முந்தைய நாள் தன்னுடன் அமர்ந்திருந்த சக மாணவன் அடுத்தநாள் படுகொலையாகி, அவ்விடம் காலியாக இருக்கும்போது ஒரு குழந்தையின் உளவியலும், கல்வியும் என்னவாகும்? தான் கொல்லப்பட்டுவிட்டால் தன்னை அடையாளம் கண்டுபிடிக்க கைகளில் தனது பெயரை எழுதி வைத்திருக்கும் குழந்தையின் மனநிலை எப்படியிருக்கும்? 100 ஆண்டுகளாக தொடரும் போர் சூழலில் வளர்கிற பாலஸ்தீன குழந்தைகள் இப்படி கற்பனைக்கெட்டாத, தீர்க்க முடியாத உளவியல் சிக்கல்களோடுதான் வாழ நேரிடுகிறது. எந்நேரம் வேண்டுமானாலும் தலைகீழாக மாறிவிடுகின்ற வாழ்க்கையை எதிர்நோக்கி வாழ்வதென்பது பாலஸ்தீன குழந்தைகள் மீது 3 மூன்று தலைமுறைகளாக திணிக்கப்பட்ட ஒன்று.
பாலஸ்தீன மக்கள் 1917ல் இருந்தே நேரடியான போர் சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் வளரும் பாலஸ்தீன குழந்தைகளின் நிலை எண்ணிப்பார்க்க முடியாததாகிறது. குறிப்பாக, ‘காசா’ பகுதியைச் சேர்ந்த குழந்தைகள். உலகின் அடர்த்தியான மக்கள் தொகை நிறைந்த காசா மீது இதுவரை 8 முறை போர் தொடுத்திருக்கிறது இஸ்ரேல். ஒவ்வொரு போரிலும் பெருமளவில் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல் தீவிரவாத ஊடுருவல், சோதனைகள், என்கிற பெயரில் பல்வேறுகட்ட தாக்குதல்கள் அங்கே நடத்தப்படுக்கின்றன. குழந்தைகளை ராணுவ விசாரணைக்கு உட்படுத்தும் உலகின் ஒரே நாடு இஸ்ரேல்.
அக்டோபர் 7ல் துவங்கிய பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் 10 நாட்களை கடந்து நடந்துகொண்டிருக்கிறது. இதில் இதுவரை 2800 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களுள் 1000 பேருக்கு குறையாமல் குழந்தைகள்.
அக்டோபர் 17 அன்று இரவு காசாவின் அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். அதில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளும். இஸ்ரேல் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் கொத்துக் குண்டுகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களும் குழந்தைகள்தான். இவை திட்டமிட்டு இனப்படுகொலை நோக்கில் செய்யப்படுகிறது. இந்நிலையில், போர் தொடர்கிற இச்சூழலின் நடுவே இன்னும் சில மாதங்களில் குழந்தைப் பெறும் நிலையில் மட்டும் 3500 கர்ப்பிணிகள் இருக்கிறார்கள் என்கின்ற ஐநா-வின் மனித உரிமைகள் அமைப்பின் (UNHRC) தகவல் பதைபதைக்க வைக்கிறது.
2006ல் இருந்து தரை, வான், மற்றும் கடல்வழி என எல்லா வழியிலும் இஸ்ரேலின் பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கிறது காசா. இதனால் முற்றாக முடக்கப்பட்ட பொருளாதாரம், வறுமை, செயற்கையாக உருவாக்கப்பட்ட உணவு தட்டுப்பாடு ஆகியவற்றால் காசா வாழத்தகுதியற்ற இடமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் பாலஸ்தீன மக்கள் உளவியலாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள்.
காசாவின் ஒரு குழந்தை சராசரியாக 5 வயதை நெருங்கும் முன்பே பெற்றோர், உறவினர், நண்பர்கள் என யாரோ ஒருவர் இஸ்ரேலிய ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதைப் பார்க்க நேரிடுகிறது. ஒவ்வொரு குழந்தையும், பதின்பருவத்துக்கு முன்னர் 3 முறை மனவதை உண்டாக்கும் நிகழ்வுகளை (Traumatic Events) சந்திக்கின்றனர் என்கிறது ஆய்வு (R R Gogineni et al.,). இதில், காசாவின் குழந்தைகளில் இனரீதியான ஒதுக்குதலை சந்திக்கின்றவர்கள் 99% பேர்; குண்டு வெடிப்பில் நேரடி அனுபவமுடையவர்கள் 97 % குழந்தைகள்; போரில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட குழந்தைகள் 85% பேர்; டாங்கி, கனரக ஆயுத வாகனங்கள், ராணுவ விமானம் ஆகியவற்றில் இருந்து எறியப்பட்ட குண்டுகளை கண்ட குழந்தைகள் 84% பேர்.
இவ்வளவு மோசமான போரைத்தான் இஸ்ரேலின் சியோனிச அரசு பாலஸ்தீனத்தின் மீது நடத்திக் கொண்டிருக்கிறது. இக்குழந்தைகள் இனப்படுகொலைக்கான சாட்சிகளாக இருக்கிறார்கள். குழந்தைப் பருவம் முழுவதும் உளவியல் சிக்கலிலேயே உழல்கிறார்கள். அடுத்தடுத்த போரில் உயிர் பிழைத்தாலும் அந்த ரணங்களை வாழ்நாளெல்லாம் சுமக்கிறார்கள்.
கோவமும், விரக்தியும் மிகச்சிறிய வயதிலேயே அவர்களுடைய குணாம்சமாக மாறுகின்றன. மனச்சோர்வு, கவலை, மனச்சிதைவு மற்றும் மனஅழுத்தம் ஆகியன பதின்பருவத்தை அடையும் முன்பாகவே சராசரி காசாவின் குழந்தைகளுக்கு வருகின்றன.
WAFA என்கிற பாலஸ்தீனத்தை சார்ந்த செய்திகள் மற்றும் தரவு முகமை அளிக்கும் தரவுகள் இஸ்ரேலிய அரசின் பயங்கரவாதத்தினை அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. அதன்படி 2000-லிருந்து 2021 வரையிலான 21 ஆண்டுகளில் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களில் குழந்தைகள் மட்டும் 2,199 பேர். ராணுவ தாக்குதலில் காயம்பட்ட குழந்தைகள் 28,060 பேர். மேலும், 2008-லிருந்து 2020-க்குள் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட குழந்தைகள் 4,280 பேர். இதன் உச்சமாக காசாவில் நிலவும் போர் சூழல் ஏற்படுத்துகிற மனவடுநோயால் (PTSD – Post Traumatic Stress Disorder) 41% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இதுவே பாலஸ்தீன குழந்தைகளின் நிலை. மூன்று தலைமுறையாக அங்கு நடந்துக் கொண்டிருக்கும் இனப்படுகொலையில் சிக்குண்டு பரிதவிக்கும் குழந்தைகளின் குரல்கள் மேற்குலக நாடுகளுக்கு கேட்பதில்லை? அவற்றிற்கு தனது பிராந்திய- ஏகாதிபத்திய நலன் முக்கியம். இந்தியா போன்ற மேற்குலகை அண்டியிருக்கிற பிற நாடுகள் கள்ள மவுனம் காக்கின்றன. வல்லாதிக்க நாடுகளின் பயங்கரவாத போர்களின்போது பிற தேசிய இனங்களுக்கும் அதன் குழந்தைகளுக்கும் எதிராக நடத்தப்படுகிற போர் குற்றங்களை உலக நாடுகள் இதே போல கடந்து செல்கின்றன. ஈழத்திலும் இதுவே நடந்தது.
பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதில் மேற்குலக நாடுகள் பங்கேற்பதைப் போலவே தமிழீழ இனப்படுகொலையிலும் பங்கெடுத்தன. குறிப்பாக இஸ்ரேல். இஸ்ரேலின் தொழில்நுட்பங்களும் ராணுவப் பயிற்சியும் தமிழீழ இனப்படுகொலையில் இலங்கைக்கு பெரிதும் பயன்பட்டன. தமிழீழ இனப்படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட “ஸ்ரீலங்கன் மாடல்” (Sri Lankan Model) போர் வழிமுறைகளை பாலஸ்தீன மக்கள்மீது இன்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். போராளிகளை அழிப்பதைக் காட்டிலும் பொதுமக்களை அழிப்பது. அதன்மூலம் போராட்ட ஆற்றலை அழிப்பதுதான் அந்த வழிமுறை. இன்று இஸ்ரேலில் நடப்பது அன்று தமிழீழத்தில் நடந்தது. இலங்கை அரசும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொது மக்கள் கூடும் இடங்களைத் தாக்கி அழித்தது. போரற்ற (?) காலங்களிலும் தமிழீழத்தின் குழந்தைகள் போர் நடக்கும் அபாயத்தை எதிர்நோக்கியும், போருக்கு பின்னர் அது உண்டாக்கிய உளவியல் பிரச்சனைகளுடனேயே வாழ்ந்தனர், வாழ்கின்றனர். போர்க்காலத்தில் அகதிகள் முகாம்களாக மாற்றப்பட்ட பள்ளிகள் இலங்கையின் தாக்குதலுக்கு உடனடி இலக்காகின.
முதல் இண்டிஃபாடா (1987-1993) என்றழைக்கப்பட்ட பாலஸ்தீன எழுச்சிக்குப் பிறகு கிஃபிர் (Kfir Jets) வகை ஜெட் விமானங்களை பயன்படுத்துவதை நிறுத்தியது இஸ்ரேல். பின்னர் அவை ஏற்றுமதி மட்டும் செய்யப்பட்டன. 1996ல் இலங்கை விமானப்படை 6 கிஃபிர் வகை ஜெட் விமானங்களை அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேலிடமிருந்து வாங்கியது. மக்கள் கூடும் பொது இடங்கள் இவ்விமானப்படையின் தாக்குதலுக்கு இலக்காகின. 1999ல் புதுக்குடியிருப்பு எனுமிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளி குழந்தைகள், பெண்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் புதுகுடியிருப்பு சந்தை, 10க்கும் மேற்பட்ட வீடுகள், பொது கட்டிடங்கள் தரைமட்டமாகின.
தொடர்ச்சியாக நடத்தப்பட்ட கிஃபிர் படைத் தாக்குதல் ஏற்படுத்திய அழிவு கொடுமையானது. இதன் காரணத்தால் இலங்கை வான்படை விமானங்கள் அனைத்தையும் கிஃபிர் என்று தமிழீழ மக்கள் கூற ஆரம்பித்தனர். இந்த கிஃபிர் படை, விடுதலை புலிகளின் கீழமைந்த தமிழீழ அரசு உருவாக்கிய ஆதரவற்ற குழந்தைகளுக்கான ‘செஞ்சோலை இல்லத்தின்’ மீது ஆகஸ்டு 14, 2006ல் 16 குண்டுகளை செலுத்தியது. அதில் 53 பெண் குழந்தைகளும் 3 ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் இறுதி இனப்படுகொலையிலும் பெருமளவில் பெண்கள் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது காசா பகுதியில் நடப்பதும் இந்த வகை தாக்குதல்களே.
இஸ்ரேலின் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய இனப்படுகொலை நடவடிக்கைகளை சாமர்த்தியமாக மறைக்கிறது இஸ்ரேலும், மேற்குலகமும். தற்போது பாப்டிஸ்ட் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலும் இதேபோல பொதுமக்களை குறிவைத்தே நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டது குழந்தைகளே ஆகும். இச்செய்தியை முதலில் “மருத்துவமனையின்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நுற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்” என்று எழுதி பின்னர் “காசாவின் மருத்துவமனையில் குண்டுவெடித்ததில் நூற்றுக்கனக்கானோர் இறந்தனர்” என்று மாற்றி எழுதியது தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை. காசாவின் தெற்கு பகுதியில் இருந்து மேற்கு நோக்கி அனைவரையும் காலி செய்ய சொல்லிவிட்டு பொதுமக்கள் செல்லும் பாதையில் வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ஈழத்திலும் பாதுகாக்கப்பட்ட போர் பகுதிகளில் (No Fire Zone) இலங்கை அரசு தாக்குதல் நடத்தியது.
தமிழீழத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் ‘அறிவுஜீவி’களாலும், இந்து பத்திரிக்கை போன்ற ஊடக அடியாட்களாலும் இன்றளவும் பேசப்படுவதில்லை. மாறாக “விடுதலை புலிகள் சிறுவர் போராளிகளை பயன்படுத்தினார்கள்” எனவும் “புலிகள் மக்களை அரணாக பயன்படுத்தினார்கள்” எனவும் பொய் பிரச்சாரங்கள் இன்றளவும் முன்னெடுக்கப்படுகிறது. அதே போலத்தான் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் “ஹமாஸ் தீவிரவதிகள் பதுங்கி இருப்பதால் தாக்குதல் நடத்தப்பட்டது”, “மருத்துவமனையில் இருக்கிற மக்களை ஹமாஸ் அமைப்பினர் அரணாக பயன்படுத்தினார்கள்” என்றும் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சம்பந்தமில்லை என்பதை வலியுருத்துகிற வகையில் “மருத்துவமனையில் நடந்த வெடிப்பில் மக்கள் பலியாகினர்” என்பன போன்ற உண்மைக்கு மாறான செய்திகளை மேற்குலக பத்திரிக்கைகள் திரித்து எழுதியிருக்கின்றன.
அதே போல, பாலஸ்தீன மக்களுக்காக போரிடும் ஹமாஸ் வீரர்கள், “40 இஸ்ரேலிய குழந்தைகளின் தலைகளை கொய்து கொன்றனர்” என்கிற பொய் செய்தியை இஸ்ரேலும் மேற்குலகமும் பரப்பினர். குழந்தைகளுக்கெதிரான வன்முறையை மறைக்க குழந்தைகளை வைத்தே நாடகம் நடத்தினர். பின்னர் அம்பலப்பட்டுப் போயினர். போரற்ற காலத்திலும் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன குழந்தைகளை அச்சுறுத்துகிறது. அவர்களை ஆயுதம் கொண்டு தாக்குவது, நெருங்கிய தூரத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்வது, கழுத்தை மிதித்து நெரிப்பது போன்ற என்னற்ற செயல்களை செய்து வருகிறது.
ஈழம், பாலஸ்தீனம் மட்டுமல்ல, இன்ன பிற தேசிய இனங்களின் மீதான இனப்படுகொலையின் போதும் குழந்தைகளே முதல் இலக்காகின்றனர். ஏனெனில் அவர்களே ஒரு தேசத்தின் எதிர்காலம். அவர்களே எதிர்கால போராட்ட ஆற்றல். அதனால்தான் வல்லாதிக்க நாடுகள் குழந்தைகள் மீது தனது தாக்குதலை பெருமளவு செய்கிறார்கள். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மீது நடத்தப்படுகிற இப்படியான தாக்குதல்களை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் இந்த நூற்றாண்டின் மிக பெரிய துயரமாக இருக்க முடியும். தேசிய இனங்கள் கோருகின்ற அரசியல் தீர்வே குழந்தைகளின் உளவியல் சிக்கல்கள் உட்பட அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு!