“தனது மொழியையும், மரபையும் பறிக்கிறார்கள் என்றால், அதை எதிர்த்து மக்கள் போராட ஆரம்பித்து விடுவார்கள். இப்போது சண்டை போடும் சாதி, மதம் எல்லாம் வருவதற்கு முன்பே அவனை ஒன்றாக இருக்க வைத்தது அவனுடைய மொழியும் மரபும் தான் …” – விடுதலை – 2 திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் வைத்திருக்கும் வசனம், படத்தின் நாயகனான விஜய் சேதுபதியிடம், காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தும் பொழுது சொல்லும்படியான ஒரு காட்சியாக இந்த வசனம் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த வசனக்காட்சி தமிழர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் தானாகவே நினைவூட்டி விடுபவை.
தமிழர்கள் மீது இந்தி மொழியை எப்படியாவது திணித்து விட வேண்டுமென்கிற டெல்லி அரசின் ஆதிக்க வரலாறென்பது நூற்றாண்டைக் கொண்டது. 1938-லிருந்து தொடங்கிய மொழிப் போர் இன்றும் நீடிக்கிறது. பள்ளிகளில் இராசாசி(Rajaji) நுழைக்கப் பார்த்த இந்தியை எதிர்த்து அன்று பெரியாரின் தலைமையில் மக்கள் உணர்வெழுச்சியுடன் திரண்டனர். சாதி, மதம், இனம் எனப் பார்க்கவில்லை. இன்று திராவிட இயக்கப் போராளிகள் பலரை தெலுங்கர்கள் என்று இனவாதிகள் வன்மத்தை விதைக்கிறார்கள். அன்று தமிழுக்காக திரண்டவர்கள் தமிழர்களாக நின்றே போராட்டம் நடத்திய வரலாறுகளை இந்த இனவாதிகள் அறியமாட்டார்கள். தங்களின் தாய் மொழி தமிழ் என்று உணர்ந்த காரணத்தினால் உயிரையும் பொருட்படுத்தாது முன்னணிப் படைவீரர்களாய் அவர்களும் நின்றனர். உயிரை விட மொழியை மூச்சாக நினைத்த தியாகிகளின் ஈகையின் பின்னே சாதி, மதம் கடந்த மக்கள் ஒரு தாய் பிள்ளைகளாய் திரண்டனர். இராசாசி அடங்கினார். ஆனால் டெல்லி அரசு இந்தித் திணிப்பை நிறுத்தவில்லை. 1948, 1950, 1965 என பள்ளிகளில் விருப்பப் பாடமாக, அலுவல் மொழியாக இந்தி நுழையப் பார்த்தது. ஒன்றிணைந்த மக்களின் திரட்சியே இந்தியை அடித்து விரட்டியது.
இந்தி மொழி எதிர்ப்பு என்பது மொழிப் போராக பார்க்கப்பட்டாலும், அது அடிப்படையில் பண்பாட்டுப் போர். இந்தியா முழுமைக்கும் தங்களின் சமசுகிருத ஆதிக்கத்தை நிறுவ பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட போர். தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட அப்போரினை தங்களின் போராட்ட வடிவங்களால் தலைவர்கள் வழிநடத்த மக்கள் பின்னே அணிவகுத்தனர். இப்போர் இந்தி எதிர்ப்பு வரலாற்று அரணாக இருப்பதால், இன்றுவரை இந்தியால் இங்கு நுழைய முடியவில்லை.
கடந்த நூற்றாண்டுகளில் நடந்த மொழிப்போரை அடுத்து, தமிழர்களின் போராட்ட குணம் மழுங்கியிருக்கும் என நினைத்த எதிரிகளுக்கு ஜல்லிக்கட்டு போராட்டம் சாட்டையடி கொடுத்தது. 2017-ல் ஜல்லிக்கட்டுக்காக பொங்கியெழுந்த தமிழர்களின் திரட்சியில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் உயிர்ப்பு கலந்தது. தமிழ் சமூகத்தின் தொன்மை பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற போது தமிழினம் எழுந்தது. விலங்கு நல ஆர்வலர்கள் என்கிற போர்வையில் உயர்சாதிப் பார்ப்பனியக் கூட்டம் இதனைத் தடையிட நீதிமன்றம் வரை சென்று தடை வாங்கியது. இந்தத் தடையை எதிர்த்தே மாணவர் படை திரண்டது. எந்த வித அரசியல், கோட்பாட்டு, தத்துவப் பின்புலமும் இல்லாத மாணவர்களின் திரட்சியால் ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததும், அதற்கு மோடிதான் காரணமென அண்ணாமலை புகழாரம் சூட்டினார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதும், மீண்டும் பீட்டா நிறுவனம் தடை விதிக்கக்கோரி வழக்கு தொடுத்தது. அதில் மோடி அரசின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியமும் தங்களை ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டது. ஜல்லிக்கட்டிற்காக திரண்ட மக்கள் திரள் தந்த நெருக்கடியை தமிழக அரசு உணர்ந்ததன் மூலமே ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக வாதிட்டது. இறுதியில் 2023-அன்று வந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டினை உறுதிப்படுத்தியது.
இந்தப் போராட்டத்தில் மக்களின் பண்பாடு மட்டுமே முன்னின்றது அன்றி, சாதிய உணர்வு முன் நிற்கவில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கூடப் பார்த்திராத இளைஞர் கூட்டத்தின் திரட்சியைக் கண்டு அரசு, அதிகார வட்டங்கள் அதிர்ச்சி அடைந்தன. ஜல்லிக்கட்டுப் புரட்சிக்கு உரம் போட்ட இடம் மெரினா கடற்கரை என்பதன் விளைவாகவே, மெரினாவில் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தும் அனுமதி மறுக்கப்பட்டது. இலங்கை இனவெறி அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான நினைவேந்தல் நடத்தக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழர்களின் பண்பாட்டு உரிமையான நினைவேந்தலை கடற்கரையில் நடத்துவதை விட்டுக் கொடுக்க முடியாது என மெரினாவில் விதித்த தடையை மீறி நினைவேந்தல் நடத்தினார்கள் மே 17 இயக்கத் தோழர்கள். இந்த காரணத்தினால்தான் தோழர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழமை அமைப்பின் தோழர்கள் எடப்பாடி அரசின் அடக்குமுறைக்கு ஆளானார்கள். மோடி அரசு திணித்த மக்கள் விரோத சட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்திய மே 17 இயக்கத்தை அடக்கவே இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது பாஜக அரசு. அதற்கு எடப்பாடி அரசும் துணை சென்று குண்டர் சட்டத்தை ஏவியது. இதன் மீதான வழக்கு கடந்த 7 வருடங்களாக நடத்தப்பட்டது. இறுதியில் இந்த வருடம் 2024-ல் இந்த வழக்கு புனையப்பட்டது என நீதிமன்றத்தால் தீர்ப்பு வந்தது. அரசும், அதிகார மட்டமும் கேள்வி கேட்பவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு இந்த ஏழு வருட அலைக்கழிப்புகளே சான்றாக இருக்கிறது.
இயக்குநர் வெற்றிமாறனின் வசனத்திற்கு உரிய தமிழர்களின் மொழிப் போராட்டமும், ஜல்லிக்கட்டுப் போராட்டமும் மக்களை சாதி, மதப் பாகுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து போராட வைத்தது. தமிழ்த் தேசிய இனத்தின் காவல் அரண்களாக விளங்கிய திராவிடத் தலைமைகளுடன் இணைந்து தமிழ்த்தேசிய தலைவர்கள், அறிவாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் போராட்டங்களை வடிவமைத்தனர். மக்கள் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து மொழி, பண்பாட்டிற்காக திரண்டனர். மொழிப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே பல்வேறு உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தியா முழுமையும் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய பெரியாரின் சமூக நீதிப் போராட்டம், தீண்டாமை இழிவைப் போக்க அரசியல் சட்டப்பிரிவு எரிப்புப் போராட்டம், எல்லை மீட்பு போராட்டம் என இவையெல்லாம் மொழிப் போராட்டத்தின் தொடர்ச்சியாக வந்தவையாக அமைந்தன.
தமிழ்த் தேசிய இனத்தின் மொழி, மரபு சார்ந்த இந்த போராட்டங்கள் ஒரு புறம் என்றால், பொதுவுடைமைவாதிகள் கட்டி எழுப்பிய போராட்டங்கள் மக்களின் வாழ்வாதாரமும், உரிமைகளும் சார்ந்தவை. பண்ணை, ஆலை முதலாளிகள் அளித்த கடும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது விவசாயத் தொழிலாளர்களை, ஆலைத் தொழிலாளர்களை உழைப்பாளர் வர்க்கத்தின் அடிப்படையில் ஒன்று திரட்டி சங்கங்களைக் கட்டினர். அவர்களின் சுயமரியாதையை மீட்டெடுத்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தினர்.
இருநூறு வருடங்களுக்கு முன்பே, வெள்ளையர்களை எதிர்த்து நிற்க சாதி, மதம் கடந்து திரண்டவர்களே தமிழர்கள். தீரன் சின்னமலை திரட்டிய புரட்சிக் கூட்டமைப்பில் மண்ணைக் காக்க பாளையக்காரர்களும், படை வீரர்களும் இணைந்தனர். புரட்சிப்படை நடத்திய சண்டையில் இசுலாமியர்கள் 36 பேர் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டார்கள். கோவைப் புரட்சியைத் தொடர்ந்து வேலூர் புரட்சி என சாதி, மதம் கடந்து திரண்ட தமிழர்களின் தொடர்ச்சியே நூற்றாண்டுகளுக்கு முந்தைய மொழிப் போரும், இன்றைய ஜல்லிக்கட்டுப் போராட்டங்களும்.
மேலும், அதே காட்சியில், ‘நாங்கள் அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது கூட உங்களுக்கு வராத பயம், நிலம், மக்கள், மொழி என்று மக்களை ஒன்று படுத்தும் போது, அதை மக்கள் ஏற்றுக் கொண்டு எங்கள் பின்னால் வந்து விடுவார்களோ எனும் போது, உங்களுக்கு பயம் வந்தது. இந்த பயத்தினால் தான் எங்களை பிரிவினைவாதிகள் என்று சொல்ல ஆரம்பித்தீர்கள். ஒரு மனிதன் பிறந்ததுமே மேல், கீழ் என்று பிரிக்கும் நீங்கள் பிரிவினைவாதிகளா அல்லது எல்லோரும் சமம், மேல்-கீழ் என்ற ஒன்று கிடையாது என்பதற்காக போராடும் நாங்கள் பிரிவினைவாதிகளா‘ என விஜய் சேதுபதி கேட்பார்.
இந்த வசனத்தின் படியே அனைத்து போராட்டங்களும் ஆளும் அதிகாரத் தரப்புகளால் கையாளப்பட்டது. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என மொழிப் போரில் முழங்கிய பெரியாருக்கு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டதும், சட்ட எரிப்புக்கு சட்டமே இல்லாத நிலையில், அவசரம் அவசரமாக அதற்கான தண்டனைக்கான சட்டம் உருவாக்கப்பட்டதும், ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்த பின்பு மக்கள் திரளுக்கு சாத்தியமின்றி மெரினா பூட்டப்பட்டதும் என சாதி, மதம் கடந்த போராட்டங்கள் மக்கள் திரளாக நடந்து விடக் கூடாது என டெல்லி அரசு, அதிகார பார்ப்பனிய மட்டங்கள் இணைந்து செய்த சூழ்ச்சிகளின் விளைவுகள் இவை. தமிழர் பண்பாடான நினைவேந்தலை விட்டுக் கொடுக்க முடியாது என உறுதியுடன் நின்ற தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களை ஏழு வருடமாக நீதிமன்றத்திற்கு அலைக்கழித்ததோடு, மக்கள் போராட்டங்களில் நின்றதற்காக பிரிவினைவாதி எனப் பட்டமும் அளித்து தேசத்துரோக சட்டத்தில் அடைத்தது எல்லாம் இதன் சாட்சியங்கள்.
இன்றும் பன்னாட்டு முதலாளியான சாம்சங் நிறுவனத்தில் சங்கம் அமைக்கப் போராடுகிறார்கள் பொதுவுடைமைவாதிகள். அரசு, அதிகார மட்டத்தின் ஆதிக்க எல்லை டெல்லி வரையிலானது. திராவிடமும், இடதுசாரியமும் கைக்கோர்த்து நின்ற வரலாற்றை அதன் பின்னணியில் வந்தவர்களே பேசாமல் கடப்பதுதான், எதிர்சக்திகள் வலிமையாவதற்கு காரணமென்பதை அறிந்து கொள்ளும் மனம் இல்லாமல் திராவிட, இடதுசாரி ஆளுமைகள் பலரும் இப்படத்தினைக் கடக்கிறார்கள். ஆனால் இப்படம் ஒரு வரலாற்று ஆவணம். இப்படத்தில் வருகின்ற ஒவ்வொரு வசனத்திற்கு பின்பும், தமிழர்களின் போராட்ட வரலாறுகளை ஆழமாக ஆய்ந்து அறிந்து வெற்றிமாறன் அவர்களின் பேராற்றல் வெளிப்படுகிறது. ஐந்து நிமிடத்தில் வரும் இவ்வசனங்களே தமிழினம் கடந்த பெரும் போராட்டங்களின் தொகுப்புகளாக இருக்கின்றன. படம் முழுக்க பேசப்படும் வசனங்கள் தமிழர் வரலாற்றின் பல பக்கங்களைத் திறப்பவை. மக்களின் வரலாற்று விவாதத்திற்கு உரிய படம் விடுதலை -2.
‘என்றைக்கு இந்த சிவப்பு சட்டையும், கருப்பு சட்டையும் ஊருக்குள் வந்ததோ, அன்றைக்கே ஊர் இரண்டாக ஆகிப் போச்சுய்யா.. ஊரையே கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிட்டீங்க’ – என்று ஒரு காட்சியில் பண்ணையார் சொல்லுவார். ஆதிக்க வளையத்தில் பெருங் கொடுமைகளை எல்லாம் அமைதியாக கடந்த சமூகங்கள், இரண்டின் வரவுகளினால் தான் சுயமரியாதையும், உரிமையும் பெற்று தலைநிமிர்ந்தன என்பதனை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இப்படம்.
விடுதலை சொல்லும் அரசியல் தொடரும்….
விடுதலை படத்தில் பெண்ணியம் குறித்தான படைப்புகள் மற்றும் கதையமைப்பின் ஊடாக அதனைக் குறித்து பேசுகிறார் இயக்குனர். வாசிக்க இணப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.