தமிழர்கள் கட்டிய கோவிலை ஆக்கிரமித்து தனிப் பண்ணையம் செய்யும் சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் தீட்சிதர்கள், பக்தர்கள் மீது நடத்தும் அடாவடித்தனமும், பக்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அறநிலையத் துறையுடன் மோதும் முரட்டுத்தனமும் எல்லை மீறுகிறது. இக்கோயிலை தங்களின் சொந்தக் கோயில் என்றும், காலம் காலமாக தாங்களே ‘தனிச் சமயப் பிரிவினராக’ நிர்வாகம் நடத்தி வருவதாகவும் தொடர்ந்து பொய்களை அனைத்து தளங்களிலும் சொல்லி வருகின்றனர் தீட்சிதப் பார்ப்பனர்கள். இக்கோயில் தீட்சிதர்களின் சொந்தக் கோயிலா?
தில்லைக் கோயிலின் வரலாறு:
கடந்தகால உண்மையான வரலாறுகளை கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழாய்வுகள் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்பதே நிரூபிக்கப்பட்ட சான்று.
“தில்லைப் பெருங்கோயிலில் வரையப் பெற்றுப் படியெடுக்கப் பெற்றுள்ள இருநூற்றெழுபது கல்வெட்டுக்களில் இக்கோயிலின் நிர்வாகம் நாடாளும் அரசனின் ஆணைப்படி, திருக்கோயிலில் பணிசெய்யும் பல்வேறு குழுவினராலும், சமுதாய மக்களாலும் நிர்வகிக்கப் பெற்று வந்த செய்தியே இடம் பெற்றுள்ளது”. (தில்லைப் பெருங்கோயில் வரலாறு – பேராசிரியர் வெள்ளைவாரனார்).
தில்லைப் பெருங்கோயில், உண்மையில் துவக்க காலத்தில் பெரிய கோவிலாக எழுப்பப்படவில்லை. சோழர்களால் மிகவும் போற்றி வளர்க்கப்பட்ட கோயில் இது. பல்வேறு காலத்தில் ஆட்சி செய்த பல அரசர்களாலும் பெரியதாக்கப்பட்டு, பெரும் கொடைகள் கொடுக்கப்பட்டு, திருப்பணி போன்றவை முன்னெடுக்கப்பட்டு அரசர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்த கோவிலே இது.
சோழர்களைத் தொடர்ந்து பல்லவர்கள், நாயக்கர்கள் என சைவம், வைணவம் சார்ந்த அரசர்களால் நிர்வகிக்கப்பட்ட கோவில். சைவக் கோயிலான இந்தக் கோயிலில் 8ம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவ அரசன் கோவிந்தராச பெருமாள் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்கிறான். 12-ம் நூற்றாண்டில் சைவ சமயத்தை பின்பற்றிய இரண்டாம் குலோத்துங்க சோழனால் பெருமாள் சிலை தூக்கி வீசப்பட்டது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்பு விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் மீண்டும் பெருமாள் சிலை நிறுவப்பட்டது. இதை எதிர்த்து கோவமுற்ற தீட்சிதர்களில் சுமார் 20 பேர் கோவில் மேலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். மன்னனே சிலரைக் கொன்றும் விடுகிறான். இவ்வாறு அரசுகளின் சமய ஆதிக்கச் சண்டையிலும், தீட்சிதர்கள், வைணவர்கள் பூசை சண்டைகளும் தொடர்ந்த வண்ணம், சிதம்பரம் தில்லைக் கோவிலில் சர்ச்சைகளே நீண்ட காலமாக நீடித்தது.
அதன் பின்னர் தான் சைவ, வைணவப் பிரிவினர்கள் தங்களுக்குள் சமரசம் மேற்கொண்டு அவரவர் எல்லையை வகுத்துக் கொண்டனர். ஒரு பொதுச்சொத்துக்கு வழிபாட்டு எல்லையை மட்டுமே வகுத்துக் கொண்டதைத்தான், கோவிலுக்கே உரிமை கிடைத்து விட்டதைப் போல, தங்களுக்கு உரியதே தில்லைக் கோயில் என ஆக்கிரமித்துக் கொண்டனர் தீட்சிதப் பார்ப்பனர்கள். பேரரசர்கள் எவருமற்ற காலமான சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த வழிபாட்டு சமரசத்திலும் பூசையைத் தவிர, தீட்சிதர்கள் கையில் தான் கோவிலின் நிர்வாகம், மேலாண்மை இருந்ததா என்பதற்கும் ஆதாரம் இல்லை.
மராத்தியர்கள் ஆட்சிக்காலத்தில் அரசர்கள் அல்லாத நிலக்கிழார் ஒருவர் பெருங்கொடை அளித்து, அக்கொடையைக் கொண்டு கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை சரவணைத் தம்பிரான் என்பவருக்கு எழுதி வைக்கிறார். அதற்கு மராட்டிய காலத்து செப்பேடு ஆதாரமாக உள்ளது. 1700-கள் வரையிலுமே தில்லை நடராசர் கோவில் தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இல்லை என்பதே ஆதாரமாக இருக்கிறது
ராசராச சோழன் காலத்தில் கொடைகள் அளித்த அதிகாரிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், பாண்டிய மன்னனான மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்தில் கோவில் மேற்பார்வையாளர்களுக்கு வரித் தள்ளுபடி செய்ய வேண்டுமென பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், விஜயநகர அரசர் நரசநாயக்கரின் பிரதிநிதியான திருமலைக் கொழுந்தர் பெயரில் கோவிலின் நிர்வாகம் இருந்ததாகப் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, வெங்கடதேவ மகாராச அரசர் காலத்தில் நமச்சிவாய உடையார் என்பவரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற உணவு, படையல் பற்றிய கல்வெட்டுகள் என அரசர்கள் ஆட்சி செய்த காலம் தோறும் அரசவை அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழே தில்லை நடராசர் கோயிலின் நிர்வாகம் நடைபெற்றிருக்கிறது என்பது புலனாகிறது. கோவிலின் நடை சாத்தப்பட்டு பிச்சாவரம் ஜமீனிடம் சாவி கொடுக்கப்பட்டு காலையில் சாவி வாங்கி வந்து கோயில் திறக்கப்படுவது நீண்ட நாட்களாக இருந்திருக்கிறது.
மேலும், சிதம்பரம் கோவில் நிர்வாகம் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் செ.இராசு அவர்கள் அளித்த ஆதாரத்தின்படி, தில்லைக் கோயில்களின் நிர்வாகிகளாக 1610-ல் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசமும், 1684-ல் தில்லைச் சிற்றம்பலத் தவமுனியும், 1702 -ல் பாதபூசை அம்பலத்தாடுவாரும், 1711-ல் தில்லைக் காசித் தம்பிரானும் இருந்துள்ளனர் என இருக்கிறது.
கல்வெட்டு மற்றும் செப்பேடு ஆதாரங்களின்படி, இக்கோவிலின் வரலாறு இவ்வாறிருக்க, புனைவுகளை ஆதாரமாக்கி தில்லைக் கோவிலை உரிமை கோருகின்றனர் தீட்சிதர்கள். தாங்களே இந்த கோயிலின் உரிமையாளர்கள் எனும் பொய்யை திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர்.
நடராசர் வழிபாட்டுக்கு முன்பே தில்லையில் லிங்க வழிபாட்டு முறையே இருந்தது. இந்த வழிபாடு முற்றிலும் தமிழர்களைச் சார்ந்தது. கி.பி. 6ம் நூற்றாண்டு வரை வைதீக வழிபாடு இல்லை. சுல்தான்கள் முதற்கொண்ட அந்நியப் படையெடுப்புகளின் போதெல்லாம் நடராசர் சிலை போன்ற பல கடவுளர் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டன. சுல்தான்கள் ஆட்சி வீழ்ந்து விசயநகரப் பேரரசு ஆண்ட காலத்தில் தான் சமஸ்கிருதம், வைதீகம் மேலோங்கியது. அதனால் புனையப்பட்ட கட்டுக்கதைகள் நடராசர் கோயிலின் ஸ்தல புராணம் ஆகியது. 14-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே சைவ ஆகமக் கோவிலான நடராசர் கோயிலில் வைதீக முறையிலான வழிபாடு துவங்கியது.
தீட்சிதர்கள் என்ற பெயரே சங்க இலக்கியங்களில், பக்தி இலக்கியங்களில் எந்த இடத்திலும் இல்லை. தில்லைவாழ் அந்தணர்கள் என்கிற பெயரே குறிப்பிடப்படுகிறது. சோழர்களுக்கு முடிசூட்டிய தங்களால், சோழர், பாண்டியர்களை வெற்றி கொண்ட கூற்றுவ நாயனார் என்பவருக்கு முடிசூட்ட முடியாது என்று மறுத்து இந்த அந்தணர்கள் கேரளம் சென்று விட்டதாக பெரிய புராணத்தில் கூறப்படுகிறது. அங்கிருந்து நம்பூதிரிப் பார்ப்பனர்களே பூசகர்களாக திரும்பி வந்தனர் என வரலாற்று ஆய்வார்கள் கூறுகின்றனர்.
அந்தணர்கள் என்போர் அறவோர் என அறம் பாடிய திருக்குறளிலும் இருக்கிறது. அறம் பாடிய ஒரே மொழிக்கு சொந்தக்காரர்களான தமிழினத்தில் அந்தணர்கள் என்ற சொல் மட்டும் எப்படி பார்ப்பனர்களைக் குறிக்கும்? என்பது நீண்ட கால சந்தேகமாக இருக்கிறது. கோவில்கள் புனரமைக்கப்பட்ட போது வேதப் பார்ப்பனர்கள் இங்கு குடியமர்த்தப்பட்டனர். வேறு இடத்திலிருந்து ‘தீட்சை’ கொடுத்து நியமனம் செய்யப்பட்டதால்தான் தீட்சிதர்கள் எனப் பெயர் பெற்றனர் என்பது வரலாற்றாய்வாளர்களின் கருத்து.
நீதிமன்ற வழக்குகள்:
இந்தத் தீட்சிதர்களின் எல்லையற்ற கொள்ளைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் பக்தர்களே நீதிமன்றத்தில் 1888-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கினில், இரண்டு நீதிபதிகளான முத்துசாமி ஐயர் மற்றும் பாஷ்யம் ஐயங்கார் நீதிபதிகளே, அக்கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும் இதனை எதிர்ப்பவர்கள் திருடர்கள் எனவும் தீர்ப்பு கூறினர் (ஆதாரம் – இந்து பத்திரிக்கை).
நீதிக்கட்சி ஆட்சிகாலத்தில் 1922-ல் நடைமுறைக்கு வந்த இந்து சமய அறக்கட்டளைச் சட்டத்தின்படி, இந்தக் கோயிலை அறநிலைய வாரியத்தின் கீழ் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அன்று ஆங்கிலேய அரசின் ஆளுநரிடம் இந்த கோயிலுக்கு விலக்கு கேட்டனர் தீட்சிதர்கள். சட்டத்தின் சில பிரிவுகள் மட்டும் கோவிலைக் கட்டுப்படுத்தும் என 1926-ல் ஆணையிட்டார் ஆளுநர். தீட்சிதப் பார்ப்பனர்களால் நிர்வாக முறைகேடு தொடர்ந்து நடைபெறுதாக உணர்ந்த பக்தர்களே, இந்து அறநிலைய வாரியத்திடம் நிர்வாகம் முறையாக நடக்க திட்டங்களை வகுக்க வேண்டும் என சொல்ல, வாரியமும் 1933-ம் ஆண்டு சில திட்டங்களை வகுத்தது. அதனையும் ஏற்றுக் கொள்ளாத தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்றார்கள். அன்று தொடங்கிய அவர்களின் நீதிமன்றப் படையெடுப்பு இன்று வரை தொடர்கிறது. 1937, 1939 சிதம்பரம் கோவில் பொதுக் கோவிலே என்பதை உறுதி செய்தது நீதிமன்றங்கள். இந்து அறநிலைய வாரியத் திட்டங்களும் செல்லுபடியாகும் எனவே தீர்ப்பளித்தது.
1951-ல் முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராஜா ஆட்சியில் தில்லை கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க, ஒரு ‘செயல் அலுவலரை (Executive officer)’ நியமிக்கும் அரசாணையைக் கொண்டு வந்தார். உடனே மீண்டும் தீட்சிதப் பார்ப்பனர்கள் நீதிமன்றங்களுக்கு படையெடுத்து விட்டனர். தாங்கள் ‘தனிச் சமய குழுவினர்’, அதனால் அரசு எங்கள் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என வாதிட்டனர். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், கோவிலை தீட்சிதர்கள் உருவாக்கியதற்கும் ஆதாரங்கள் இல்லை, தனித்துவமாக நிர்வாகம் செய்ததற்கும் செப்பேடு, கல்வெட்டு முதலானவற்றிலும் ஆதாரங்கள் இல்லை.
1951-ல் இருந்த அரசியலமைப்பின் சட்டப்படி, ‘தனிச்சமயப் பிரிவினர்’ என்றால் தங்களுக்கான கோயிலை உருவாக்கியவர்களுக்கு, அதனை நிர்வகிக்கும் உரிமையும் உண்டு. சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாகவும் சட்டத்தில் இருந்தது. இதனால் இந்து அறநிலையத் துறை செயல் அலுவலரை நியமித்தது செல்லாது என்றது நீதிமன்றம். ஆனால் மோசமான நிர்வாகம் தொடர்ந்தால் தற்காலிக ஏற்பாடாக அரசு கோயில் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டு முறைப்படுத்தியப் பின்னர், திரும்ப அவர்களிடத்தில் கொடுக்கலாம் என்கிற நிபந்தனையும் கூறியது.
இந்தத் தீர்ப்பின்படியே, முறைகேடுகள் குறித்த புகார்கள் எழும்பும் பொழுதெல்லாம், அரசு ‘செயல் அலுவலரை’ நியமிப்பதும், ‘தனிச் சமயப் பிரிவினரான’ எங்கள் உரிமைகளில் தலையிடுகிறார்கள் என தீட்சிதர்கள் நீதிமன்றம் செல்வதும் 70 வருடங்களாகத் தொடர்கிறது. 1888-லிருந்து சொல்லப்பட்ட தீர்ப்புகளும் இக்கோவில் பொதுக் கோவிலே என்பதாகவே இருந்தது. ஆனால் 1951-ல், ‘தனிச் சமயப் பிரிவினர்’ என்கிற தீர்ப்பினை வாங்கிக் கொண்டதிலிருந்து தான் அவர்களின் ஆட்டம் எல்லை மீறுகிறது.
திமுக ஆட்சியில் 2009-ல் சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் நடத்திய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அரசு ‘செயல் அலுவலரை’ நியமித்தது செல்லும் என்றது. சுப்ரமணியசாமி துணையுடன் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது தீட்சிதர்கள் கும்பல். அதற்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா அரசு சரியான வாதத்தை எடுத்து வைக்காததால் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமே ஒப்படைப்பதாக 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பெழுதியது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம், தீட்சிதர்களுக்கு 1951-1959 தீர்ப்புகளால் ‘தனிச் சமய பிரிவினர்’ என்பது அங்கீகரிக்கப்பட்டதால், அரசியலமைப்பு பிரிவு 26-ன்படி, சொத்துக்களை நிர்வகிக்க உரிமை உண்டு எனவும், பிரிவு 107ன்படி, முறைகேடு எழும்பினால் ஒழுங்குபடுத்தி திருப்பியளிக்கும் அதிகாரம் உண்டேத் தவிர, கோயிலின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையிலிருந்து தீட்சிதர்களை விலக்கும் அதிகாரம் கிடையாது எனவும் தீர்ப்பளித்தது.
ஆனால், இந்தியாவெங்கும் நடந்த பல்வேறு வழக்குகளில் சிவனை வழிபடுவோர் இந்துக்கள் தானே தவிர ‘தனிச் சமயப் பிரிவினர்’ இல்லை என்றும், வழிபாட்டு முறைத் தவிர, கோயிலில் வருமானம் ஈட்டும் சொத்து, நிதி வசூல் முதலானவை மதம் சாராதது என்பதனால், அதில் அரசு தலையிட்டு ஒழுங்குபடுத்தும் உரிமை உண்டு என்றும் பல தீர்ப்புகள் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக காசி விசுவநாத கோயிலுக்கும் உத்தரப் பிரதேச அரசுக்கும் 1997-ல் நடந்த வழக்கில் சிவனை வழிபடுவோர் ‘தனிச் சமயப் சிறுபிரிவினராக முடியாது’ என்றும் அவர்கள் இந்துக்கள் தாம் என்றும் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் தீட்சிதர்கள் ‘தனிச்சமயப் பிரிவினர்’ என்பதை அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
தீட்சிதர்களின் அடிவடிகள், கொள்ளைகள்:
சிதம்பரம் நடராஜர் கோயில் திருச்சிற்றம்பல மேடைக்கு (கனகசபை) சென்று தேவாரம் பாட முயன்றார் சைவ ஓதுவாரான ஆறுமுகச்சாமி. ஆனால் முதியவர் என்றும் பாராமல் அவரின் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியது தீட்சிதர் கூட்டம். தமிழில் பாடியதால் தீட்டுப்பட்டு விட்டதாக கத்தியது அக்கூட்டம். அவர் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவே 2008-ல் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தீட்சிதர்களின் காட்டுக் கூச்சலுக்கு நடுவே காவலர் உதவியுடன் தேவாரம் பாடினார் சிவனடியாரான ஆறுமுகச்சாமி ஓதுவார்.
திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நடராசரை வழிபடுவதே சிறப்பான தரிசனம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். ஆனால் அங்கு பக்தர்கள் செல்வதற்கு அரசாணை இருந்தும் தீட்சிதர்கள் விரும்புவதில்லை. நிதிக் கொடை அள்ளி வழங்கும் பக்தர்கள் தவிர சாதாரணமான பக்தர்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையும் தருவதில்லை.
2019-ம் வருடம், வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை, சரியாக அர்ச்சனை செய்து தரும்படி கேட்டதற்காக கன்னத்தில் அறைந்தான் ஒரு தீட்சிதப் பார்ப்பான்.
2022-ம் வருடம் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பக்தையை சாதியரீதியாக ‘பறைச்சி’ என கொச்சையாகத் திட்டி தரதரவென இழுத்து வெளியேற்றினார்கள்.
இந்த ஆண்டு 2023-ஜூன் 24-ல் கோவில் விழா காரணமாக நான்கு நாட்களுக்கு கனகசபை மீது பக்தர்கள் ஏறக்கூடாது என பதாகை வைத்ததால், ஏமாற்றமடைந்த பக்தர்கள் முறையிடவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சரண்யா தமிழ்நாடு அரசின் ஆணையை சுட்டிக்காட்டி பதாகையை அகற்ற முயன்றார். இதற்கும் அவரின் மீதும், அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தீட்சிதரை தாக்கி பூணூல் அறுத்ததாக பொய்யாக புகார் அளிக்கிறார்கள்.
தீட்சிதர்களுக்கு இடையேயும் சொத்துக்களை பங்கு பிரிப்பதில் போட்டி நடந்து பல முறை அடிதடிகள் நடத்ப்பட்டிருக்கிறது. தீட்சிதர்களின் அடாவடிக்கு காவல்துறையினர் வழக்குகளைத் தொடர்ந்தாலும், இதுவரை ஒரு தீட்சிதரும் சிறைக்கு சென்றதில்லை. இவ்வாறு தில்லை நடராஜர் கோயிலை அடாவடி அரங்கமாக்கிய இவர்களிடம் அரசாங்கம் கோவில் கணக்கை கேட்டு விட்டால் உடனே தீட்டு, புனிதம், ஆகமம் என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
அறநிலையத் துறை கணக்கு கேட்கும் பொழுதெல்லாம் தில்லை தீட்சிதர்கள் பதறுவதற்கு காரணம் ஆயிரக்கணக்கான கோடி சொத்துகள் பறிபோய்விடும் என்கிற கவலையில்தான். 1951ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மட்டுமே சொத்து என புளுகினார்கள். ஆனால் இன்னமும் கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் விளை நிலங்கள், காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க ஆபரணங்கள், பணம் என எதற்கும் முறையான கணக்கு வழக்குகள் இல்லை. காலம் காலமாக அரசர்கள், நிலக்கிழார்கள், செல்வந்தர்கள் அளித்த நிலமெல்லாம் எங்கே போயின என்பதற்கும் சாட்சியங்கள் இல்லை. புனிதமான இடமான ஆயிரங்கால் மண்டத்தில் 2019-ல் சிவகாசியைச் சார்ந்த செல்வந்தரான ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் மற்றும் ரத்னா ஸ்டோர்ஸ் குடும்பத் திருமண நிகழ்விற்கு உள்வாடகை விட்டு பல கோடிகளை சம்பாதித்தார்கள். இவ்வாறு ஆடம்பர திருமண செய்து வசூல், நாட்டியாஞ்சலி நடத்த வசூல் என எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் என்பதற்கும் கணக்குகள் இல்லை.
எம்.ஜி.ஆர். ஆட்சி நடைபெற்ற 1982-ல், 3 தீட்சிதர்கள் உட்பட 11 பார்ப்பனர்கள் தில்லைக் கோயிலில் தீட்சிதர்கள் செய்த அளவற்ற ஊழல்களை தேதி வாரியாகப் பட்டியலிட்டு சட்டமன்றப் பிரதிநிதிகள் உட்பட முக்கியப் பிரமுகர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். கடவுளர்களின் தங்க ஆபரணங்கள், நாணயங்கள், தாலி, அளவற்ற காணிக்கைகள் என எண்ணற்ற கொள்ளைகளை செய்த மோசடி புகார்கள் சட்டமன்றத்தில் அன்று விவரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னமும் முழுமையான சொத்துக்கள் எவ்வளவு உள்ளது என்பது சிதம்பர இரகசியமாகவே இருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு 2007ல் நடைபெற்ற பொழுது, அந்த கோவிலுக்கு 37 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்ததாக கோவிலை பராமரித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 2009-ஆம் ஆண்டு திமுக அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு ஒரு வருடத்திற்கு 67 இலட்சம் ரூபாய் வருமானம் வந்தது. கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகமாக அரசின் கைகளில் வந்த பிறகு வருமானமானது. 5 ஆண்டுகளில் கோவில் வருமானம் 3 கோடியே 15 இலட்சம் வந்தது. அரசு ஏற்ற பிறகு கோயில் வருமானம் நூறு மடங்கு அதிகமாகவும், இவர்களின் கணக்குகளில் குறைவாகவும் இருந்த பொழுதே தீட்சிதர்கள் அம்பலமானார்கள்.
கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பதில்தான் இவர்களின் அட்டூழியம் இருக்கிறது என்றால் அரசியலமைப்பு சட்டப்படி, குற்றச்செயலான குழந்தைகள் திருமணத்தையும் தங்கள் குலத்துக்குள் நடத்திக் கொள்ளும் காட்டுமிராண்டித்தனத்தையும் நடத்துகிறார்கள். 2022-ல் 4 குழந்தைத் திருமணம் நடந்ததாக விசாரிக்க வந்த காவல் துறையினரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள். சாலையில் அமர்ந்து மறியலும் செய்தார்கள்.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, குழந்தைத் திருமணமே நடக்கவில்லை என்று தீட்சிதர்களுக்கு ஆதரவாக கூறினார். ஆனால் சமூக வலைதளங்களில் திருமணக் காட்சி வெளிவந்து தீட்சிதர்களின், ஆளுநரின் முகமூடியை கிழித்தது. மேலும், ஆளுநர் பெண் குழந்தைகளுக்கு இருவிரல் சோதனை நடைபெற்றது, அதனால் தீட்சிதர்கள் பலர் தற்கொலைக்கு முயன்றனர் என பச்சைப் பொய்யை புளுகினார். ஆனால் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையமே விசாரித்து அப்படியான ஒன்றும் நடைபெறவில்லை என சொல்லி விட்டது. மேலும், தனக்கு நடந்ததும் குழந்தைத் திருமணமே என்று குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவு அளிப்பது போல தீட்சிதர்களுக்கு ஆதரவாக நின்றார். இந்த அளவுக்கு தீட்சிதர்களுக்கு வக்காலத்து வாங்க ஆளுநருக்கு வர்ணப்பாசம் தவிர வேறு என்ன காரணமாயிருக்க முடியும்?
“காசுமீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால், கன்னியாகுமரி பார்ப்பானுக்கு நெறி கட்டும்” என்றார் பெரியார். அதற்கு உதாரணம் தான் தீட்சிதர்களுக்காக வரிந்து கட்டி வேலை செய்த சுப்பிரமணியசாமி, ஆர்.என். ரவி போன்றவர்கள். ஆனால் பக்தர்கள் அவமானப்படுத்தப்படும் போது எந்தக் குரலும் எழுப்பாமல் கடந்து விட்டு ‘தீட்சிதர்களுக்காக நானே களத்தில் குதிப்பேன்’ என்று கூறும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்களாக இருக்கும் சூத்திரர்களுக்கும் கூட நெறி கட்டுகிறது.
கோயில் தொடர்பான ஆதாரங்களும், சான்றுகளும் நம்மிடம் இருந்தும் சுமார் 1000க்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட தீட்சிதப் பார்ப்பனர்கள் மக்களுக்குரிய சொத்தை அபகரித்து வைத்திருக்க முடிகிறதென்றால், பார்ப்பனியத்தின் அதிகார மையம் எந்த அளவிற்கு வலுவுடையதாக இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். மக்களின் பக்தியை முதலீடாகக் கொண்டு பக்தர்களுக்கே அநியாயங்களையும், அட்டூழியங்களையும் நடத்தும் தீட்சிதர்களின் முகமூடிகள் கிழிக்கப்பட வேண்டும்.
சிதம்பரம் தில்லைக் கோவில் மக்கள் சொத்து. அதனைக் கொள்ளையிடும் தீட்சிதர்களைக் கட்டுப்படுத்த இந்தக் கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கையில் எடுக்க வேண்டும் என்பதே ஆறுமுகசாமி போன்ற சிவனடியார்களின் வேண்டுகோளாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்றி இந்தக் கோயிலை கையிலெடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி பெருங் குற்றமான தீண்டாமையை, குழந்தைத் திருமணங்களை கடைப்பிடிக்கும் தீட்சிதர்களின் மேல் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஜனநாயக சக்திகளின் முழக்கமாக இருக்கிறது.