இந்துத்துவத்திற்கு உரமிடும் இஸ்லாமோபோபியா
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், இந்திய மக்கள் மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதாவது முஸ்லிம்கள் தவறு செய்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லாமலே அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒற்றை காரணத்திற்காக இந்துத்துவ (RSS- BJP) கும்பலால் தாக்கப்படுவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.
மோடியின் பாஜக அரசு 2014ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் எதிர்கொள்ளும் விடயங்களை கொரோனா எடுத்துக்காட்டுகிறது. பல பாஜக தலைவர்கள் தங்கள் நேர்காணல் மற்றும் உரைகளில் இந்து தேசியவாத மற்றும் முஸ்லிம் விரோத கருத்துக்களை பலமுறை கூறியுள்ளனர். 2019ல் அசாம் தேர்தலின் போது அமித்ஷா வங்காள தேசத்திலிருந்து வரும் புலம்பெயர் இஸ்லாமியர்களை “கரையான்கள்” என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
பாஜக தலைவர்களின் இத்தகைய வன்மம் நிறைந்த கருத்துக்கள், அவர்களின் ஆதரவாளர்களை வன்முறை தாக்குதல்களில் ஈடுபட வைக்கிறது. இதனாலேயே 2015 முதல், மத சிறுபான்மையினர் பல வழிகளில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டும், காயப்படுத்தப் பட்டும் உள்ளனர். ஆனால் இதற்கு மோடி அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை. மேலும் இதைத் தடுக்க இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படித்தான் வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம் மக்களை புலம்பெயர்ந்தவர்கள், ஊடுருவல்காரர்கள், அந்நியர்கள் என்றும் அவர்கள் விரட்டயடிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் ஒரு பிம்பத்தை கட்டமைத்து, அதன் மூலம் மக்கள் மனதில் வன்மத்தை வளர்த்துள்ளது இந்துத்துவ பாஜக கும்பல். இதன் ஒரு பகுதியாக தான் அசாமில் தற்போது வங்காள இஸ்லாமியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சொந்த நாட்டிலேயே இஸ்லாமிய மக்களை வாழவிடாமல் விரட்டி அடிக்கும் அளவுக்கு இந்துத்துவா கும்பல் வலுவடைந்து உள்ளது என்பது வேதனையான உண்மை.
இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம்
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் வழியாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் மக்களிடையே வேகமாக பரவி, முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் குழுக்களில் பயத்தை, வெறுப்பைப் பரப்பும் வகையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் குறித்த ஆய்வு ஒன்றை கரக்பூர் ஐஐடி மற்றும் அமெரிக்காவின் எம்ஐடி (Massachusetts Institute of Technology) இணைந்து நடத்தியது. அதில் அவர்கள் 5000 குழுக்களில் இருந்து 20 லட்சம் குறுஞ் செய்திகளை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது ஆகஸ்ட் 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரித்த குறுஞ்செய்திகளில், குழுக்களில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருப்பதாகவும், மேலும் இந்த மாதிரியான குறுஞ்செய்திகள், சாதாரண குறுஞ்செய்திகளை விட அதிகம் பகிரப்படுகிறது என்று தெரியவந்திருக்கிறது.
முக்கியமாக இஸ்லாமியம் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பை, பயத்தை விதைப்பது போலவே பெரும்பாலான குறுஞ்செய்திகள் இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் முகநூல் நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர், இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துத்துவவாதிகளின் பொய்யான பிரச்சாரங்களை முகநூல் சமூகவலைத்தளம் அறிந்தே தடுக்காமல் அனுமதித்தது என்று ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார்.
பாஜக ஆளும் இந்தியாவில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்
சுதந்திர இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் விகிதத்தை ஒப்பிடும்போது IAS, IPS பதவிகள், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் என எதிலும் அவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்த வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது தான் நிதர்சனம்.
இஸ்லாமியர்களின் வாய்ப்புகளை பாஜக அரசு முற்றிலும் முடக்கியது என்றால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் போதியளவு இடம் பெறவில்லை என்பதே உண்மை.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் 10 மாநிலங்களில் மொத்தமுள்ள 281 அமைச்சர்களில், இஸ்லாமிய அமைச்சர்களின் எண்ணிக்கை வெறும் 16 மட்டுமே. அதாவது இஸ்லாமியர்கள் 5.7 சதவீதம்தான். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, குஜராத்தில் மட்டும் அமைச்சரவையில் இஸ்லாமியர் இடம் பெறவில்லை. ஆனால் மேற்கூறிய 10 மாநிலங்களில் 34 இஸ்லாமிய அமைச்சர்கள் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அசாம், கர்நாடகா, குஜராத், பீகார் போன்ற பாஜக ஆளும் மாநில அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. உத்திர பிரதேசத்தில் மட்டும் அரிதாக மொஹ்சின் ராசா என்ற இஸ்லாமியர் அமைச்சராக உள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் குறைந்தது ஒரு இஸ்லாமிய அமைச்சர் பதவியில் இருக்கிறார். மேற்கு வங்கத்தில் 7 பேரும், மகாராஷ்டிராவில் 4 பேரும், கேரளாவில் 2 பேரும் உள்ளனர்.
தற்போது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் பாஜகவில் உள்ளார். மக்களவையில் பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்.பியும் இல்லை என்பதே கசப்பான உண்மை.
இன்றைய தேர்தல் அரசியலில் முஸ்லிம்களை ஓரங்கட்டி இஸ்லாமிய வெறுப்புப் பேச்சை தொடர்ந்து கட்டவிழ்த்து முஸ்லிம்கள் இல்லாத “இந்து ராஜ்யம்” அமைக்க இந்துத்துவ பாஜகவினர் முயற்சி செய்து அதில் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.
பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள்
130 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டில் 20 கோடி அளவுக்கு வாழும் முஸ்லிம்களை, மோடி அரசின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒதுக்கித் தள்ளும் வகையில் இருப்பதாகக் கூறப்படும் புகார்கள் மிகவும் கவனிக்க வேண்டியவை.
மோடி அரசின் செயல்பாடுகளை உற்று கவனித்தால் அது எவ்வாறு தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று புரியும். முதலில் முத்தலாக் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள், பின்னர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய 370வது சட்டப் பிரிவை நீக்கினார்கள். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பை எழுதிக் கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து “சட்டவிரோத குடியேறிகளை” களையெடுக்கப் போவதாக சொல்லிக் கொண்டு NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாமில் அமல் படுத்தினார்கள், இதனால் 19 லட்சம் பேர் குடியுரிமை இழந்தனர். பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் எனும் CAAவை தொடங்கினார்கள்.
CAA எதிர்ப்புப் போராட்டம் சமீப கால வரலாற்றில் மிக முக்கியமாக அனைவராலும் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய போராட்டமாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வை தூண்டுபவர்களுக்கு எதிரான சட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகின்றன. பாடப் புத்தகங்கள் திருத்தி எழுதப் படுகின்றன. சாலையின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. வரலாறு வெளிப்படையாக திரித்து எழுதப் படுகிறது. ஆனாலும் யாரும் இதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத அளவிற்கு கேள்வி கேட்பவர்களை கடுமையாக ஒடுக்குகிறது பாசிச அரசு.
முஸ்லிம்களை குறிவைத்து தாக்கும் இந்துத்துவ,சங்பரிவார அமைப்புக்கள்
வடமாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் mob lynching, mob riots அதிகமாக நடந்து வருகிறது. அதாவது இந்துத்துவ சங் பரிவார கும்பல்கள் குழுவாக சேர்ந்து ஒரு நபரை போட்டு அடிப்பது, முக்கியமாக இஸ்லாமியர்களை ஜெய் ஸ்ரீராம் என சொல்ல சொல்லி தாக்கும் கொடுமைகளும் அதிகரித்து வருகிறது. அதிலும் உ.பியில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. மேலும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ கும்பல்கள் நாளுக்கு நாள், இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தும் மனிதர்களை தாக்குவதும், கொடூரமாக அடித்து கொல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
கொரோனா முதல் அலையின் போது டெல்லியில் தப்லிக் ஜமாஅத் நடத்திய விழாவில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்தான் கொரோனாவை இந்தியாவில் பரப்பினர் என பாஜகவினர் அறிவித்தது, இந்தியாவில் பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் எத்தகைய ஆபத்தான நிலைமையில் உள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அந்நிகழ்ச்சி நடத்த அனுமதி தந்த பாஜக அரசு, அக் கூட்டத்தை “தாலிபானி குற்றம்” “கொரோனா பயங்கரவாதம்” என்றழைத்தது. சில மோடியின் ஊடகங்கள் “கொரோனாஜிஹாத்” என்றும் கூறியது.
அதேபோல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் இந்துத்துவ கும்பல் காவல்துறை உதவியுடன் அத்துமீறி நுழைந்து இஸ்லாமியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. அதில் டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் தாக்கப்பட்டனர். மேலும் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாபராபாத், மவ்ஜ்பூர், சந்த்பாக், கோகுல்புரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினரின் உதவியோடு ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 38 பேர் பலியானது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல் அசாமில் நடந்த போராட்டத்திலும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அசாம் கன பரிஷத் உட்பட பல கும்பல்கள் ஒன்று சேர்ந்து அஸ்ஸாம் வீதிகளைப் போராட்டக்களமாக மாற்றினர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் வரவழைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற வன்முறையின் போது முஸ்லிம் மக்களின் சொத்துக்கள், உடைமைகள், கடைகள், வீடுகள் உள்ளிட்ட அனைத்தும் குறிவைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டது. குழந்தைகளைக் கூட விட்டு வைக்காத அந்த கும்பலுக்கு பயந்து முஸ்லிம்கள் பாதுகாப்பான பகுதிக்கு தஞ்சமடைய இடம் பெயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக இஸ்லாமியர்களும், தலித்துகளும் குறிவைத்து கொல்லப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென முன்னாள் குடியுரிமை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அசாமில் இஸ்லாமியர் அதிகளவில் வசிக்கும் இடங்களில் அவர்கள் நிலங்களை ஆக்கிரமித்ததாக கூறி அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் நடந்த கலவரத்தில் இருவரை போலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அசாமில் பாஜக 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தன்னை தானே இந்து தேசியவாதி என கூறிக் கொண்டு, அசாமியர்களின் நலன்களை இந்துத்துவத்தோடு இணைத்து அரசியலாக்கி வருகிறார். அங்கு தேர்தலின் போது அவர் வெளிப்படையாகவே, தேர்தலை “நாகரிகப்போர்” என்றும் அசாமை வங்காள இஸ்லாமியரிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்றும் பிரச்சாரம் செய்தார். தற்போது பசுவதை தடை சட்டத்தையும் இவர் அரசு கொண்டு வந்துள்ளது. அதோடு கலப்பு திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் “லவ் ஜிகாத்” போன்ற பொய்ப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது சர்மாவின் பாஜக அரசு.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்துவ பாஜகவினர் செயல் ஒன்றும் இன்றைய, நேற்றைய திட்டமல்ல. இந்த கும்பல், பல ஆண்டுகளாக இத்திட்டத்தை வரையறுத்து காய் நகர்த்தி வருகின்றன. இந்த கும்பலின் முன்னோடியான கோல்வால்கர் போன்றோரின் திட்டமான முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுப்பது, இந்து ராஷ்டிரம் அமைப்பது போன்றவற்றை தான் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறது. அதோடு நமக்கு மதச்சார்பின்மையை வழங்கி, அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கி தந்த அரசியல் சட்ட சாசனத்தை தகர்த்து, இந்து ராஷ்டிரத்தை அமைக்க அனைத்து சாதகமான வழிகளிலும் முயற்சித்து வருகின்றனர்.