“பல்லாவரம் அனகாபுத்தூரில் நேர்மையற்ற வகையில் மக்களை அகற்றம் செய்து வருகிறார்கள்.” – தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் செப்டம்பர் 27, 2023 அன்று தனது முகநூல் கணக்கில் பதிவு செய்தது.
தமிழ்நாடு முழுவதும் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ எனும் பெயரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக வீதிக்கு துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி தேர்வுகளுக்கு இடையே அக்குடும்ப குழந்தைகள் அல்லாடுகின்றன. கல்வியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுகள், அதிகாரிகளின் மிரட்டல்கள், காவல்துறை அடக்குமுறைகளால் சாமானிய ஏழை மக்கள் நசுக்கப்படுகிறார்கள். இவர்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்கள் கைகழுவி நழுவிக் கொள்கிறார்கள். நீர்நிலை ஆக்கிரமிப்பு, ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு என அகற்றம் நடத்தும் அரசும், நீதிமன்றமும் ஜக்கியின் ஆக்கிரமிப்பு, மதுரை உயர்நீதிமன்ற வளாக நீர்நிலை ஆக்கிரமிப்பு, சாஸ்த்ரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு, நுங்கம்பாக்கம் அம்பா மால் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை கேள்வி எழுப்பாமல் நழுவிச் செல்கின்றன.
இவ்வகையில் அனகாபுதூரிலும் நீதிமன்ற உத்தரவு என எதுவும் கிடைக்காத நிலையில் அடையாறு கரையோர வீடுகளை அகற்றுகிறோம் என தாம்பரம் ஆணையரும், அதிகாரிகளும் அவர்களை மிரட்டி அகற்ற முயற்சிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க தோழர்களுடன் சென்று சந்தித்தோம்.
இது குறித்த வழக்கில், நீதிமன்றம் கட்டாய அகற்றத்திற்கு ஆதரவாகவோ, நகராட்சியின் கோரிக்கையை ஏற்றோ தீர்ப்பளிக்கவில்லை. கரையோரத்தை சர்வே செய்து முடிக்காமல் அகற்றத்திற்கு மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டதட்ட 3000 மக்கள் மழைக்காலத்தில், 500 மாணவர்கள் பள்ளி கல்வி காலத்தில் வீதிக்கு துரத்தப்பட இருக்கிறார்கள். அடையாறு ஆற்றங்கரைக்குள்ளாக இவர்கள் வீடுகள் கட்டப்படவில்லை. ஆற்றங்கரை உயர்த்தப்பட்ட இடத்தில் வசிக்கிறார்கள். இப்பகுதியை குடியிருப்பு பகுதி என சி.எம்.டி.ஏ அடையாளமிட்டிருக்கிறது. ஆனால் இக்கரைக்கு எதிர்ப்புறத்தில் மாதா கல்லூரியின் காம்பவுண்ட் சுவர் கரையோரம் அமைக்கப்பட்டு அதற்கு பாதுகாப்பாக அரசின் சுவரும் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. அதே போல ஓடைப்பகுதி ஒன்றை சட்டவிரோதமாக அதிகாரிகளே குடியிருப்பு என திருத்தம் செய்திருக்கும் ஆவணத்தையும் நேரில் கண்டோம்.
‘காசாக்ராண்டே’ (casa grande) எனும் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் அடையாறு கரையோரத்தின் இதே பகுதியில் ப்ளாட் பிசினஸை துவக்கி நாட்களாகிறது. மற்றொரு புறத்தில் இதே போல ரியல் எஸ்டேட் கம்பெனிகள் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து அமைத்துள்ளன. இதை ஒட்டி எதிர்ப்புறத்தில் ஒலிம்பியா நிறுவனமும் கட்டியுள்ளது.
இந்நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி ஏதும் நடவடிக்கை எடுக்காமல் சாமானியரின் வீடுகளை நயவஞ்சகமாக இடிக்கிறது. நாங்கள் நேரடியாக சென்று பார்த்த அடுத்த நாள் அப்பகுதி மக்களை காவல்துறை அழைத்து நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்வதாக சொல்லி இருக்கிறார்கள்.
இப்பிரச்சனை குறித்து மக்களுக்கு சாதகமாகவே அரசு ஆவணங்கள் உள்ளன. பெருமளவிலான வீடுகள் கரையிலிருந்து வெகு தூரத்தில், உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதிகாரிகள் கடுமையான நெருக்கடியை கொடுக்கிறார்கள். இப்பகுதியில் மரம் நடப்போவதாக அறிவிப்பு திட்டத்தைச் சொல்கிறார்கள். கரையோர மரம் வளர்ப்பு என்று சொல்லும் அதிகாரிகள் மாதா கல்லூரி, காசாக்ராண்ட், ஒலிம்பியாவிற்கு எந்த குந்தகமும் வராமல் கவனமாக தவிர்க்கிறார்கள். இம்மக்களின் நேர்மையான கோரிக்கைகளை எடுத்துச் சொல்லவேண்டிய திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் இது குறித்து ஏதும் பேச மறுப்பதாக மக்கள் வருத்தம் தெரிவித்தனர். அப்பகுதிக்கு வந்த அமைச்சர்களிடத்தில் மனு கொடுக்க விடாமல் அம்மக்களை அரசியல் கட்சி, அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
ஏன் சாமானிய மக்களை அதிகாரிகள் வன்மத்துடன், மனிதநேயமற்ற வகையில் அணுகுகிறார்கள்? கார்ப்பரேட் கம்பெனிகள், ரியல் எஸ்டேட் மாபியாக்களிடம் கைகட்டி நிற்கும் அதிகாரவர்க்கம் சாமானிய ஏழை மக்களை கொடூரமாக கையாள்கிறது. இவ்வகையான நடவடிக்கைகளை மக்கள் இயக்கங்களே தடுத்து நிறுத்த வேண்டும். கிட்டதட்ட பெரும்பாலான வீடு இடிப்புப் பகுதிகளில் அப்பகுதி எம்.எல்.ஏக்கள் குறிப்பாக திமுக எம்.எல்.ஏக்கள் மக்கள் கோரிக்கையின் நியாயத்தை மேலே எடுத்துச் செல்வதில்லை. பாதிக்கப்படும் மக்கள் இவர்களுக்கு பெரும் வாக்குவங்கிகளாக இருந்த போதிலும் இம்மக்கள் துரத்தப்படுகிறார்கள். சென்னையில் 10,000க்கும் அதிகமான வீடுகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலோனோர் திமுகவிற்கு வாக்களித்தவர்கள். கடந்தகால அதிமுக அரசு இவர்களின் உரிமையை நிலைநாட்டாமல் அதிகாரிகளின் போக்கில் விட்டது. லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடும் அதிகாரவர்க்கம் இம்மக்களை அகற்றி தமது சேவையை நிலைநாட்டுகிறது.
நீதிமன்றம் சாமானிய மக்களின் வாழ்வியல் குறித்த எந்த பொறுப்புமின்றி தீர்ப்புகளை வாரி வழங்கியுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம், ஜக்கி வாசுதேவ், மதுரை உயர்நீதிமன்ற வளாகம், ஆம்ப்பா-மால், காசாக்ராண்டே ஆகியவை எவ்வித இடையூறுமின்றி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்து அரசு நிலங்களில் வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றன. அதிமுக காலத்தில் வஞ்சிக்கப்பட்ட மக்கள் திமுக ஆட்சியிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள். திமுக ஜால்ரா ஊடகங்கள், யூட்யூபர்கள் இதை மறைத்து மாய பிம்பத்தை உருவாக்கி தமக்குள்ளாக கொண்டாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அனகாபுத்தூர் மக்களை அகற்றுவதில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்த மே பதினேழு இயக்கம் நடத்தவிருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள். தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதாக முடிவெடுத்துள்ளோம். இப்பகுதி மக்களுக்காக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களின் அலுவலகம் வாயிலாக வழக்கறிஞர் சுபாஷ் இவர்களுக்கான வழக்கை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். முதல்கட்டத்தில் இம்மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளார். வரும் வாரங்களில் இம்மக்களுக்கு ஆதரவாக மே பதினேழு இயக்கம் பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் மேற்கொள்ளும். இதர சனநாயக அமைப்புகளும் கைகோர்க்க அழைப்பு விடுக்கிறோம்.
அனகாபுத்தூர் மக்களுக்கு நேர்வது போல அடையாறு கரையோரத்தில் எம்.ஜி.ஆர் நகர் அருகே சூளைப்பள்ளம், வேளச்சேரி, பக்கிங்காம் கால்வாய் குடியிருப்பு மக்கள் என பல்லாயிரக்கணக்கான பூர்வகுடிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தீவிரமாக தொடருமெனில் இதன் விளைவுகள் தேர்தல்களில் எதிரொலிக்கும். அம்முடிவுகளை திமுக ஆதரவு யூட்யூப் கூட்டத்தால் மாற்றிவிட இயலாது.
இந்த ஏழை மக்களின் வீடுகளில் எதிர்கால கனவுகளோடு கல்வி பயிலும் குழந்தைகளுக்காகவாவது நாம் கைகோர்ப்போம்.