பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தாக்குதலை இஸ்ரேல் துவங்கி சரியாக ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி, இனவாத இஸ்ரேல் அரசு 10328 பாலஸ்தீன அப்பாவி மக்களை கொன்றுள்ளது. இதில் குழந்தைகள் மட்டும் 4237; பெண்கள் 2719 பேர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவத்தின் இலக்கு ஹமாஸ் போராளிகள் மீது அல்ல; குழந்தைகள் தான் என்பதை இந்த ஒரு மாத நிகழ்வுகள் நமக்கு தெளிவாக காட்டுகின்றன. இது தவிர காசாவில் 25,965 பேர் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மருத்துவமனைகள் மீது குண்டுவீசி காசாவின் மருத்துவக் கட்டமைப்பை முழுமையாக சிதைத்துள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம், மருந்து உள்ளிட்ட உதவிப்பொருட்கள் காசாவுக்குள் வருவதையும் தடுத்துள்ளது. இவை அனைத்தும் ஐநா மனித உரிமைகள் உடன்படிக்கையின் படி போர்க்குற்றம் ஆகும். ஆனால், இதனை இஸ்ரேல் அறிவித்துவிட்டே செய்யும் அளவிற்கு தனது இனப்படுகொலை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த கோர முகத்தை வெளி உலகிற்கு காட்டும் ஊடகப் பணியினை தங்கள் உயிரை பணயம் வைத்து செய்து வருகின்றனர் ஊடகவியலாளர்கள். இதனை தடுக்கும் பொருட்டு, ஊடகவியலாளர்கள் பணிபுரியும் இடம், தங்கியுள்ள இடம் என சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் குண்டுவீசி தகர்க்கும் வேலையை இஸ்ரேல் செய்து வருகிறது. காசாவை முற்றுகையிட்டு குண்டு வீசத் தொடங்கிய அக்டோபர் 7 முதல் தற்போது வரை, இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் குறைந்தது 37 ஊடகவியலாளர்களை கொன்றுள்ளது இஸ்ரேல் அரசு. மேலும், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்; 3 பேர் காணாமல் போயுள்ளனர்; 9 பேரை இஸ்ரேல் கைது செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளர்களின் குடும்பத்தினரை கொலை செய்தும், தாக்குதல் நடத்தியும் அச்சுறுத்தி வருகிறது இஸ்ரேல்.
கடந்த 25 அக்டோபர் அன்று அல்-ஜசீரா ஊடகத்தின் காசா தலைமை பத்திரிக்கையாளர் வேல் அல் தஹ்து (Wael al-Dahdouh)-இன் குடும்பத்தினர் அனைவரையும் இஸ்ரேல் விமானத் தாக்குதல் மூலம் கொன்றுள்ளது. நுசிரத் அகதிகள் முகாமில் இருந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்த அவரின் மனைவி, மகன், மகள் மற்றும் பேரன் என அனைவரையும் திட்டமிட்ட விமான தாக்குதல் மூலம் கொன்றுள்ளது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம். இது எதேச்சையாக நடந்தது அல்ல; திட்டமிட்ட படுகொலை. இதனை இஸ்ரேல் ஊடகவியலாளர் ஒருவரே ஒப்புக் கொண்டுள்ளார். ஜ்வீ யெஹெஸ்கெலி (Zvi Yehezkeli) என்ற இஸ்ரேல் ஊடகவியலாளர், “அல்ஜசீரா பத்திரிகையாளரின் குடும்பத்தைக் குறிவைத்து தெரிந்தே தான் இஸ்ரேல் குண்டு வீசியது” என ஹீப்ரு தொலைக்காட்சியில் ஒப்புதல் அளித்துள்ளார். காசாவின் செய்திகளை உலகுக்கு சொன்னதைக் தவிர வேறு எந்த தவறையும் அவர் செய்துவிடவில்லை. அவரின் குடும்பத்தைத் தேடித்தேடி அழித்திருக்கிறது, ஜியோனிச இனவெறி இஸ்ரேல் அரசு. ஊடகங்கள் மூலம் உண்மை உலகுக்கு தெரிந்துவிடக் கூடாது என்ற பதைபதைப்பில் தான் இஸ்ரேல் இத்தகைய கொடூரத்தைச் செய்துள்ளது. பாலஸ்தீன பிரச்சனை குறித்த அல்-ஜசீரா செய்திகளைக் குறைக்க சொல்லி அமெரிக்க அரசு செயலாளர் அண்டோனி பிளிங்க்கின் கத்தார் அரசைக் கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியான அடுத்த நாள் இந்த படுகொலைத் தாக்குதலை இஸ்ரேல் நிகழ்த்தியுள்ளது.
இதுபோக அக்டோபர் 7-இல் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவத்தின் குண்டு வீச்சில் இதுவரை 88 ஐநா பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் 27 அன்று ஒரு நாளில் மட்டும் 14 ஐநா பணியாளர்கள் கொல்லப்பட்டதாக ஐநா அகதிகள் நல்வாழ்வு மையம் (UNRWA) கூறியுள்ளது. மேலும், அதனுடைய 47 கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. அதேபோல், குறைந்தது 150 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியிடங்கள் இஸ்ரேல் தாக்குதலில் சிதிலமடைந்துள்ளன என்றும் ஐநா தெரிவிக்கிறது. இதற்கிடையே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் ரஷ்யா கொண்டு வந்த போர் நிறுத்தத் தீர்மானத்தை இரண்டாவது முறையாக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவிட்டு, இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலை செய்வதற்கு உதவிக் கொண்டிருக்கிறது.
கடந்த அக்டோபர் 13 அன்று இஸ்ரேல்-லெபனான் எல்லையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் தாக்குதலில் இஸாம் அப்துல்லா என்ற ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை நிருபர் கொல்லப்பட்டார். அவர் உட்பட அந்த தாக்குதலில் காயமடைந்த ஆறு நிருபர்களும் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாக எல்லைகள் கடந்த நிருபர்கள் (Reporters Without Borders) அமைப்பு பகுப்பாய்வு செய்து கண்டுபிடித்துள்ளது.
இந்த ஏழு பத்திரிகையாளர்களும் சம்பவத்தன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹிஸ்புல்லாஹ்-இஸ்ரேல் இடையேயான சண்டையைப் பற்றி செய்தி சேகரித்து வந்தனர். அவர்கள் மறைந்து நிற்கவில்லை; தெளிவாக தெரியும் விதமாக மலை உச்சியில் நின்றனர். அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர்; “ஊடகம்” எனப் பொருள்படும் “Press” என்று குறிக்கப்பட்ட குண்டு துளைக்காத கோட் அணிந்திருந்தனர். அவர்களின் வாகனத்தின் மேற்புறத்தில் “Press” என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. இருந்தும் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி வானிலிருந்து துல்லியமாக 30 வினாடிகள் இடைவெளியில் இரண்டு முறை சுடப்பட்டுள்ளது. முதல் சூட்டில் இஸாம் அப்துல்லா குண்டுபாய்ந்து இறந்திருக்கிறார். இரண்டாவதாக சுட்டதில் அல்-ஜசீரா வாகனம் தாக்குதலுக்குள்ளாகி, பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் இஸ்ரேல் ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறந்ததாக அங்கிருந்து நிருபர் கூறியுள்ளார். இதன் மூலம் குண்டு போட்டு தாக்குவதற்கு முன்னர் அப்பகுதியிலிருந்த செய்தியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதே போன்ற தாக்குதல் அக்டோபர் 9 அன்று தெற்கு லெபனானின் கிராமம் ஒன்றிலும் நடந்துள்ளதாகவும், விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் எல்லைகள் கடந்த நிருபர்கள் அமைப்பு கூறியுள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் பத்திரிக்கையாளர்களைக் கொல்வது இது முதல் முறை அல்ல. சென்ற 2022 மே மாதம் ஷிரீன் அபு அக்லே (Shireen Abu Akleh) என்ற பாலஸ்தீன அல்-ஜசீரா பத்திரிக்கையாளரைக் கொன்றது. அவர் ஊடகவியலாளருக்கான அடையாளங்களை தெளிவாக அணிந்திருந்த போதிலும் அவரை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் கொன்றது. இதனை பாலஸ்தீன பிரச்சனைக்காக அமைக்கப்பட்ட ஐநா குழு கடுமையாக கண்டித்தது. முதலில் இதனை மறுத்த இஸ்ரேல் அதிகாரிகள், பின்னர் வருத்தம் தெரிவிப்பதாக கூறினர். ஆனால் அந்த கொலைக்கு காரணமான யாரையும் இஸ்ரேல் விசாரிக்கவில்லை. தற்போது காசாவில் உள்ள அல்-ஜசீராவின் மற்றொரு செய்தியாளர் யூம்னா எல்சாயெட் (Youmna Elsayed) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இஸ்ரேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அல்-ஜசீரா கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7-ல் இனப்படுகொலையின் புதிய அவதாரத்தை எடுத்த இஸ்ரேலின் இலக்கு அடுக்குமாடி மக்கள் குடியிருப்புகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, மசூதி, கிறித்தவ தேவாலயங்கள், அகதிகள் முகாம் கள் இவைகளோடு தற்போது ஊடகங்களும் அடங்குகிறது. குழந்தைகளை எதிரியாக பாவித்து குறிவைத்துக் கொல்லும் இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன மக்களுக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை; மொத்த உலகத்திற்கே அச்சுறுத்தல் தான். ஐநா சட்டங்களை, போர் நெறிமுறைகளை மீறி நெஞ்சுரம் மிகுந்த ஊடகவியலாளர்களை கொல்லும் இப்படிப்பட்ட பயங்கரவாத இஸ்ரேல் அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் ஒவ்வொன்றின் மீதும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பாலஸ்தீன குழந்தைகளின் இரத்தம் படிந்துள்ளது.
உயிரை பணயம் வைத்து ஊடகப் பணியை மேற்கொள்வோர் மத்தியில், தமிழ் ஊடகங்களின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக உள்ளது. தமிழ்ச் சமூகம் ஏற்கனவே ஒரு இனப்படுகொலையை நம் சமகாலத்தில் எதிர்கொண்டிருக்கிறது. அதன் வலி 14 ஆண்டுகளுக்குப் பின்னரும் நம்மை வாட்டி வதைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்களோ தற்போது நடக்கும் பாலஸ்தீன இனப்படுகொலையைப் பற்றி மேம்போக்கான பார்வையோடு தான் செய்திகள் வெளியிடுகின்றன. எந்த ஒரு தொலைக்காட்சியிலும் கடந்த 3 வாரங்களில் பெரிதாக விவாதங்கள் நடத்தப்படவில்லை. பாதிக்கப்படும் மக்கள் சார்பாக அல்லாமல், குழந்தைகளைக் குண்டுவீசி கொலை செய்யும் இஸ்ரேல் இனவாத அரசுக்கு சாதகமாக செய்திகள் வெளியிடுகின்றன. தந்தி தொலைக்காட்சி ஒருபடி மேலே சென்று, யூத இனவெறி செய்திகளை நேரடியாக இசுரேலுக்கே சென்று ஒளிபரப்புகிறது. நமல் ராஜபக்சே, மகிந்தராஜபக்சே என்று தமிழர்களுக்கு எதிரான இனவெறியர்களோடு கொஞ்சிக்குலாவிய தந்தி ஊடகம் ராஜபக்சேவுக்கே அண்ணனாகிய ‘ஜியோனிஸ்டு’ நேதன்யாகுவிற்காக பிரச்சாரம் செய்கிறது.
வட இந்திய ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். மோடி இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததற்காக இனவெறி சியோனிச அரசுக்கு ஆதரவாக கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றன. மணிப்பூர் சென்று மாதக்கணக்கில் நடைபெறும் கலவரம் தொடர்பாக உண்மையை உலகுக்கு சொல்லக் கடமைப்பட்ட இந்திய ஊடகங்கள், அதனை செய்யாமல் இஸ்ரேலுக்கு முண்டியடித்துக் கொண்டு சென்று இனவெறிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றன. இதைத் தான் தமிழ்நாட்டு ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் ஈழ இனப்படுகொலையின் போதும் செய்தன.
லசந்தா விக்ரமசிங்க போன்ற சிங்கள பத்திரிக்கையாளர்களையே கொலை செய்த இனவெறி இலங்கை அரசுக்கு ஆதரவாக ஹிந்து நாளிதழ் முன்னணியில் நின்றது. இனப்படுகொலைக்கு துணை நின்றதற்காக ‘ஹிந்து’ ராம், ராஜபக்சவின் இரத்தம் தோய்ந்த கைகளால் இலங்கையின் உயரிய விருதான லங்கா ரத்னா விருதும் பெற்றார். ஒரு இனப்படுகொலையை நிகழ்த்த, வெகு மக்களிடம் உண்மையை மறைத்து, அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதனை 2009இல் ஈழ இனப்படுகொலையின் போது திறம்பட செய்த அனுபவம் இந்திய மற்றும் தமிழ்நாட்டு ஊடகங்களுக்கும் அதனைக் கட்டுப்படுத்தும் பார்ப்பனிய கும்பலுக்கும் உண்டு. இன்று அதனையே பாலஸ்தீன இனப்படுகொலையின் போதும் செய்கின்றன. இலங்கையில் அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும்கூட, 2004ஆம் ஆண்டு முதல் 2007 வரை இலங்கை ஆக்கிரமிப்பு ராணுவம் 12 தமிழ் பத்திரிக்கையாளர்களைக் கொன்றது. அதில் தமிழீழத்தின் தன்னிகரற்ற சிந்தனையாளரான தராகி சிவராமும் ஒருவர். இவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை இலங்கை அரசு கைது கூட செய்ததில்லை.
ஊடகங்களைக் கண்டு ஒரு அரசு அஞ்சுமானால் அது மக்கள் விரோத அரசு என்று தான் அர்த்தம். அதன்படி இஸ்ரேலும் இலங்கையும் மக்கள் விரோத இனவெறி அரசுகள் தான் என்பது உண்மை.