கொல்கத்தாவின் ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையில் ஆகஸ்ட் 9, 2024 அன்று, பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவ பணிகளே முடங்கும் வண்ணம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
கொல்லப்பட்ட பயிற்சி பெண் மருத்துவர், ஆகத்து 8 அன்று இரவுப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் உடல் களைப்பின் காரணமாக மருத்துவமனையின் உள்ள கருத்தரங்க அறையில் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். அடுத்த நாள், அவர் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார். கண்கள் சிதைக்கப்பட்டும், வாய், கை, வயிறு பகுதியில் கீறல்களும், கழுத்து, கால் எலும்பு உடைக்கப்பட்டும், பிறப்புறுப்பு கடுமையாக சிதைக்கப்பட்டும், கொடூரமான பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் 150 மி.கி அளவில் விந்தணுக்கள் அவர் உறுப்பில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளில் 15 மி.லிக்கும் குறைவான விந்தணுக்களே இருக்கும் எனும் போது, 150 மி.கி என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பயிற்சி மருத்துவர்களும், அப்பெண்ணின் பெற்றோரும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக சஞ்சய் ராய் என்னும் ஒருவரை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. மருத்துவர் உறங்கிய கருத்துரங்கம் அறைக்கு சென்ற போது அவனிடம் இருந்த நீலத்தொடர்பியல் (bluetooth) கருவி, திரும்பும் போது இல்லையென கணினித்திரை (CCTV) கருவி வழியாக உறுதிப்படுத்தப்பட்டது. கொலை செய்யப்பட்ட மருத்துவர் அறையில் அது கிடைத்ததை ஆதாரமாகக் கொண்டு அவன் கைது செய்யப்பட்டு இருக்கிறான்.
விடியற்காலை 4 மணிக்கு உள்ளே சென்ற சஞ்சய் ராய், 4.45 மணிக்கு வெளியே சென்றிருக்கிறான் என்று கேமரா பதிவு காட்டுகிறது. ’முக்கால் மணி நேரத்தில் ஒரு மனிதனுக்கு 150 மி.லி விந்தணு வெளியேறுவது என்பது சாத்தியமே இல்லை’ என மருத்துவர்கள் அறிக்கை கூறுகிறது. பலர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தால் ஒழிய இது சாத்தியமில்லை என்பது பலத்த சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆரம்பத்தில் தற்கொலை எனவே கூறியது. எனினும் மருத்துவர்களின் போராட்டத்தின் பிறகு. அதில் ‘சஞ்சய் ராய்’ கைது செய்யப்பட்டு இருக்கிறார். போராட்டம் நடக்கும் போதே, சிலர் உள்ளிருக்கும் குறிப்பிட்ட கேமராக்களை உடைத்துள்ளனர். இவையெல்லாம் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சஞ்சய் ராய், கொல்கத்தாவின் காவல்துறையில் தன்னார்வலராக இணைந்து பணிபுரிந்த காவலர்களின் கையாள் (friends of police) என குறிப்பிடப்படுகிறது. சஞ்சய் ராயின் பணி என்பது ஏறக்குறைய ஊர்க்காவல்படையினரைப் போல பாதுகாப்பு பணி போன்றதே. மருத்துவமனைக்கு வெளியே உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில்தான் அவனுக்கு பணி. அவன் மூன்று திருமணங்களுக்கு மேல் செய்திருக்கிறான். மேலும் பலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறான் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷ், அப்பெண் எதற்கு இரவு நேரம் மூத்த மருத்துவ மாணவர்களுடன் ஏன் சென்றார் என கேட்டிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் கோபமடைந்த மருத்துவர்கள் கல்லூரி முதல்வர்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் உடனே மேற்குவங்க அரசு வேறொரு மருத்துவமனைக்கு முதல்வராக நியமித்திருக்கிறது.
ஏற்கனவே அந்த மருத்துவமனையின் முதல்வர் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தற்போது மருத்துவர் படுகொலைக்கு பின்னர் முன்னாள் சந்தீப் கோஷ் மீது கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் போராட்டக்காரர்கள். இவரோடு மருத்துவக் கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஷ்தாவையும், அந்தப் பதவியில் இருந்து மாநில அரசு நீக்கியுள்ளது. இருவருமே இந்த விவகாரத்தின் தீவிரத்தை குறைக்க முயன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. தொடர் போராட்டத்தின் விளைவாக இந்த குற்றத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை கூறியது.
மருத்துவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும், ஆர்.ஜி கர் மருத்துவமனையின் 4 மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதுவரை மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோதை, 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டங்கள் இந்தியா முழுதும் வேகம் எடுத்துள்ளன. இதன் காரணமாக பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 8 மணி தொடக்கி ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 8 மணிவரை (24 மணி நேரம்) மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் நடந்த இந்த பாலியல் குற்றத்தின் சூடு ஆறுவதற்குள், ஆகஸ்ட் 12 ந் தேதி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியிலுள்ள இளம்பெண் ஒருவரை அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் கும்பல் கூட்டுப் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கியுள்ளனர். பாப்பநாடு அருகிலுள்ள ஆவிடநல்ல விஜயபுரம் என்ற ஊரின் மேலத்தெருவை சேர்ந்த இளங்கலை பட்டம் பெற்ற இளம்பெணான அவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் சொந்த ஊருக்கு வந்திருந்த போது, தெற்குக் கோட்டையை சேர்ந்த கவிதாசன் என்பவன் மிரட்டி தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று தனது கூட்டாளிகளுடன் இணைந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இத்தகைய வன்கொடுமை செயலில் ஈடுபட்டதோடு, அதனை காணொளியாகவும் பதிவு செய்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். அந்தப் பெண் அளித்த புகாருக்குப் பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தநாடு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை! பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்! – மே பதினேழு இயக்கம் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/plugins/post.php?
இவ்வாறு பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. நிர்பயா என்ற டெல்லி மருத்துவ மாணவி 2012 -ல் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். அப்போது நாடெங்கும் பல்வேறு கண்டன குரல்கள் ஒலித்தது. பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி கேள்வி எழுந்தது. அப்போது பாஜக-வும் பொங்கி எழுந்தது. மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தியது. பாஜக ஆட்சி வந்து இந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. அது தேசிய குற்றவியல் ஆவண அறிக்கையின் மூலமே தெரிகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளை மேற்கோள்காட்டி அறிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 2014 இல் 3,37,922 இல் இருந்து 2020 இல் 3,71,503 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேருக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 56.3 லிருந்து அதிகரித்துள்ளது. தற்போது ஐந்து லட்ச குற்றங்கள் நடந்திருப்பாதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அட்டணை கீழே
எண் | மாநிலம் பெயர் | பாலியல் குற்ற எண்ணிக்கை |
1 | உத்தரப் பிரதேசம் | 65743 |
2 | மகாராஷ்டிரா | 45331 |
3 | ராஜஸ்தான் | 45058 |
4 | மேற்கு வங்கம் | 34738 |
5 | மத்திய பிரேதம் | 32765 |
6 | ஆந்திரா | 25503 |
7 | தெலுங்கானா | 22066 |
8 | பீகார் | 20222 |
9 | கேரளா | 15213 |
10 | தமிழ்நாடு | 9207 |
கடந்த 2022 ஆண்டு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்களின் மொத்த வழக்குகளில் 2,23,635 எண்ணிக்கை ஆகும். இதில் முதல் ஐந்து மாநிலங்கள் மட்டுமே 50.2% குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. அதாவது ஒரு நாளில் 86 பேரும், ஒரு மணி நேரத்தில் சராசரி 3 பேர் மீதும் பாலியல் குற்றங்கள் நிகழ்கிறது.
இதனோடு கடத்தல், கொலை, வன்முறை மற்றும் கண்ணியத்தை குறைத்தல் போன்ற
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 4,45,256 குற்றங்கள் நடந்துள்ளது. இந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதாவது 51 நிமிடங்களுக்கு ஒரு குற்றம் நிகழ்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவணத்தில் தரவு தெரிவிக்கிறது. 2023 ஆம் ஆண்டு குற்றவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆளும் மாநிலங்களில், மற்ற மாநிலங்களை விட பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகமானதாக குற்றங்கள் நடந்தாலும், மேற்கு வங்கத்தில் நடந்த இந்த கொடுமையை சுட்டிக்காட்டி சுதந்திர தின உரையில் மோடி பேசுகிறார். பாஜக-வினரால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு போராட்டம் நடந்த போதும், ராணுவ வீரர் மனைவி முதற்கொண்டு நூற்றுக்கணக்கான பெண்கள் மணிப்பூரில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட போதும் மோடி வாய் மூடி மெளனம் காத்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகளவில் நடக்கின்றன. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை மட்டுமே பேசுகிறாரே தவிர, பாஜக ஆளும் மாநிலங்களில் நடப்பதை பற்றி மெளனம் காக்கிறார்.
மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவன் காவலர் பணியாற்றுவதற்காக தன்னார்வலர்களாக பணிக்கு சேர்ந்தவன். காவலர் கையாள்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கொடுப்பது யாரென்கிற கேள்வி எழுகிறது. காவல்துறை அதிகாரிகளுக்கு பல சட்ட விதிகள் இருக்கும் போது, தன்னார்வலர்கள் பெயரில் தாமாகவே முன்வந்து சேர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.
பொதுவாக இந்துத்துவ வெறி ஊட்டப்படும் மனிதர்களிடம் பெண்களை சக உயிராக நினைக்கும் சமத்துவம் என்பது சனாதன சித்தாந்தத்தில் துளியும் இல்லை. சாதிய பாகுபாடு, மத வெறுப்பு, பெண் அடிமைத்தனம் போன்ற இயற்கைக்கு முரணான, மனுதர்மத்துக்கு ஆதரவான கருத்துக்களே ஊறியவர்கள் காவலர்களின் கையாள் (friends of Police) பணிக்கு சேரும் போது, தாங்களும் காவலரே என்ற அதிகாரமும் பெண்களின் உடல் மீதான மலிவான எண்ணமும் கூடவே சேர்கிறது. பட்டியலின பழங்குடி சமூக பெண்களின் மீது காவல்துறையினர் பாலியல் அத்துமீறல்களை செய்வதை கடந்த காலங்களில் பார்த்துள்ளோம்.
உயர் பதவி வகிக்கும் பெண்களில் இருந்து சாமானிய பெண்கள் வரை, சிறு பிள்ளைகளில் இருந்து மூதாட்டிகள் வரை பெண்களின் உடலை காம இச்சைக்கான ஒரு பொருளாகப் பார்க்கவே கற்பித்தது சனாதன சித்தாந்தம். அதையே ஆன்மீகத்திற்கான திறவுகோல் என நிறுவும் பார்ப்பனிய, ஆர்.எஸ்.எஸ், பாஜக சங்கிகளின் கட்டமைப்புகளில் இந்திய அதிகாரம் இருக்கிறது. இதனைப் பின்பற்றும் ஆண்களின் மூளையில் பெண்கள் சமத்துவமானவர்கள் அல்ல என்ற எண்ணம் தானாகவே ஊட்டப்படுகிறது.
இப்படியான ஆணாதிக்க மனநிலைக்கு இந்துத்துவவாதிகள் வளர்க்கும் மதவெறியும், சாதிய ஆதிக்கவாதிகள் வளர்க்கும் சாதியமும் முக்கியக் காரணிகளாகின்றன. இந்த சனாதன சிந்தனையில் வளர்பவர்கள், வாய்ப்பு கிடைக்கும் போது தனிமையில் இருக்கும் பெண்கள் மீது பாலியல் வெறியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் வன்கொடுமைகளை மேற்கொள்கின்றனர்.
இதற்கு அடிமட்டத்தில் இருந்து தீர்வு காண வேண்டும் எனில், ஆணோ பெண்ணோ பிறப்பில் சமமாக பிறந்தது போல வளர்வதும் இயல்பாகவே இருக்க வேண்டும். பெண் இயற்கையானவள் போல, அவர்கள் உடலும் இயற்கையானது. அவர்களுக்கும் விருப்பம், வெறுப்பு உண்டு, அதை ஆண் சமூகம் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்தி பெண்களின் கருத்துக்களையும் விருப்பங்களையும் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். அதற்கு பகுத்தறிவு ரீதியான முற்போக்கு சிந்தனைகளே உதவும். சாதி, மதம் ஒழிக்கும் முற்போக்கான கருத்தியல் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் முதற்கொண்ட பல குற்றங்களும் ஒழியும். அவற்றை நோக்கிய பார்வையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
இந்த செய்திகளைக் கேட்டதும் தனித்த செய்திகளாகப் பார்த்து உணர்ச்சிப் பூர்வமாக அணுகி விட்டு, அதன் பின்பு மறந்து அவரவர் பணிக்கு திரும்புவது இயல்பாகி விட்டது. இது தனி மனிதனின் சிந்தனையில் காலம் காலமாக திணித்து வளர்க்கப்பட்ட சனாதனத்தின் விளைச்சல். சனாதனம் அகற்றி சமத்துவ சமூகம் அமைக்கும் களத்தில் தொடர்ந்து பயணிப்போம்.