தமிழீழத்தின் முல்லைத்தீவுப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக தோண்டப்பட்ட குழியில் அடுக்கடுக்காக மனித சடலங்கள் கண்டறியப்பட்டன. இது உலகெங்கிலும் உள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 2009 தமீழீழ இனப்படுகொலையின் போது சிங்கள அரசினால் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல் எச்சங்கள் என இவை கருதப்படுகிறது. மனங்களை உறையச் செய்யும் இந்த மனிதப் புதைகுழி, தமிழினப் படுகொலை நடந்து முடிந்து, 14 ஆண்டுகளாக தங்கள் உறவுகளைத் தேடி இன்றும் போராடிக் கொண்டிருக்கும் குடும்பத்தினரை மேலும் துன்பத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாக்கியுள்ளது.
சிங்கள இனவெறி அரசு, சர்வதேச வல்லாதிக்கத்தின் துணையுடன் 2009-ல் கொத்து கொத்தாக தமிழர்களை இனப்படுகொலை செய்த போரினில், சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை என்னவெனத் தெரியாத நிலையில் அவர்களை காணாமல் போன நபர்களாக கருதி இதுநாள் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் 29, 2023 அன்று முதல் முல்லைத்தீவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த மனிதப் புதைகுழிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த இடம் மாவீரர் துயிலும் இல்லம் இல்லை என அங்குள்ள அரசியல் பிரதிநிதிகள் திட்டவட்டமாக கூறுகிறார்கள். இந்த அகழ்வினில் சடலங்களோடு பெண் விடுதலைப் புலிகளின் உடைகள் இருந்ததும், இந்த சடலங்கள் போரின் இறுதி நாட்களில் சரணடைந்த பெண் விடுதலைப் புலிகளாக இருந்திருக்கலாம் என்கிற ஐயத்தையும் வலுப்படுத்தியுள்ளது. இறுதிகட்டப் போரில் பெண் விடுதலைப் புலிகள் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டது காணொளிகளில் சாட்சியமாக இருக்கிறது. ஆனால் அவர்களின் நிலை என்னவென்று இன்றளவும் அறியப்படவில்லை.
பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளின் போதுதான், தற்செயலாக மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மனிதப் புதைகுழிகளை இலங்கை அரசாங்கம் கையாண்ட விதம், எந்த அளவிற்கு இந்த விசாரணைகளை நீர்த்துப் போக வைக்கும் வேலையில் ஈடுபட்டது என்பது குறித்து தன்னார்வ அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டறிக்கை தயாரித்துள்ளனர்.
“சிறிலங்காவிலுள்ள பாரிய மனிதப் புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப் பணிகளும்” என்று தலைப்பிடப்பட்ட இந்த கூட்டறிக்கையை, இலங்கை ஜனநாயக ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS), யாசுமின் சூக்கா அவர்களைத் தலைமையாகக் கொண்டதும், நீதிமன்றங்கள், ஐ.நா சபை மற்றும் பிரித்தானியா அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்களால் நடத்தப்படுவதுமான ‘சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம்’ (ITJP), மனித உரிமை செயல்பாட்டாளர்களாலும், வழக்கறிஞர்களாலும் துவங்கப்பட்ட ‘மனித உரிமைகள் வளர்ச்சி மையம்’ (CHRD), காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் குடும்பங்கள் (FoD) ஆகிய அமைப்புகள் இணைந்து தொகுத்திருக்கின்றன. இந்த அறிக்கை, இலங்கையில் அகழ்வுப் பணிகளில் பல தளங்களிலும் உருவாக்கப்பட்ட குறைபாடுகளை விவரிக்கிறது. கடந்த 30 வருடங்களில் 20 மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. புதைகுழிகளின் அகழ்வுப் பணிக்கான சர்வதேச விதிகள் எதையும் பின்பற்றாமல், காணாமல் போனவர்களின் குடும்ப பங்கேற்பை அகழ்வின் பொழுதும், விசாரணைகளின் போதும் கூட தவிர்த்து விட்டு தான் புதைகுழிப் பணிகள் நடந்தன என்பதையும் இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது.
இதுவரை எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையும், அகழ்ந்தெடுக்கப்பட்ட இடங்களையும், அதன் பின்னணி மற்றும் தற்போதைய நிலைமையையும் பட்டியலிட்டிருக்கிறது இந்த அறிக்கை. அவற்றில் 2013-ல் மாத்தளைப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 155 சடலங்கள், மன்னாரில் இருந்த புதைகுழியில் எடுக்கப்பட்ட 81 சடலங்கள், மன்னாரில் 2018-ல் மற்றொரு புதைகுழியில் 318 சடலங்களின் ஆய்வுப் பணிகளை ஆராய்கிறது.
இந்த கூட்டறிக்கை, இலங்கையின் சட்டக் கட்டமைப்பும், விசாரணை அமைப்புகளும் கண்துடைப்பாகவே இருக்கின்றன என்பதை அப்பட்டமாக எடுத்துரைக்கின்றன. எதேச்சையதிகார, முழுமையான விசரணையற்ற கொலைகளை தடுக்க, விசாரணை செய்யும் விதிகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் மின்னொசெட்டோ (Minnesoto Protocal) நெறிமுறையை இலங்கை சற்றும் பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றன. இந்த ஆவணம் புதைகுழிகளின் அகழ்வுப் பணிக்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கியது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களிலிருந்து காணாமல் போன உறவுகளின் தகவல்களைச் சேகரிக்கக் கூட முறையான கட்டமைப்பும், செயற்பாடுகளும் இலங்கையில் இல்லை எனவும், ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட பல விசாரணைக்குழுக்களும், ஐநாவினால் அமைக்கப்பட்ட ‘நல்லிணக்கப் பொறிமுறைக்கான சிறப்பு குழு’ போன்றவைகள் செய்த ஆய்வினிலும், புதைகுழி அகழ்வுக்கான சட்டக் கட்டமைப்பு இலங்கையில் போதுமானதாக இல்லை என்பதையே சுட்டிக் காட்டுவதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது. 2015-லிருந்து இலங்கையில் துவங்கப்பட்ட விசாரணைக் குழுவிலிருந்தும் எந்த அறிக்கைகளும் இந்த அமைப்புகளால் பெற முடியவில்லை. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்பவற்றிற்கு கூட பதில் அளிக்காமல் இருக்கிறார்கள் என இலங்கையின் சட்ட முறைமைகளில் இருக்கும் அலட்சியத்தை எடுத்துக் காட்டுகின்றன இந்தக் கூட்டமைப்புகள்.
அரசியல் தலையீடுகள் எந்தளவிற்கு அகழ்வுப் பணிக்கு இடையூறாக இருக்கின்றன என்பதையும் இவ்வறிக்கைத் துல்லியமாக ஆராய்ந்து கூறுகிறது. 2014-ல் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பகுதியில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில், விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கருதியே விரைவாக தோண்டப்பட்டதாகவும், ஆனால் அதில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி இலங்கை அரசப் படைகளுடன் இணைந்த தமிழினத் துரோகியான கருணா சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்ததும் அவை நிறுத்தப்பட்டு விட்டன என்பதையும் தெரிவிக்கிறது. இதற்காக நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆகிய பின்னும் இன்னமும் மீண்டும் அங்கு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
இதைப் போலவே, 1989-ல் மாத்தளை மாவட்டத்தின் இராணுவ அதிகாரியாகவும், அன்றைய பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்த கோத்தபய ராசபக்சே, மாத்தளை மாவட்டம் உள்ளடக்கிய மத்திய மாகாணத்திலிருந்த அனைத்து காவல் நிலையங்களிலும் ஐந்தாண்டுகள் முந்தையதான சகல பதிவுகளையும், கோப்புகளையும் அழித்து விட ஆணையிட்டிருக்கிறார். மாத்தளையில் நடைபெற்ற அகழ்வுகளில் எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ஆய்வில் (Carbon Dating), அவை 1980 காலகட்டத்திற்கானது எனவும், ஜனாதிபதியான மகிந்த ராசபக்சே (கோத்தபய ராசபக்சே சகோதரர்) அமைத்த ஜனாதிபதி விசாரனைக் குழுவானது இந்த எச்சங்களை வெளிநாட்டிற்கு அனுப்பிய போது, அறிக்கைக்கு முரணாக அது 1950-ஆம் ஆண்டிற்கானது எனவும் கூறப்பட்டன. மனித எச்சங்களிலும், தொல்லியல் பொருட்களிலும் கலப்படம் செய்யப்பட்டிருப்பது இந்த முரணுக்கு காரணமாக இருக்கலாம் என்று இலங்கை தடயவியல் நிபுணர் தெரிவித்திருந்தார். ஆனால் இரு ஆய்வுகளும் மனித எச்சங்கள் மிகுந்த சித்திரவதைக்கு உட்படுத்தியே கொல்லப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதைக் கண்டறிந்தன. 1980-ல் மாத்தளை மாவட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள் எவரையும் இந்நிகழ்விற்கு பொறுப்புக்கூற உட்படுத்தவில்லை. இவ்வாறு அரசியல் தலையீகளால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் கூட முறையான விசாரணை நடைபெறவில்லை.
அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஆய்வறிக்கைகள் கூட கிடைப்பதற்கு தாமதமாகும் சூழலே நிலவுகிறது. மன்னார் மாவட்டத்தில் அகழ்வின் பொழுது கண்டறியப்பட்ட மனித எச்சங்கள் தடயவியல் ஆய்விற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டன. 2019-ல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இதற்கான அறிக்கை 2023 வரை இன்னும் சமர்ப்பிக்கப்படவே இல்லை.
மேலும், அரிதிலும் அரிதாக மனிதப் புதைகுழிக்கு காரணமாக சந்தேகப்படும் நபர்கள் கைதாகும் சூழலில் கூட விரைவில் பிணை கொடுக்கப்பட்டு விட்டதும் நடந்திருக்கிறது. யாழ்ப்பாணம் மாவட்டம் செம்மணி பகுதியில் தோண்டப்பட்ட அகழ்வில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் தொடர்பில், 15 பேர் காணாமல் போனதற்கு பாதுகாப்புப் படை வீரர்களே காரணமென ‘ஐவர் கொண்ட ஆணைக்குழு’ அடையாளம் காட்டியதால் 4 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அதன் விசாரணை அறிக்கை கூட வெளிவராமல், தலைமை சட்ட ஆலோசகர் ஆணையிட அந்த நபர்கள் பிணையில் விடப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு பதவி உயர்வும் கொடுக்கப்பட்டு விட்டது.
1995-ல் கொழும்பின் ஏரியிலும், வாய்க்காலிலும் கண்டுபிடிக்கப்பட்ட 21 சடலங்களில் சம்பந்தப்பட்ட சிறப்பு அதிரடிப்படைக்கு எதிரான வழக்கினில், தலைமை சட்ட ஆலோசகர் நீதிமன்றத்தில் ஆஜராகததால் நீதிபதி இவ்வழக்கையே தள்ளுபடி செய்திருக்கிறார்.
இலங்கையின் அரச அதிகாரிகள் அகழ்வுப் பணியில் இடையூறு செய்வதற்காகவே, நீதிபதிகளை, இந்த துறை சார்ந்த அதிகாரிகளை, சட்ட மருத்துவ அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதும் தொடர்ந்திருக்கிறது. 2018-ல் மன்னார் புதைகுழி ஆய்விலிருந்த சட்ட மருத்துவ அதிகாரி கொழும்பிற்கும், 2013-ல் சட்ட மருத்துவ அதிகாரி அனுராதபுரத்திற்கும், பின்னர் மாத்தளைக்கும் மாற்றப்பட்டிருக்கின்றனர். இதனால் மனித எச்சங்களின் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியாமல் போனது.
மன்னார் அகழ்வு வழக்கில் மட்டும் ஏழு வருடங்களில் ஏழு நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் வழக்குகளையும் வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் செம்மணி அகழ்வு வழக்கு கொழும்புக்கு மாறியது. இதனால் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியம் சொல்ல பாதுகாப்புப் படையிடமே விண்ணப்பிக்கும் போது, பயணத்திற்கான நோக்கம் தெரிந்து அச்சுறுத்தப்படுவோம் என மனுதாரர்கள் எண்ணினர்.
அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டவர்கள் அச்சுறுத்தப்படுவதும் நிகழ்ந்திருக்கிறது. நீதிமன்ற வாக்குமூலம் அளிக்கக் கூடாது என யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி இருப்பினை 1996-ல் வெளிக்கொண்டு வந்த ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அவரின் மனைவிக்கு இராணுவத்தினரால் மிரட்டல் கடிதங்களும் எழுதப்பட்டன. 1995-ல் சூரியகந்தை என்கிற பகுதியில் நடந்த அகழ்வு வழக்குக்காக வாதாடிய வழக்கறிஞர் சுடப்பட்டார். மேலும் அகழ்வுப் பணி நடைபெறும் இடங்களில் போதுமான பாதுகாப்பு வசதி அளிக்காமையால் அவை சேதமாகின. சில வழக்குகளில் இன்னும் அதிகமான சடலங்கள் இருக்கலாம் என கண்காணிப்பாளர்கள் கூறிய பின்னும் நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்திருக்கின்றனர். 2013, 2018-ல் மன்னார் அகழ்வில் இச்சந்தேகம் நிலவிய பின்பும் கூட காவல்துறை பாதுகாப்பை விலக்கிக் கொண்டது.
இக்கூட்டறிக்கையில், இந்த நான்கு தன்னார்வ அமைப்புகளும் எடுத்துக் கூறும் இவ்வளவு செய்திகளிலிருந்தும் நமக்கு கேள்வியாக எழுவது, இப்படியாக விசாரணைக் குழுக்கள், தலைமைச் சட்ட அமைச்சகம், தடயவியல் துறை என அனைத்தும் ஒன்றுசேர்ந்து மனிதப் புதைகுழிகளுக்கு காரணமான இலங்கையின் இராணுவ அதிகாரிகளை காத்து நிற்கும் போது, தங்கள் உறவுகளை காணாமல் அலையும் குடும்பத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கான கதவு இலங்கையில் எப்படி திறக்கும்?
காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் உறவினர்களின் போராட்டம் 2017-ல் கிளிநொச்சியில் தொடங்கியது. 2000 நாட்களைக் கடந்து, 178 தாய்மார்கள் இறந்து விட்ட பின்பும், அவர்களின் போராட்டம் நீடிக்கிறது. இந்த நிலையில், இப்போது முல்லைத்தீவில் கண்டறியப்பட்ட புதைகுழியில் கூட தாங்கள் தேடும் உறவுகள் இருந்து விடுமோ என்கிற பதைப்பிலிருந்து எப்படி அவர்களால் மீள முடியும்?
சிங்கள இனவெறி அரசும், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற உலக வல்லாதிக்க நாடுகளும் சேர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய 2009-போரில் மட்டும் ஒன்றரை லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மன்னார் மாவட்ட ஆயரின் தகவலின்படி, மன்னார் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 36,000 பேர் காணவில்லை. ஈவிரக்கமற்று சாட்சிகளற்று நடந்த போரில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப் போரின் போதும், அதற்கு முன்பும் காணாமலாக்கப்பட்டனர். சந்தேகப்படும் தமிழர்களை எல்லாம் ‘வெள்ளைவேன்’ கடத்தலின் மூலம் காணாமலாக்கியது சிங்கள இராணுவம்.
இறுதிப் போர் நடந்த 2009-ல் எண்ணற்ற குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களும், விடுதலைப் புலிப் போராளிகளும் சரணடைந்தனர். அவர்களின் நிலையெல்லாம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. தாய்மார்கள் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியும் இலங்கை அதிபர் வட்டாரங்கள் அசையவேயில்லை. இசைப்பிரியா உட்பட பல பெண்களும், ஆண்களும் கைகள் கட்டப்பட்டு பெரிய பள்ளம் அருகில் அமர வைத்திருந்ததும், பின்னர் மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட காட்சிகளையும் பார்த்தோம். இப்படியான எத்தனை பள்ளங்கள் மனிதப் புதைகுழிகளாக சிங்களப் படைவெறியர்களால் மாற்றப்பட்டன என்பதற்கு ஈழ மண்ணே சாட்சி.
தமிழர்களை இனப்படுகொலை செய்வதையே குறியாகக் கொண்ட அரச பயங்கரவாதிகள் ஆட்சி நடத்தும் இலங்கையில், அரச நிர்வாக எந்திரம் மட்டும் எப்படி பாதிக்கப்பட்ட தமிழர்களின் பக்கம் நிற்கும்? நீதிமன்றங்கள், விசாரணைக் குழுக்கள், சட்ட அமைச்சகம் என அனைத்தும் கண் துடைப்பாக செய்யும் செயல்பாடுகளில் தமிழர்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்? தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் சுதந்திரத் தமிழீழ சமத்துவக் குடியரசு ஆட்சியை நிறுவிட, தங்களுக்கு உரிமையுள்ள நாட்டினைப் பெறுவதற்காகப் போராடிய விடுதலைப் புலிகளின் மீது போலியான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் பரப்பி கட்டுரைகளையும், கதைகளையும் எழுதிக் குவித்த இந்தியப் பார்ப்பனிய வர்க்கம், இந்த மனிதப் புதைகுழி அவலத்தைப் பற்றி ஆய்வுகளை செய்து கட்டுரை வடிக்குமா? இலங்கை அரசு இனப்படுகொலை அரசு என பல்வேறு ஆதாரங்கள் மூலமாக, குறிப்பாக ஐ.நாவின் சார்லஸ் பெட்ரி அறிக்கை, பிரேமன் தீர்ப்பாயம் என ஐ.நா குழுவும், சர்வதேச நீதியமைப்புகளும் வெளிக்கொணர்ந்த பின்னும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் தமிழர்கள் வாழ முடியும் என 13 வது சட்டத்திருத்தத்தை தமிழர்கள் தலையில் திணிப்பதை தமிழகக் கட்சிகள் ஆதரிப்பதை ஏற்க முடியுமா?
எங்களுக்கு நீதி தாருங்கள் என சர்வதேசத்திடம் கையேந்தும் ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்’ கேட்பதெல்லாம், மனிதப் புதைகுழிகளில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் யாருடையது எனக் கண்டுபிடித்தேனும் சொல்லுங்கள் என்பதைத் தான். இன்னும் தோண்டப்படாத மனிதப் புதைகுழிகளில் தங்கள் அன்புக்குரியவர்கள் இருக்க மாட்டார்கள், இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்னும் நம்பிக்கையுடன் போராடும் அந்தத் தாய்மார்களுக்கு என்ன பதிலை சர்வதேசம் வைத்திருக்கிறது?
வல்லரசுகளின் இராணுவ, வர்த்தக நலன்களுக்காக, சிங்கள அரசின் பெளத்த பேரினவாத வெறிக்காக இனப்படுகொலை கொல்லப்பட்ட தமிழினத்திற்கான நீதியை, காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தாய்மார்களுக்கான நீதியை வெகுமக்களின் போராட்டங்கள் மூலமே பெற முடியும். தமிழீழத்தில் நடந்தேறிய அவலத்தை, ஈழக் கோரிக்கையின் நியாயங்களை பல வடிவங்களில் சர்வதேசமெங்கும் கொண்டு சேர்ப்பது தமிழர்களின் கடமை. இதற்கான எழுச்சியே பேரினவாதத்தை மண்டியிட வைக்கும்.