சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து  மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நவம்பர் 5, 2025 அன்று ‘நீலம்’ யூட்யூப் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

பத்திரிகையாளரின் கேள்வி: வணக்கம் தோழர். தற்போது ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் சூடானில் உள்நாட்டு போர் நடந்துகொண்டு இருக்கிறது. எதனால் இந்தப் போர் தொடங்கியது? இந்தப் போருக்கான காரணம் என்ன?

தோழர் திருமுருகன் காந்தியின் பதில்: முதலில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கின்ற விடயங்களை நாம் பார்க்க வேண்டும். எத்தியோப்பியா, சூடான், காங்கோ போன்ற நாடுகளின் நிலப்பரப்புகள் ராணுவ ரீதியாக முக்கியத்துவமான நாடுகள். அவை செங்கடலை ஒட்டி இருக்கக்கூடிய நாடுகள். செங்கடல் வழியாகத்தான் எல்லா கப்பல்களும் சுயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடல் போகும் வழி இருக்கிறது.

இன்னொரு புறத்தில் தெற்கு சூடானோ, எத்தியோப்பியாவோ, எகிப்தோ நைல் நதி ஓடக்கூடிய நிலப்பரப்பில் இருக்கின்றன. நைல் நதி ஒரு மிகப்பெரிய டெல்டாவை உருவாக்குகிறது, இதனால் மிகப்பெரிய உற்பத்தி உருவாகிறது. நைல் நதியால் நெல், மீன், கோதுமை போன்ற விளை பொருட்கள் விளைகின்றன.

நமக்கு தெரிந்து வரலாற்றில் 2500 ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய நாடுகளுக்கான உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய இடம் இது. சீசர் காலத்திலேயே ரோமிற்கான கோதுமை என்பது நைல் விளைச்சலில் இருந்துதான் போனது. அதனால் நைல் நதியை ஒட்டி இருக்கக்கூடிய இந்த வளமான நிலப்பரப்பில் விவசாய விளைபொருட்கள் மிக மிக முக்கியமானது. அதே சமயத்தில் இந்த பகுதியில் உலகத்தில் 70% கனிம வளங்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள். காங்கோவில் கிடைக்கக்கூடிய கோபால்ட் போன்ற கனிமங்கள் இன்றைக்கு நவீன மின்னணுவியல் (எலக்ட்ரானிக்) பொருட்களில் மிக மிக முக்கியமானது. மேலும் சூடானில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்கள் இருக்கின்றன. இந்த கனிம வளங்களை மேற்குலகம் கொள்ளை அடிக்கிறது. அதனால் அந்த கனிம வளங்களை எடுப்பதற்கான பெரும் போர் நடக்கிறது.

சூடானின் வரலாறை எடுத்தோமென்றால், 2009இல் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த காலகட்டத்தில், தெற்கு சூடானிலும் ஒரு மிகப்பெரிய இனப்படுகொலை நடந்தது. அங்கு பெட்ரோலியம் போன்ற கனிம வளங்கள் இருக்கின்ற காரணத்தினால் அந்த இனப்படுகொலையை மட்டும் சர்வதேச அளவில் விசாரணைக்கு கொண்டு வந்து, சூடானினுடைய அன்றைய அதிபராக இருந்த அல்பஷீரை சர்வதேச குற்றவாளியாக முத்திரை குத்தி, கைது செய்வதற்கான உத்தரவுகள் கொடுத்து தெற்கு சூடானை பிரித்தெடுத்தார்கள். பஷீர் அவருடைய ஆட்சியை நடத்துவதற்காக அங்கே இருக்கக்கூடிய ஜனநாயக சக்திகளை முடக்குகின்ற பல வேலைகளை செய்தார். சூடான் வழியாக லிபியா வந்து, லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஆப்பிரிக்கர்கள் குடியேறுவதற்காக வருகிறார்கள் என்ற காரணத்தினால், அந்த எல்லையை எல்லாம் மூடுவதற்கும் கண்காணிப்பதற்கும், வேலை வாய்ப்பைத் தேடி சென்ற மக்களைத் தடுப்பதற்காகவும், பிரான்ஸ் போன்ற நாடுகள் (ஐரோப்பிய நாடுகள்) சூடானுடைய எல்லைப் பகுதியில் ஒரு துணை ராணுவப் படையை உருவாக்கினார்கள். மற்ற நாடுகள் சேர்ந்து இவர்களோடு பேசி ஒரு ராணுவப் படையை உருவாக்கி, அதற்கான நவீன ஆயுதங்கள் எல்லாமே சூடானினுடைய ராணுவத்தின் வழியாகவே (தனிப் பிரிவாகவே) கொடுக்கப்பட்டது. ராப்பிட் சப்போர்ட் போர்ஸ்(RSF) இதிலிருந்துதான் உருவானது. சூடான் ஆர்ம்டு போர்சஸ் (SAF) என்பதும் அப்போது இருந்தது.

அதன்பின் 2019 காலகட்டத்தில் அல்பஷீருக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடந்ததால், அவர் நாட்டை விட்டு வெளியேறுகிறார். அந்தப் போராட்டத்தை நடத்திய மக்கள் சாதாரண வெகுஜன மக்கள். அவர்கள் ’ஒரு இடைக்கால அரசு உருவாகி அதிலிருந்து ஜனநாயக அரசு வர வேண்டும்’ என்ற ஒரு கோரிக்கையை  வைக்கிறார்கள். பின் இடைக்கால அரசு உருவாக்கப்படுகிறது. அந்த சமயத்தில் சூடானுடைய ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றுகிறது. சூடானுடைய ராணுவத்திற்கும் இந்த ஜனநாயக அமைப்புகளுக்கும் நடுவில் பேச்சு வார்த்தை என்கின்ற பெயரில், சூடானினுடைய ராணுவத்தை பாதுகாக்கின்ற வேலையை மேற்குலகம் செய்கிறது.

சூடானினுடைய கனிம வளங்களை கையில் எடுக்க வேண்டும் என்று மேற்குலகம் இந்த வேலையைச் செய்கின்றது. இதைத் தவிர சூடானுக்கு வடக்கு பகுதியில் எகிப்து இருக்கிறது. எகிப்துக்கு நைல் நதி நிலப்பரப்பில் இருக்கும் சூடான் தேவைப்படுகிறது. அதேபோல ’அமீரகம்’ என்று சொல்லக்கூடிய யுனைட்டட் அரபு எமிரேட்ஸ்(UAE) நாட்டுக்கு விளைச்சலுக்கான நிலம் கிடையாது. அவர்களுக்கு சூடான் என்பது மிக அருகில் இருக்கக்கூடிய ஒரு நாடு. அங்கு விளை பொருள்கள் விளையும் விவசாய நிலத்தை அமீரகம் கட்டுப்படுத்த விரும்புகின்றது. விவசாய நிலத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாக, தங்களுடைய உணவுத் தேவையைப் பாதுகாத்துக் கொள்கின்றது.

இரண்டாவது காரணம் தங்கத்தினுடைய சந்தையாக துபாய் இருப்பது. துபாயினுடைய பொருளாதாரத்தில் தங்கம் என்பது மிக முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது. துபாய் சந்தைக்கான தங்கம் சூடானிலிருந்து வருகிறது. சூடானில் கொள்ளை அடிக்கப்படுகின்ற தங்கம் துபாய் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து உலக மார்க்கெட்டுக்கு போவதற்கான ஒரு இடமாக மாற்றப்படுகிறது. பொதுவாகவே துபாய் என்றாலே தங்கம் எனப் பேசுவது எல்லாருக்குமே தெரியும். அந்த தங்கம் சூடானிலிருந்து வரக்கூடியது.

சூடானுக்குள்ளாக பல்வேறு ஆயுத குழுக்கள் உருவாக்கப்பட்டு, கனிமங்களை கொள்ளை அடிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இங்கு இரண்டு மிகப்பெரிய படைகளாக இருப்பவை- சூடான் ஆர்ம்டு போர்சஸ் எனும் சூடானுடைய ராணுவமும்(SAF), அதற்கு எதிராக இருக்கக்கூடிய ராப்பிட் சப்போர்ட் போர்ஸ் என்று சொல்லக்கூடிய RSF என்பதும்.

இந்த RSF–ஐ அமீரக நாடு (UAE) ஆதரிக்கிறது. சவுதி ஆதரிக்கிறது. சூடானுடைய ராணுவத்தினை எகிப்து போன்ற நாடுகள் ஆதரிக்கின்றன. இதற்கு பின்புலத்தில் ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. இதன் மூலமாக அந்த நாட்டினுடைய கனிம வளங்கள் முழுவதையும் அமீரகம்தான் கட்டுப்படுத்துகிறார்கள். விவசாய விளைபொருள்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு முயற்சி நடக்கிறது. இந்தப் பின்னணிதான் இந்தப் போரினுடைய பின்னணியாக இருக்கிறது.

கேள்வி: சூடான் நாட்டுக்குள் எத்தனை இனக்குழுக்கள் இருக்கிறது?

பதில்: பல்வேறு இனக்குழுக்கள் இருக்கின்றன. பறந்துபட்ட பெரிய அளவிலான இனக்குழுக்களாக பார்க்கப்படுகின்றன. அதாவது அரபு மக்கள் / அரபியர் அல்லாத மக்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அரபியர் அல்லாத மக்களை அழிக்கக்கூடிய/ இனப்படுகொலை செய்யக்கூடிய வேலையை RSF செய்கிறது. அரபியர் அல்லாத இனக்குழுக்களை RSF கொன்றழிக்கக் கூடிய வேலையை செய்வதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது.

கேள்வி: இந்த இனப்படுகொலை குறித்து ஏகாதிபத்திய நாடுகள் / அண்டை நாடுகளின் நிலைப்பாடு மற்றும் ஐ.நாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

பதில்: ஐ.நா.வில் வழக்கம் போல அதனுடைய பாதுகாப்பு கவுன்சில் தற்போதுதான் ஒரு விவாதத்தை கொண்டு வந்தார்கள். ஐ.நா என்பது தனியான ஒரு அதிகாரம் கொண்ட அமைப்பு கிடையாது. அதன் பொறுப்பிலிருக்கக் கூடியவர்களுக்குத் தனி அதிகாரம் எதுவும் கிடையாது. பொறுப்பு நாடுகளுக்குத் தான் அதிகாரம் இருக்கிறது. பொறுப்பில் இருக்கக்கூடிய தலைவருக்கோ மற்றவருக்கோ தனிப்பட்ட எந்த அதிகாரமும் கிடையாது. பொறுப்பு நாடுகள் ‘சமாதானம் வர வேண்டும்’ என்ற மேலோட்டமான காரணத்தை சொல்லி இருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. அந்த தீர்மானத்தில் இனப்படுகொலைகள் குறித்தான நடவடிக்கை என்பது எதுவுமே குறிப்படப்படாமல், சூடான் பிரச்சினை சம்பந்தமாக (இரண்டு நாட்கள் முன்பாக) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது RSF & SAF ஆகிய இரண்டும் சண்டைக்கான சூழலைத் தொடர்வார்கள். இதுதான் அவர்கள் நிலைப்பாடாக இருக்கிறது.

கேள்வி: அமெரிக்கா போன்ற நாடுகள் இனப்படுகொலைதான் என்கிற மாதிரி சொல்கிறார்களே தோழர்? பொதுவாக அமெரிக்கா எப்படிப்பட்ட நாடு என தெரியும். அது பல நாடுகளில் உள்நாட்டு கலவரம் ஏற்படும் போது வேடிக்கை பார்த்ததுதான் வரலாறு. ஈழத்தில், பாலஸ்தீனத்தில், சிரியாவில் அமெரிக்கா உள்நாட்டு கலவரங்களை வேடிக்கை பார்க்க மட்டும்தான் செய்தது. ஆனால் இந்த சூடான் இனப்படுகொலை மட்டும் ‘இனப்படுகொலை’ என அடையாளப்படுத்த காரணங்கள் என்ன தோழர்?

பதில்: ஆமாம், இது ஒரு ’இனப்படுகொலை’ என்று அமெரிக்கா எல்லா இடத்திலும் குறிப்பிடுகிறது. அமெரிக்கா இனப்படுகொலை என அடையாளப்படுத்தக் காரணங்கள்- சூடானில் இருக்கக்கூடிய சுரங்கங்களை யார் கையில் எடுத்துக் கொள்வது?, அங்கு யார் ஆயுத தளவாடங்களை கொண்டு போய் சேர்ப்பது?, யாருக்கான ராணுவ தளங்களை உருவாக்குவது? என்கிற பெரிய போட்டி இருக்கிறது. அந்த போட்டிக்குள்ளாகத்தான் இதை பார்க்க முடியுமே ஒழிய, அந்த மக்கள் மீதான அக்கறையின் காரணமாக இல்லை.

இனப்படுகொலை என சொல்லிவிட்டால், அதை வைத்துக்கொண்டு தலையீடு செய்ய முடியும். தலையீடு செய்வது மூலமாக சூடானுக்குள் அமெரிக்கா ராணுவத்தை அனுப்ப முடியும் என்ற சூழல் வருகிறது. அப்படியானால் சூடானில் இருந்து கொண்டு செங்கடல் பரப்பை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் செங்கடலில் ஹவுத்திஸ் கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள்தான் அமெரிக்க கப்பல் மீதும், இஸ்ரேல் கப்பல் மீதும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஹவுத்திஸ் அமைப்பு மேல் ஒரு பெரிய தாக்குதல் நடத்துவதற்கு இந்த நிலப்பரப்பை அமெரிக்கா பயன்படுத்தலாம்.

அப்படியானால் அங்கு நடக்கக்கூடிய சண்டையில் எத்தியோப்பியாவும் இருக்கக்கூடிய முரண்பாடு இருக்கிறது. எத்தியோப்பியா மிகப்பெரிய அணையை நைல்நதியில் கட்டுகிறது. அதனால் எகிப்திற்கு உள்ளாக வரக்கூடிய கடைமடை பகுதியில் தண்ணீர் வரத்து குறைந்து போகக்கூடிய சிக்கல் இருக்கிறது. இதனால் எத்தியோப்பியாவிற்கும் எகிப்திற்கும் நடுவில் பெரிய முரண்பாடு இருக்கிறது. அதனால் எல்லாருமே இந்த சண்டையை தூண்டி விடக்கூடிய வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த (RSF & SAF) இரண்டு குழுக்களுக்குமே எல்லாருமே ஆயுதம் கொடுக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் சண்டை மிக மோசமாக நடக்கிறது.

கேள்வி: இந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து மீண்டு வெளியே போனவர்களெல்லாம் எங்கே தஞ்சம் அடைந்துள்ளர்கள்?

பதில்: இனப்படுகொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது, எங்கே அவர்கள் தஞ்சம் அடையமுடியும்! அங்கு ஒரு பகுதியில் இனப்படுகொலை நடந்திருக்கிறது. அதில் 5000  பேர் ஒரு இடத்தில் கொல்லப்பட்டதாக வந்த செய்தியின் அடிப்படையில்தான்,  இந்த இனப்படுகொலை பற்றியான கவலை எல்லா இடத்திலும் வந்திருக்கிறது. படுகொலை வீடியோக்கள் வெளியில் வந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக சூடானினுடைய பெரும் பகுதியை ஆர்எஸ்எப்(RSF) கைப்பற்றியதாக சொல்கிறார்கள். அதனுடைய தலைநகரம் கார்ட்டோமையும் (Khartoum) கைப்பற்றியதாக செய்தி வருகிறது. 2019ல் பெரிய புரட்சி நடத்தி செயல்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுறார்கள். அதுபோல இன்னும் படுகொலை தொடர்ச்சியாக நடக்கின்ற கவலைதான் எல்லா இடத்திலும் எழுந்திருக்கிறது. இதைத்தான் அதனுடைய அடிப்படை பின்னணியாக நாம் பார்க்க முடியும். அங்குள்ள மக்களும் முகாமுக்குதான் போவார்கள் அல்லது வேறு இடத்துக்கு போவார்கள். மறுபடியும் அங்கே தாக்குதல் நடத்தப்படும். இப்படித்தான் அது நடக்கிறது.

கேள்வி: இந்த ஆர்எஸ்எப் (RSF) ’எல்பஷீர்’ நகரை கைப்பற்றிய உடனே, அது அவர்களுக்கான வெற்றி என்கிற மாதிரி சொல்கிறார்கள், ஏன்?

பதில்: எல்பஷீரில் ஒரு முக்கியமான பகுதி இருக்கிறது. அந்தப் பகுதி சூடானுடைய தலைநகர் ’கார்ட்டோம்’ பகுதியினுடைய மிக முக்கியமான ஒரு கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வந்துவிடும். அதனால் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை அந்த இடம் கொடுப்பதாகப் பார்க்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்த ஆயுதங்கள் அனைத்தும் நவீன ஆயுதங்கள். அந்த ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்துவதன் மூலமாக சூடானுடைய ராணுவத்திற்கு மிகப்பெரிய நெருக்கடியையும் இழப்பையும் உருவாக்குகிறார்கள். இதுதான் ஆர்எஸ்எஃப்-னுடைய பின்புலமாக பார்க்கப்படுகின்றது.

கேள்வி: சர்வதேச ஊடகங்கள் பெரிதாக சூடான் பற்றி பேசாத காரணம் என்ன?

பதில்: ஊடகங்கள் தற்போது பேச ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் எந்த ஊடகம் சூடான் குறித்துப் பேசியது என்பது தெரியவில்லை. நாங்கள் (மே 17) சூடான் செய்தியை வெளியில் கொண்டு வந்தோம். அதற்கு பிறகுதான் இரண்டு ஊடகங்கள் இது குறித்தான செய்திகள் வெளியிட்டார்கள். ஆப்பிரிக்காவில் நடக்கக்கூடிய  அழிவுகளை பற்றி யாரும் பெரிதாக கவலை கொண்டு பேசுவது போல் தெரியவில்லை. பாலஸ்தீன படுகொலை சம்பந்தமாக கூட பெரிய அளவுக்கு இந்திய ஊடகங்கள் பேசியது கிடையாது. இது ஆப்பிரிக்காக்குள் நடக்கக்கூடிய இனப்படுகொலை. பெரிய அளவுக்கு கவனத்துக்கு வருமா எனத் தெரியாது. இரண்டரை ஆண்டுகளாக மிக மோசமான இனப்படுகொலை நடந்திருக்கின்றது. தற்போது அங்கு பசி, பட்டினி மிக மோசமானதாக இருக்கிறது. அந்த மக்கள் பசிப்பட்டினியால் இனப்படுகொலை ஆவது என்பதுதான் மிக துயரமான ஒன்றாக இருக்கிறது.

கேள்வி: உலகத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் தொடர்ச்சியாக இனப்படுகொலைகள் தொடர்கிறது. ஈழத்தில் மற்றும் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலைகள் நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. சர்வதேச அமைப்புகள் ஏன் இதை கையில் எடுத்து, இதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது தோழர்?

பதில்: சர்வதேச அமைப்புகள் எல்லா இடத்திலும் வேலை செய்கிறார்கள். எல்லா இடத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். சர்வதேச அமைப்புகளுக்கு என்ன வலிமை இருக்கிறது எனில், மக்கள் திரள் அல்லது மக்கள் வலிமை மட்டும்தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்தான் செய்கிறார்கள். ஆனால் அதையும் கடந்து வலிமையான நிறுவனங்கள், ராணுவ நிறுவனங்கள், அமைப்புகள், நாடுகள் அதனுடைய தலைவர்கள் எல்லாருமே வலதுசாரிகளாக இருக்கிறார்கள். ஊடகங்கள் வலதுசாரியாக இருக்கிறது. அந்த வலதுசாரி ஊடகங்கள் இந்தப் போரை ஆதரிக்கக்கூடிய கருத்துக்களை மட்டும் தான் பரப்புகிறார்கள்.

இந்தப் போரை நடத்தும் எல்லாருக்கும் ஒரு லாபம் இருக்கிறது. நிறுவனங்களுக்கு லாபம் இருக்கிறது, அரசியல்வாதிகளுக்கு லாபம் இருக்கிறது, ஊடகங்களுக்கு லாபம் இருக்கிறது. அதனால் போரை ஊக்குவிக்கக்கூடிய ஒரு போக்கை எல்லா இடத்திலும் பார்க்க முடிகிறது. போர் உபயோகிக்கும் ஆயுத தளவாடங்கள், உற்பத்தி செய்யக்கூடிய கம்பெனிகளுக்கு கொடுக்கிறார்கள். இதற்காக போரை ஊக்குவிக்கிறார்கள். போர் நிறுத்துவதற்கான எந்த முயற்சியும் இந்த ஊடகங்களும் எந்த அரசியல்வாதியும் செய்யப் போவதில்லை.

கேள்வி: சூடானில் நடந்த போரை இனப்படுகொலை என ஐ.நா அறிவித்துவிட்டது. பாலஸ்தீனத்திலும் ஈழத்திலும் நடந்த இனப்படுகொலை குறித்து தோழர்?

பதில்: பாலஸ்தீனத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஐ.நா அறிவித்துவிட்டது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று அறிவிப்பதற்கான தயக்கம் இருப்பதற்கான காரணம்: ஒரு நாட்டில் ஒரு இனப்படுகொலை நடந்தது என்று அறிவித்துவிட்டால், அந்த மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கான அதிகாரம் வந்துவிடுகிறது. இந்த அரசு எங்களை இனப்படுகொலை செய்கிறது, ஆகவே நாங்கள் எங்களுக்கான அரசை உருவாக்கிக் கொள்கிறோம் அல்லது தேசத்தை உருவாக்கிக் கொள்கிறோம் என்று கேட்க முடியும். அதற்கு சர்வதேச சட்டத்தில் இடம் இருக்கிறது.

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ என்று அங்கீகரித்தால், தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையை கோரலாம். தங்களுக்கான தனிநாடு கேட்பதற்கான உரிமை அவர்களுக்கு வந்துவிடுகிறது. அதை அவர்கள் (அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகள்) அனுமதிக்க மாட்டார்கள். அடிப்படையில் தமிழீழ பகுதியினுடைய கடற்கரை பகுதி என்பது ராணுவ கேந்திரமாக மாற்றப்படுகிறது. அதை ராணுவ பகுதியாக மாறுவதற்காகத்தான் இத்தனை அழிவு ஈழத்தில் நடந்தது. அது யாருக்கு ராணுவத் தளமாக தேவைப்படுகிறது? அமெரிக்காவிற்குத் தேவைப்படுகிறது, இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் அந்தப் பகுதி மக்களை அழித்தார்கள்.

கேள்வி: பாலஸ்தீனத்தில் மத அடிப்படையில் அந்த மண் சொந்தம் என்று யூதர்களும் கேட்கிறார்கள். யூதர்கள் ஏற்கனவே ஹிட்லரின் வதை முகாம்களில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். ஆனாலும் அவர்கள் பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்வதற்கான காரணம் என்னவாக இருக்கும் தோழர்?

பதில்: அதை இப்படி மேலோட்டமாக பார்க்க முடியாது. வெகுமக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அழிவை செய்வதற்குரிய நோக்கம் வராது. அதை ஒரு கருத்தியல் தான் செய்யும். யூதர்களுக்குள்ளாக இருக்கக்கூடிய ஜியோனிச கோட்பாடுகள் (ஜியோனிசம் என்றால் மதவெறி கோட்பாடு) மதவெறி ஆதிக்கக் கோட்பாடு தான் காரணம். சாதாரண இந்து மக்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. சாதாரண இந்து மக்கள் யாருக்கு எதிராகவும் இருக்க மாட்டான். அவன் இயல்பாக கடந்து போவான். இந்துத்துவவாதி என்பவன் இஸ்லாமியர்களை கொலை செய்ய வேண்டும்/ இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவனாக இருப்பான்.

பத்திரிகையாளர்: நீங்கள் (திருமுருகன் காந்தி) கூட ’ஈழமும் பாலஸ்தீனும்’ என்ற புத்தகத்தில் மேல்தட்டு யூதர்களுக்கான ஒரு அமைப்புதான் ஜியோனிசம் என்று சொல்லி இருப்பீர்கள்.

தோழர் திருமுருகன் காந்தி: யூதர்கள் ஏகாதிபத்திய உணர்வு கொண்டவர்கள். அந்த ஆதிக்க உணர்வு கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு தான் ஜியோனிசம். அவர்கள்தான் இஸ்ரேலை கட்டுப்படுத்துகிறார்கள். அந்த ஜியோனிஸ்டுகள்தான் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்கிறார்கள். அந்த ஜியோனிஸ்டுகள்தான் இஸ்ரேலினுடைய அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அந்த ஜியோனிஸ்ட்கள்தான் நேத்தன்யாகுவாக பார்க்கக்கூடிய நபர்கள். இந்த ஜியோனிச கொள்கை/ இனவெறி மதவெறி கொள்கை கொண்டவர்கள்தான் இனப்படுகொலையை பாலஸ்தீனத்தின் மீது ஏவுகிறார்கள்.

‘ஜியோனிசம் என்பது நாசிசம் மாதிரி, பாசிசம் மாதிரி, இந்துத்துவம் (ஆர்எஸ்எஸ்) மாதிரி’. அதாவது ஆர்எஸ்எஸ் இந்துத்துவவாதிகள் மாதிரியான ஒரு பாசிச கொள்கையை கொண்ட கட்டமைப்புதான் ஜியோனிச கொள்கை. இதில் அடித்தட்டு மக்கள், உயர்தட்டு மக்கள் என்ற பாகுபாடு இல்லை. இந்துத்துவவாதிகளில் அடித்தட்டு மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாசிசக் கொள்கை அடிப்படையிலே மதரீதியான/ இனரீதியான ஒரு பெருமிதத்தோடு இயங்க கூடியவர்களும் இருக்கிறார்கள். அடுத்தவர் மீது காழ்ப்புணர்வின் மூலமாக இனவெறி/மதவெறி இயங்குமே ஒழிய, இதற்கென்று ஒரு தனியான வலிமையான தளமோ /நோக்கமோ / இலக்கோ இருக்காது. அடுத்தவர் மீதான காழ்ப்புணர்வு தன் மீதான ஒரு பெருமித உணர்வு- இரண்டுமே ஒரு பொய்யில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும்.

இப்போது ஈழத்தில் பாத்தீர்களானால், ‘சிங்களவர்கள்தான் அந்த நிலத்தினுடைய பூர்வ குடிகள், தமிழர்கள் வந்தேறி’ என்கின்ற பொய் ஒன்று இருக்கும். அந்த பொய்யின் மீதுதான் சிங்கள பேரினவாதம் கட்டப்பட்டிருக்கும். அதேபோல பாலஸ்தீனத்தில் ’இந்த நிலம் கடவுளால் தங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆகவே இந்த நிலத்தை எதைச் செய்தாவது பிடுங்கி கொள்ள வேண்டும்’ என்று சொல்லக்கூடிய பொய்யான மதரீதியான கருத்தியலின் கீழ்தான் ஜியோனிசம் கட்டப்படுகிறது. இந்த பெருமிதங்களிலிருந்துதான் பாசிசத்தன்மை எழக்கூடியதாக இருக்கும். அதைத்தான் நாம் பார்க்கிறோம்.

கேள்வி: ஈழத்திலிருந்து அகதிகளாக பல்வேறு நாட்டுக்கு சென்ற ஈழ மக்களின் நிலை இன்றைக்கு என்னவாக இருக்கிறது? ஈழத்தின் நிலை என்னவாக இருக்கிறது?

பதில்: மக்கள் ஈழத்திலிருந்து வெளியேறியது ஒரே நாளில் நடக்கவில்லை. பல்வேறு காலகட்டங்களில் நடந்திருக்கிறது. வெளியேறிய மக்கள் அந்தந்த நாடுகளில் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டிற்குரிய பங்களிப்பையும் செய்கிறார்கள். தங்கள் போராட்டத்திற்குரிய ஆதரவையும் வழங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்போடுதான் மக்கள் இயங்குகிறார்கள்.

கேள்வி: தற்போது பாலஸ்தீனத்தில் கூட ஐ.நா.வில் ஒரு தற்காலிக இருக்கை வாங்க முடிந்தது. 2009-ல் ஈழத்தில் நடந்ததற்குப் பிறகு இன்று வரைக்கும் நமக்கான ஒரு தற்காலிக இருக்கை கூட கிடைக்கவில்லையே, ஏன்? 

பதில்: பாலஸ்தீன பிரச்சனை ஐ.நா ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வந்த ஒரு பிரச்சனையாக இருந்தது. அதாவது ஐ.நாவில் முதலில் இரண்டு சர்வதேச சிக்கல்கள் எடுக்கப்பட்டன. ஒன்று பாலஸ்தீனம். இன்னொன்று காஷ்மீர். இந்த இரண்டுமே ஐ.நா.வினுடைய ஆரம்ப கட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான நிகழ்வுகள். பாலஸ்தீனத்துக்கு இருக்கை கிடைப்பதற்கும் அவர்களுக்கு ஓரளவுக்கு ஐ.நா.வில் முக்கியத்துவம் கிடைப்பதற்கான காரணம்: இஸ்லாமிய நாடுகள் எல்லாம் சேர்ந்து ஐ.நா.வில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கான ஒரு சின்ன குரலை அங்கே  எழுப்ப முடிகிறது.

தமிழர்களுக்கு அப்படி ஒரு ஆதரவு தளம் என்பது எங்கேயுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழர்களுக்கு எதிராகத்தான் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி தமிழர்களுக்கு வேறு யாரும் (மற்ற நாடுகள்) உதவி பண்ண மாட்டார்கள். தமிழர்களுக்கு பெரிய தடை இந்திய அரசுதான்.

இந்தியாவைக் கடந்து நான் (திருமுருகன் காந்தி) கிட்டத்தட்ட 10 நாடுகளில் பேசி இருக்கிறேன். ஸ்பெயின் அரசுடன் பேசி இருக்கிறேன். பார்சலோனாவினுடைய கவுன்சிலரிடம் பேசி இருக்கிறேன். ஜெர்மானிய அரசினுடைய வெளியுறவுத் துறையில் பேசி இருக்கிறேன். சுவிஸ் அரசாங்கத்தினுடைய வெளியுறவுத் துறையில் பேசி இருக்கிறேன். பெல்ஜியத்தில் பேசி இருக்கின்றோம். ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய பாராளுமன்றத்தில பேசி இருக்கின்றோம். இங்கிலாந்தினுடைய பாராளுமன்ற உறுப்பினரோடு பேசி இருக்கின்றோம்.. அவர்கள் எல்லாருமே சொல்லக்கூடிய விடயம் ”இந்தியா என்ன சொல்கிறது? இந்தியா எங்களுக்கு சரி என சொன்னால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை” என்கிறார்கள். அங்கே பிராந்திய வல்லரசு இந்தியா என்ன சொல்கிறதோ அதுதான் அவர்கள் நிலைப்பாடு.

கியூபாவில் இருந்து முற்போக்கு பேசக்கூடிய நாடுகளும் இந்தியாவை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆக இந்தியா ஒரு மிகப்பெரிய தடை. இந்தியாவினுடைய இந்திய தேசிய கட்சிகள் தமிழர்களுக்கு எதிரான கட்சிகளாகத்தான் இருக்கின்றன. கட்சிகள் இரண்டு மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஒன்று தமிழர்களைப் பற்றி அக்கறைப்படாத கட்சிகள். இந்த இனப்படுகொலைகளை பற்றி கவலைப்படாத கட்சிகள், அல்லது தமிழர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய கட்சிகள். இந்த இரண்டு வகைதான் இந்திய தேசிய அளவில் இருக்கிறது. தமிழ்நாடு கடந்து வேறு எங்கேயும் இந்திய அளவில் ஆதரவு என்பது தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.

கேள்வி: சூடானில் 2003-2004 வரைக்கும் ஆர்எஸ்எஃப் நடத்திய போரை ’எதனிக் கிளென்சிங்’ என சொல்கிறார்கள். எதனிக் கிளென்சிங் என்றால் என்ன?

பதில்: எதனிக் கிளன்சிங் (Ethnic Cleansing) என்பதை ஒரு இனப்படுகொலை வடிவமாகத்தான் பார்க்க முடியும். ’இன சுத்திகரிப்பு’ பண்ணக்கூடிய ஒரு அரசியல் நடவடிக்கை/ பொருளாதார நடவடிக்கை எதனிக் கிளன்சிங். அதை ராணுவ நடவடிக்கையாகத்தான் நாம் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட தரப்பை எதிரிகளாக சித்தரித்து, அவர்களை அரசியல், சமூக, பொருளாதார வெளிகளிலிருந்து அப்புறப்படுத்துவது / நீக்குவது, அல்லது அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வெளிப்படையாகவே நிராகரிப்பது எதனிக் கிளன்சிங் எனப்படும்.

பத்திரிகையாளர்: இதுவரை பல்வேறு தகவல்களை தெரிவித்ததற்கு நன்றி தோழர்!

தோழர் திருமுருகன் காந்தி: நன்றி! வணக்கம்!

https://youtu.be/C2beargkcMc?si=bF2Dzn3SSQ4pBevj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »