
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 2,152 கோடி நிதியை வழங்காமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! இந்தி திணிப்பை ஏற்க வற்புறுத்தும் வகையில் தமிழ்நாட்டை பழிவாங்கும் போக்கை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் (சமக்ரா சிக்சா) என்ற ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்விக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டிற்கு ரூ. 2152 கோடி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை ஒன்றிய பாஜக அரசு விடுவிக்காமல் தடுத்து வைத்திருந்தது. தற்போது அந்த நிதியினை குஜராத், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருந்ததை, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் முதற்கொண்டு, அரசியல் கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் என அனைவருமே கண்டித்தனர். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நிதியை விடுவிக்க டில்லிக்கு நேரடியாக சென்றும், கடிதம் எழுதியும் மோடியிடம் வலியுறுத்தியிருந்தார். தமிழ்நாட்டிற்கு நியாயமாக சேர வேண்டிய நிதியை விடுவிக்காமல், புதிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மிரட்டும் போக்கில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
குலகல்வியை ஊக்குவிக்கும், இந்தியை திணிக்கும், தமிழ்நாட்டு பள்ளிக்கல்வியை பின்னோக்கி தள்ளும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. உச்சபட்சமாக தற்போது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது, தமிழ்நாட்டை பழிவாங்கும் நோக்கத்தையே காட்டுகிறது. தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், இல்லையேல் நிதி வழங்கப்படாது என்று மிரட்டல் போக்கை மோடி அரசு கையாள்வதையே இது காட்டுகிறது.
அதேவேளை, ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்காததால் பள்ளிக்கல்வியில் சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழான பல்வேறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வி நேரடியாக பாதிக்கின்றது. மற்றொருபுறம், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 30,000 பணியாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கணக்காளர்கள், கணினி இயக்குபவர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் குடும்பங்கள் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்காகவும் சிகிச்சைக்காகவும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 400 இயன்முறை மருத்துவர்களும், 2500 சிறப்பு ஆசிரியர்களும் ஊதியமின்றி பெரும் அவதிக்குள்ளாவார்கள்.
மோடி அரசு ஏற்க சொல்லும் பிஎம் ஸ்ரீ திட்டம் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலானது. புதிய கல்விக் கொள்கை இந்தியை திணிக்கும் மும்மொழி திட்டத்தையும், சனாதன தர்மத்தை நிலைநாட்டும் குலக்கல்வித் திட்டத்தையும் முன்மொழிகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை நீங்கலான பிஎம் ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு முன்வந்த போதும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. முற்போக்கு சிந்தனைகளை கொண்ட நாட்டின் தலைசிறந்த கல்வி முறையான தமிழ்நாட்டுக் கல்விமுறையில் புதிய கல்விக் கொள்கையை புகுத்தி தமிழ்நாட்டு பள்ளிக்கல்வியை இந்துத்துவ மயக்கும் நோக்கம் ஒன்றே இதன் பின்னணி.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கும் போக்காகும். இதே போன்று இயற்கை பேரிடர் துயர்துடைப்பு நிவாரணத்தை வழங்காமல் இருந்தது, பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது என ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. மாநிலத்திற்கு சேர வேண்டிய உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் இருப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் மூலம் தமிழ்நாட்டின் வரிவருவாயை பறித்துக்கொண்ட ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நிதியை வழங்காமல் கடன் வழங்குகிறோம் என்று தமிழர்களை கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளது மோடி அரசு.
பாதிக்கப்படுவது தமிழர்கள் என்ற நிலையில், தமிழர்கள் பக்கம் நின்று பேச வேண்டிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழர்களை வஞ்சிக்கும் வடநாட்டு கட்சியின் தலைமைக்கு விசுவாசமாக பேசியுள்ளார். மேலும், இந்தியை திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி முறையையும், தமிழ்நாட்டு மாணவர்களையும் மலினப்படுத்தும் வகையில் பேசி இழிபடுத்தியுள்ளார். அண்ணாமலையின் இந்த தமிழர் விரோத போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பாஜக ஒரு போதும் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்காது, மாறாக தமிழர்களை வஞ்சிக்க அனைத்து வகையிலும் துணைநிற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை தமிழ்நாடு அரசே நிர்ணயிக்கும். அந்த வகையில், தமிழ்நாட்டின் கொள்கை முடிவான இருமொழிக் கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கல்விக் கொள்கையையும் தமிழ்நாடு நிராகரிக்கும். இதற்காக தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் இந்த சனநாயக விரோத செயலுக்கு எதிராக தமிழ்நாடு அணிதிரள வேண்டும். கல்வியியலாளர்கள் மட்டுமல்லாது சனநாயக முற்போக்கு அமைப்புகள் அனைத்தும், தமிழ்நாட்டிற்கான நிதி வழங்கப்படும் வரை, தமிழ்நாடு முழுதும் ஒன்றிய அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கல்வி மாநில உரிமை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதன் மூலமும், வரிவசூல் உரிமையை மீண்டும் பெறுவதன் மூலமுமே மாநிலங்கள் கல்வியில் தனித்து செயல்பட முடியும். இதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
10/02/2025