புரட்சியாளர் காரல் மார்க்ஸ் 139 வது நினைவு நாள்!
(14-03-1883)
“வர்க்கத்துக்கு எதிராக வர்க்கம் நடத்தும் போராட்டம் ஒரு அரசியல் போராட்டமாகும்.”
வர்க்கங்களுக்கு இடைப்பட்ட முரணே வரலாறாகப் படைக்கப்பட்டு இருக்கிறது. உலகம் தோன்றியது முதல் இன்று வரை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பிரிவு ஒரு வர்க்கமாகவும், இதை கீழ்ப்படிந்து நடக்கும் பிரிவு மற்றொருவர் வர்க்கமாகவுமே இருந்து வந்துள்ளது. நிலவுடைமைச் சமூகத்தின் அதிகாரத்தில் அடிமை வர்க்கமாக இருந்த உழைப்பாளர்கள், முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர் வர்க்கமாக உருமாறி நிற்கின்றனர். இந்த உழைக்கும் வர்க்கம் செலுத்துகிற உழைப்பில்தான் உலகம் இயங்குகிறது என்பதை முதலாளிய வர்க்கம் மறுத்து வந்த காலகட்டத்தில், இந்த உண்மையை ஆணித்தரமாகவும், அறிவியல் பார்வை கொண்டும் நிரூபித்தவர் புரட்சியாளர் காரல் மார்க்ஸ் அவர்கள்.
“உற்பத்தியிலிருந்து தொழிலாளர்களின் உழைப்பை பிரித்துவிட்டால் அங்கு வெறும் மண்ணே எஞ்சி இருக்கும்” என்று கூறியவர் புரட்சியாளர் காரல் மார்க்ஸ் ஆவார். உலகில் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் உழைப்பாளர் வர்க்கத்தின் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ், தன் வாழ்நாள் முழுவதும் உழைப்பாளர்களின் உரிமைக்காகவும் அவர்களுக்கான அதிகாரத்திற்காகவும் விடுதலைக்காகவும் தத்துவார்த்த தளத்திலும், போராட்டக் களத்திலும் நின்று காட்டினார்.
இத்தகைய பெரும் மாற்றத்திற்கு மார்க்ஸ் அவர்கள் பெரிதும் நம்பியது தொழிலாளர்களின் கூட்டமைப்பாக விளங்கிய தொழிற்சங்கங்களும், அத்தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்ட கம்யூனிச கட்சியும், அக்கட்சிகளினால் ஒருங்கிணைக்கப்படும் கம்யூனிச அகிலத்தையுமே (Communist International) ஆகும். இங்கிலாந்தில் அமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களை பற்றி கூறும் பொழுது “எப்பொழுதாவது வந்து போகக் கூடிய ஒரு வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சியாகக் கொண்டு அது முடிந்ததும் தானும் முடங்கிப் போகிற அரைகுறையான சங்கங்களுடன் இங்கிலாந்தில் தொழிலாளர்கள் நின்றுவிடவில்லை. தொழிற்சங்கங்கள் எனப்படும் நிரந்தரமான சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை தொழிலாளிகளுக்கு முதலாளிகளோடு நடத்தும் போராட்டங்களில் அரண்களாகப் பயன்படுகின்றன” என்றார்.
தொழிற்சங்கங்களின் இயல்பு பற்றி கூறும் போது “தொழிலாளர்கள் தங்களை ஒன்றுபடுத்துவதற்காக எடுக்கும் முதன்முதலான முயற்சிகள் எப்போதும் சங்கங்கள் வடிவத்தில் நடக்கின்றன. ஒருவரையொருவர் முன்பின்னறியாதவர்களான திரளான மக்களைப் பெருமளவான தொழில்துறை ஒரே இடத்தில் சேர்த்துக் குவிக்கிறது. போட்டி அவர்களின் நலன்களைப் பிரிக்கிறது. எனினும் தமது முதலாளிக்கு எதிராக அவர்களுக்குப் பொதுவான நலனாக விளங்கும் கூலியைப் பாதுகாத்துக் கொள்வது அவர்களைச் சங்கம் எனும் ஒரு பொதுவான எதிர்ப்புச் சிந்தனையிலே ஒன்றுபடுத்துகிறது. ஆக, சங்கத்துக்கு எப்போதும் ஓர் இரட்டை நோக்கு உண்டு – தொழி லாளர்களிடையேயுள்ள போட்டியை நிறுத்துவது, அதன் வழியே அவர்கள் முதலாளியை எதிர்த்துப் பொதுவான போட்டியை நடத்திச் செல்லச் செய்வது” என்று தனது ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலில் எழுதுகிறார்.
அதேநேரத்தில் கூலி உயர்வு மட்டுமே நோக்கமாக கொண்ட தொழிற்சங்கங்களை மார்க்ஸ் ஏற்க மறுத்தார். 1865 ல் மார்க்ஸ் ஏங்கல்சுக்கு எழுதிய கடிதத்தில் “சம்பளத்தில் (கூலியில்) ஒரு பொதுவான விகிதத்தில் கூலி உயர்வு கொடுப்பதால் தொழிலாளர்களுக்கு எத்தகைய நன்மையும் இல்லை” என்று எழுதினார். அதற்கு காரணமாக பின்வரும் கருத்தை கூறினார்.
“பொருளின் மதிப்பை கூலிதான் தீர்மானிக்கிறது. முதலாளி இன்று நான்கு ஷில்லிங்குகளுக்குப் பதில் ஐந்து ஷில்லிங்குகள் கொடுத்தால், நாளை அவர்கள் பொருட்களை விற்கும் போது நான்கு ஷில்லிங்குகளுக்குப் பதில் ஐந்து ஷில்லிங்குகளுக்கு விற்பார்கள்.”
மார்க்ஸ் அவர்களுக்கு முன்னும் பலர் வர்க்க கட்டமைப்பை பற்றி பேசியிருந்தாலும், மார்க்ஸ் அவர்களின் பார்வை மிக பொருத்தமானது. “வர்க்கங்களின் பகைமை மீது நிறுவப்பட்ட ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருப்பது உட்சபட்ச நிபந்தனையாகும். எனவே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை என்பது அவசியகரமான முறையிலே ஒரு புதிய சமுதாயத்தைப் படைப்பதை உட்கிடையாகக் கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னைத் தானே விடுதலை செய்துகொள்வதற்கு அவசியத் தேவை, ஏற்கெனவே பெறப்பட்டிருக்கும் உற்பத்திச் சக்திகளும் இருந்து வரும் சமுதாய உறவு களும் மேலும் அக்கம் பக்கமாக இருந்துவர முடியாதவையாக ஆக வேண்டும். உற்பத்திக் கருவிகளனைத்திலுமே ஆகமிகப் பெரிதான உற்பத்திச் சக்தி புரட்சிகரமான தொழிலாளி வர்க்கமேயாகும்.” என்று எழுதினார்.
மேலும் “தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடை யேயுள்ள பகைமை வர்க்கத்துக்கு எதிராக வர்க்கம் நடத்தும் ஒரு போராட்டமாகும். அதன் உச்சநிலை வெளிப்பாடு ஒரு முழுமையான புரட்சியே. உண்மையிலே பார்த்தால், வர்க்கங்களின் எதிர்ப்பின் மீது நிறுவப்பட்ட ஒரு சமுதாயம் அதன் இறுதி விளைவாக மூர்க்கத்தனமான முரண்பாட்டிலே, உடலோடு உடல் மோதிக் கொள்ளும் அதிர்ச்சியிலே, போய் முடிவதில் வியப்புண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.
சமூக இயக்கம் தனியாகவும், அறிவுசார் இயக்கம் தனியாகவும் இருக்க முடியாயது என்று வாதிட்டார் மார்க்ஸ். “சமுதாய இயக்கம் அரசியல் இயக்கத்தை விலக்கி வைக்கிறது என்று சொல்லாதீர்கள். ஓர் அரசியல் இயக்கம் அதே நேரத்தில் சமுதாய இயக்கமாக அல்லாமல் என்றைக்கும் இருந்ததில்லை.”
இந்தியாவை பற்றி பல்வேறு கட்டுரைகள் எழுதிய மார்க்ஸ் அவர்கள், “தெற்காசியாவில் நமக்கு இரண்டு வேலைகள் உள்ளன. ஒன்று ஏற்கனவே இருக்கும் சமூக கட்டமைப்பை அடியோடு தகர்ப்பது. மற்றொன்று புதிய கட்டமைப்பை உருவாக்குவது” என்று கூறினார்.
இந்தியாவின் இந்துமத முரண்பாட்டுத் தன்மையைப் பற்றி மார்க்ஸ் “இத்தாலியும் அயர்லாந்தும் சிற்றின்ப ஈடுபாட்டு உலகமும், மிகுதுயர் வருத்தும் உலகமும் வியப்பான முறையில் சேர்ந்திருப்பதை இந்துஸ்தான சமயத்தின் பண்டைய மரபுகள் உணர்ந்து புலப்படுத்தியிருக்கின்றன. அந்த மதம் புலனுணர்ச்சி இன்பங்களில் மூழ்கித் திளைப்பதை வலியுறுத்தும் மதமாக உள்ளபோதே, தன்னைத்தானே வதைத்துக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தும், துறவு மதமாகவும் விளங்குகிறது. லிங்கத்தை வழிபடும் சமயமும் அதுவே; ஜகந்நாதனின் மதமும் அதுவே. தேவதாசி மதமும் அதுவே ; சன்னியாசியின் சமயமும் அதுவே.” என்று கூறுகிறார்.
இந்தியாவின் கிராம அமைப்பு பிற்போக்குத்தனத்தின் ஊற்றாக இருப்பதை மார்க்ஸ் சுட்டிக்காடுகிறார். “இந்த அமைதியான கிராமச் சமூகங்கள் சாதுக்களாகத் தோன்றிய போதிலும், கீழ்க்கண்ட கொடுங்கோன்மைகளுக்குத் திட்டமான அடிப்படையாக இருந்தன என்பதை நாம் மறக்க முடியாது; அந்தச் சமூகங்கள் மனித மூளையைச் சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடைத்து, அதை மூடநம்பிக்கையின் எளிமையானக் கருவிகளாகவும், பரம்பரைச் சம்பிரதாய விதிகளின் அடிமையாகவும் ஆக்கியதையும், அனைத்து வகைப்பட்ட சிறப்புக்களையும் சரித்திரப்பூர்வமான சக்திகளையும் மனித மூளை பெற முடியாமல் செய்ததையும் நாம் மறக்கமுடியாது.” என்று கடுமையான விமர்சனங்களை தருகிறார்.
வரலாற்றுப் பொருளமுதல்வாதம், அரசியல் பொருளாதாரம், கூலி-உழைப்பு-உபரி ஆகிய சமூக விடுதலை தத்துவங்களை உள்ளடக்கிய ‘மூலதனம்’ நூல் ஒன்றே புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களின் பெருமையை உணர்த்தும். இத்தத்துவங்களை முன்னெடுத்த பல்வேறு நாடுகள் தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அதிகாரப்பிடியில் இருந்து விடுதலை பெற்றன.
புரட்சியாளர் மார்க்ஸ் மனித சமூகத்திற்கு, குறிப்பாக தொழிலாளர் சமூகத்திற்கு கொடுத்துச்சென்ற அறிவுக்கொடையானது அளப்பரியது. அது காலத்தால் அழியாத தத்துவம். அது வெறும் எழுத்தை அடிப்படையாக கொண்டதல்ல. சக மனிதன்பால் புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் கொண்ட பேரன்பினை அடிப்படையாகக் கொண்டது. அப்பேரன்பு மட்டுமே கொண்ட சமூகம் உருவாகும் வரையில் புரட்சியாளர் மார்க்ஸ் அவர்கள் பெயர் வர்க்க விடுதலை என்ற முழக்கதில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.
புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் செவ்வணக்கங்கள்.
“உலகத் தொழிலாளர்களே!
ஒன்று சேருங்கள். இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை,
உடைக்கப்பட வேண்டிய இந்த அடிமைச் சங்கிலியைத் தவிர”
மே பதினேழு இயக்கம்
9884864010