அமெரிக்கா ஒரு வருடத்தில் ஆப்கானிஸ்தான் மீது 7800 குண்டுகளை வீசியது. இசுரேல் கடந்த 6 நாட்களில் 6000 குண்டுகளை வீசி 2800 பாலஸ்தீனர்களை படுகொலை செய்தது. இதில் 700 பேர் குழந்தைகள். 2009ம் வருடம் சனவரியில் மட்டும் படுகொலையான தமிழர்கள் 8600 பேர் என ஐ.நா. மனித உரிமை அமைப்பு 2009 மார்ச் மாதத்தில் கணக்கிட்டது. காசா தண்ணீர், உணவு, மருந்து இல்லாமல் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற பாதுகாப்பு சாலைகள் குறியிடப்பட்டு அச்சாலைகளின் வழியே மக்கள் வெளியேறும் போது குண்டு வீசி கொல்கிறது. இதே போல பல பாதுகாப்பு வளையங்களை சிங்கள ராணுவம் அறிவித்து மக்களை அங்கே குவிய வைத்து பின்னர் குண்டு வீசி படுகொலை செய்தது. இப்போது நடந்து கொண்டிருப்பது ‘இலங்கை மாடல்’ தாக்குதல் வகை. போராளிகளை அழிப்பதை விடவும் அதிகமாக மக்களை அழிப்பது. அதன் மூலமாக அச்சமூகம் தனது போராட்ட ஆற்றலை அழிப்பது என்பது. ஆனால், இப்போர்ச் சூழல் இசுரேலுக்கு கடுமையான அழிவை கொடுக்கக்கூடிய அனைத்து குறிகளையும் காட்டுகிறது.
2006, 2014ல் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியவற்றுடன் இசுரேல் ராணுவம் நேரடி போரில் ஈடுபட்டது. இரண்டிலும் கடுமையான இழப்புகளை சந்தித்து போரை முடித்தது. இசுரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை, ராக்கட் தாக்குதலை நடத்தி பழக்கப்பட்ட ராணுவம். தரைவழி தாக்குதலை நடத்தும் சமயத்தில் எல்லாம் கடுமையான இழப்புகளையும், குறைந்த வெற்றியையுமே ஈட்டி இருக்கிறது.
காசா நகர் மீது கடுமையான் குண்டுகளை வீசி அதை கான்ங்க்ரீட் குப்பையாக மாற்றி இருக்கிறது. சமவெளியில் நடக்கும் போரை விட நகரத்திற்குள்ளாக நடக்கும் போரை வெற்றி கொள்வது மிக சிரமமானது. தரைவழியே வேகமாக நகர்ந்த ஹிட்லரின் படை லெனின்க்ராட், ஸ்டாலின்க்ராட் நகரச் சண்டைக்குள் சிக்கி சீரழிந்தது. ஸ்டாலின்க்ராட் நகரில் மட்டும் 5 லட்சம் படைகளை நாசி இழந்தது. இதுவே போரின் திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தான் ரசியாவின் அதிபர் புதின் இசுரேலுக்கு எச்சரிக்கையாக …’இசுரேல் ஸ்டாலின்க்ராட் வகையான போருக்குள் நுழைய இருக்கிறது, அது வெற்றிபெறுவது சிரமம்‘.. என்பதை தெரிவித்தார்.
இசுரேல் ராணுவம் கிட்டதட்ட போலீஸ் போல சாமானிய மக்களை தாக்குவது, கண்காணிப்பது, பொதுமக்களை கொலை செய்வது என உள்ளூர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையாள்வதைப் போல பயிற்சி பெற்றது. அதற்கு ஒரு நகரப்போர் முறையோ, தரை வழியான மரபுவழி போரை நடத்திய அனுபவத்தின் போதெல்லாம் ஆட்களை இழந்தது. கடந்த 2014ல் ஹமாசுடனான போரில் அது 60க்கும் அதிகமான போர்வீரர்களை இழந்தது. தற்போதைய ஹமாசின் தாக்குதலில் ஒரே நாளில் 250க்கும் அதிகமான ஆட்களை இழந்தது. தற்போதைய போர் என்பதான நிலையில் ஹமாஸ் அழிவை எதிர்பார்த்து தயாராக நிற்கிறது. கடுமையான குண்டு வளையம், தாக்குதல் அணிகள், ட்ரோன் தாக்குதல் அணிகள் என்பது மட்டுமல்லாமல் இன்னும் வெளியுலகிற்கு தெரியாத தாக்குதல் அணிகளைப் பற்றிய முழுமையான தயாரிப்போ, உளவு தரவுகளோ இல்லாத நிலை இசுரேலுக்கு உள்ளது. மேலும், எவ்வகையான உலக ஆதரவு நிலை நிலவுகிறது, அது எவ்வாறு திசை மாறும் என தெரியாத நிலையில், தனது இலக்கை இசுரேல் அடையும் என உறுதி கூற முடியாத நிலையில் போரின் விளைவுகள் இசுரேலுக்கு சாதகமான அம்சத்தை கொடுக்க இயலாது. மேலும் 2006 அல்லது 2014 ஆண்டுகளில் நிலவிய உலக ஒழுங்கு தற்போது மாறி உள்ளது.
இசுரேலின் அதிபர் ராணுவ வீரர்களை சந்திக்கும் வீடியோவில் கூர்ந்து கவனிக்கும் போது, இசுரேலின் வீரர்கள் முகத்தில் எவ்வித வீரவேசமோ, உற்சாகமோ, ஆர்வமோ தென்படாது என்பதை கவனிப்பவர்கள் உணர இயலும். இசுரேலின் போருக்கு எதிரான மனநிலை இசுரேலியரிடத்தில் நிலவுகிறது. அதிபர் நெதன்யாகு மீதான அவநம்பிக்கையே இசுரேலின் தயக்கத்தின் காரணம். மேலும் சாவை எதிர்கொள்ள போர்வீரர்கள் தயாராக இல்லாத மனநிலை, ஹமாசின் தற்கொலைக்கு தயாரான போர் மனநிலை இசுரேலியர்களின் மன உறுதியை குலைத்திருக்கிறது என ராணுவ ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். இப்படியான பீதியான சூழலில் இசுரேலின் இனவெறியர்கள் மிகக்கடுமையான மூர்க்கமான தாக்குதலை நடத்துவார்கள். இதனாலேயே பாஸ்பரஸ் போன்ற போர்க்குற்றங்களை பகிரங்கமாக செய்கின்றனர். இதுவே இப்போது நாம் கவலை கொள்ளும் சூழலை உருவாக்கி இருக்கிறது.
இப்படியான நிச்சயமற்ற சூழலில், போர் மிகக்கடுமையான தாக்கத்தை காசாவின் மக்கள் மீது உருவாக்கப்போகிறது. ஐ,.நாவின் மனித நேய அமைப்பு காசாவில் 3,500 கர்ப்பினிகள் அடுத்த சில மாதங்களில் குழந்தை பெறும் நிலையில் இருக்கிறார்கள், அப்பெண்களை பாதுகாக்க வேண்டுமென்ற கவலை தெரிவித்திருக்கிறார்கள். இவையனைத்தும் நமக்கு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்துகிறது.
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்