
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பல தலைமுறைகளாக வேலை செய்த தொழிலாளர்கள் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். அட்டைப்பூச்சி ரத்தத்தை உறிஞ்சுவது போல அவர்கள் உழைப்பை உறிஞ்சிய பின் பிபிடிசி நிறுவனத்தால் தற்போது சக்கையாக வெளியில் வீசப்பட்டிருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது மாஞ்சோலை எஸ்டேட். மேற்கு தொடர்ச்சி மலையடுக்கில் சுமார் 3500 அடி உயரத்தில் உள்ள இந்தப்பகுதியில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. அப்போதைய சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான இந்தப் பகுதியை 1919ம் ஆண்டில் ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்‘ (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றிருந்தது. 1948ம் ஆண்டில் இரயத்துவாரி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகும், இந்நிறுவனம் அரசுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டு தேயிலைத் தோட்டத்தை நடத்தி வருகிறது.

சுமார் 8373 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட இந்த இடத்தில் பிபிடிசி நிறுவனம் தேயிலை, காபி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்றவற்றைப் பயிரிட்டது. திருநெல்வேலி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு கூலி வேலை செய்கின்றனர். ‘கங்காணிகள்’ எனப்படும் தரகர்கள் மூலமாக பணியமர்த்தப்பட்ட இவர்களும் இவர்கள் குடும்பத்தினரும் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு என்று எந்த நில புலன்களோ கிடையாது.
சுமார் 1000-திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தோட்டத் தொழிலாளர்கள் மாஞ்சோலையில் கூலி வேலை செய்தனர். பல ஆண்டுகளாக மிகக் குறைந்த தொகைக்குப் பணிபுரிந்த இந்தத் தொழிலாளர்கள் போராடியே தங்கள் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்ளும் சூழல் இருந்தது.

மாஞ்சோலை தொழிலாளர்கள் அடிப்படை உரிமைக்காக ஜூலை 23, 1999ஆம் ஆண்டு போராடியபோது, அவர்கள் மீது தமிழ்நாட்டுக் காவல்துறை திட்டமிட்டுக் கொன்று ஆற்றில் வீசியது. இந்த ‘மாஞ்சோலைப் படுகொலை’ தமிழ்நாட்டின் கருப்பு நாளாக மாறியது. (விரிவான கட்டுரையை வாசிக்க: https://may17kural.com/wp/history-of-manjolai-labourers-protest/)
பிபிடிசி நிறுவனத்திற்காக கடுமையாக உழைத்தாலும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் குறையவில்லை. இந்தப் பகுதிகளில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் இருந்ததால் தொழிலாளர்கள் தங்களுடைய குழந்தைகளை அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள். மேலும் கரோனா காலத்தில் மாஞ்சோலை பகுதிகளில் முறையான இணைய வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் சூழல் ஏற்பட்டது.
முறையான போக்குவரத்து வசதிகளும் இவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன. தொழிலாளர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கும் கோவில்விழா உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்கும் கரடு முரடான மலைப் பகுதிகளில் பயணம் செய்தே தரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருந்தது. தொழிலாளர்களுக்கு முறையான மருத்துவ வசதிகளையும் பிபிடிசி நிறுவனம் செய்து தரவில்லை. விஷக்கடி, அவசர சிகிச்சை, பிரசவம் என அனைத்திற்கும் 80 கீ.மீட்டருக்கு அப்பால் உள்ள நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையே இருந்தது.
இத்தகைய சூழலில்தான், குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில் தொழிலாளர்களை வெளியேற்றி இருக்கிறது பிபிடிசி நிறுவனம். மாஞ்சோலை பகுதியை வனத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் தொழிலார்களுக்கு கட்டாய ஓய்விற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதோடு தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்யவும் பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு வழங்கியிருக்கிறது.
விருப்ப ஓய்வை பெறவில்லையென்றால் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்படும் என்று தொழிலாளர்கள் நிர்வாகத்தால் மிரட்டப்படுகின்றனர். இதற்கு தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததோடு, உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் வருகின்றனர்.
தோட்ட நிர்வாகத்தின் இந்த அடாவடி செயலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட சென்ற போது, அவர் அவர்களது மனுவை பெற மறுத்ததோடு, “தோட்ட நிர்வாகம் அளிக்கும் தொகையைப் பெற்றுக்கொண்டு வெளியேறுங்கள். இல்லை என்றால் அதுகூட கிடைக்கவிடாமல் செய்துவிடுவேன்” என்று தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களை மிரட்டியுள்ளார்.
தற்போது தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பிடுங்கப்படுவதை கண்டு செய்வதறியாது உள்ளனர். பல தலைமுறைகளாக நீண்ட உழைப்பைக் கொடுத்து அங்கு வாழ்ந்து வந்த மக்களை தற்போது வேலையும் இல்லாமல், வீடும் இல்லாமல் வெளியேற்றுவது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது. மேலும் குத்தகை காலம் முடிவதற்கு முன்னரே தோட்ட நிர்வாகம் கட்டாய விருப்ப ஒய்வை திணிப்பது சட்ட விரோத செயல்.
இந்நிலையில் அரசே தேயிலை தோட்டங்களை ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக, மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மே17 இயக்கம் களம் காண்கிறது.

தொழிலாளர்களை வஞ்சிக்கும் தோட்ட நிர்வாகம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். தொழிலாளர்களை வெளியேற்ற முயலும் தோட்ட நிர்வாகத்தின் முயற்சியினை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் உயர் அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவர் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்தியது. (முழு அறிக்கை: https://www.facebook.com/may17iyakkam/posts/pfbid0i4vPGgzvPP7qWGPBGoBQyKkjsCBePNcaw26aAdpRjEsPJY3T6HuyBCBNpA2aRT5Yl)
மே பதினேழு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் குரல் எழுப்பியதற்கேற்ப மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என்று உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலை தொழிலாளர்களின் உழைப்பினை நீண்டகாலமாக சுரண்டிவரும் நிலையில், அவர்களுக்கு நியாயமாக சேரவேண்டிய ஊதியத்தை வழங்கிடவும், அவர்களது வாழ்விடத்தை, வாழ்வாதாரத்தை முன்னேற்றிடவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கே அந்த இயற்கை வளங்கள் மீது உரிமை இருப்பதாக வன உரிமைகள் சட்டம் கூறுகிறது. எனவே மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான இலவச வீட்டு மனை, உரிய இழப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் தொடர்ந்து செயல்படுவதற்கான சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு திமுக அரசு இயற்ற வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற நாம் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.