அம்பலமான அண்ணாமலையின் பொய்கள்

வடநாட்டில் பாஜக கட்சி கையிலெடுத்த மதவாத அரசியல் ஏற்படுத்திய அழிவு, 1992 பாபர் மசூதி இடிப்பு, 2002 குஜராத் இனப்படுகொலை, 2023 மணிப்பூர் இனப்படுகொலை வரை தொடர்கிறது, இப்படியான மதக் கலவரங்கள் மூலம் தனக்கான அரசியலை விதைத்து அதில் ஆதாயம் அடைவது வாடிக்கை. அப்படி தமிழ்நாட்டில் திராவிட-தமிழ்த்தேசிய அரசியலை ஒழித்துக்கட்டி தனது மதவாத அரசியலை திணித்துவிட நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது ஆர்எஸ்எஸ்-பாஜக. இதற்காகவே கர்நாடகா காவல்துறை பணியிலிருந்து தமிழ்நாட்டு அரசியலுக்குள் இறக்குமதி செய்யப்பட்டவர் தான் தற்போதைய தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை.

பாஜக பரப்பும் பொய்ச்செய்திகள் தான் அதன் அரசியலுக்கு மூலதானமாக உள்ளது. இந்த பொய்ச்செய்திகளை பரப்புவாதற்காகவே பயிற்சி எடுத்துவந்துள்ளவராக தெரிகிறார் அண்ணாமலை. தற்போது தமிழ்நாட்டிலும் பொய்களை கட்டமைத்து சாதி, மத ரீதியான மோதல் போக்கை மக்களிடையே தூண்டுகிறார் அண்ணாமலை. கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஏதாவது நிகழ்ச்சிகளிலோ அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்பிலோ தினமும் ஏதாவது பொய்யை பரப்புவதையே வாடிக்கையாக்கி விட்டார். அதன் பின்னர் சமூக வலைதளங்களில் மாட்டிக் கொள்கிறார், அவர் கூறிய தவறான தகவல் குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினாலோ அல்லது அவருக்கு எதிரான கருத்துகளைக் கேட்டாலோ பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவரையும் மிரட்டுகிறார். ‘குரங்கு போல ஏன் தாவுறீங்க?’ என பத்திரிகையாளரை அவமானப்படுத்துகிறார். சமூக வலைதளம், யூடியூப் ஊடகமாக இருந்தால் ஏளனமாக பேசுகிறார். இவ்வாறு தமிழ்நாட்டிற்கு தொடர்பே இல்லாத வடநாட்டு கலாச்சாரமான அநாகரிகமான அரசியலை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

திராவிட கட்சிகளிலிருந்து வந்து ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி மற்றும் அம்மையார் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாத சூழலில், கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாஜக கால் பதிக்க திட்டமிடுகிறது. அம்மையார் ஜெயலலிதா இறந்ததும், அதிமுக கட்சியில் நடந்த அதிமுக உரசலை பாஜகவுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அக்கட்சியின் தலைவர்களை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்கள் மூலம் அச்சுறுத்தி, ஏழு ஆண்டுகளாக அதிமுக-வின் முதுகில் உட்கார்ந்துக் கொண்டு பயணிக்கிறார். தற்போது அண்ணாமலை அதிமுகவையும் கழட்டி விட்டு, திமுகவிற்கு பாஜக கட்சிகள் மட்டுமே போட்டி என்ற பிம்பத்தைக் கட்டி வருகிறார். இவர் கட்சி வளர்ப்பதற்காக சாதி-மத மோதல், பொது அமைதியை கெடுத்தல் மற்றும் பல அவதூறுகளை அள்ளி வீசுவது தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மைக்கு எதிரான செயலில் ஈடுபடுவதும் மிகப் பெரியக் கண்டனத்திற்கு உரியது.

பாஜக கட்சிக்கு சுந்திரப் போராட்டமோ, ஆட்சி நலனோ, மக்களின் நலனோ என எந்தவித பாரம்பரியமே இல்லை. வெறும் மத வெறுப்புணர்வு அரசியலை நடத்துகிறது. அதனால் அன்று முதல் இன்றுவரை காங்கிரஸ் கட்சியிடமோ அல்லது மாநில எதிர்க் கட்சிகளிடமோ ஆரோக்கியமான அரசியலை எடுத்து வைத்ததில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை பதவியேற்றதிலிருந்தே பல உளறல்களும், பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். அவற்றில் அறநிலையத்துறை, அறிஞர் அண்ணா, திராவிடம், சனாதனம், மதமாற்றம் போன்ற வரலாற்று திரிபுகளும், நாள்தோறும் அவதூறு செய்திகளும் போகிறப்போக்கில் பேசிச் செல்கிறார்.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் தனியார் கோயில்களை தவிர்த்து பொது கோயில்கள் அனைத்தையும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து, கோயில் சொத்துக்களை மீட்டது. அதனை வெளிப்படையாக அறிவித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இதுவரை பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக இருந்த நிலையில், இந்தியாவில் முதன் முதலாக அனைத்து சாதியினரையும், பெண்களையும் கூட அர்ச்சர்களாக திமுக அரசு நியமனம் செய்தது. இதில் மிகப் பெரிய புகைச்சலுக்கு ஆளாகி இந்துக்களுக்கான கட்சி என மார்தட்டிக் கொள்ளும் பாஜக அரசு அறநிலையத்துறையை எதிர்க்கிறது. இதனை எதிர்த்து தான் “அண்ணாமலை தொடர்ச்சியாக இந்து அறநிலையத்துறை வரம்பு மீறுகிறது, அதை ஒழிக்க வேண்டும், இது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த மதப் பழக்கவழக்கங்களை அழிக்கும் செயல்” என ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பனர்களின் குரலாக பேசி வருகிறார்.

இதெல்லாம் திராவிடர் கழக கொள்கைகளிருந்து வந்தவை, திராவிடம்தான் பார்ப்பனரல்லாத சமூக மக்களுக்கு கல்வி, அரசு வேலை, பெண்ணுரிமை என தந்தை பெரியார் வழியில் காமராசர் உட்பட, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற முதல்வர்கள் மூலம் தமிழ்நாடு சமூகநீதியை நிலைநாட்ட காரணமானது. ஆரியர்களாக இருக்கும் பார்ப்பனர் நலனுக்காக திகழும் கட்சியாக பாஜகவினருக்கு திராவிடம் என்ற சொல் கசக்கும். ஒரு சமூகம் மட்டுமே அனுபவித்த சுகத்தை அனைத்து சமூக மக்களுக்கு அளித்தது திராவிடம். எனவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக போன்ற இந்துத்துவ கும்பல்கள் திராவிடத்தை ஏற்பதில்லை. ஒரு பேட்டியில் அண்ணாமலை “படிப்பறிவு குறைவான பெற்றோருக்கு மகனாக பிறந்து தலைவர் பதவி வந்துள்ளேன்” என்றார். இதில் அவர் பெற்றோரோ, தாத்தாவோ அல்லது அதற்கு முன்புள்ள மூதாதையர்கள் அப்போதுள்ள காலக்கட்டத்தில் படிப்பறிவு தடுத்தது எது? யார்? என்ற கேள்வி எழத்தானே செய்யும். அது மனுதர்ம வழியில் வந்த சனாதனம் தானே தடுத்தது.

அந்த சனாதனத்தை தூக்கி வைத்து பேசுகிறார். “திருப்புன்கூர் என்ற ஊருக்கு சென்றால் இன்றும் கூட அங்கே உள்ள கோயிலில் நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். இதை எல்லோரும் பார்க்க முடியும். அங்கே கீழ் சாதியை சேர்ந்த ஒருவருக்கு சிவனை பார்க்க அனுமதி இல்லை என்று சொன்னதால், நந்தியை சற்று விலகச்சொல்லி சிவன் காட்சியளித்த தர்மம் நம்முடைய சனாதனம்”. இதை பல கோவில்களில் நாம் பார்க்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். கீழ் சாதியை சேர்ந்த ஒருவர் என அவர் குறிப்பிடுவதன் மூலம் கீழ்சாதி என மட்டப்படுத்தியது எது? என்ற கேள்வி எழுகிறது. அப்படியென்றால் சனாதனத்தில் பிறப்பின் அடிப்படையில் 4 வர்ணம் கொண்ட மேல்-கீழ் என சாதி பிரிவுகள் இருக்கிறது, அது கோயிலில் நுழைய விடாமல் தடுக்கிறது என்பது உண்மை தானே! இது பார்ப்பனரல்லாத சமூக மக்களுக்கு கல்வி, அரசு வேலை, பெண்ணுரிமை மறுத்தது என்ற உண்மையும் புலப்படுகிறது. அதற்கு நம்மிடையே எழும் கேள்வி நந்தியை சற்று விலகச் சொல்லி சிவன் காட்சியளித்த தர்மத்தை விட, அந்த சாதியை சேர்ந்தவரை கோவிலுக்குள் போகச் சொல்வது தானே சரியாக இருக்கும்? அது தானே மானுடம்.

அதனைப் போல, மதுரையில் 1956ல் தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி. ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் கூறினார், இந்த தவறான தகவலை ‘தி இந்து’ இதழில் படித்ததாக சொன்னதும், இந்து பத்திரிக்கையும் அப்படி ஒரு செய்தி வெளியிடவில்லை என மறுப்பும் தெரிவித்துள்ளது. ஆனலும் அது குறித்து வருத்தமோ, திருத்தமோ அண்ணாமலை தெரிவிக்கவில்லை. எனில், இது இந்த சமூகத்திற்கும் பிளவு ஏற்படுத்தும் முயற்சி தான் அந்த பொய்யின் நோக்கமாக இருக்க முடியும்.

கடந்தாண்டு துவக்கத்தில், மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவி அங்குள்ள விடுதிக் காப்பாளர்கள் ஒருவர் அதிக வேலை பளு கொடுத்தக் காரணத்தால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இச்சூழலில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதால் அப்பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக ஒரு ஆர்எஸ்எஸ் நபர் கூறும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதனால் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் டெல்லி பாஜக தலைமை விசாரணைக்குழு ஒன்றை அமைத்து அந்த அறிக்கையை பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம் சமர்ப்பிப்பார்கள் என்று கூறியது. இது போல ஏதாவது செய்து எப்படியாவது தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்த அண்ணாமலை தலைமையிலான பாஜக எதிர்ப்பார்த்து வருகிறது. இந்த சுறுசுறுப்பை மணிப்பூரில் வன்முறைகள், கொலைகள் நடத்திய போது இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்த சென்ற போது போராட்டம் ஆர்ப்பாட்டம் என எதுவும் செய்யவில்லை, வாயை மூடி மவுனம் காப்பது ஏன்? அங்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுவது பாஜகவே.

இது போல வாரிசு அரசியல் மற்றும் ஊழல் குறித்தும் இதர கட்சிகளை பற்றி அண்ணாமலை ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, தெலுங்கானா மாநில முதல்வரின் மகள் கவிதா அவர்கள் வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். பதிலுக்கு கவிதா அவர்கள், “உங்கள் கட்சியின் பெரிய தலைவர் அமித்சா மகன் ஜெய்சா ஐ.சி.சி-யில் தலைவர் பதவியில் இல்லையா? ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி என்.டி.ராமாராவ் மகள் தானே. அது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? ஜோதிராதித்ய சிந்தியாவை பாஜக எப்படி மத்திய அமைச்சராக்கியது? தமிழகத்தில் திமுகவுடனும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனும் கூட்டணி வைத்தபோது அவை குடும்ப கட்சிகள் என்பது உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு தேவைப்பட்டால் வாரிசு அரசியலை விமர்சிப்பீங்க? உங்களுக்கு வசதிப்பட்டால் வாரிசு அரசியலை ஏற்று கொள்வீர்களா?” என அதற்கு தக்க பதிலடி கொடுத்தார்.

மேலும். ஊழல்கள் குறித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தீர்களே, ஆனால் 10 ஆண்டுகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லையே ஏன்? மதுரையில் எய்ம்ஸ் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தெலங்கானாவுக்கு எந்த ஒரு சிறப்பு திட்டமும் வரவில்லை என நச்சு நச்சுன்னு பதிலடி கொடுத்தார் கவிதா அவர்கள். அதுமட்டுமல்ல, சி.ஏ.ஜி அறிக்கையில் 7.50 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என 2023 செப்டம்பர் மாதம் வெளியானது. தற்போது அந்த ஊழலை பற்றி வாய் திறக்கவில்லை, அதற்குள் சி.ஏ.ஜி அறிக்கை மூலம் அம்பலப்படுத்திய அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளனர். இதுவே பாஜக ஊழல் ஒழிப்பின் நடவடிக்கை. கருப்புப் பணத்தை மீட்போம் எனச் சொல்லி 500,1000,2000 நோட்டை வாபஸ் வாங்கியது தான் மிச்சம்.

பள்ளிக்கூட பாடப்புத்தகங்களின் வரும் வரலாறு கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. இவர் எப்படி ஐ,பி,எஸ் படித்தார் என சந்தேகம் எழுகிறது? சங்க காலத்தைச் சேர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களை ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பதும், சத்ரபதி சிவாஜி வாழ்ந்த காலம் 1630-1680. ஆனால் 1967ல் காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார் என்பதும், காமராசரின் ஆட்சிக்காலம் (1954-1963) 9 ஆண்டுகள் தான் முதல்வராக இருந்தார், ஆனால் 1963 முதல் 1975 வரை கிட்டதட்ட13 ஆண்டுகள் தமிழக முதல்வராக ஆட்சி புரிந்தார் என்பதும் போன்ற வரலாற்று தகவலை முற்றிலும் தவறாக குற்றவுணர்ச்சி இல்லாமல் பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அதுவும் தமிழக மக்கள், ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைவரும் எதிர்க்கும் திட்டங்களான நீட் தேர்வு, புதியகல்விக் கொள்கை, இந்தி திணிப்பு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக கட்சி திணிக்கிறது, அதை தமிழக மக்களிடையே அண்ணாமலை நியாயப்படுத்தி பேசி வருகிறார். தினமும் எதாவது அவதூறுகளை அள்ளி வீசுகிறார். அது முதுநிலை மருத்துவ இடங்கள் பற்றியும் தவறான தகவலை வெளியிடுவதும், ரஃபேல் கடிகாரம், 20,000 புத்தகம் படித்துள்ளேன் என்கிறார். அப்படியென்றால் தினமும் 55 புத்தகங்களாவது படிக்க வேண்டும். உயிரோடு உள்ளவரை (ஆற்காடு வீராசாமி) இறந்துவிட்டார் என வாய் கூசாமல் பொய்யை அடித்து பேசி வருகிறார்.

தமிழ்நாட்டு மக்கள் வட இந்தியர்களை தாக்குகிறார்கள் என பாஜக ஐ.டி. கும்பல்கள் வதந்தியை இந்தியா முழுவதும் பரப்பிய போது, இங்குள்ள பாஜகவினரும் பரப்பினர். அதற்கு அண்ணாமலையும் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டனர்.

அண்ணாமலையின் இந்த தகிடுதத்தங்கள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை என்பது தான் இதில் நிதர்சனம். மாறாக அண்ணாமலை அம்பலப்பட்டு போயியுள்ளார். தமிழ்நாட்டை சங்கீகள் நிறைந்த வடநாட்டை போல் நினைத்துவிட்டார் போல. தமிழர்கள் தெய்வபக்தி நிறைந்தவர்கள் என்றாலும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகள் வேறுபாட்டை அறிந்தவர்கள். இது படித்தவர்கள், பகுத்தறிவாளர்கள் நிறைந்த பெரியார் மண். இங்கு கல்லூரி மாணவர்களுக்கு இருக்கும் அரசியல் அறிவு கூட அண்ணாமலைக்கு இல்லை என்பது அவரது உளறல்கள் மூலமே தெளிவாகிறது. அவர் பேச்சுக்கு சங்கீகள் மயங்கலாம்; தமிழர்கள் மயங்கமாட்டார்கள்.

எப்போதும் பாஜக, மக்களுக்கு எதிரான அவதூறுகளையும், செயல் திட்டங்களையும் செய்து வருகிறது. இதனால் மக்களிடையே சாதி, மத, இன மோதல்களை உண்டாக்கிவிட்டு, மக்களுக்கான அரிசி, பருப்பு, சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை ஏற்றி விட்டு, வேலைவாய்ப்பில் திண்டாட விட்டு, வரியெல்லாம் ஏற்றிவிட்டு, பெரும் முதலாளிக்கான கட்சியாகவும், உயர்சாதி நலனுக்காகவும் மட்டுமே பாஜகவின் கட்சி செயல்படுகிறது. ஒரு வடநாட்டு கட்சி வடநாட்டு மக்களின் நலனுக்காக சிந்திக்குமா? இல்லை தமிழர்களுக்காக சிந்திக்குமா? உண்மையை சொன்னால் பாஜக தமிழ்நாட்டுக்கான கட்சியும் அல்ல, இந்துக்களுக்கான கட்சியும் அல்ல, ஒட்டுமொத்தத்தில் மானுடத்துக்கே எதிரானது பாஜக கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »