
காசாவில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திவரும் இசுரேல் அண்மைக்காலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பத்திரிக்கையாளர்களை குறிவைத்து கொலை செய்கிறது. காசாவில் செயற்கையான உணவுப்பஞ்சம் உருவாக்கப்பட்டதை வெளியுலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்களை கொன்றதால் தற்போது உலகரங்கில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது இசுரேல்.
கடந்த 2025 ஆகஸ்ட் அன்று காசாவின் முக்கிய மருத்துவமனை மீது இரட்டைத் தாக்குதலை இசுரேல் நடத்தி இருக்கிறது. காசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இசுரேல் அடுத்தடுத்து நடத்திய இரண்டு தாக்குதல்களில் பொதுமக்கள், மருத்துவ ஊழியர்கள் மட்டுமின்றி ஐந்து பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அல் ஜசீராவின் முகமது சலாமா, ராய்ட்டர்ஸின் ஹுசாம் அல்-மஸ்ரி, அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர் மரியம் அபு டாக்கா மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்கள் மோத் அபு தாஹா, அகமது அபு அஜீஸ் ஆகியோர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை இசுரேல் குறிவைத்துப் படுகொலை செய்ததற்கு ஐ.நா.வும் ஊடக அமைப்புகளும் கண்டனங்களை எழுப்பிய போதும், அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அவர்களைக் கொன்று குவித்து வருகிறது இசுரேல். நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை முதலில் தாக்கிய இசுரேல், அவர்களைக் காப்பற்றுவதற்காக வந்த மருத்துவர்களைக் குறிவைத்து இரண்டாவது முறையாக தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இசுரேலின் தாக்குதலை ‘திட்டமிட்ட கொலை’ என்றே குறிப்பிடும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பான CPJ (Committee to Protect Journalists) இசுரேலால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையின்படி 2023-25 வரை இஸ்ரேல் படைகளால் 190க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ‘இது முந்தைய மூன்று ஆண்டுகளில் 2020-22இல் உலகளவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களை விட அதிகம்’ என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
தற்போது போர் நடந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் மட்டுமல்ல, 1960களில் பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே இசுரேல் தனக்கெதிரான ஊடகங்களைக் கட்டுப்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். 1967ஆம் ஆண்டு இந்த நோக்கத்திலேயே பாலஸ்தீனிய பத்திரிகைகளை தணிக்கை செய்ய சட்டமியற்றியது இசுரேல். மேலும் இசுரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் அரசியல் கூட்டங்களும் பிரச்சார வெளியீடுகளும் குற்றம் என்று கூறி இராணுவ ஆணை பிறப்பித்தது.
1980களின் காலகட்டத்தில் இசுரேலின் கட்டுப்பாடுகளை எதிர்த்து பாலஸ்தீனியர்கள் தங்களுக்கான ஊடகங்களைத் தொடங்கிய போது, இஸ்ரேலியப் படை பாலஸ்தீன நிருபர்களை சிறையில் அடைத்து, செய்தித்தாள்களை தடை செய்தது.
1990-2000களில், காசாவில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இசுரேலியப் படைகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்திருந்தோரைக்கூட தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி படுகொலை செய்தது இசுரேல். தொடர்ந்து வெளிநாட்டு ஊடகங்கள் காசாவிற்குள் நுழைவதற்கு இசுரேல் கட்டுப்பாடுகள் விதித்தபோது பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் இந்த இனப்படுகொலை செய்திகளை வெளியுலகிற்கு அறிவித்தனர்.
பத்திரிகையாளர்களும் பொதுமக்கள்தான் என்றும், போரின் போது அவர்களை குறிவைக்கக் கூடாது என்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவுப்படுத்தினாலும் இசுரேலின் கொடிய இனவெறிப்படை அடங்கவில்லை. மே 2022இல் ஜெனின் அகதிகள் முகாம் அருகே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே இசுரலால் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்தியவர்களை கூட விட்டுவைக்காமல் தாக்கினர் இசுரேலிய போலீசார்.
தற்போது போர் தீவிரமடைந்திருக்கும் நேரத்தில் இசுரேலின் தாக்குதல்கள் மேலும் கொடியதாக வளர்ந்திருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 10, 2025 அன்று அல்ஜசீரா ஊடகவியலாளர் அல்-ஷெரீஃப் உட்பட ஆறு பத்திரிக்கையாளர்களை அவர்கள் முகாமில் தூங்கிக் கொண்டிருக்கும்போது குண்டுவீசி கொன்றது இசுரேல். (போர் தொடங்கியதிலிருந்து இரவும் பகலும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த ஊடகவியலாளர் அல்-ஷெரீஃப் புலிட்சர் விருது வென்றவர். காசாவிற்கு வந்த உணவுப் பொருட்களை இசுரேல் தடுத்து, அங்கு செயற்கையாக உணவுப் பஞ்சத்தை உருவாக்கியதை தனது செய்தி வெளியீட்டின் மூலம் அம்பலப்படுத்தியவர்)

(படம்: இசுரேலால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் அல்-ஷெரீஃப்)
இப்போது படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களையும் கணக்கில் கொண்டால் ‘அமெரிக்க உள்நாட்டுப் போர், இரண்டு உலகப் போர்கள், கொரியப் போர், வியட்நாம் போர், யூகோஸ்லாவியாவில் நடந்த போர் – இவற்றில் இறந்த பத்திரிக்கையாளர்களை விட அதிகமான பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர்’ எனும் வருத்தமான தரவு வெளியாகி இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் நட்பு பக்கபலமாக இருப்பதால் இத்தனை பத்திரிகையாளர்களை கொல்லும் அளவிற்கு இசுரேலின் போர்வெறி உச்சமடைந்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களையும் ஆதரவையும் பெரும் இசுரேல் பல மேற்கத்திய ஊடக அமைப்புகளையும் கட்டுப்படுத்துவதால், பாலஸ்தீனம் குறித்த உண்மைச்செய்திகளை பல மேற்கத்திய ஊடகவியலாளர்கள் மென்மையான தொனியிலேயே எழுதி வந்தனர். ஆனால் பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் எந்த சமரசமும் இல்லாமல் இனப்படுகொலை செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்பியதால்தான் இசுரேலின் போர்க்குற்றங்கள் வெளிஉலகிற்குத் தெரிய ஆரம்பித்தன. சமூக வலைதளங்கள் பாலஸ்தீனிய செய்திகளை ‘அல்காரிதம்’ மூலம் மட்டுப்படுத்தியபோதும் இந்த பத்திரிகையாளர்கள் தங்கள் செய்திகளை பரப்புவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளை உருவாக்கினர். இசுரேலின் வான்வழித் தாக்குதல்களில் தங்கள் குடும்பத்தினரை இழந்த பிறகும் பல பத்திரிகையாளர்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

(படம்: இசுரேலால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மரியம் அபு டாக்கா)
காசாவில் நடந்த போருக்காக இசுரேல் சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கை எதிர்கொண்டு வருகிறது. தற்போது இசுரேலால் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதையும் இனப்படுகொலை வழக்கில் சேர்க்குமாறு ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. குறிப்பாக பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக இசுரேலிய இராணுவம் செய்த போர்க்குற்றங்களை எல்லையற்ற பத்திரிக்கையாளார்கள் (Reporters Without Borders-RSF) அமைப்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) புகார்களாகப் பதிவு செய்துள்ளது. மேலும் பாலஸ்தீன பத்திரிகையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் RSF கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த கோரிக்கையை சர்வதேச அமைப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது இனப்படுகொலையை உலகிற்கு உரைத்த ஊடகவியலாளர்கள் பாதுகாப்பிற்காக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் இசுரேல் செய்யும் இனப்படுகொலை நிகழ்வுகள் வெளியுலகிற்கு தெரியாமலே போகும் நிலை ஏற்படும். பொதுமக்கள், குழந்தைகள், மருத்துவர்கள் என அனைவரையும் குறிவைத்து கொலை செய்வதை இசுரேல் இன்னும் தீவிரப்படுத்தக்கூடும்.
ஏற்கனவே காசாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டு 130 குழந்தைகள் உட்பட 360 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் இறந்துள்ளனர். இசுரேல் தாக்குதலில் 40,500 மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்துள்ளதும், அதில் குறைந்தது 21,000 குழந்தைகள் தன் உடல் பாகங்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர் என மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐ.நா குழு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இனப்படுகொலை செய்யும் நாடுகளுக்கு உண்மை செய்திகளை அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்களை அழிப்பதே முதன்மை இலக்காக இருப்பதையும் இந்தப் படுகொலைகள் உணர்த்தியிருக்கின்றன. இதையே நாம் ஈழத்தில் கண்கூடாகவே பார்த்தோம். ‘சேனல் 4’ காட்சிப்படுத்தலைத் தவிர வேறு எந்த ஆதாரங்களும் இல்லாத அளவுக்கு 2009 போரின் பொழுது ஈழத்தில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். தமிழர்களின் பத்திரிக்கை ஆளுமையும், சர்வதேச ராணுவ செய்தியாளருமான தராகி சிவராம், சிங்களப் பத்திரிக்கை ஆளுமையான லசந்தா விக்ரமதுங்க உள்ளிட்ட 12க்கும் மேற்பட்டோர் போர்க்களங்களில் கொல்லப்பட்டனர் என ‘ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு (CPJ)’ அறிக்கை சொல்கிறது. சனநாயகப் பத்திரிக்கையாளர்கள் (JDS) மற்றும் எல்லையற்ற பத்திரிக்கையாளார்கள் (RSF) ஆகிய இரண்டு அமைப்புகளின் அறிக்கை 2004 இல் இருந்து 2009 வரை மட்டுமே 43 பத்திரிக்கையாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதையே சர்வதேச ஆய்வுகளும் உறுதியாக சொல்கின்றன.
இலங்கை இனவெறி அரசு செய்த இனப்படுகொலை குறித்து தமிழ்நாட்டு, இந்திய பார்ப்பனிய ஊடகங்கள் பொய்யான பிரச்சாரத்தை கட்டமைத்தது போல, பாலஸ்தீனத்தின் மீதான இசுரேல் நடத்தும் இனப்படுகொலையின் போதும் செய்கின்றன. இலங்கை சிங்கள இனவெறியை ஆதரித்தது போல சியோனிச இசுரேல் இனவெறியையும் ஆதரிக்கின்றன. இனப்படுகொலை செய்திகளை பொதுவெளிக்கு கொண்டு வருவதற்காக உயிர் பயம் துளியுமற்று நிற்கும் பத்திரிக்கையாளர்களை ‘ஊடக வீரர்கள்’ என வரலாறு பதிவு செய்யும் வேளையில், ஊடகவியலாளர்களைக் கண்டு அஞ்சும் இலங்கையும் இசுரேலும் ‘இனப்படுகொலை நாடுகள்’ என்ற அடையாளத்துடன் ‘கோழை நாடுகள்’ என்ற அடையாளமும் சேர்ந்தே வரலாற்றில் பதிவாகும்.