தமிழ்நாட்டை மீண்டும் அச்சுறுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டம்

தமிழ்நாட்டின் கனிம வளத்தை கொள்ளையடித்து, விவசாயம் செழித்தோங்கும் பகுதிகளில் தொடர்ந்து ஹைட்ரோகார்பன், நிலக்கரி சுரங்கம் என வேளாண் விரோத / தமிழின விரோத திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது ஒன்றிய அரசு. கடந்த ஏப்ரல் மாதத்தில், மாநில அரசிடம் எந்த கருத்தும் கேட்காமல், காவிரி டெல்டா பகுதியில் மூன்று நிலக்கரி சுரங்கங்களை அமைக்க முன்மொழிந்தது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு தமிழ்நாட்டில் அனைத்து மக்கள் நலன் இயக்கங்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 8 அன்று தமிழ்நாட்டிற்கு வந்த மோடிக்கு எதிராக மே17 இயக்கத்தால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு அலைகளால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அமைக்கப்படவிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் இருந்து விலக்குவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. இது நடந்து ஏழு மாதங்களுக்குளாகவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஒன்றிய நிறுவனமான ஓ.என்.ஜி.சி. விண்ணப்பித்திருக்கிறது. திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி தாலுகா மற்றும் சிவகங்கையின் தேவகோட்டை தாலுகாவில் இந்தக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியுள்ளது.

ஒன்றிய பாஜக அரசு பதிவியேற்றது முதல், மாநிலங்களில் உள்ள கனிம வளங்களை ஒன்றியத்திற்கு மடைமாற்றுவதற்காக சட்டத்திருத்தங்களை செய்து வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச் 2016இல், ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தது ஒன்றிய அரசு.

இதற்கு முன்னர் 18 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த புதிய ஆய்வு உரிமக் கொள்கையை (NELP) ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையாக (HELP) மாற்றியது. HELP திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பரப்பளவில் நிலக்கரி, மீத்தேன், ஷேல் கேஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை ஆராய்ந்து பிரித்தெடுக்க ஒற்றை உரிமம் போதுமானதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ஏலத்தை வெல்லும் ஒப்பந்ததாரர்களுக்கு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் ஹைட்ரோகார்பன்களை பிரித்தெடுப்பதற்கு தனியார் நிறுவனங்கள் ஒரே உரிமத்தைப் பயன்படுத்தும் சூழல் உருவானது.  தற்போது இந்த HELP எனப்படும் புதிய எரிவாயு கொள்கையின் அடிப்படையில்தான்   ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 கிணறுகளைத் தோண்ட அனுமதி கேட்கிறது ஓ.என்.ஜி.சி.

1980இல் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்புகள்  கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) இப்பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வருகிறது. இதுவரை சுமார் 700 கிணறுகள் தோண்டப்பட்ட நிலையில், 200 கிணறுகள் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அன்று முதல் இன்று வரை இந்தியாவின் எரிவாயுத் தேவைகளுக்காக காவிரி டெல்டா பலிகடா ஆக்கப்பட்டு வருகிறது. இந்தக் கிணறுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஒன்றிய அரசோடு சேர்ந்து தனியார் நிறுவனங்களும் எரிவாயு எடுக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. மண் வளம் நிறைந்த நிலத்தில் மீத்தேன், ஷெல், GAIL போன்ற திட்டங்களைக் கொண்டு வரத் துடித்தது ஒன்றிய அரசு.  ஒருபுறம் ‘நெற்களஞ்சியம்’ என்று கூறிவிட்டு மறுபுறம் காவிரிப் படுகையின்  விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை முன்மொழிந்தது. ஆனால் விவசாயிகளோடு சேர்ந்து மக்களும் அரசியல் இயக்கங்களும் முன்னெடுத்த போராட்டங்களைக் கண்டு பின்வாங்கியது ஒன்றியம். குறிப்பாக டெல்டா பகுதியில் ஆவணப் படங்கள் மூலமாகவும், பல்வேறு போராட்டங்கள் மூலமாகவும் ஹைட்ரோகார்பனின் சுற்றுசூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது மே17 இயக்கம்.

கடந்த 2014இல், காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பதன் மூலம் ஏற்படும் சிக்கல்கள் குறித்து   ‘பாலைவனமாக்கும் காவிரி டெல்டா: மீத்தேன்’ என்ற ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது மே17 இயக்கம். மேலும் ‘அழிவின் அறிவியல்: காவிரி டெல்டாவில் மீத்தேன்’ என்ற நிமிர் பதிப்பகம் மூலம் வெளியிட்டது. பூமியிலிருந்து 6 ஆயிரம் அடிக்கு கீழே துளையிட்டு அங்குள்ள நிலக்கரி படிமத்திலிருந்து மீத்தேன் வாயு எடுக்கப்படும்போது, ஒரு மீத்தேன் கிணற்றிற்கு  மட்டும் 5 கோடியே 66 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதன்மூலம் காவிரிப் படுகை முழுவதுமே பாலைவனமாகும் ஆபத்திருந்ததை பல்வேறு வழிகளில் (ஆவணப்படம், குறுந்தகடுகள், புத்தகங்கள்)  வழியாக  மக்களிடம் கொண்டு சேர்த்தது மே17 இயக்கம்.

மக்களிடையே இதுபோன்ற தொடர்ச்சியான விழிப்புணர்வை மே17 இயக்கம் ஏற்படுத்தியதால், விவசாயிகள் பிரச்சினையாக இருந்த மீத்தேன் திட்டம் மக்கள் பிரச்சினையாக மாறியது. காவிரி டெல்டாவானது பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியது. ஹைட்ரோகார்பன் எடுக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

கடந்த நாற்பது ஆண்டுகளில்,  காவிரி டெல்டாவின் உணவு சார்ந்த வேளாண் பங்களிப்பு  65%லிருந்து 40% ஆக குறைந்ததற்குப் பின்னால் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டினை எதிர்த்து போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தனர்.  2017இல் நடந்த நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆதரவைப் பெற்றன.

இதன் காரணமாகவே காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய எட்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் அனுமதி கிடைப்பது கடினம் என்பதால் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளது ஒன்றிய நிறுவனமான  ஓ.என்.ஜி.சி. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்திலும் வேளாண்மை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி தெரிந்தும்  ஓ.என்.ஜி.சி. தற்போது விண்ணப்பித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் கனிம வளங்களில் பங்கு கேட்கும் ஒன்றிய அரசு, நிலத்தடி நீரையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும் திட்டங்களை மட்டுமே தமிழர்களுக்கென ஒதுக்கி வருகிறது. நம் நிலமும் அதிலுள்ள வளங்களும் தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது. ஒவ்வொரு முறையும் நமது வளங்களை விட்டுக்கொடுக்கும்போதும் நம் தமிழினத்தையே விட்டுக்கொடுக்கும் நிலையில் உள்ளோம்.

எனவே மாநிலங்களின் வளங்களை சுரண்டி கொண்டுவரப்படும்  இந்த ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். தற்போதும் வேளாண்மை நடைபெற்றுக் கொண்டிருக்கும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி வரும் காலங்களிலும், தமிழ்நாட்டின் நில வளமும் நீர் வளமும் பாதுகாக்கப்படக் கூடும். எனவே தமிழ்நாட்டின் வளங்களை இதற்குமேலும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை என்பதை உணர்த்துவோம். சுற்றுச்சூழலையும் வேளாண்மையையும் பாதிக்கும் திட்டங்களை ஒன்றிணைந்து முறியடிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »