இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் சிக்கலின் அடித்தளத்தில் தேசிய இன உரிமை கோரிக்கை நிரகரிக்கப்படக்கூடியதன்று. இதுவே நீர்த்துப்போன வடிவில் ‘மாநில உரிமை‘ என முன்வைக்கப்படுகிறது. இப்படியான சமகால அரசியலில் பல கேள்விகளை எழுப்பிய திரைப்படம் விடுதலை திரைப்படம். இதுகுறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூலில் டிசம்பர் 23, 2024 அன்று பதிவு செய்தது.
ஆட்சிக்கு வந்தவுடன் சங்கிகள் கைவைத்த இடம் திரைப்பட கல்லூரியின் மீதுதான். பாசிஸ்டுகளுக்கு திரைப்படைப்பின் வலிமையை நன்கு அறிந்ததாலேயே அதன்மீது கைவைத்தனர். சென்சார்போர்டு வரை தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். நடிகர்-நடிகைகளை நேரடியாக மோடியை சந்திக்கவைத்தனர். பாசிஸ்டுகள் பிரச்சாரத்தின் மூலமாக மக்களை ஆக்கிரமிப்பவர்கள். தமது பொய்பிரச்சாரத்தை முறியடிக்கும் வலிமை சினிமா-பத்திரிக்கை ஊடகத்திற்குண்டு என அறிந்திருந்தார்கள்.
இதுதான் மோடி ஆட்சி 15 ஆண்டுகளாக நீடிக்க முக்கிய காரணம். 2014க்கு பின் வெளியான சினிமாக்கள் சங்கிகளின் கடும் தணிக்கைக்குட்படுத்தப்பட்டவை. சினிமா தணிக்கை, சினிமா முதலீடு, சமூகவளைதள ஆதிக்கம் ஆகியவற்றை வைத்து கலையுலகை கட்டுப்படுத்தி முடக்கினார்கள். மறுபுறம் காசுமீர்பைல்ஸ், கேரளா ஸ்டோரி, அமரன் எனும் திரைப்படங்கள் வெகுமக்களை, சிறுபான்மையினரை எதிரிகளாக்கி சங்கிகளின் வெறுப்பு பிரச்சாரத்தை தடையின்றி மேற்கொண்டது.
இந்த சூழலில் தான் ‘விடுதலை‘ எனும் திரைப்படத்தை நாம் அணுகவேண்டியுள்ளது. பாசிசத்திற்கு எதிராக வேலைத்திட்டமே உருவாக்கப்படாத சூழலில் ஏக-இந்தியா, அகண்ட-இந்தியா எனும் பாசிச கருத்தாக்கங்களை கலை, கல்வி முதல் செய்தி ஊடகம் வரை பரப்பி வருகின்றனர் சங்கிகள். இதை தடுக்கவோ, எதிர்க்கவோ இதுவரை தேசிய அளவிலான கொள்கைரீதியான வழிமுறைகள் உருவாக்கப்படவில்லை. பலவேறு கூட்டியக்கங்களில் பங்கெடுத்த அனுபவத்திலேயே இதை சொல்கிறேன்.
விடுதலை திரைப்படம் சில காத்திரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. ‘கட்சி’ வடிவத்தில் இயங்கும் அரசியல் கட்டமைப்பிலிருந்து, ‘அரசு-அதிகாரவர்க்கம்’ எனும் அமைப்பில் இயங்குகிறவர்கள் முதற்கொண்டு, சூரியை போல அப்பாவிகளாய், நல்லவர்களாய் வாழும் சாமானியர்கள் வரையிலான கேள்விகள் அவை. மிக முக்கியமாக ‘கோட்பாடு-கொள்கை-இலட்சியம்’ ஆகியவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இந்தியாவின் அரசியலில் தவிர்க்க இயலாத ஆற்றலான கம்யூனிச கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள், சிந்தனையாளர்கள் வரை எழுப்பப்பட்ட கேள்விகள் காத்திரமானது.
இது அரசியல் திரைப்படம். இது பிற வடிவங்களிலிருந்து மாறுபட்டது. இத்திரைப்படத்திற்கென்று இலக்கு, நோக்கம் இருக்கிறது. அதை நோக்கிய விவாதம் தேவைப்படுகிறது. இந்த கேள்விகளை தவிர்க்கும் முயற்சியாகவே, ‘அதிக வசனங்கள் கொண்ட படம்’, ‘அதிக புரட்சி பேசும் படம்’, ‘வன்முறையை முன்வைக்கும் படம்’, ‘திரைமொழியற்ற படைப்பு’ என பலவேறு மடைமாற்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
‘ஏக இந்தியாவும், அகண்ட பாரதமும்’ எனும் பாசிசம் அடிப்படையில் யாரை அச்சுறுத்துகிறது? சிறுபான்மை மக்களை மட்டுமல்ல, அடிப்படையில் ‘தேசிய இனங்கள்’ இல்லாமல் பூண்டோடு அழிக்கும் இலக்கு கொண்டவை. இந்தி ஆதிக்கத்தையும், இந்து மதத்தையும் நிரப்புவதில் சிதைக்கப்பட போவது தேசிய இனங்களே. பாஜகவின் ஆகப்பெரும் எதிரிகள் மாநில கட்சிகள். காரணம், குறைந்தபட்ச பன்முகத்தன்மையின் அடையாளமாக எஞ்சி நிற்கும் அரசியல் அமைப்புகள் இவை. இன்னும் சொல்லப்போனால், மாநில கட்சிகள் பாஜகவை வீழ்த்த காரணமாக இருந்தவை அந்தந்த மாநிலங்களின் ‘பிராந்திய உணர்வு’ அல்லது ‘ உருப்பெறாத தேசிய இன உணர்வு’.
இந்தியாவின் பிரதான சிக்கலாக தோழர் தமிழரசன் 1986ல் கொல்லிமலை கட்சி மாநாட்டில் வைக்கப்பட்ட அறிக்கையின் முதல் சாரத்தை ‘விடுதலை’ திரைப்படம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக கருதுகிறேன். சென்சார் போர்டு என்கிற அடக்குமுறை கட்டமைப்பினால் சொல்லமுடியாது போயிருக்கும் அக்கேள்வியாக தமிழரசனின்,
‘தலைமையில் உள்ள இந்தி ஏகாதிபத்திய சார்பு முதலாளியத்திற்கும், அனைத்தி மொழி நாட்டின் மக்களுக்கும் இடையேயான முரண்பாடு’.
– அதாவது-
‘தமிழ்நாட்டு சமூக வளர்ச்சிக்குத் தடையாக தலைமைப்பாத்திரம் வகிக்கும் இந்தி ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவத்திற்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு.
-மற்றும்-
‘அந்தந்த மொழி நாட்டின் நிலப்பிரபுத்துவத்திற்கும், அனைத்து மக்களுக்குமான முரண்பாடு’
-அதாவது-
‘தமிழ்நாட்டில் உள்ள நிலப்பிரபுத்துவத்திற்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் இடையொலான முரண்பாடு’
இந்த முரண்பாடுகளை திரைக்கதையாக ‘விடுதலை’ பேசுகிறது. இந்த முரண்பாடுகளை தீர்க்க தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், இவர்களுக்கு முன்னதாக இந்தியதேசிய விடுதலை தொடர்பில் தோழர் பி.எஸ்.சீனிவாசராவ் ஆகியோரின் செயல்பாட்டையும், பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய இனம், ஏழை மக்களின்வர்க்க எதிரிகளான முதலாளிகள்-பண்ணையார்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான வழிமுறைகள், யுக்திகள், செயல்தந்திரங்கள் குறித்து நடந்த விவாதங்கள், கட்சியின் பிளவுகள் ஆகியவற்றை திரைப்படம் சுய ஆய்வுக்கு முன்வைக்கிறது.
இந்திய இடதுசாரி வரலாற்றினை தமிழ்த்தேசிய இனத்தின் பார்வையில் அணுகிய திரைப்படமாகவும் இது வெளிப்பட்டுள்ளது.
இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் சிக்கலின் அடித்தளத்தில் தேசிய இன உரிமை கோரிக்கை நிரகரிக்கப்படக்கூடியதன்று. இதுவே நீர்த்துப்போன வடிவில் ‘மாநில உரிமை‘ என முன்வைக்கப்படுகிறது.
ஈழப்படுகொலையின் பின்னாளில் மெளனித்துபோன முற்போக்கு இலக்கியவாதிகள், படைப்பாளிகளின் கோழைத்தனத்தை தோலுரிப்பதாகவும் நான் விடுதலை படைப்பை அணுகிறேன். தங்கள் மெளனத்தின் மூலமாக ஈழப்படுகொலையென்று ஒன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளாத பெரும்பான்மை தமிழ் முற்போக்கு இலக்கிய உலகம், படைப்புலகத்தின் கள்ளத்தனத்தை, வன்மத்தை மற்றும் கோழைத்தனத்தின் மீது உழிழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
இப்படியான சமகால அரசியலில் பல கேள்விகளை எழுப்பிய திரைப்படம் ‘அதிகம் வசனம் கொண்டதாக, வன்முறை கொண்டதாக’ இருப்பதில் ஆச்சரியமில்லை.
பேசக்கூடாதென கருத்துரிமை பறிக்கப்படும் தேசத்தில் ‘..அதிகம் பேசுவது, அதிலும் அரசியல் பேசுவதே..’ பாசிசத்திற்கெதிரான கலகத்தின் தொடக்கம்.
அந்த கலகத்தை துணிந்து செய்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்
….மேலதிகமாக உரையாடுவோம்