை இவர்கள் நிராகரிக்கவில்லை. அங்கீகரித்தனர். பாவலரேறு அவர்கள் பெரியாரை போற்றினார். இந்திய சூழலில் தமிழர்களிடத்தில் பெரியாரின் களப்பணியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து எழுதினார். பெரியாரிடம் வெளிப்பட்ட போதாமைகளை சுட்டிக்காட்டினாலும் பெரியாரை போற்றுவதில் தடுமாற்றமில்லை. அந்த போதாமைகள் குறித்து தந்தை பெரியாரே பேசியுள்ளார். தமிழ்த்தேசியத்திற்கு ஆக்கப்பூர்வமான களபங்களிப்பை இந்த ஆளுமைகள் செய்தார்கள். அதனாலேயே பெரியாருக்கு எதிராக வன்ம அரசியலை முன்னெடுக்கவில்லை. சீமானோ, அய்யா மணியரசனோ களப்பணி செய்தவர்கள் அல்ல. தமிழ்த்தேசிய கோரிக்கைக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பு செய்யாத சீமானும், அய்யா மணியரசனும் ஆரியத்திற்கு எதிரான தந்தை பெரியாரை வன்மத்தின் மூலமாக எதிர்ப்பதன் வழியாக டில்லியின் கடைக்கண் அங்கீகாரத்திற்காகவே காத்திருக்கின்றனர்.
தந்தை பெரியாரின் ‘சுதந்திர தமிழ்நாடு’ எனும் முழக்கத்தை ஏற்காத கட்சி திமுக-அதிமுக. இதற்கு மாற்றாக ‘மாநில சுயாட்சி’ என்பதை முன்வைத்தவர்கள் திமுகவினர்.
திமுகவின் இந்த மாநில சுயாட்சி கோரிக்கையை பாலீஷ்போட்டு தமிழ்த்தேசியம் என பேசுபவர் அய்யா மணியரசன். ஆனால் பெரியாரிஸ்டுகள் ‘தமிழ்நாடு விடுதலையை’ ஏற்றவர்கள். இதனாலேயே தமிழருக்கு தனிநாடு உலகில் எம்மூலையிலாவது உருவாகட்டுமென ‘தமிழீழ’ கோரிக்கைக்காக கொடும் அடக்குமுறை எதிர்கொண்டு இன்றுவரை ஆதரிக்கின்றனர். 1973ல் தாம் மரணிக்கும் முன்பான கடைசி பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ‘சுதந்திர தமிழ்நாட்டை பெற இயலாமல், ஆதிக்க டில்லிக்காரனின் கைகளில் தமிழர்களை விட்டுச் செல்கிறேனே’ என அங்கலாய்த்தார். ‘… தனக்கு அடுத்த சந்ததி போர்க்குணத்துடன் போராடும்..’ என்றார். பெரியாரோடு முரண்பட்டவர்கள் கூட பெரியாரின் தமிழ்நாடு விடுதலை கோரிக்கைக்காக அவரை போற்றினார்கள்.
ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக பெரியாரின் மீது அவதூறு பரப்பும் சீமானும், அய்யா மணியரசனும் 2009ல் இந்திய நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக முணகலை கூட வெளிப்படுத்தவில்லை. ஆனால் சுதந்திர தமிழ்நாடு கோரிக்கையே இலட்சியம் என்ற பெரியாரிய தொண்டர்கள் மீது அவதூறுகளை பரப்பிய வண்ணம் இருந்தனர்.
இவர்களது தமிழ்த்தேசியம் என்பது ‘கழுதைப்புலி’ தமிழ்த்தேசியம். உடலில் வரி இருக்கிறதென்பதற்காக ‘புலி’ என நம்புவதை போன்றது. பெயரில் ‘கழுதை’ என இருப்பதால், பொதிசுமக்கவாவது பயன்படுமென தவறாக நினைத்தால் கடித்து வைத்துவிடும். இது புலியை போல ஆதிக்கத்தை எதிர்த்து போரிடாது, கழுதையை போல சாமானிய தமிழனுக்கு உதவி செய்ய பயன்படவும் செய்யாது.
தந்தை பெரியார் தனது இறுதி உரையில் பெரியாரிஸ்டுகளுக்கு உத்திரவிட்டுள்ளதை கவனமெடுத்து, கழுதைபுலிகளை கடந்து சென்று இலக்கை அடைய வேண்டிய கடமை உள்ளது.
தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
திசம்பர் 22, 2025