பாஜகவின் கைப்பாவையான முகநூல்

பாஜகவின் கைப்பாவையான முகநூல்

பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட முகநூல் நிறுவனம் அதன் ஊதுகுழலென அம்பலமான தருணம்!

இந்துத்துவ மதவாத பாசிச மோடி அரசு ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சமீபகாலமாக தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக முகநூல் பாஜக கும்பலுக்கு ஆதரவாக இருப்பது சமீபத்தில் அம்பலமானது. நாம் என்ன பேச வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் முகநூல் மூலம் ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிசக் கும்பல் அமர்ந்து கொண்டு நம்மை அடக்கி ஆள்கிறது.

பாஜகவின் தேர்தல் வெற்றியில் சமுக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பாஜகவின் தேர்தல் வியூகத்தில் மட்டுமல்லாமல், இந்திய ஆட்சி முறை வியூகத்திலும் சமூக வலைத்தளத்துக்கு குறிப்பாக முகநூல் நிறுவனத்திற்கு பெரும் பங்குண்டு. இதன் மூலமாக தான் பாஜகவின் வெறுப்பரசியல், வாக்காளர்களின் விரல் நுனிகளுக்கும், கண்களுக்கும் சென்றடைந்தது. 2017 உபி தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா ஒரு கூட்டத்தில், “பொய்யோ மெய்யோ நாம் ஒரு செய்தியை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்க்கும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்” என்றார். அதை தான் பாஜகவினர் இன்று வரை தொடர்ந்து கடைப்பிடித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

பாஜகவினர் தங்கள் வெற்றிக்கான அரசியல் பிரச்சாரத்திற்காக மட்டுமின்றி, சிறுபான்மையினர் மீதும், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்க் கட்சிகள் மீதும் அவதூறுகளை பரப்பவும், அவர்களுக்கெதிராக பொய்களை விளம்பரப்படுத்தி விரிவாக கொண்டு செல்வதற்கும், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக வலைத்தளங்களைத் தான் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறது.

2019 தேர்தலின் போது பேஸ்புக் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததை Aljazeera ஊடகம் தற்போது அம்பலப்படுத்தி உள்ளது. இதேபோல் இந்தியாவில் முகநூலில் வெறுப்பரசியலை பரப்புவதில் முக்கிய அங்கமாக பாஜகவினர் இருப்பதைப் பற்றி ஆகஸ்ட் 2020ல் ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ விரிவான கட்டுரையை வெளியிட்டதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் அரசியலுக்கு எதிராக இயங்கும் முகநூல் தனிநபர்கள் கணக்கு மற்றும் குழுக்கள் பேஸ்புக் நிர்வாகத்தால் செயலிழக்கச் செய்யப்படுவதும், அதேசமயம் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களின் மதவாத வெறுப்பை ஊக்குவிக்கும் வகையிலான செய்திகள் பேஸ்புக் நிறுவனத்தால் கண்டு கொள்ளாமல் விடப்படுவதும் முகநூல் நிறுவனம் பாஜக ஆதரவு தளமாக மாறியுள்ளதை எடுத்து காட்டுகிறது.

பாஜகவின் தேர்தல் பரப்புரையில் பேஸ்புக்கின் பங்களிப்பு

The Reporters Collective, ad.watch ஆகியவற்றின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு Aljazeera ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில், 2019 லோக்சபா தேர்தலின் போது NEWJ என்ற ரிலையன்ஸ் குழும விளம்பர நிறுவனம் பாஜகவை எதிர்க்கும் தலைவர்களை குறித்து அவதூறு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததையும், 2019 தேர்தலுக்கு முந்தைய சில மாதங்களில் தொடர்ச்சியாக பாஜக அரசின் திட்டங்களை பாராட்டும் விதமான வீடியோக்களையும் பேஸ்புக் விளம்பரம் மூலம் வெளியிட்டதையும் அம்பலபடுத்தி உள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய 3 மாதங்களில் மட்டும் NEWJ பக்கம் சுமார் 170 அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதாக Ad libraryயின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதாவது பாஜக தலைவர்களை புகழ்வது, மோடிக்கு வாக்காளர்களின் ஆதரவை முன்னிறுத்துவது, தேசிய மற்றும் மத உணர்வுகளை தூண்டுவது, எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர்களின் பேரணிகளையும் கேலி செய்வது போன்ற வகையில் விளம்பர வீடியோக்களை தயாரித்து இடைவிடாமல் NEWJ நிறுவனம் சமூக ஊடகங்கள் வழியாக மக்களை கவரும் வகையில் கவனமாக சில வைரல் வீடியோக்களையும் இணைத்து பரப்பியுள்ளது.

இந்த NEWJ நிறுவனம் அதன் பின்னர் CAA எதிர்ப்பு போராட்டம், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் பாஜக அரசுக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அவர்களை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பொய் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தற்போது அம்பலமாகி உள்ளது.

சமூக வலைதளங்களில் பாஜகவை ஆதரித்து பதிவிடுவதற்கான வீடியோக்களை உருவாக்குவது தான் இந்த நிறுவனத்தின் முக்கிய பணி. குறிப்பாக பேஸ்புக், யூ டியூப்களில் இத்தகைய வீடியோக்களை பதிவிட்டு பாஜகவிற்கு ஆதரவு திரட்டும் தளமாக செயல்பட்டு வருகிறது இந்த ரிலையன்ஸ் குழும NEWJ நிறுவனம். NEWJ உருவாக்கும் வீடியோக்கள், பேஸ்புக்கில் பணம் செலுத்தும் விளம்பரங்களாக வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் இந்திய முகநூல் பிரிவு

முகநூல் நிறுவன இந்தியப் பிரிவிடம், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தங்களுக்கு எதிராகப் பதிவிடும் 44 முகநூல் பக்கங்களை முடக்குமாறு பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது பாசிச பாஜக. இந்த 44 முகநூல் பக்கங்களில் 14 பக்கங்கள் முகநூலில் இருந்து நீக்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது. இதில் பத்திரிக்கையாளர்கள், செயற்பாட்டாளர்கள், எதிர் கட்சியினரின் கணக்குகள் உள்ளடங்கும்.

அதே சமயத்தில், முகநூலில் இருந்து நீக்கப்பட்ட பாஜகவின் 17 பக்கங்களை மீண்டும் முகநூல் தளத்தில் அனுமதிக்குமாறு பாஜக கேட்டதற்கிணங்க அப்பக்கங்களை மீண்டும் இயங்க அனுமதித்து உள்ளது முகநூல் நிறுவனம். (இந்த 17 பக்கங்களும், போஸ்ட்கார்ட் நியூஸ் எனும் வலதுசாரி இணைய தளத்தின் பொய் செய்திகளை பரப்பியாதால் அதன் உரிமையாளர் மகேஷ் 2018ம் ஆண்டு பெங்களூரில் கைது செய்யப்பட்டதும், அவருக்காக வாதாட பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தான் போஸ்ட்கார்ட் நியூஸ் தளத்தின் முகநூல் பக்கம் முகநூல் நிறுவனத்தால் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது)

இவ்வாறு பாஜக ஆதரவு முகநூல் பக்கங்களைப் பாதுகாக்க பாஜக ஐடி பிரிவு மிகவும் தனிக்கவனம் செலுத்தி முகநூல் நிறுவனத்துடன் மின்னஞ்சலில் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதும் மிகவும் கவனிக்கதக்க விடயம்.

பஜ்ரங் தள், ராம் சேனா போன்ற இந்துத்துவ பயங்கரவாத குழுக்கள் பற்றி பேஸ்புக் நிறுவனத்துக்கு அச்சம் இருப்பதாலேயே அவற்றை தடைசெய்தால் பாஜகவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்று அவற்றை தடை செய்யாமல் விட்டு வருகிறது. ஆனால் பஜ்ரங் தள் பதிவுகளுக்கும் நடைமுறை வாழ்வில் நடக்கும் வன்முறைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

இந்தியாவில் பேஸ்புக் இயங்கும் முறையை ஆராயும் நோக்கில், பேஸ்புக்கின் ஊழியர் ஒருவர் ஒரு பொய் கணக்கைத் தொடங்கி, பேஸ்புக் பரிந்துரைப்படி குழுமங்களில் இணைவது, காணொளிகளை காண்பது என்று ஒரு சாதாரண பயணாளியாக இயங்க ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு மளமளவென்று வன்முறைப் பதிவுகளும், பொய்ச் செய்திகளும் வரத் தொடங்கியது. 3 வாரத்தில் தன் வாழ்நாளில் பார்த்த மொத்த வன்முறை காட்சிகளையும் விட அதிகளவில் பார்க்க நேரிட்டு உள்ளது அவருக்கு. இதன் மூலம் இந்திய பிரிவு முகநூல் நிறுவனம் பாஜகவின் சார்பு ஊடகமாக மாறியுள்ளதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது!

இப்படியாகத்தான் பாஜக தங்கள் ஐடி பிரிவைக் கொண்டு ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் கைக்கூலிகளாக மாற்றி தாங்கள் விரும்பிய வகையில் மக்களை கவரும் விதமாக அவர்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் செய்திகளை பரப்பி அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றனர். 2014 தேர்தலில் மோடியை குஜராத் மாடல் என்று முன்னிறுத்தி வெற்றி பெற்றதும், அதை தொடர்ந்து 2019ல் வெற்றி பெற்றதும் தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் இதே பாணியை பயன்படுத்தி வெற்றி பெற்று உள்ளனர் பாஜகவினர். இந்த காவி பாசிசக் கும்பலோடு கைகோர்க்கும் முகநூல் போன்ற கார்ப்பரேட் பாசிசக் கும்பலை அம்பலபடுத்தி ஒதுக்குவதே ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்கும்.

பாசிசம் அதிகாரத்தை கைப்பற்ற எத்தகைய வழிமுறைகளையும் எந்த வடிவத்தையும் எடுக்க தயங்காது என்பதை பாஜகவினர் ஒவ்வொரு கட்டத்திலும் நிருபித்து வருகின்றனர். ஆயினும் மக்கள் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் அவர்களை நம்பி மோசம் போகிறார்கள். எனவே மக்களின் உரிமைகளுக்காக போராடும் அனைத்து ஜனநாயக‌ சக்திகளும் பாசிசத்தின் வடிவங்களின் முகமூடிகளை கிழிப்பதற்காக சமரசமின்றி போராடுவது மிக மிக முக்கிய மற்றும் அவசர தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »