
*முதலிபாளையம் பகுதி திருப்பூர் மாநகராட்சியின் குப்பைக்காடாக மாற்றப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே 17 இயக்கம்*
திருப்பூர் மாவட்டம், தெற்கு தாலுக்காவிற்கு உட்பட்ட முதலிபாளையம் புல எண்: 393 மற்றும் நல்லூர் புல எண்: 354 பகுதியில் கைவிடப்பட்ட தனியார் குவாரி பாறைக்குழிகளில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக பல்வேறு வகையான இறைச்சிக்கழிவு, மருத்துவக்கழிவு, ரசாயனக்கழிவு, தொழிற்கழிவு, நச்சுக்கழிவு, காஸ்டிங் கழிவு, பிளாஸ்டிக் கழிவு, கண்ணாடி கழிவு மற்றும் பல கழிவுகளை கொட்டி வருகிறது.
இவ்வாறு தரம் பிரிக்கப்படாத, வகைப்படுத்தப்படாத பல்வேறு வகையான கழிவுகளை ஒன்றாக கொட்டுவதால் விஷவாயு வெளியேறுவதோடு நிலத்தின் தன்மை மலடாவதோடு மிகப்பெரியளவில் சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்பட்டு சுற்றியுள்ள மக்களுக்கு கடுமையான சுகாதார பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கால்நடைகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பாறைக்குழியை சுற்றி 500மீட்டர் தொலைவில் நான்கு தனியார் பள்ளிகள் உள்ளது கவனிக்கத்தக்கது.
2015முதல் திருப்பூர் மாநகராட்சி தரம் பிரிக்காமல் குப்பைகளை கொட்ட தொடங்கிய போது அதனை முதலிபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினர்.

தற்போது மீண்டும் அதே பாறைக் குழியில் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு 800 டன் அளவு குப்பைகள் கொட்டப்படுகிறது என உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.
திருப்பூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையை SWMS (Srinivas Waste Management Service) என்ற தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுத்துள்ளது. இதே நிறுவனத்துடன் தான் கோவை மாநகராட்சியும் திடக்கழிவு மேலாண்மைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“..கைவிடப்பட்ட இதுபோன்ற குவாரிகளில் திறந்தவெளியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தவிர்க்க, 16 மைக்ரோ கம்போஸ்ட் மையங்கள் ஏற்கனவே உள்ளன. இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மேலும் 13 Micro Compost மையங்களையும்(நுண் உரம் தயாரிக்கும் மையம்) , மூன்று கழிவு பிரிப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த TSCL(Tirupur Smart City Ltd) முன்மொழிந்தது. இந்த திட்டத்தின்படி, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 13 புதிய MCC மையங்களும்,
பாரதி நகர் வடக்கு, விஜயபுரத்தில் உள்ள செந்தில் கார்டன் மற்றும் தென்னம்பாளையத்தில் உள்ள கல்லிக்காடு தோட்டம் ஆகிய இடங்களில் 3 கழிவு பிரிப்பு மற்றும் கழிவு மேலாண்மையை திறம்படச் செய்வதற்கும் நகரத்தை முற்றிலும் குப்பைத் தொட்டிகள் இல்லாததாக மாற்றுவதற்கும் தேவையான அனைத்து உபகரணங்கள் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாக இதெற்கென 20கோடியை ஒதுக்கியுள்ளதாக திருப்பூர் மாநகராட்சியின் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் மாநகராட்சியிடமிருந்து பெறப்படும் ஒப்பந்தங்களின் மூலம் முறையாக நகரங்களை பராமரிக்காமல் லாபநோக்கோடு மட்டுமே செயல்படுவதால் திட்டங்கள் அனைத்தும் காகிதங்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது.
முதலிப்பாளையம் கிராம மக்கள் திருப்பூர் மாநகராட்சியால் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு முகாம்களில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த விட நடவடிக்கையும் எடுக்காததால் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வீதிக்கு வந்துள்ளனர்.
கடந்த 11/10/25 சனிக்கிழமை முதலிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் கூட குப்பை பிரச்சினை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டி மக்கள் கோரிக்கை வைத்தனர் ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
தற்போது, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டுமெனவும், வரும் 22-ம் தேதி வரௌ குப்பை கொட்ட தடை விதிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இப்பிரச்சனைக்கு திருப்பூர் மாநகராட்சியின் சார்பாக நிரந்த தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மே 17 இயக்கத்தின் விருப்பம். மாநகராட்சி தனக்கென சொந்தமான, மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில், பாதுகாப்பான முறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக முதலிப்பாளையம் பகுதியை திருப்பூரின் குப்பைக்கிடங்காக மாற்றக் கூடாது என்று மே17 இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
20.10.2025
9884864010