இலங்கை ராணுவத்தின் குற்றங்கள் குறித்து மார்க்சிய அரசியலுக்கு எதிர் நிலைப்பாடு கொண்டிருக்கும் ஜெவிபி இடதுசாரிகளால் வரவேற்கப்பட முடியும்? தமிழர்கள் பகுதியில் எவ்வாறு சனநாயக தீர்வை கொடுக்குமா? என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூலில் செப்டம்பர் 24, 2024 அன்று பதிவு செய்தது.
இசுரேலின் ஜியோனிசத்தை எதிர்த்து நிலைப்பாடு எடுக்க முடியாத, பாலஸ்தீன சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யாத, இசுரேல் ராணுவத்தின் குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாத இசுரேலியர்களின் கட்சி கிலோ கணக்கில் மார்க்சியம் பேசினாலும் பாலஸ்தீனர்களால் மட்டுமல்ல, உலகளாவிய சனநாயக சக்திகளாலும் நிராகரிக்கப்படும். அதுபோல தமிழர் சுயநிர்ணய உரிமை, சிங்கள பெளத்த பேரினவாதம், இலங்கை ராணுவத்தின் குற்றங்கள் குறித்து மார்க்சிய அரசியலுக்கு எதிர் நிலைப்பாடு கொண்டிருக்கும் ஜெவிபி இடதுசாரிகளால் வரவேற்கப்பட முடியுமா?
ஜெவிபியின் அரசியல் நிலைப்பாடுகள்:
- தமிழர் சுயநிர்ணய உரிமை என்பது அமெரிக்க-இந்திய கூட்டு சதி.
- சிங்கள பெளத்தம் என்பதே இலங்கையின் முதன்மை மத நம்பிக்கை.
- கொலை, பாலியல் வன்முறை செய்த இலங்கை ராணுவத்தினரை விசாரிக்கவோ, தண்டிக்கவோ கூடாது.
- தமிழர்களுக்கான மிகக்குறைந்த பட்ச அதிகார பகிர்வு பேசும் 13 வது சட்டத்திருத்தம் நிராகரிக்கப்பட வேண்டும்.
- தமிழர்களின் போராட்ட அரசியலுக்கு ராணுவரீதியில் தீர்வு காணப்பட வேண்டும்.
இந்த கொள்கைகளை இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதும் வலியுறுத்தி பேசியே ஆட்சிக்கு வந்துள்ளது ஜெவிபி. இந்நிலையில் இவர்கள் எவ்வாறு இலங்கைக்குள் அமைதியை கொண்டு வருவார்கள்? தமிழர்களுக்கு தீர்வு தருவார்கள்?
இலங்கையின் பிரதான நெருக்கடி அது சமீபத்தில் சந்தித்த பொருளாதார நெருக்கடி எனும் அளவில் இந்திய இடதுசாரிகள் இச்சிக்கலை சுருக்குவதால் ஜெவிபியின் வெற்றியை ‘நியோ-லிபரல்‘(தனியார்மய-தாராளமய) அரசியலுக்கு எதிரான வெற்றி என்கிறார்கள். இதே நிலைப்பாட்டை நிலைநிறுத்த ஒரு பேட்டியின் போது யூட்யூப் பேட்டியில் இடதுசாரியாக தம்மை காட்டவிரும்பும் நெறியாளர் ஒருவர் படாதபாடுபட்டார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பின்னனியில் இலங்கையின் இராணுவவாத விரிவாக்கமும், ஆயுத கொள்வனவும் இருந்ததை மூடிமறைக்க தொடர்ந்து இவர்கள் விரும்பினர்.
இந்த ஆயுத-இராணுவமயமாக்கலின் அடித்தளம் இலங்கையின் இனவாதத்தில் இருக்கிறது. இந்த கருத்தை ஏற்றுக்கொண்டால், இனவெறி அரசியலை இலங்கையின் பிரதான முரண்பாடாக ஏற்கும் நிலை இந்திய இடதுசாரிகளுக்கு உருவாகும். அப்படியான சூழலில் தமிழர் சுயநிர்ணய உரிமை குறித்து நேர்மையான நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிவரும். எனவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை முதன்மை சிக்கலாகவும், அதில் சிக்குண்ட சிங்கள பாட்டாளிகளை பாதுகாக்கும் அரசியலை கம்யூனிஸ்டுகள் மட்டுமே செய்ய இயலும் எனவும், அதனால் ஜெவிபியின் வெற்றி முக்கியமான மாற்றம் எனவும் முன்வைப்பது எளிதானது மட்டுமல்ல, இந்திய பார்ப்பனியத்தின் ஈழ எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுவதாகும்.
அமெரிக்கா, ரசியா, சீனா போன்ற வல்லரசு நாடுகளின் ராணுவ வீரர்களின் அடர்த்தி அல்லது பரவல் என்பது 1000 பேரில் 2 முதல் 2.2 நபர் என்பதாகும். ஆனால் இலங்கையில் இந்த விகிதம் 14 நபராக உள்ளது. அதாவது உலகளவில் அதிக இராணுவ வீரர் அடர்த்தி கொண்ட நாடு இலங்கை. இந்த பெரும் ராணுவ திரட்டலில் 70-80% ராணுவம் தமிழர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த ராணுவம் 100% சிங்களர்களை கொண்டது.
இலங்கையினை சுற்றி எதிரிநாடுகள் என எதுவுமில்லாத நிலையில் இலங்கையின் இராணுவ பட்ஜெட் அதன் GDPயில் 1.9% சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில் நெருக்கடியான எல்லைகள் கொண்ட ஆசிய நாடுகளின் ராணுவ பட்ஜெட் 2.4% முதல் 2.7% எனுமளவிலேயே இருந்தது. இலங்கையின் இராணுவம் உலகின் 14வது பெரிய இராணுவம். அன்னிய எதிரிநாடுகள் இல்லாத நிலையில் இத்தனை பெரிய ராணுவத்தினை, ஆயுத செலவுகளை ஏன் செய்கிறது. யார் இதன் எதிரி? தமிழர்கள் மட்டுமே இலங்கை ராணுவத்தின் எதிரியாக முன்னிறுத்தப்பட்ட நிலையில், சிங்கள பேரினவாதத்தை குறைத்து மதிப்பிட்டு, அதன் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணியை நிராகரித்து மேலோட்டமான காரணிகளை காட்டுவது மிக ஆபத்தானது.
2024 ஆம் ஆண்டு வரை இலங்கையின் ராணுவ பட்ஜெட் அதன் கல்வி பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு ஒதுக்கப்பட்டது. அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரத்தை அதன் இராணுவ-தொழிற்சாலை-கூட்டமைப்பு (Military Industrial Complex) கட்டுப்படுத்துவதாக அசாஞ்சே விளக்குவார். இந்த வார்த்தையை முதன்முதலில் இரண்டாம் உலகப்போருக்கு பின்பாக அமெரிக்க அதிபர் ’ஐஸ்னவோவர்’ பயன்படுத்தினார். இரண்டாம் உலகப்போரின் போது லாபமடைந்த ஆயுததளவாட உற்பத்தி நிறுவனங்கள் போர்சூழலை நிலைநிறுத்துவதன் மூலமாக தமது தொழிலை லாபமாக இயக்க முனையும் என சொன்னார். இதே நிலை இன்றளவும் அங்கே தொடர்கிறது. இந்த இராணுவ கார்ப்பரேட் நிறுவனங்கள் போர் சூழலை நிறுவுகின்றன. இலங்கையில் இராணுவதளவாடங்கள் இறக்குமதி என்பது மிகுதியாக நடைபெற்றது. இதில் லாபமடைந்த அரசியல்-இராணுவ கட்டமைப்பு போர் சூழலை தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. இந்த போர்சூழலுக்கு தமிழர்களை பலிகடவாக்கி எதிரியாக முன்னிறுத்துகிறது.
’2009 போருக்கு பின்பாக இலங்கை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு அமைப்பை ஜெவிபி உருவாக்கி உள்ளது. இந்த ராணுவ கட்டமைப்பு அதன் கட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது’. இப்படியாக தன் கட்சியினுள் ஐக்கியப்படுத்தப்பட்ட சிங்கள இராணுவ சூழலை ஜெவிபி எவ்வாறு களைந்து அரசியல் தீர்வை ஒட்டுமொத்த இலங்கைக்கு உருவாக்க முடியும். மேலும் இப்படியான கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு தமிழர்கள் பகுதியில் எவ்வாறு சனநாயக தீர்வை கொடுக்கும்?
இலங்கை ராணுவத்தின் பொருளாதார சுமை இலங்கையின் பொருளாதாரத்தை முறித்தது. சென்னை நகரின் GDPயை காட்டிலும் குறைவான விகிதம் கொண்ட இலங்கை எவ்வாறு இத்தனை பெரிய இராணுவத்தை கட்டிகாக்க முடியும். மேலும் இலங்கையின் பொருளாதார அடித்தளம் உற்பத்தி சார்ந்ததல்ல. துறைமுகம், துணிவகை ஏற்றுமதி, தேயிலை, சுற்றுலா, வளைகுடா நாட்டு அன்னிய செலவானி எனும் அளவில் பெரிய இராணுவம் எப்படி இலங்கைக்கு சாத்தியமாகும். இனவெறி அரசியலை பாதுகாக்கவும், தமிழரின் சுயநிர்ணய உரிமையை நசுக்கவுமே இந்த இராணுவத்தை சிங்கள பேரினவாதம் உருவாக்கி பாதுகாக்கிறது. இந்த இராணுவத்தையே ஜெவிபி கட்சி தலைவர்கள் பெரும்வீரர்கள், தேசபக்தர்கள் என கொண்டாடுகிறார்கள். இந்த விவரங்களை விளக்கி ‘…இலங்கையின் பொருளாதார சிக்கலின் அடித்தளத்தை நவதாராளவாதம் என்பதாக மட்டுமே சுருக்கி பொருளாதார வாதத்திற்குள்ளாக செல்லாதீர்கள்..‘ என்று சொன்னபோது, ‘சிங்கள மக்கள் பொருளாதார சிக்கலுக்காக போராடிய போது தமிழர்கள் ஏன் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தார்கள், இது புரட்சிக்கு எதிர் மனநிலை அல்லவா…‘ என அங்கலாய்த்தார் அந்த இடதுசாரி யூட்யூபர்.
‘…40 ஆண்டுகளாக தமிழர் பகுதியில் நிலவும் பொருளாதார தடைக்கு எதிராக சிங்கள மக்களின் எதிர்வினை என்னவாக இருந்தது, மேலும் சிங்களர்களின் போராட்டத்தில் தமிழர்களின் மீதான வன்முறைக்கான தீர்வுகள் ஏதும் ஏன் முன்வைக்கப்படவில்லை, தமிழர் பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்ட போது எவ்வாறு போராட்டம் சாத்தியமாகும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை கூட நடத்த இயலாத தமிழர்கள் எப்படி போராட ஒன்று கூட வாய்ப்பிருக்கும்…‘ எனும் கேள்விகளுக்கு இன்றுவரை பதிலில்லை. சிங்களர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக நடத்திய போராட்டத்தை புரட்சிகர எழுச்சியாக பார்த்த இடதுசாரிகள், இந்த போராட்டம் ரணில் விக்கிரமசிங்கேவை அரியணைக்கு அமெரிக்கா கொண்டுவர உதவியது எனும் போதில் மெளனம் காக்க ஆரம்பித்தார்கள். இந்த அரசியலை மறந்துவிட்டு தற்போது சிங்கள பாட்டாளிகளை விடுவிக்க மாற்றம் நடந்துள்ளதாக கொண்டாடுகிறார்கள்.
இலங்கையில் இவ்வாறெல்லாம் இடதுசாரிகள் வெற்றிபெற இயலும் நிலை இருந்தால் இந்தியாவும், மேற்குலகும் அமைதி காத்திருக்காது. கம்யூனிஸ்டுகளின் ஆட்சியிலேயே கேரளா, மேற்குவங்கத்தில் மாவோயொஸ்டுகளை கொன்றுகுவித்த இந்திய அரசு, நேபாள மாவோயிஸ்டுகளை கவிழ்த்த இந்திய அரசு, ஜெவிபி வெற்றியை கைகட்டி வேடிக்கை பார்த்திருக்காது. அதுவும் மோடி அரசு இதை செய்திருக்காது.
ஜெவிபியை மற்றுமொரு சிங்களர்களின் தேர்தல் கட்சியாக நாம் புரிந்துகொள்ளலாமே ஒழிய, இடதுசாரி மாற்றுக்கட்சி என கொண்டாடுவேமேயானல் அது தமிழ்நாட்டிற்குள்ளாக இடதுசாரி அரசியலுக்கு நெருக்கடியை உருவாக்கவும், தமிழர்களிடமிருந்து அன்னியப்படவுமே பயன்படும்.
சிங்கள பேரினவாதிகளை கடந்தகாலத்தில் தூக்கி சுமந்த கட்சி ஜெவிபி. அவ்வாறு தூக்கி சுமக்க இனிமேலும் இயலாத நிலையில் புதுகூட்டணியை, பழைய கொள்கைகளை கொண்டு உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இதை ‘இடதுசாரி அரசியல்’ என இளம்தலைமுறைக்கு பாசிச கட்சிகளை அடையாளம் காட்டும் வரலாற்று தவறை செய்யக்கூடாதென்பதே மே17 இயக்கத்தின் கவலை.