அமரன் படம் வரலாற்று உண்மையற்று காஷ்மீர் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படமாக இருக்கிறது. மேலும் காஷ்மீர் மக்களையும் தமிழ் மக்களையும் மோத விடக்கூடிய படமாக இருக்கிறது என்பதை கண்டித்து தமிழ்த்தேசிய முன்னணி சார்பில் நவம்பர் 8, 2024 அன்று ஊடக சந்திப்பு நடைபெற்றது.
சமீபத்தில் வெளிவந்த அமரன் என்னும் திரைப்படம், இந்திய ராணுவத்தில் பணியாற்றி, சண்டையின் போது உயிரிழந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜன் நினைவாக எடுக்கப்பட்ட படம் என வெளிவந்திருக்கிறது. அவரின் பெருமையைப் போற்றுவதற்காக எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அப்படத்தில் காஷ்மீர் மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், காஷ்மீர் போராட்ட தலைவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விதத்திலும் உள்ளதாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
வரலாற்று உண்மைகள், படைப்பு நேர்மை இல்லாமல் வெளிவந்திருக்கும் இப்படத்திற்கு மே 17 இயக்கம் கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பான செய்திகளையும், தகவல்களையும் வெளிப்படுத்த தமிழ்த் தேசிய முன்னணி சார்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நவம்பர் 8, 2024 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் தோழர். திருமுருகன் காந்தி, அவர்கள் பேசினார். தோழர். குடந்தை அரசன், தோழர். கே.எம். செரீப், தோழர். இளமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பேசியவை :
நாங்கள் படைப்புலகத்திற்கோ, படைப்புக்கோ எதிரானவர்கள் அல்ல. கலைக்கு எதிரானவர்கள் அல்ல. எந்தப் படைப்பிலோ, கலையிலோ வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் அமைதியை, சமத்துவத்தை வலுப்படுத்துவதாக இருந்தால் அந்தப் படைப்பை நாங்கள் கொண்டாடி இருக்கின்றோம், ஆதரித்து இருக்கின்றோம், பிற்போக்குவாதிகளிடமிருந்து அந்த படைப்பிற்கு எதிர்ப்பு வந்திருந்தால் அதை எதிர்த்து படைப்பு சுதந்திரத்தை காக்கும் வகையில் செயல்பட்டு இருக்கின்றோம்.
இந்த அமரன் திரைப்படத்தின் மூலமாக நாங்கள் வெளிப்படுத்த விரும்புகின்ற கருத்துக்கள் என்பது, அந்தப் படத்தைப் பொறுத்தவரை அதனை ஒரு படைப்பாக, கலையாக நாங்கள் எண்ணவில்லை. உண்மை சம்பவமாக எடுக்கப்பட்டிருக்கின்ற அந்தப் படத்தின் கதாநாயகனாக இருக்கின்ற முகுந்த் வரதராஜன் மீது எழுந்த தனிப்பட்ட விமர்சனமாக இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றோம். ஒரு தனி மனிதனாக அவருடைய இழப்பு என்பது நமக்கு துயரத்தை கொடுக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு ராணுவ வீரனாக போர்க்களத்தில் கொல்லப்பட்ட போது நாம் அனைவருக்கும் ஒரு அனுதாபமும், ஈர்ப்பும் ஏற்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. அவர் பக்கம் இருக்கின்ற நியாயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற மனிதநேய அடிப்படையில் தான் அவரின் மரணத்தை அணுகினோம்.
இந்த அமரன் படம், முகுந்த் என்கின்ற ராணுவ வீரனை கொண்டாடும் விதமாக கதையை கொண்டு வருவதற்கு பதிலாக, காஷ்மீர் மக்களை எதிரிகளாக சித்தரிக்கும் போக்குடன் எடுக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு தேசிய இனத்தை எதிராளிகளாக, தேசிய இன மக்கள் வெளிப்படுத்துகின்ற உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, காஷ்மீர் மக்களின் தரப்பையே பேசாமல் ஒரு பக்க தரப்பில் பேசும் சார்புடையதாக இந்தப் படத்தில் நுணுக்கமாக காட்டுகின்ற காரணத்தினால், காஷ்மீருக்கு எதிராக இந்த படத்தின் மையக் கரு அரசியலை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. இதற்கு அந்தப் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் பதில் சொல்ல வேண்டும்.
இவர்கள் காஷ்மீர் போராட்டத்தை திரிபுபடுத்துகின்ற வகையில் அவர்களின் போராட்டத்தை தீவிரவாதமாக, பயங்கரவாதமாக காட்டுகின்ற காட்சிகளின் அடிப்படையில், காஷ்மீர் மக்களின் ஜனநாயகப் போராட்டத்தை கூட கொச்சைப்படுத்துகின்ற வகையில் காட்சிப்படுத்தியது, அங்கு காஷ்மீர் மக்களின் உரிமை போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் படங்களை கலவரக்காரர்கள் பயன்படுத்துவதைப் போன்ற காட்சி அமைப்பை வைத்தது, அங்கு நீண்ட காலமாக சனநாயகப் போராட்டம் நடத்திய தலைவர்களைக் கூட எதிரிகளைப் போல சித்தரிப்பது போன்ற போக்குகள் எல்லாம் இந்த படத்தில் விரிவாக காட்டப்பட்டிருக்கின்றது.
ஆனால் ஐநாவின் மனித உரிமை அமைப்புகள், செயல்பாட்டாளர்கள் காஷ்மீரத்தைப் பற்றியானப் பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் இந்த படத்தில் எதுவும் சொல்லவில்லை. மேலும் போகிற போக்கில் வளர்ச்சி வந்தால்,சனநாயகம் வந்தால், தேர்தல் வந்தால் எல்லாம் மாறிவிடும் என்று படம் முழுக்க திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். 1947-ல் இருந்து அங்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் என்று இரண்டு பகுதி இருக்கிறது. காஷ்மீர் என்பது பள்ளத்தாக்கு பகுதி.
அங்கு தொழிற்சாலைகள் வரவேண்டும் என்று நீண்ட காலமாக அவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு அங்கு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளிக்கவில்லை. மாறாக ஜம்மு பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளித்தார்கள். 1951-ல் இருந்து அங்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த தேர்தலில் காஷ்மீர் மக்கள் யாரை ஆட்சி அமைக்க தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்களை டெல்லி அரசாங்கம் கலைத்து விடுகிறது. 1953-ல் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, காஷ்மீர் மக்கள் நேசிக்கும் காந்தியடிகளோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஷேக் அப்துல்லா கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணமோ, விசாரணையோ இதுவரை நடத்தப்படவில்லை. அவரிடம் இருந்த பல தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
அந்த சமயத்தில் நேரு, காஷ்மீர் மக்களின் அரசியல் விருப்பம் என்னவோ அதை தெரிந்து அவர்களை எங்களுடன் இணைத்து கொள்வோம் என்பதை வெளிப்படையாக அறிவித்திருந்தார். அதற்குரிய கருத்து கேட்பு நடத்துங்கள் என்று காஷ்மீரிகள் கேட்டார்கள். அந்த கருத்துக் கேட்பு கேட்பதற்கான ஒரு இயக்கத்தை ஷேக் அப்துல்லா சிறையில் இருக்கும் போது அந்த மக்கள் நடத்தினார்கள். அதில் ஈடுபட்ட தலைவர்களைக் கூட ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டி தூக்கு தண்டனை கொடுத்தார்கள், சிறையில் அடைத்தார்கள். சனநாயக வழியில் ஈடுபட்ட தலைவர்களைக் கூட, தேர்தல் வழியில் ஈடுபட்ட தலைவர்களைக் கூட சிறையில் அடைத்தார்கள், கொலை குற்றச்சாட்டு சுமத்தினார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீவிரவாதிகள் நடத்திய நடவடிக்கையால், சிறையில் இருந்த சனநாயகத் தலைவரான மக்புல் பட் என்பவரை டெல்லியில் தூக்கில் போட்டு புதைத்து விட்டார்கள். இது 1983-84-ல் நடக்கிறது.
அதைப்போல ஷேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா முதலமைச்சராக ஆன போதும் அந்த ஆட்சி கலைக்கப்படுகிறது. டெல்லி அரசுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பொம்மை ஆட்சியை கொண்டு வந்து அமர்த்தினார்கள். அந்த பொம்மை தலைவருக்கு எதிராக இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள். தேர்தலில் போட்டியிட்ட தலைவர்களைக் கூட கைது செய்தார்கள். அவர்களின் வெற்றி செல்லுபடி ஆகாது என அறிவித்தார்கள். அவ்வாறு நிராகரிக்கப்பட்ட பல தலைவர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேரும் சூழல் ஏற்பட்டது. 1980-களில் இந்த நிலை உருவானது. தீவிரவாதம், குண்டுவெடிப்பு, துப்பாக்கி தூக்கியது என இவை அனைத்தும் 1980-களுக்குப் பிறகு நடைபெற்றது. ஆனால் இவர்கள் படத்தில் 1947-ல் இருந்தே துப்பாக்கி தூக்குவது போலவும், கலவரம் நடத்துவது போலவும், அனைவரையும் சுட்டுக் கொள்வதாகவும் சித்தரித்து இருக்கிறார்கள்.
யாசின் மாலிக் என்கிற ஜம்மு காஷ்மீர் லிபரேஷன் ஃப்ரண்ட் தலைவர், இப்போது சிறையில் இருக்கிறார். அவர் 1986-87-களில் தேர்தலில் போட்டியிட்டவர். அவரின் தேர்தல் வெற்றியை நிராகரித்தார்கள். அவரை சிறையில் அடைத்தார்கள். ஷேக் அப்துல்லாவை 13 ஆண்டுகள் எந்த விசாரணையும் இன்றி சிறையில் அடைத்தார்கள். அதற்குப் பிறகு சமாதானத்தின் அடிப்படையில் வெளியில் விட்டார்கள். ஆனால் காஷ்மீரத்துக்கு நுழையக்கூடாது என்று கட்டளை விதித்தார்கள். இவர் யாரென்றால், இவர்தான் காஷ்மீரத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று காந்தியடிகளாலேயே சொல்லப்பட்டவர்.
இதைப்போல 1983-ல், இங்கே எப்படி தமிழ்நாடு அரசை செயல்பட விடாமல் முடக்குவதற்காக ஆளுநரை அனுப்பி வைத்தார்களோ, அதே போல ஜக்மோகன் என்கின்ற ஆளுநரை காஷ்மீரத்திற்கு நியமித்தார்கள். அந்த ஆளுநரின் அதிகாரத்தின் பின் நடந்த தேர்தலில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதற்குப் பிறகு, அந்தக் கட்சி இரண்டாக உடைக்கப்பட்டு பரூக் அப்துல்லாவை சிறையில் அடைத்து மற்றொரு பொம்மை முதல்வரை நியமிக்கிறார்கள். அதற்குப் பிறகு கடுமையான அடக்குமுறை நடக்கிறது. அப்பொழுதெல்லாம் அவர்கள் ஆயுதங்கள் தூக்கவில்லை. அதற்குப் பிறகு 1987 தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அப்பொழுதும் அவர்கள் ஆயுதத்தை தூக்கவில்லை.
அதன் பிறகும் தேர்தலில் போட்டியிட்டவர்களின் வெற்றியை ரத்து செய்து சிறையில் அடைக்கிறார்கள். அதன் பிறகுதான் ஒரு சில இடங்களில் ஆயுதப் போராட்டம் என்பது நடக்க ஆரம்பிக்கிறது. பின்னர், யாசின் மாலிக் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக, காந்திய வழியில் போராடப் போவதாக அறிவிக்கிறார். இப்போது அவரையும் நீண்ட கால சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவ்வாறு காஷ்மீரி மக்களின் சனநாயக விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற அனைத்து வாய்ப்புகளும் அடைக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியுடன் வி.பி.சிங் ஆட்சி 1990-ல் நடந்தது. இந்த சூழலில், ஜக்மோகன் என்பவரை மீண்டும் ஆளுநராக காஷ்மீருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர் 1991, மே மாதம் வெளியேறுகிறார். அவர் பதவியில் இருந்த ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் நடந்த ஒவ்வொரு துப்பாக்கி சூட்டிலும், குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை சுமார் 40 லிருந்து 100 பேர் வரையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்த படுகொலை மிக மோசமான அளவில் நடந்து அங்கு மக்களின் உரிமைக்காக சனநாயக வழியில் போராடிய நிர்வாகிஸ் என்ற ஒரு தலைவரை படுகொலை செய்கிறார்கள். அவர் உடலைக் கொண்டு வரக்கூடிய ஊர்வலத்தில் ஐந்து லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். அத்தனை பேரின் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
அன்று அமெரிக்காவினுடைய ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ் நேரடியாக கண்டனம் தெரிவிக்கிறார். இவ்வாறு தொடர்ச்சியாக 1991-96 வரை கிட்டத்தட்ட 806 பேர் காவலில் வைத்து படுகொலை செய்யப்படுகிறார்கள். இவை எல்லாமே ஐ.நா மனித உரிமை அவையில், அம்னஸ்டி அமைப்பில், பல்வேறு மனித உரிமை அமைப்புகளில் ஆவணமாக இருக்கிறது. இந்தியாவில் இருந்த மனித உரிமை அமைப்புகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் சொல்லக்கூடிய ராஷ்டிரிய ரைஃபிள் பற்றி இந்தியாவின் புகழ்பெற்ற மனித உரிமை செயல்பாட்டாளர் கே. பாலகோபால் எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு தகவலை சொல்கிறேன். அது என்னவென்றால், ”1995, ஜூன் 13-ந் தேதி அனந்தநாக் மாவட்டத்தில் ராஷ்டிரிய ரைபிளைச் சேர்ந்தவர்கள் ஹிலால் அகமது, குலாம் ரசூல், ரம்ஜா அலீப், பரூக் அகமது பாணி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். நான்கு பேரையும் முகாமுக்கு கொண்டு சென்று முதலில் நஸ்தியைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஒரு பையில் திணித்து குலாம் ரசூலிடம் கொடுத்து ஜீலம் நதியில் போட்டு வரச் சொன்னார்கள். அவர் அந்த வேலையை செய்து வந்ததும் அவரையும் துண்டு துண்டாக வெட்டி பையில் திணித்து ரம்ஜா அலிபிடம் கொடுத்து நதியில் போட்டு வரச் சொன்னார்கள். அவர் திரும்பி வந்ததும் அவரையும் வெட்டி பருக் அகமது பாணியிடம் கொடுத்தனர். அவர் பையுடன் நதியில் குதித்து நீந்தி உயிரை காப்பாற்றிக் கொண்டார். அவர் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஒரு மாஜிஸ்டிரேட்டிடம் இந்த கொடூரமான நிகழ்வை விவரித்து வாக்குமூலம் கொடுத்தார். இதுதான் ராஸ்ட்ரிய ரைஃபிளை குறித்து பாலகோபால் கொடுத்த ஆவணம்”. நான் கமலஹாசனிடம் கேட்க விரும்புகிறேன், இதை குறித்து எல்லாம் படித்தீர்களா?
இந்தப் படத்தில் ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட காஷ்மீரி மக்களையும் எதிராகக் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். இதுபோல ஐநாவின் மனித உரிமை ஆய்வாளர் ஒருவரையும், ராணுவத்திற்கு ஆதரவான வேலை செய்யக்கூடிய ஆயுதக் குழுக்கள் முகாமுக்கு கடத்திக் கொண்டு சென்று விடுகிறார்கள் அதற்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு அவருடைய உடல் வெளியில் கிடக்கிறது. அவரை கூட்டிச் சென்ற இருவருடைய உடல் நான்கு நாள் கழித்து வெளியில் சடலமாக கிடைக்கிறது. இதுபோல ஏகப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
முகுந்த் வரதராஜன் ஈகத்தை திரைப்படம் ஆக்குவதில் யாருக்கும் எந்த சிக்கலும் கிடையாது. அது ஒரு தனி குடும்பத்தின் வலி. அந்த வலியை அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் அதைப்போன்ற வலி தானே காஷ்மீர் மக்கள் அனைவருக்கும் இருக்கிறது. மக்புல் பட் படத்தை தீவிரவாதி போல காட்டுகிறீர்கள். சையத் அலிஷா கிலானி படத்தை தீவிரவாதி போல காட்டுகிறீர்கள். ஹூரியத் தலைவராக இருந்தவர் அவர். 2009-ல் ஈழப்படுகொலையை கண்டித்து டெல்லியில் குரல் கொடுத்தவர். இவர்களை தீவிரவாதிகளாகக் காட்டி எந்த உரையாடலை தடுக்கிறீர்கள்?
முகுந்த் வரதராஜன் மேல் ஏற்படும் அனுதாபம், காஷ்மீர் மக்களுக்கு எதிராக மாறி விடுகிறது. ஒருவரை ஹீரோவாகவும் பெருந்திரளான மக்களை வில்லனாகவும் காட்டுகிறீர்கள். அந்த மக்களின் வரலாறே தெரியாமல் ஒட்டுமொத்த மாநில மக்களையும் எதிராக காட்டுகிறீர்கள். காஷ்மீரத்தில் அடிப்படையில் இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என எல்லோரும் சேர்ந்து வாழ்கிறார்கள். தங்களை காஷ்மீரியர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
’அன்று ஷேக் அப்துல்லா காங்கிரசுக்கு ஆதரவாகதான் நின்றிருந்தார். முகமது அலி ஜின்னாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ ஆதரவாக நிற்கவில்லை. அதைப் போல பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு படைகள் வந்த போது அந்த படைகளுக்கு எதிராக நின்றவர்கள் ஷேக் அப்துல்லாவும், அவரது ஆதரவாளர்களும்தான். இதனால் அவரது கட்சியின் பொறுப்பாளர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்’. இவையெல்லாம் ஆவணமாக இருக்கிறது. அவர்களெல்லாம் தங்களை காஷ்மீரியர்கள் என்று சொல்லும்போது நீங்கள் அவர்களை முஸ்லீமாக மட்டும் காட்டுகிறீர்கள்.
அதைப் போல பண்டிதர்களை வெளியேற்றும் வேலையை செய்தவர் ஜக்மோகன். அந்த வரலாறு சொல்வதென்றால், இரண்டு பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. அதில் ஒரு பண்டிட் பாஜக கட்சியின் ஆதரவாளர். மக்களைப் பிளவுபடுத்தும் வேலையை செய்கிறார். இன்னொருவர் மக்புல் பட்டுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர். இவர்கள் கொலை செய்யப்பட்டவுடன் மொத்த பண்டிட்டுகளுக்கே பிரச்சனை என்று அவர்களை வெளியேற உத்தரவிட்டவர் பாஜகவினால் ஆளுநராக அனுப்பப்பட்ட ஜக்மோகன். அந்த நேரத்தில் இசுலாமிய தலைவர்களும் பண்டிட்டுகளின் தலைவர்களும் சேர்ந்து நேரடியாக பேசுகிறார்கள். இருப்பினும் அவசரமாக பண்டிட்டுகளுக்கு விமான டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தவர் ஜக்மோகன். அன்று அங்கு இருந்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும், தீவிரவாத இயக்கம் என்று இவர்களால் சொல்லப்படுகின்ற JKLF உட்பட, பண்டிட்டுகள் வெளியேற வேண்டாம், நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று சொன்னார்களா, இல்லையா?
நாம் தமிழன் என்று சொன்னால் தமிழர், கிறித்துவர், இசுலாமியர் என்று பிரிக்கிறோமா? ஆனால் பாஜக-காரர்கள் பிரிக்கிறார்கள். அதேபோல அவர்களும் காஷ்மீரிகள் என்றே சொல்கிறார்கள் இந்து, முஸ்லிமாக பிரித்து சொல்லவில்லை. இப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் மூலமாக, அவர்களையெல்லாம் முஸ்லிம்கள், அதனால் ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள் என்று காட்டுகிறீர்கள்.
கடந்த காலத்தில், ஒரு பகுதியில் உள்ள ஆண்களை எல்லாம் வெளியேற்றி விட்டு ராணுவம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததெல்லாம் ஆவணமாக இருக்கிறது. ஒரு மாஜிஸ்ட்ரேட் இதைத் தெரிந்து விசாரணைக்கு உத்தரவிடுகிறார். அந்த சமயத்தில் ராணுவ வாகனம் மீது அந்த மக்கள் கல் எறிகிறார்கள். குண்டெல்லாம் வீசவில்லை. ஆனால் நீங்கள் அதன் பின்னணியை சொல்லாமல் கல்லெரிவதை மட்டும் காட்டினால் பார்க்கும் மக்களுக்கு என்ன தெரியும்?
உலக அளவில் வருடக்கணக்கில் இணையதள சேவை முடக்கப்பட்ட ஒரே மாநிலம் காஷ்மீர்தான். மோடி 2019-ல் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தவுடன் அங்குள்ள மாநில அரசை கலைக்கிறார். அங்குள்ள முதலமைச்சரை நான்கு வருடங்களாக சிறையில் அடைகிறார். தேர்தலில் பங்கெடுத்து தானே முதலமைச்சர் ஆனார்கள். ஆனால் இதையெல்லாம் யாராவது கேட்டார்களா? இன்று அங்கு ஜனநாயகம் பற்றி, வளர்ச்சி பற்றி மக்களுக்கு அறிவுரை சொல்வதைப் போல வாய் கிழிய படம் எடுக்கும் நீங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்து முதலமைச்சரை சிறையில் அடைத்த அரசை வாய் திறந்து கேட்பீர்களா கமலகாசன்? எது ஜனநாயகம்?
காஷ்மீரத்தின் 370 வது சட்டப் பிரிவை கலைத்ததற்காக திமுக அரசு குரல் கொடுத்தது. ஆனால் திமுகவின் தலைவரான தமிழ்நாட்டின் முதலமைச்சர் இந்தப் படத்தை எந்த அடிப்படையில் ஆதரிக்கிறார்? நீங்கள் எடுத்த நிலைப்பாட்டின் அடிப்படையில் ஒரு படத்தை பாருங்கள், கருத்தை சொல்லுங்கள். இன்றைய நிலையில் காஷ்மீரத்தின் நிலை என்ன? கடந்த ஏழு வருடங்களாக காஷ்மீரத்திற்குள் யாரும் செல்ல முடியாது. திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட செல்ல முடியாது. பிறகு எப்படி அது ஜனநாயகம்? காஷ்மீர் மக்களை சென்று பார்ப்பதற்கு இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி கிடைத்ததா? சர்வதேச குழுவுக்கு, ஐநா குழுவுக்கு அனுமதி இல்லை. ஏன் அனுமதி இல்லை? அவர்கள் சென்று பார்த்து, அங்கு தீவிரவாதிகள் இருக்கிறார்கள், தீவிரவாதிகள்தான் கொலைகளை செய்கிறார்கள் என்று சொல்லட்டுமே, ஏன் கமலஹாசனே போகட்டுமே?
கிட்டத்தட்ட ஆறு வருடமாக அந்த மக்களுக்கு இணைய சேவை, மின்சார சேவை, போக்குவரத்து சேவை என அனைத்தும் முடக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது அப்படிப்பட்ட சமயத்தில் இப்படி ஒரு படம் எடுத்து காஷ்மீர் மக்களை முழுவதும் எதிரியாக காட்டினால் யாருக்கு லாபம்?
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், யாசின் மாலிக்கை கூட்டி வந்து கூட்டம் நடத்திய சீமான் இந்த படத்தை பாராட்டி பேசியிருக்கிறார். அவருக்கு வெட்கமாக இல்லையா? தமிழீழம், தமிழீழம் என்று சொல்லி அது குறித்தான எந்த ஒரு போராட்டமும் நடத்தாமல், காஷ்மீர் மக்களுக்கு எதிரான ஒரு படம் வந்ததும் அந்த படத்தை பாராட்டி கட்டித் தழுவி நிற்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நாம் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று பேசினீர்களே, யாசின் மாலிக் சிறையில் இருக்கிறார், ஈழப்படுகொலைக்கே ஆதரவு தெரிவித்த சையத் அலிஷா கிலானியை தீவிரவாதியாக காட்டுகிறார்கள், எதிர்த்து பேசி இருக்க வேண்டுமா, வேண்டாமா? அப்படி என்றால் ஈழத்தைப் பற்றியும் அக்கறை இல்லை, காஷ்மீரைப் பற்றியும் அக்கறை இல்லை, வசூல் பற்றி மட்டும்தான் அக்கறை இருக்கிறதா? என்ன அரசியல் தெளிவு இது? திமுக, அதிமுக, காங்கிரஸ் யாவும் சுயநிர்ணய உரிமை, தேசிய இன விடுதலை பற்றி பேசவில்லை. ஆனால் ஈழத்தைப் பற்றி பேசி, அதற்காக அங்கு வந்த இளைஞர்களை எல்லாம் காயடித்து சுக்குநூறாக ஆக்கிவிட்டு இன்று இந்த படத்திற்கு ஆதரவாக நிற்கிறீர்களே, வெட்கமாக இல்லையா? இந்தப் படத்தில் என்ன அரசியல் சொல்லப்பட்டு இருக்கிறது, புத்தகம் படிப்பீர்களா இல்லையா?
இந்த பாலகோபால் என்பவர் யார்? 2009 இனப்படுகொலை முடிந்தவுடன், இந்தியாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்களை அழைத்து முதல் கூட்டம் நடத்தியவர் பாலகோபால். அந்த கூட்டத்தை நானும் பங்கெடுத்து இருக்கிறேன். அவருடன் பேசியிருக்கிறேன். அவர் எழுதிய புத்தகத்தில்தான் இந்த ஆவணங்கள் இருக்கின்றன. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். சீமான் வழியில் சொன்னால் தெலுங்கர். அவர் தான் காசுமீரம், ஈழம் இரண்டிற்கும் பேசினார்.
சினிமாக்காரர்கள் என்றால் அவர்கள் எடுக்கும் அனைத்திற்கும் சென்று ஆதரவு தெரிவித்து விடுவதா? அது தொழிலா? அரசியல் தொழில், ஈழம் தொழில், காஷ்மீர் தொழில் என தொழிலா இவையெல்லாம்?
திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவை எல்லாம் தெரியாதா? அன்று திமுக எம்.பி. சிவா பாராளுமன்றத்தில் காசுமீருக்காக பேசுகிறார். அப்படிப்பட்ட நிலைப்பாடு கொண்டவர்கள் இப்படிப்பட்ட படத்தை எப்படி ஆதரிக்கிறீர்கள்? தமிழர்கள் காலம் காலமாக தந்தை பெரியார் காலத்தில் இருந்தே காஷ்மீருக்கு ஆதரவாக நின்றவர்கள். இந்தியாவுடன் இணைய வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டதற்கு திராவிட இயக்கம் அன்று என்ன சொன்னது? அதை காஷ்மீர் மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றது. நீங்கள் யார் முடிவு செய்ய? என்று கேட்டது அதுதான் திராவிட இயக்கம்.
அங்கு ஒட்டுமொத்த மக்களுமா ஆயுதத்தை தூக்கி கொண்டு நிற்கிறார்கள்? ஏழரை லட்சம் ராணுவம் அங்கு நிற்கிறது என பாலகோபால் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட ஏழு பேருக்கு ஒருவர் என்று நிக்க வைக்கப்பட்டிருக்கிறது. உலகத்தில் மிக அதிக ராணுவம் நிறுத்தப்பட்ட இடமாக காஷ்மீரம் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அவர்களைப் பற்றிய எந்தப் புரிதலும் இன்றி, அவர்களை எதிராளியாகவும், அவர்களின் அரசியலை கொச்சைப்படுத்தியும் பேசுகின்ற அமரன் படம் காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல, மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கும் எதிரானது. நாளை ஈழப் போராட்டங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும். ஈழப் போராட்டங்களில் ஈடுபட்ட ஒருவரை இதேபோன்று கொச்சைப்படுத்தி எடுத்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அங்கேயும் தான் இந்திய ராணுவத்திற்கு எதிராக மக்கள் கல்லெடுத்து எறிந்தார்கள். திலீபன் இந்திய ராணுவத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இதைப் போன்று அவரையும் கொச்சைப்படுத்தி எடுத்தால் ஏற்றுக் கொள்ளுவோமா? ஒரு அடிப்படை தர்க்கம் வேண்டாமா?
அதைப்போல இந்திய ராணுவம் மதச்சார்பற்ற ராணுவம். ஆனால் இந்த படத்தில் சண்டைக்கு செல்வதற்கு முன்பு ஜெய் பஜ்ரங் பலி என்ற முழக்கத்தை போட்டுக் கொண்டு செல்கிறார்கள். ஒரு ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ முழக்கத்தை எப்படி போடுகிறார்கள்? ’நாங்கள் பலகாலமாக சொல்லி வருவது போலவே கமலஹாசன் என்பவர் ஒரு சங்கியே. இஸ்லாமிய வெறுப்பை தொடர்ச்சியாக கட்டி வரும் நபர்’.
இந்தப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு அடிபட்டு கிடக்கும் ஒரு காஷ்மீர் தீவிரவாதியை கதாநாயகன் சுட்டுக் கொல்வது போல ஒரு காட்சி வருகிறது. இது உண்மையாக நடந்தால் போர் குற்றம். இதற்கு ‘சம்மரி எக்சிகியூசன்’ என்று பெயர். சர்வதேச அரங்கிலே போர் குற்ற வழக்கின் அடிப்படையில் கைது செய்ய வேண்டிய செயல் அது. இந்தப் படத்தின் மூலமாக முகுந்த் வரதராஜனை போர் குற்றவாளியாக சித்தரிக்கிறாரா இயக்குனர் அல்லது இது உண்மையா என்று தெரியவில்லை. ஆயுதம் இல்லாமல் அடிபட்டு கிடப்பவனை ஒரு தீவிரவாதியோ, ரவுடியோ, எதிரியோ, மாபியாவோ கொலை செய்யலாம். கதாநாயகன் எப்படி அடிபட்டு கிடப்பவனை கொலை செய்ய முடியும்? இதைப்போல இந்த படத்தில் எவ்வளவு சொல்வது?
ஈழத்தில் ஒரு போராளியை கையைக் கட்டி, முட்டி போட வைத்து சுட்டுக் கொல்வது போல சேனல் 4 காணொளியில் பார்த்தோம். அதற்கும் இந்த காட்சிக்கும் என்ன வித்தியாசம்? ஒரு ராணுவம் நிராயுதபாணியாக உள்ள ஒருவனை சுட்டுக் கொல்ல முடியாது. கைது தான் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணை செய்யப்பட வேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அதற்குரிய தண்டனை அங்கு வழங்கப்பட வேண்டும்.
’இதில் அப்சல் குருவைப் பற்றி சொல்கிறார்கள். அப்சல் குரு வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன சொல்லியது என்றால், அப்சல் குருவின் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை, ஆனால் இந்தியாவின் பொது கோரிக்கைக்கு ஏற்ப அவரை குற்றவாளி என்று சொல்கிறோம். இத்தனைக்கும் அப்சல் குரு இந்திய ராணுவத்திற்கு நெருக்கமாக, இந்திய அரசின் கண்காணிப்பில் இருந்தவர்’.
ஸ்டெர்லைட்டில் 15 பேரை பலி கொடுத்தோம். அந்தப் போராட்டத்தை தீவிரவாத போராட்டம் என்று யாராவது படம் எடுத்தால் ஏற்றுக் கொள்வோமா? நியாயத்தின்படி படம் எடுக்க வேண்டும். கருத்து அந்த மையத்தில் நிற்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கொண்டாடுவதில் அர்த்தமில்லை. முகுந்த் வரதராஜன் மீது நமக்கு மரியாதை இருக்கிறது. அந்த குடும்பத்தின் மீது அனுதாபம் இருக்கிறது. அது வேறு கதை.
காஷ்மீர் மக்களை ஏன் எதிரியாக காட்டுகிறீர்கள்? உடனே ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துகிறோம் என்று அதற்குள் போய் ஒளிந்து கொள்ளக் கூடாது. இயக்குனர் ஏன் காஷ்மீர் மக்களை கொச்சைப்படுத்துகிறார்? நாங்கள் நேரடியாக இயக்குனரோடும், அந்த படத்தின் தயாரிப்பாளரான கமலஹாசனோடும் விவாதம் செய்ய தயார். எங்களிடம் அனைத்து ஆவணங்களும் இருக்கிறது. இந்தியாவின் அவுட்லுக், ப்ரண்ட் லைன் போன்ற அனைத்து முக்கியப் பத்திரிகைகள் எழுதிய செய்திகளும் எங்களிடம் இருக்கிறது. ஏ.ஜி. நூரான், பாலகோபால் எழுதிய சான்றுகள் இருக்கிறது. PUCL அறிக்கை இருக்கிறது. இன்று சிறையில் இருந்து வெளிவந்த கவுதம் நவ்லாகா அதைப்பற்றி ஒரு தீர்ப்பாயம் நடத்தியிருக்கிறார். இவ்வளவு ஆவணங்களையும் வைத்து கமலஹாசனுடன் பேசத் தயார்.
இப்படி படம் எடுத்து தமிழ் மக்களை காஷ்மீர் மக்களுடன் மோத விடாதீர்கள். இது கமலஹாசனின் வன்மம், வக்கிரம். வரலாறுகள் ஆவணமாக இருக்கின்றன. இதில் தப்பித்து போய் எந்த படமும் எடுக்க முடியாது. திரைப்படத்தில் படைப்பு நேர்மை இருக்க வேண்டும். வரலாற்று உண்மைகள் இருக்க வேண்டும், குறிப்பாக மனித நேயம் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் பேசி அந்த திரைப்படத்தை எல்லோரும் பாராட்டும்படி கொண்டு வந்திருந்தால் அது வேறு. ஆனால் அப்படி செய்யவில்லை.
இந்த சமயத்தில் கமலகாசனுக்கும், இயக்குனருக்கும் நாங்கள் சொல்வது என்னவென்றால், இந்தப் படம் வரலாற்று உண்மையற்று காஷ்மீர் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படமாக இருக்கிறது. காஷ்மீர் மக்களையும் தமிழ் மக்களையும் மோத விடக்கூடிய படமாக இருக்கிறது. அதனால் நாங்கள் இதை நிராகரிக்கிறோம். – இவ்வாறு தோழர். திருமுருகன் காந்தி பேசினார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.