
தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் Kingdom திரைப்படம் தமிழர்களிடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்தப் படம் இனப்படுகொலையை சந்தித்த ஈழத் தமிழர்களின் காயங்கள் மீது மேலும் ஈட்டியைப் பாய்ச்சுவதான கதையமைப்பைக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் ஈழத் தமிழர்களின் நீதியை நோக்கி பயணிக்கும் தமிழர்களின் முன்னகர்வுகளைத் தடுக்க திட்டமிடப்பட்ட கருத்துருவாக்கம் தூண்டப்படுகிறது.
காட்சி ஊடகங்களே இன்று நம் வரலாறுகளை நிர்ணயிக்கிறதோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு காரணமாக இனப்படுகொலைக்கு ஆளான தமிழர்களை தொடர்ந்து சீண்டிக் கொண்டிருக்கின்ற பாலிவுட்டின் படங்கள் இருக்கின்றன.
தேசபக்தி படம் என்றால் பயங்கரவாதியாக இஸ்லாமியக் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதும், எதிரி நாடென்றால் அது பாகிஸ்தான் தான் என்றும் காட்சிகள் திரைப்படங்களில் திட்டப்பட்டே ஊன்றப்பட்டது. காஷ்மீரின் ஆர்டிகிள் 370 -யை ரத்து செய்யும் முன் காஷ்மீரில் நடந்த நியாயமான போராட்டத்தை தீவிரவாதம் என தொடர்ந்து பரப்பக்கூடிய படங்கள் வெளிவந்தன. அதைப் போன்றே தமிழர்களுக்கும் நடத்தப்படுகிறதா என்பதை தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வெளிவரும் படங்கள் உணர்த்துகின்றன.
மதராஸ் கபே, ஃபேமிலி மேன் 2, ஜாட் எனத் தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் பாலிவுட் திரையுலகத்தைத் தொடர்ந்து தெலுங்குத் திரைவுலகம் இப்போது கிங்டம் படத்தை வெளியிட்டு தமிழர்களின் கோவத்தை சீண்டியிருக்கிறது.

2013-ஆம் ஆண்டு வெளியான மதராஸ் கஃபே என்னும் இந்தி திரைப்படத்தில் ராஜீவ் காந்தி கொலையை விடுதலைப் புலிகள் செய்யத் திட்டமிட்டதாகவும், அதனை அதைத் தடுக்க உளவு வேலைக்கு இந்தியாவிலிருந்து சுதாநாயகன் செல்வதான கதையமைப்பு கொண்டிருக்கிறது. சிங்கள இனவெறியினால் ஈழ விடுதலைப் போராட்டத்தை தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கையிலெடுத்த விடுதலைப் புலிகளின் பின்னணியைக் குறிப்பிடாமல், இலங்கை அரசு, இந்திய அரசின் சார்பிலிருந்து படம் எடுக்கப்பட்டு போராளிகளை பயங்கரவாதிகளாக காட்டியது இப்படம். தமிழ்நாட்டின் பல கட்சி, அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இப்படத்தை எதிர்த்து போராடினர்.

Family Man 2 எனும் இந்த ஒடிடி தளத்தில் வெளியான தொடரில் ராஜி என்ற பெண் கதாபாத்திரம் ஒரு விடுதலைப் புலிகளின் அமைப்பைப் போன்று சித்தரிக்கப்பட்ட அமைப்பின் பெண் போராளியாகக் காட்டப்பட்டிருக்கிறார். இவர் பயங்கரவாதி என நேரடியாக சித்தரிக்கப்படுகிறார். தன் எதிரில் நிற்கும் சிங்கள இராணுவத்தை எதிர்த்து நின்று துணிச்சலுடன் போரிட்ட பெண் போராளிகள் ஒழுக்கத்தை மரண சூழலிலும் கைவிடாதவர்களாகவே வாழ்ந்து மறைந்தனர். தங்களது உடலை போருக்கான ஆயுதமாக தந்தார்களே தவிர, ஒரு ஆணின் சுகத்திற்கான ஆயுதமாக தந்து வெல்ல நினைத்தவர்கள் அல்ல. ஆனால் இக்கதாபாத்திரம் ஒரு ஆணை வீழ்த்த தன் ஒழுக்கத்தை தருவதாக சித்தரிக்கப்பட்டது. மேலும் மெட்ராஸ் கஃபே போன்று ஈழப் பிரச்சனையின் வேரினை அலசாமல், இந்திய இலங்கை அரசின் சார்பில் நின்று விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. இதற்கும் பரவலாக தமிழர்களிடையே எதிர்த்து எழுந்தது.

2025 ஏப்ரலில் வெளியானது ஜாட் எனும் இந்தி திரைப்படம். இப்படத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பை போன்று ஒரு அமைப்பை சித்தரித்து, தலைவர் பிரபாகரனின் பெயரை முத்துவேல் கரிகாலன் என்று பயன்படுத்தி, அதனை பயங்கரவாத அமைப்பாக காட்டியிருந்தார்கள். கரிகாலன் என்பது தலைவர் பிரபாகரனின் மற்றொரு பெயர் என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த அமைப்பிலிருந்து சென்ற ஒருவர் ஆந்திராவில் ஒரு கிராமத்தையே தனது கட்டுக்குள் வைத்து கொடூரமான செயல்பாடுகளை செய்வதாகக் காட்டுவதே இதன் கதை. இப்படமும் இந்திய உளவுப்பிரியின் சார்பில் எடுக்கப்பட்டதாகவே அமைந்ததால் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து 2024-ல் வெளிவந்த பஸ்தர் என்னும் இந்தி திரைப்படத்திலும், பயங்கரவாதிகள் கலந்தாலோசனைக் கூட்டமாக ஒரு காட்சியை சித்தரித்து, அதில் விடுதலைப்புலிகளில் அமைப்பு போன்ற சித்தரிப்புடன் ஒரு அமைப்பு பங்கேற்பதாக ஒரு காட்சி அமைப்பை வைத்திருப்பார்கள்.
இதைப் போன்று தொடர்ந்து சித்தரிக்கும் இந்தி திரைப்படங்களுக்கு நடுவில் இந்த *Kingdom* என்னும் தெலுங்கு திரைப்படத்திலும் விடுதலைப் புலிகளை மாபியா கும்பலாக சித்தரித்து எடுத்துள்ளனர். ஈழத் தந்தையாக போற்றப்படும் தந்தை செல்வா காலத்தில் இருந்து, விடுதலைப் புலிகள் காலம் வரை மலையகத் தமிழர்களும், வடக்கு கிழக்கு தமிழர்களும் இணைந்த களங்களே முன்னெடுக்கப்பட்டன. தலைவர் பிரபாகரனின் மெய்க்காப்பாளராக மலையகத் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்படத்தில் மலையகத் தமிழர்களை இங்கு வந்து தஞ்சம் அடையும் தெலுங்கு பழங்குடிகளாக சித்தரித்து, அவர்களை ஈழத் தமிழர்கள் அடக்கி ஒடுக்கி சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்துவதாக கதைக்களம் நகர்கிறது. தமிழர்களின் தலைவனுக்கு முருகன் என்ற பெயரை திட்டமிட்டு வன்மத்துடன் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இவை போன்ற படங்கள் படைப்புச் சுதந்திரத்தை அரச மட்டங்களில் அடகு வைத்து, அதன் சார்பில் மட்டுமே மக்களிடம் சென்று சேரும் வகையில் எடுக்கப்படுகின்றன. தமிழர்களின் உண்மையான வரலாறு, உணர்வுகள், தியாகம் என்பவற்றை மறைத்து எடுக்கப்படுகின்றன. இப்படியாக தமிழர்களை, ஈழத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் திரைப்படங்களை எதிர்த்து தீவிரமாக போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்த மே 17 இயக்கம் தமிழர்களை தவறாக சித்தரிக்கும் போதெல்லாம் தனது கண்டனங்களை வலுவாக பதிவு செய்துள்ளது. அந்த வகையில் வெளிவந்த இந்த கிங்டம் திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மே 17 இயக்கம் ஆகஸ்ட் 7, 2025 அன்று, படம் வெளியிட்ட திரையரங்கம் இருக்கும் சென்னை சிட்டி சென்டருக்கு அருகே முற்றுகைப் போராட்டத்தை நடத்தி கைதானது.
இந்த முற்றுகைப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர். பிரவீன் குமார் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியவை :

உலகம் முழுவதும் கருத்துருவாக்கம் என்பது தான் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது. அதில் மிகப்பெரிய பங்கு வகிப்பது அச்சு ஊடகம், சமூக வலைதளம், காட்சி ஊடகம், இலக்கியப் படைப்புகள் போன்றவை. இதில் திரைப்படங்களே மிகப்பெரிய புனைவு ஆயுதமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற தளங்களில் திரைப்படத்தின் முக்கியக் காட்சிகளை, பாடலகளை 30 நொடி அல்லது 1 நிமிடம் வரை பார்க்கக் கூடியதையே விரும்பும் இன்றைய சூழலில் பண்பாடும், மொழியும் சிதையக் கூடிய நிலையே இருக்கிறது.
இந்த இடத்தில் எந்த நிலையிலும் மக்களின் உணர்வுகளை சிதைக்கக் கூடாது என்பது அறத்தின் விதி. இந்தியாவில் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 -லிருந்து இன்று வரை சிறுபான்மையினருக்கு எதிரான எண்ணற்ற கருத்துகள், பழங்குடியினர் பட்டியலினத்திற்கு எதிரான கருத்துக்கள், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான கருத்துக்கள், இந்தி மொழியை சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்து இங்குள்ள தேசியத்தையும் தேசிய மொழியையும் சிறுமைப்படுத்தும் கருத்துக்கள் போன்றவை திரைப்படங்கள் மூலமாக விதைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
அதன் அடிப்படையில் 2009-ல் ஈழத்தில் சர்வதேச வல்லாதிக்க நாடுகளோடு சேர்ந்து இந்தியா நடத்திய இனப்படுகொலைப் போரில் தமிழீழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். நம் தமிழீழ மக்கள் சிந்திய ரத்தத்திற்கு நீதி கேட்டு இன்றைக்கு உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களும், தமிழ்நாடு தமிழர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் இயக்கத்தின் தலைவர் தோழர். திருமுருகன் காந்தி பல முறை ஐநா சபைக்கு சென்று ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்றும் அதற்கு ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே என்றும் பேசிவிட்டு வந்தார். சர்வதேச விசாரணை களத்தில் பங்குபெற்று இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்கிற தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை தோழர். திருமுருகன் காந்தி பெற்று வந்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணிலே தமிழர் கடற்கரை ஓரத்தில் இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை நாங்கள்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம். 15 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், இனப்படுகொலை
செய்யப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொல்லியும் உலகம் முழுவதும் கருத்தரங்குங்கள், போராட்டங்கள் எனத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
கடந்த மாதம் செம்மணி புதைகுழியிலே பச்சிளம் குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை எலும்புக்கூடுகள் கிடைத்த காட்சியை எல்லாம் பார்த்தோம். ஆயுதம் ஏந்தாத அவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக நடந்த இனப்படுகொலைக்கான நீதி கேட்கக்கூடிய இந்த காலகட்டத்தில், கிங்டம் என்னும் இந்த தெலுங்கு திரைப்படம் வெளிவந்துள்ளது.
இதை முன்தினம் தான் நாங்கள் பார்த்தோம். இப்படத்தில் தமிழினத்தையும், ஈழத் தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் கொச்சையாக சித்தரிப்பதைக் கண்டு உள்ளம் கொதித்தது. இந்தியாவிலிருந்து சென்ற மலையகத்தமிழர்களை ஈழத்தமிழர்கள் அடிமையாக நடத்துவது போல இதன் காட்சியமைப்புகள் இருக்கின்றது. இங்கு இருந்து சென்ற மலையகத் தமிழர்களுக்கு சிங்கள இனவெறி அரசு குடியுரிமை தரவில்லை. அங்கிருந்து இங்கு வந்தாலும் குடியுரிமை தரப்படுவதில்லை. இங்கிருந்து சென்ற மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை தராதது இலங்கை சிங்களப் பேரினவாத அரசு. அங்கிருந்து வரும் ஈழத் தமிழர்களுக்கு இங்கு குடியுரிமை தராதது இந்திய பார்ப்பனிய அரசு. இதுதான் அடிப்படை அரசியல். இதனை அந்த டைரக்டராலும், நடிகராலும் சொல்ல முடியாது. திரைப்படத்தில் ஒரு வசனம், இந்த இனத்தில் பிறந்தவன் எல்லாமே அரக்கனாகத்தான் மாறுகிறானா என்கிற வசனம் வருகிறது. இந்த வசனத்தில் அவர்கள் எதை சொல்ல வருகிறார்கள்? இந்த இனத்தில் பிறந்த நம் பெரும்பாட்டான் ராவணனைப் பற்றியா என்கிற கேள்வி எழுகிறது. இந்த இனத்தில் பிறந்து சர்வதேச அளவில் ஒரு ஜனநாயகப் போர் மரபை கட்டி எழுப்பி சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக போரினை தீட்டி, உலகம் முழுவதும் போற்றக்கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தலைவர் பிரபாகரனை, அந்த அமைப்பை, போராடிய மக்களை அரக்கன் என்று சொல்கிறார்களா? எந்த அடிப்படையில் இந்த அரசியலை பேசுகிறார்கள்?
பான் இந்தியா ஃபிலிம் என்று வெளிவந்து வேறு ஒரு தேசிய இனத்தை குற்றவாளியாக சித்தரித்துக் காட்டி விட முடியுமா? பான் இந்தியா ஃபிலிம் என்று உங்களுடைய வருமானத்தை பெருக்குகிறீர்கள். இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? தேசிய இனங்களுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு அவர்களின் வாழ்வியல் கூறு போன்ற அனைத்தையும் அறத்தோடு அணுக வேண்டும் என்று சொல்கிறது அதன் அடிப்படையில் தான் திரைப்பட தணிக்கை வாரியம் (Censor Board) உருவாக்கப்பட்டது. அதன் நோக்கம் இங்கே வாழக்கூடிய மக்களுக்கு, மொழிக்கு, ஒரு தேசிய இனத்திற்கு எதிரான கருத்துக்கள் இருந்தால் அப்படத்தை நீக்க வேண்டும் அல்லது அக்காட்சிகளை வெட்டி எடுக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக வரக்கூடிய இந்த மாதிரி திரைப்படத்திற்கு சென்சார் போர்டு ஏன் வாய் மூடி அமைதி காக்கிறது?
இன்றைக்கு அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்ததாக தோழர்கள் சொன்னார்கள். அந்தத் தோழர்கள் இதற்குப் பின்பு எதற்கு போராட்டம் என்று கேட்டார்கள்? உங்களுக்கு ஒரு செய்தியை சொல்றேன். அனைத்தையும் வடக்கிலிருந்து பார்த்து தமிழ்நாட்டை அணுகக் கூடாது. எங்களுடைய வழியிலிருந்து, எங்களுடைய உரிமை மற்றும் நீதிக்கான போராட்டத்தில் இருந்து டெல்லி அரசு, நாடாளுமன்றம், வட மாநிலத்துக்காரர்கள் அணுக வேண்டும் என்பதைத்தான் நாங்கள் முன் வைக்கிறோம்.
இப்போது சமீபத்தில் வெளியான லூசிபர் 2 என்ற திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். மோகன்லாலும் பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். அதில் குஜராத் கலவரம் தொடர்பாக ஒரு உண்மைக் காட்சியை எடுத்து, அந்த இடத்தில் இருந்து படத்தை தொடங்குவதாக அமைத்திருப்பார்கள். இப்படி தத்ரூபமாக எடுக்கப்பட்ட இந்தக் காட்சியை தணிக்கை வாரியம் சித்தரிக்கப்பட்டவை என்று போடச் சொன்ன படி போட்டுவிட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகும் சங் பரிவார் அமைப்புகள் வழக்கு தொடுக்கின்றன. இதற்கு உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பைக் கொடுக்கிறது என்றால், இந்த நாட்டுடைய இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, அதனால் அந்த காட்சிகளை நீக்குங்கள் என்று சொல்கிறது. அதன் பிறகு அந்த காட்சியை படத்திலிருந்து நீக்குகிறார்கள். ஓடிடியில் வந்தபோதும் அந்த காட்சியை நீக்குகிறார்கள். ஒரு படம் வெளியிடப்படும் போது ஒரு ஐந்து பத்து பேர் இருக்கும் அமைப்பு ஒரு அறிவிப்பை விட்டாலே மத்திய சர்க்கார், நாடாளுமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் செவிசாயத்து அந்த காட்சிகளை நீக்குகிறது.
தமிழர்களான நாம் ஒரு இனப்படுகொலையை சந்தித்து உலகம் முழுவதும் நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுதுதான் கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சிலையை எழுப்பி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மே 17 இயக்கம் தமிழர் கடற்கரையோர் மண்ணிலே ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கிறது.. 2013இல் சட்டப்பேரவையில் இலங்கை ஒரு இனப்படுகொலை அரசு என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை இயற்றியிருக்கிறது. ஆக அந்த அறத்தோடு தான் நாங்கள் நினைவுச் சின்னத்தை எழுப்பச் சொல்லி கேட்கிறோம். அந்த கோரிக்கையை ஒருபுறம் வலியுறுத்திக் கொண்டிருந்தாலும், இப்படி திரைப்படங்கள் மூலமாக இவர்கள் செய்யும் கொச்சைப்படுத்தலுக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
தமிழர்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்றால் மட்டும் ஏன் இவர்களுக்கு பொங்கிக்கொண்டு வருகிறது? இந்தப் படம் மட்டும் இல்லை மெட்ராஸ் கஃபே, பேமிலி மேன் 2 என்று தொடர்ச்சியாக தமிழர்களையும், ஈழத் தமிழர்களுக்காக போராடிய போராளிகளையும் கொச்சைப்படுத்தி எடுக்க வேண்டிய அவசியம் என்ன? திரைப்பட தணிக்கை வாரியம் ஒரே மாதிரி தானே செயல்பட வேண்டும். அப்படி என்றால் எங்களின் படைப்பு சுதந்திரத்திற்கும் அனுமதி அளியுங்கள்.
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கும் அதன் தலைமையாக இருந்த வீரசாவர்க்கருக்கும் இந்த நாட்டின் பிரதமர் சென்று மாலையிடுகிறார். இந்த நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் காந்தியை சுட்டுக் கொன்ற முதல் தீவிரவாதி இந்து என்று சொன்னபோது ஏன் பொங்குகிறார்கள்? ஏன் விமர்சித்தார்கள்? தமிழர்களுக்கு எதிரான மற்றதெற்கெல்லாம் கருத்தை கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என பேசியவர்கள், அப்போது மட்டும் இப்படி பேசினார்களா?
இந்தப் படத்தில் மிக முக்கியமாக ஒரு விடயம் என்னவென்றால், ஏதோ ஓர் தமிழரை, ஓர் ஈழத் தமிழரை எதிராகக் காட்டவில்லை. ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கடத்தலில் ஈடுபடுவதாக, கொலையாளிகளாக, ஹெராயின் கடத்துபவர்களாக, போதைப் பொருளை கடத்துபவர்களாக. ஆயுதத்தை கடத்துபவர்களாக சித்தரித்து இருக்கிறார்கள். இதே குற்றச்சாட்டைத்தான் இந்திய அரசு வைக்கிறது. அங்கே இலங்கை கப்பல் படையும் இதே குற்றச்சாட்டை வைத்துத் தான் இன்று வரையிலும் ராமேஸ்வரத்தில் துப்பாக்கிச் சூட்டினை நடத்திக் கொண்டிருக்கின்றது. 800 மீனவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அன்றைக்கு என்ன சொன்னார்கள்? விடுதலைப் புலிகளால் தான் இந்த கொலைகள் நடக்கின்றது என்று சொன்னார்கள். இன்று விடுதலைப்புலிகள் இல்லை என்று சொல்கிறார்கள். 2009க்கு பிறகு இன்று வரையிலும் ஏன் இத்தனை படுகொலைகள் நடந்திருக்கிறது?
வட இந்தியாவில அமீர்கான் நடித்த பி.கே திரைப்படத்திற்கு விமர்சனம் வந்த உடனே உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு அந்த கருத்தை நீக்கச் சொல்கிறது. எப்படி முஸ்லிம் நடிகர் ஒரு இந்துவாக நடிக்க முடியும் என்று கேள்வி கேட்டார்கள். தீபிகா படுகோனே ஒரு படத்தில் நடிக்கும் பொழுது அவரின் ஸ்கர்ட் காவி உடையில் ஒரு மாதிரியான குங்கும நிறத்தில் (saffron) இருந்தது. உடனே சங் பரிவார அமைப்பு, மாட்டு மூத்திரத்தை குடிப்பவன், குரங்கை வழிபடுபவன் வழக்கு போட்டு விடுகிறான். உடனே உச்சநீதிமன்றமும் தலையிடுகிறது.
நான் இங்கு ஒரு செய்தியை சொல்கிறேன். எங்கள் தாத்தா 1960-ல் உருவான பின்னி மில்லில் வேலை செய்தவர். அங்கு துணிகள் மீந்து போனால் வீட்டுக்கு எடுத்து வந்து விடுவார்கள். அப்பொழுதெல்லாம் பெரியவர்கள் உள்ளாடையாக கோமணம் துணி தான் கட்டுவார்கள். அந்தத் துணி காவி (Saffron) நிறம் கொண்டதுதான். இன்றைக்கு இந்த முட்டாள்கள் ஒரு அடையாளமாக பேசுவது போல அப்போது அந்த நிறமில்லை. நிறத்தை நிறமாக பார்த்தார்கள். அவ்வளவுதான். தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீக்கக்கூடிய அளவுக்கு இங்கு அரசாங்கம் இருக்கிறது என்றால், இப்போது எங்கள் தாத்தா இருந்திருந்தால், அவருடைய கோமணத்தைக் கூட உருவி இருப்பார்கள். மனிதருடைய நாகரிகம் என்பது வளர்ச்சிதான் என்பதை அறியாத முட்டாள்கள்.
தமிழ்நாட்டில் இருந்து நீதி கேட்கும் பொழுது தமிழர்களை இழிவாக இந்திய அரசும், சென்சார் போர்டும் நடத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளாக சென்சார் போர்டின் அதிகாரிகள் பலர் அந்தப் பதவியில் இருந்து வெளியே செல்வதாக எழுதிக் கொடுத்து வெளியேறியிருகிறார்கள. திரைப்பட தணிக்கை வாரியத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட விடமாட்டேன் என்று பலரும் கூறிவிட்டு பதவி நீங்கியிருக்கிறார்கள்.
இதைவிட உச்சக்கட்டம் என்ன தெரியுமா? மேற்கு வங்கத்தில் ஒரு வழக்கு வந்தது. இரண்டு ஐந்தறிவு ஜீவன் கொண்ட புலிகளுக்கு அக்பர், சீதா என்று பெயர் வைத்து விட்டார்கள். உடனே சங்பரிவார அமைப்புகள் இந்த இரண்டு புலிகளையும் ஒரே கூண்டில் அடைக்கக்கூடாது என்று குதித்தார்கள். உடனே உச்சநீதிமன்றம் தலையிட்டு பெயரை மாற்றச் சொன்னது.
ஐந்தறிவு கொண்ட எங்கள் வீட்டு நாய்க்கு டாமி, முருகன், ஐயப்பன், என்று பெயர் வைப்போம். ஏன் யானைக்குட்டிக்கு, பூனைக்குட்டிக்கு மாடுகளுக்கு வைக்கும் பெயர்களுக்கு எல்லாம் சங்பரிவார அமைப்புகளுக்கு மனம் புண்பட்டு விடுகிறது. ஆனால் ஒரு இனத்தை குற்றப்பரம்பரையா விமர்சித்து பேசி இருக்கின்ற, காட்சி அமைப்புகளை வைத்திருக்கின்ற இப்படத்திற்கு இந்திய அரசு ஒப்புதலோடு சென்சார்போடு அனுமதி கொடுத்திருக்கிறது. இதுதான் இந்தியப் பார்ப்பனியக் கட்டமைப்பு.
இது தமிழர்களுக்கு எதிராக நடத்தக்கூடிய போர்தான். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை ஈழத்திற்கு ஆதரவான படங்கள் இங்கு வெளிவந்திருக்கிறது? பேட் கேர்ள் என்ற திரைப்பட முன்னோட்டம் (டீசர்) ஒன்று வெளி வந்ததும், அதை எதிர்த்து சங்பரிவார அமைப்புகள் கூச்சல் இட்டதும், உடனே உயர் நீதிமன்றம் நீக்க சொல்கிறது. அவ்வளவு ஏன், இன்றைக்கு கோபி சுதாகர் இருவரும் நடத்தும் யுடியூப் சேனலில், திருப்பரங்குன்றம் தொடர்பாக பேசிய போது எதிர்ப்பு தெரிவித்து நீக்க வைக்கிறார்கள். கவினுடைய படுகொலை கண்டித்து போடும்போது சென்சார் இருக்கிறது. அதையெல்லாம் நீக்குங்கள் என்கிறார்கள்.
நான் ஒரு கேள்வி கேட்கிறேன். சங்கராச்சாரியைப் பற்றி படம் எடுத்தால் எங்களை அனுமதிப்பீர்களா? நித்தியானந்த லீலைகள் பற்றி படம் எடுத்தால் அனுமதிப்பீர்களா? கீழடியோட உண்மைத் தன்மையை நிலைநாட்ட படம் எடுத்தால் அதை அனுமதிப்பீர்களா? அப்படியென்றால் அனைத்து அரசியலையும் டெல்லி அதிகாரக் கட்டமைப்பில் இருந்து பார்க்கிறார்கள்.
நாங்கள் கேட்கும் கிங்டம் திரைப்படத்தின் முடக்கம் என்பது தமிழ்நாட்டிலிருந்து எங்கள் நீதியை நாங்கள் உரக்க சொல்வதற்குத்தான். அதற்காகவே இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். விஜய் தேவர கொண்டாவுடைய கடந்த நான்கைக்கு படங்கள் ஓடவில்லை. உடனே பான் இந்தியா படமாக மாற்றி அதில் ஈழத் தமிழர்களையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தக்கூடிய இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். உடனடியாக இந்த காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
ஒரே ஒரு மிக முக்கியமான கோரிக்கை. இந்திய வரலாற்றில் உள்ள தேசிய இனங்கள் வரலாறை டெல்லிக்காரர்களும் இந்துத்துவ அமைப்பும் எழுதக்கூடாது. அந்தந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய கட்டமைப்புகளில் உள்ள அறிஞர்கள், ஆசிரியர்கள் வர்க்கம் தான் எழுத வேண்டும். அந்தக் கட்டமைப்பு கூறுகளே அந்தந்த தேசிய இனத்துடைய மொழி, கலாச்சாரம், பண்பாட்டை அங்கீகரித்து நூல்களாக ஆவணங்களாக வெளிக்கொண்டு வரும். அப்படி வந்தால் தான் இதற்கெல்லாம் ஒரு மாற்றம் வரும். தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக வரும் படத்தை இந்தியா ஆதரிக்க கூடாது. தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள நிலப்பரப்பில் அதனை திரையிடக்கூடாது. என்ற முழக்கத்தை வைத்து, இதற்கு மேலும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக படம் வரும் பட்சத்தில் அந்தப் படத்தை நீக்குவதற்கான அத்தனைப் போராட்டத்தையும் நாங்கள் முன்னெடுப்போம். ஒருவேளை அது நடக்காவிட்டால் இந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவர கொண்டாவுடைய படம் இனி தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வெளியாகிறதோ அதை எதிர்த்து மே 17 இயக்கம் களமாடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். – இவ்வாறு தோழர். பிரவீன் குமார் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
ஒரு மாநிலத்தின் பாஜக எதிர்ப்பு மனநிலையை பயங்கரவாதமாக சித்தரிக்கும் சதித் திட்டங்களை தீட்டுபவர்களாக இந்துத்துவ, சங்பரிவாரக் கூட்டத்தினர் இருக்கிறார்கள். இதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக காஷ்மீர் இருக்கிறது. காஷ்மீரை பயங்கரவாதிகளின் கூடாரமாகக் காட்ட காஷ்மீருக்கு எதிரான திரைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தன. அதைப் போல தமிழ்நாட்டின் மீது கருத்துருவாக்கக் கட்டமைப்பை செய்ய திரைப்படங்களை பயன்படுத்துகிறார்கள். முதன்மையான கருத்துருவாக்க ஆயுதமாக இருக்கும் திரையுலகின் நுட்பமான அரசியலைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை தமிழர்கள் வளர்த்துக் கொண்டு, அதற்கு எதிரான போராட்டங்களை கட்டமைப்பதே, தொடர்ச்சியாக தமிழர்களை, ஈழத் தமிழர்களை, விடுதலைப் போராளிகளை இழிவுபடுத்தும் திரைப்படங்கள் எடுக்கப்படுவது தடுக்கப்படும்.