வினேஷ் போகட் தகுதி நீக்கமா? அரங்கேறிய சூழ்ச்சியா?

அம்மா, மல்யுத்தம் என்னை வென்று விட்டது, என்னுடைய நம்பிக்கைகள் எல்லாம் தளர்ந்து விட்டன, இனி போராட சக்தி இல்லை” -இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கித் தருவார் என்று, இந்தியாவே மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருந்த வினேஷ் போகட்டின் வலி மிகுந்த வார்த்தைகள் இவை.

பிரான்ஸ் நாட்டில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியா தற்போது  வரை வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே பெற்றிருக்கிறது. தங்கப்பதக்கத்தைப் பெறுவது இன்னும் கனவாகவே உள்ள நிலையில், தங்கம் வெல்வார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்டின் தகுதி நீக்கம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் மல்யுத்ததில் (50 கிலோ எடைப் பிரிவில்) இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியப் பெண்மணியாய் சரித்திரம் படைத்திருக்கிறார் வினேஷ் போகட். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுத்துறையில், சமூக அழுத்தங்களையும், பல சவால்களையும் துச்சமாக மதித்து பதக்கங்களைக் குவித்தவர் வினேஷ். ஹரியானாவில் உள்ள பலாலியில் எளிய குடும்பத்தில் பிறந்த வினேஷ், 2014 காமன்வெல்த் போட்டி, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி எனப் பல போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தவர்.

இதுவரை வினேஷ் இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றுள்ளார். தந்தையை இழந்த இவர் தன் பெரியப்பாவிடம் நான்கு வயதிலிருந்தே மல்யுத்தம் கற்றுத் தேர்ந்தார். இவர் 2016-ல் ஒலிம்பிக் போட்டிகளில் கால் பாதித்தாலும் காயம் காரணமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் (53 கிலோ பிரிவில்) கால் இறுதிப் போட்டிவரை விளையாடி பதக்கங்கள் பெற்றார்.

தற்போதைய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிலும் கியூபா, ஜப்பான் நாட்டின் வீரர்களைத் தோற்கடித்து இறுதி சுற்றிற்கு முன்னேறினார். இவ்வாறிருக்க வினேஷ் தங்கப்பதக்கத்தை பெறுவார் எனும் கனவை தவிடுபொடியாக்கும் வகையில், இறுதிப்போட்டிக்கு முன்பு வெறும் 100 கிராம் கூடுதல் எடையின் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ்.

கடந்த 18 ஜனவரி 2023 அன்று வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல மல்யுத்த விளையாட்டு வீரர்கள், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) அப்போதைய தலைவரான ’பிரிஜ் பூஷனுக்கு’ எதிராக போராட்டம் செய்தனர். ”பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாகவும், அவர்களை மிரட்டியதாகவும், ஆதலால் அவர் பதவி விலக வேண்டும், கூட்டமைப்பை கலைக்க வேண்டும்” என்றும் தொடர்ந்த போராட்டம் சுமார் நான்கு மாதங்கள் வரை நீடித்தது .

பெண் மல்யுத்த வீரர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ’அனுராக் தாக்கூர்’ ஆகியோருக்கு தெரிவித்ததாகக் கூறினார் ​​வினேஷ். ஆனால் ஒன்றிய பாஜக அரசு பிரிஜ் பூஷன் பதவி விலக்கப்படவும் இல்லை, பிரதமரான மோடி இது குறித்து வாய் திறக்கவே இல்லை. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் எல்லாம் அகற்றப்பட்டன. இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என தெரிவித்தனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற அவர்களை, உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தி,  வீச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்தனர். அப்போது கூட மோடியோ, அமைச்சரோ எதுவும் பேசவில்லை. மாறாக பெண் மல்யுத்த வீரர்களை பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் இழிவு செய்யும் போக்கே தொடர்ந்தது.

போராட்டம் தீவிரமடைந்த போது, அமைதி வழியில் போராடியவர்களை காவல் துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்தியாவிற்கு பதக்கம் வாங்கிக் கொடுத்து, இந்தியாவையே தலை நிமிரச் செய்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டு காவலர் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் சோர்வடைந்த முகத்தை சிரிப்பது போல கிராபிக்ஸ் மூலம் சித்தரித்து வெளியிட்டனர் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் வென்று வரும் போது, இந்தியாவின் மகள்கள் என்று பெருமை பொங்க பேசிய மோடி, அவர்கள் குற்றம் சாட்டிய பிரிஜ் பூஷனை கட்சியிலிருந்து நீக்க இல்லை என்பதோடு, பிரிஜ் பூஷனின் நண்பரான ’சஞ்சய் சிங்கை’ மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக்கி, பிரிஜ்பூஷனின் மகனை பாராளுமன்ற உறுப்பினராக்கியும் விட்டது. 

எதிர்கால மல்யுத்த வீரர்களுக்காக நான் போராடுகிறேன். போராடும் இளம் பெண் மல்யுத்த வீரர்களுக்காக நான் போராட விரும்புகிறேன். அவர்கள் (பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து) பாதுகாப்பாக மல்யுத்தம் செய்ய வேண்டும். அதற்காகத்தான் நான் ஜந்தர் மந்தரில் போராடினேன், அதற்காகத்தான் நான் இங்கே (ஒலிம்பிக்கில்) விளையாடுகிறேன்.“- என்றவர் வினேஷ் போகத். இந்த ஒலிம்பிக்கில் வென்றிருந்தால் அவரின் பேச்சு எப்படியானதாக இருக்கும் என்பதை முன்கூட்டியே குறியீடாக சொல்லியிருக்கிறார்.

இந்தப் பேச்சு, தங்களை அவமானப்படுத்தியவர்களை உலகத்தின் முன்னிலையில் அம்பலப்படுத்துவேன் என்கிற தொனியைக் கொண்டதாக இருக்கிறது. அவருக்கு நேர்ந்த இந்த அநீதி, உலகத்தின் முன் தலைகவிழ நேருமோ என்கிற பயம் கொண்டவர்களின் சூழ்ச்சியாக, இருக்குமோ என்கிற சந்தேகம் வலுவாக எழும்புகிறது.

ஏற்கெனவே, மணிப்பூர் குத்துச்சண்டை வீரரான ’சங்கரங் கோரன்’ என்பவர், டெல்லியில் நடந்த ‘மேட்ரிக்ஸ் நைட்’ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற போது, ‘மோடி அவர்களே, ஓராண்டுக்கும் மேல் மணிப்பூரில் கலவரங்கள் நடக்கின்றன, ஒரு முறையாவது மணிப்பூருக்கு வந்து அமைதியை மீட்டெடுங்கள்’ என வேண்டுகோள் வைத்தார். இவரைப் போன்று, வினேஷ் போகட்டும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளையும் வெளியில் சொல்லும் ஒரு வாய்ப்பாக, அவரின் வெற்றியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதே அவரின் கூற்றிலிருந்து தெரிகிறது.

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் போராடியவர்களில் ஒருவரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரருமான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “டெல்லியில் நாங்கள் போராடிய போது, ஒரு வார்த்தை கூட பேசாத மோடி, வினேஷ் வெற்றிக்குப் பிறகு ஃபோன் செய்து வாழ்த்தும் துணிவு எப்படி வரப்போகிறது என்பதைக் காண ஆவலாக உள்ளேன்” எனப் பேசியிருந்தார். (இவர் பிரிஜ் பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங்கை, இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து பத்ம பூஷன் விருதை திரும்ப கொடுக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது). இந்த அளவுக்கு, இந்தியாவை தலைநிமிரச் செய்த வீரர்கள், டெல்லியில் போராடிய போது கடும் அவமானங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் சந்தித்திருந்தனர்.

இந்த ஒலிம்பிக்கிற்காக 33 கோடி ரூபாயை இந்தியா செலவழித்திருக்கிறது. இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய அனைத்தையும் கவனிப்பதற்காக சென்ற அதிகாரிகள் உட்பட்ட ஊழியர்களின்  எண்ணிக்கை 140. வீரர்களின் அடிப்படையில் நிதி சரிவர ஒதுக்காமல், தாங்கள் ஆளும் மாநில வீரர்களுக்கே முன்னுரிமையாக நிதி வழங்கியும் உள்ளது பாஜக அரசு. எல்லா வீரர்களும் நாட்டுக்காக தான் விளையாடுகிறார்கள். ஆனால் மோடியோ வீரர்களுக்கு இடையில் விளையாடுகிறார். உதாரணத்திற்கு

மாநிலம்விளையாட்டு வீரர்கள்ஒதுக்கப்பட்ட நிதி
பஞ்சாப்19 ₹78 கோடி
ஹரியானா24₹66 கோடி
உ.பி6 ₹438 கோடி
குஜராத்2 ₹426 கோடி

ஒரு வீரருக்கு என்ன குறைபாடுகள் நேர்ந்தாலும், அதைக் குறித்து மேல் மட்ட நிர்வாகிகளுடன் உடனுக்குடன் பேசி, தீர்வை எட்டச் சென்றவர்கள் இவர்கள். ஆனால், வினேஷிற்கு நேர்ந்த அநீதி குறித்து எதுவும் பேசாமல், சுற்றுலாவில் ஓய்வெடுக்கச் சென்றவர்கள் போல அமைதி காத்ததும் சந்தேகத்தையே எழுப்புகிறது.

இந்த அதிகாரிகள் எந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள், விளையாட்டுத் திறனில் அடிப்படையிலா அல்லது இங்கும் உயர்சாதியினரே குவிக்கப்படுகிறார்களா என்பதுவும் கவனிக்கப்பட வேண்டும்.  ‘பயிற்சியாளர்களுக்கும், பிசியோதெரபிஸ்ட்களுக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தும், ஏன் இத்தகைய தவறுகள் நடக்கின்றன? வினேஷ் போகட் இறுதிப்போட்டிக்கு தகுதியான போது ஏன் மோடியிடம் இருந்து எந்த தகவல்(twteet) வரவில்லை?’ என பஞ்சாப் முதல்வர் கேட்டிருப்பதையும் இவற்றுடன் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

வினேஷ் போகட், 55 கிலோ எடைப்பிரிவின் கீழ் வரும் மல்யுத்த போட்டியாளராகவே இருந்தார். 2023, ஆசியப் போட்டியின் போது காலில் அடிபட்டு விலகிய சமயத்தில், மற்றொரு மல்யுத்த வீராங்கனையான ஆன்டிம் பங்கால் என்பவர் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் பெற்றார். அதனால் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 53 கிலோவிற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் ஒரு போட்டி வைத்து மீண்டும் ஒரு நபரை தேர்ந்தெடுத்து அனுப்பலாம் என்கிற நிலையில், அந்தப் போட்டி வைக்கப்படவே இல்லை. பிரிஜ் பூஷனுக்குப் பிறகு, தற்காலிகமாக இந்திய மல்யுத்த கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் பிரஜ் பூசனின் ஆதரவாளரே எனும் போது, அந்தப் போட்டி வைப்பார்கள் என, இனியும் காத்திருப்பதில் பலனில்லை என 50 கிலோ எடைப்பிரிவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் வினேஷ். மூன்று கிலோ குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் ஆளானார். (சஞ்சய் சிங் நியமனத்தை எதிர்த்து, வினேஷ் போகத், தான் வாங்கியிருந்த அர்ஜூன் மற்றும் கேல் ரத்னா விருதுகளை இந்திய அரசிடம் திருப்பித் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). 

 மேலும், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் இந்தியாவிற்குரிய பிரதிநிதியாக அம்பானியின் மனைவியான நீதா அம்பானி இருக்கிறார். இந்தியாவின் 140 கோடி மக்களை பெருமை கொள்ளச் செய்யும் ஒரு வாய்ப்பாக இருந்த வினேஷின் வெற்றி, 100 கிராம் எடையில் பறிக்கப்பட்டதைக் குறித்து இதுவரை பொதுவெளியில் எந்த கருத்தும் சொல்லவில்லை. ஒலிம்பிக் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தக்கூடிய நபரான இவரின் மௌனமும் சந்தேகத்தை எழுப்புவதாகவே உள்ளது. ஒலிம்பிக் கமிட்டியின் இந்தியா சார்பான பிரதிநிதி ஆவதற்குரிய எந்த விதிமுறைகளுக்கும் பொருந்தாமல், தனது செல்வாக்கை பயன்படுத்தியே எந்த போட்டியும் இன்றி இரண்டு முறை நீதா அம்பானி தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சார்பான வீரர்களை  ஒலிம்பிக் போட்டிக்காக அழைத்துச் செல்லும் குழுவின் தலைவர் அம்பானிக்கு நெருக்கமானவர். அது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் வீரர்களுக்கான உடற்தகுதியை கவனிக்கும் மருத்துவர் டின்ஷா பார்டிவாலா, அம்பானியின் மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர். இவையெல்லாம் வலுத்த சந்தேகங்களாக எழுகின்றன.

இந்திய குத்துச் சண்டை வீரரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான, விஜேந்தர் சிங், “100 கிராம் எடை என்பது எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சுலபமாக 5 கிலோ வரை உடலில் ஏற்ற, இறக்க செய்வோம். இந்தியா ஒலிம்பிக்கில் சிறந்த நாடாக விளங்குவதை விரும்பாதவர்கள் சிலர் சதி செய்திருக்கிறார்கள்” எனக் கூறியதும், சதிகள் நடந்திருக்கும் சாத்தியம் அதிகம் இருப்பதையே காட்டுகிறது. 

இவ்வளவு அரசியல் சந்தேகங்களின் சூழ்ச்சி வலைப்பின்னலுக்குள்தான், தன் திறமையை மட்டும் நம்பி களம் கண்டு, வெற்றியை ஈட்டும் சமயத்தில், வெறும் 100 கிராம் எடை அதிகரிப்பின் காரணத்தை காட்டி வினேஷ் போகட்டின் இறுதி வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரான்சு ஒலிம்பிக் கமிட்டி, பாலஸ்தீன இனப்படுகொலை செய்யும் இசுரேலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஆனால் ரஷ்யாவிற்கு வாய்ப்பினை மறுத்திருக்கிறது. மேற்குலகின் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒலிம்பிக் நடத்துகிறது. விளையாட்டுப் போட்டிகளில் அரசியல் செய்யக்கூடாது என்று அறிவுரை செய்பவர்கள், உலக விளையாட்டுப் போட்டிகளே அரசியல் கலக்காமல் இல்லை என்பதை உணரும் செயலாக இதுவே இருக்கிறது.

இதுவரை தோல்வியை சந்திக்காத ஜப்பான் நாட்டு வீராங்கனை ‘யு சுசாகியை’ முதல்முறையாக தோல்வியை சந்திக்க வைத்து, காலிறுதி போட்டியில் உக்ரைன் நாட்டின் ‘ஒக்லானா லீவாஜை’ வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதியான வீராங்கனை மல்யுத்ததில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.

ஒரே இரவில் தனது உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டதுடன், தலைமுடியை வெட்டி, ஆடைகளின் எடையை குறைத்து மட்டுமின்றி தனது ரத்தத்தை கூட வெளியேற்றி இருக்கிறார். தன் திறமையின் மீது குறையாத நம்பிக்கை கொண்ட இவ்வீராங்கனை. ‘வெற்றி கோப்பையை கையில் வாங்கிய பிறகுதான் நான் பேசுவேன் எனக்கூறிய வாசகத்தின் பின்னால், அவருக்கு டெல்லியில் நடந்த கொடுமைகள் எதிரொலிக்கும் என்று அஞ்சிய உயர்மட்டங்களின் கோழைத்தனம், அவரை தகுதி நீக்கம் செய்த சதியில் இருக்கிறது‘ என்று பலரும் சந்தேகிப்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.

வீழ்த்த முடியாத வீராங்கனையாக வலம் வந்த வினேஷ் போகத்தை, வீழ்த்தியது 100 கிராம் எடைமட்டும் தானா? அல்லது 140 கோடி மக்களை தலைநிமிர வைக்கக் காத்திருந்த வீராங்கனையை வீழ்த்தியது சூழ்ச்சிகளின் வலைப்பின்னலா? என்பது கேள்விக்குறியாகவே இன்னும் நீடிக்கிறது.

தமிழ்நாட்டு அளவிலேயே மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வாங்குகிறது. இந்தியாவைப் போலவே மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா இரண்டாவது இடத்தில் அதிக பதக்கம் வாங்கிய பட்டியலில் இருக்கிறது. இவ்வளவு மக்கள் தொகையும், திறமையும் கொண்ட ஒரு நாடு பதக்கம் வாங்க முடியவில்லை என்றால் ஏனென்கிற கேள்வி எழுகிறது.

இங்கே இருக்கிற பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பே இதற்கு காரணமாக இருக்கிறது. அதனால்தான் இன்று வரை தமிழ்நாட்டில் இருந்து கிரிக்கெட் விளையாடச் செல்பவர்களில் 99.9% பேர் பார்ப்பனர்களான உயர் சாதிகளாக மட்டுமே இருக்கிறார்கள். சாதிப் பிரிவுகளாகப் பிரித்து, இதை இன்னார்தான் செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது என்று மக்களைக் கூறு போடும் இந்த பிறப்பின் அடிப்படையிலான சாதியை தகர்த்தெறிந்தால் மட்டுமே சமூக ரீதியாகவும் சரி, விளையாட்டிலும் சரி, இந்தியா முன்னேற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »