மருத்துவ படிப்பிற்காக கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு மாநில மருத்துவ வளங்களை கொள்ளையடிக்கவும், மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் திட்டம் என்பதனை தாண்டி, அவை ஏழை, எளிய, கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எதிராக உள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தற்போது நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடையே நடத்திய ஓர் ஆய்வு.
நடப்பாண்டில் நீட் தேர்வில் முதல் 50 இடங்களுக்குள் வந்த 38 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் தனியார் பயிற்சி மையங்களில் பல லட்சங்கள் செலவு செய்து தேர்வுக்கு தயாராகியுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. இது, பள்ளித்தேர்வில் முதன்மையாக வந்த போதும், பயிற்சி பெற வசதியில்லாத ஏழை-எளிய மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது தெரிகிறது. எனில், பயிற்சி வகுப்பில் சேர பல லட்சங்கள் செலவு செய்யக்கூடியவர்களுக்கானது தான் மருத்துவப் படிப்பு என்கிறது நீட் தேர்வு.
மேலும், பெரும்பாலான மாணவர்கள் பெருநகரங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் உயர்தர தனியார் பள்ளியில், குறிப்பாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் என்பதும் புலப்படுகிறது. இந்தியாவில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள், மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் சிறிய நகரங்களை, கிராமப்புறங்களை சேர்ந்தவர்களே. ஆனால், அப்படியானவர்களுக்கு இடமில்லை என்பதை நீட் தேர்வு உறுதி செய்கிறது. மாநிலப் பள்ளிக்கல்வியை ஒழித்துக்கட்டி, சமூக பேதத்தை வளர்த்தெடுக்கும் புதிய கல்வியை திணிக்கும் சிபிஎஸ்சி பாடத் திட்டத்தை நோக்கி மாணவர்களை தள்ளும் சூழலை நீட் தேர்வு உருவாக்குகிறது.
அதோடு, இவர்களில் எஸ்சி வகுப்பை சேர்ந்த 2 பேர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 8 பேர் தவிர, அனைவரும் உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்பதும் இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. முன்னேறிய வகுப்பை சேர்ந்த ஒன்றிய அரசுப் பணியாளர் குடும்பத்தினருக்கு ஏற்ற பாடத்திட்டத்தில் பயின்ற, பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை பறித்து 8 லட்சம் சம்பாதிக்கும் ஏழைகளின் EWS-க்கு அளிக்கும் சமூக முன்னுரிமை உள்ளவர்களுக்கானது மருத்துவப் படிப்பு என்கிறது நீட் தேர்வு. ஏழைகள் மருத்துவம் வசதியை பெறுவதைக்கூட மறுக்கும் சூழலை இந்த நீட் தேர்வு உருவாக்கும் என்பதையே காட்டுகிறது இந்த ஆய்வு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, நீட் தேர்வில் முதல் 50 இடங்களுக்குள் உள்ள 38 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், நீட் தேர்வு என்பது உயர்சாதி-பணக்காரர்களுக்கானது என்பதும், சமூகநீதிக்கு எதிரானது என்பதும் மீண்டும் உறுதியாகியுள்ளது. பணமும், சமூக நிலையும் மருத்துவம் பயில குறிப்பிட்ட காரணிகளாக இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. பெரும்பான்மை சமூகத்தினரை புறக்கணிக்கக் கூடியதாகவும், ஒரு சிறுபான்மை கூட்டம் மருத்துவம் பயிலும் வாய்ப்பை நீட் தேர்வு ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பது தெளிவாகிறது. இது சமூகநீதிக்கு எதிரானது.
போட்டித் தேர்வு என்பது குறைந்தபட்சம் அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்க வேண்டும். ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகத்தில் சமவாய்ப்பு என்பதே ஒரு பக்க சார்பானது என்னும் நிலையில், அந்த சமவாய்ப்பை கூட வழங்க மறுக்கும் நீட் தேர்வு சமூகத்திற்கு கேடாய் அமையும். சமூகத்தில் அனைத்து வசதிகளும் பெற்றவர்கள் மட்டும் மருத்துவப் படிப்பை பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்பது அரசியலமைப்பிற்கு எதிரானது.
நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கிறது என்பதோடு, மேற்கூறிய காரணங்களால் தான் தமிழ்நாடு நீட் தேர்வை முழு மூச்சுடன் எதிர்க்கிறது. உயர்சாதி-பணக்காரர்களின் நலன் பேணும் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை திணிப்பதோடு, தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவினை ஆளுநர் மூலம் சில ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்து, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
நீட் தேர்வு தொடர்ந்து நீடிக்கப்படுமெனில், நாட்டின் தலைசிறந்த தமிழ்நாட்டின் மருத்துவ சேவை சீரழிக்கப்படும். நீட் தேர்வினை ஒழிக்கப்படும் வரை அதனை உறுதியோடு எதிர்த்துப் போராட வேண்டுமென்பதையே இந்த ஆய்வு உணர்த்துகிறது. இதற்காக தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டுமெனவும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை ஓயக்கூடாது எனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010