இந்திய ஒன்றியத்தின் 2024-25-ம் ஆண்டுக்கான ஏழாவது நிதிநிலை அறிக்கையை, தேர்தலை எதிர்கொள்ளாமலே நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ல் வெளியிட்டுள்ளார். இதில், பெரும்பான்மையே இல்லாமல் தத்தளித்த பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு உதவி செய்த ஆந்திரா, பீகார் முதல்வர்களுக்காக, அம்மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாஜக ஆட்சி இல்லாத தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடுகள் எந்த திட்டத்திற்கும் ஒதுக்கப்படவில்லை.
இரண்டு வெள்ளப் பேரிடர்களை சந்தித்த தமிழ்நாட்டிற்கு இழப்பீடாக ரூ 37000 கோடியை கேட்ட பின்பும் ரூ 276 கோடிகளையே மோடி அரசு அளித்தது. ஆனால் பீகாருக்கு வெள்ளத் தடுப்பு நிதியாக 11000 கோடி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்கு மட்டும் 70 ஆயிரம் கோடிகள் அறிவித்துள்ள நிலையில், பாஜக அரசு, ஆறு ஆண்டுகளில் ரூ 3273 கோடியை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.
ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு, இதுவரை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்காக இதுவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் 15 ஆயிரம் கோடிக்கும் மேலான நிதிகளை அள்ளி வழங்கியுள்ளது. இப்போதுள்ள நிதிநிலை அறிக்கையில்கூட, ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் துவங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்கவே இல்லை. மெட்ரோ கட்டுமானப் பணிக்கான நிதிச்சுமை தமிழ்நாடு அரசின் தலையில்தான் விழுந்திருக்கிறது. தமிழ்நாடு இந்த 2024-ம் ஆண்டில் கூட தனது நிதி அறிக்கையில் ரூ 12 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு மோடி அரசு செய்யும் துரோகத்தை தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறும்போது, “2014-23 வரை 6.23 லட்சம் கோடியை தமிழக அரசு வழங்கியிருந்தும், 4.75 லட்சம் கோடியை மட்டும் வழங்கி இருக்கிறது. இந்த வரிப்பகிர்விலும் மறைமுக வரிகளாக, தனிப்பட்ட முறையில் கல்வி, சுகாதாரத்திற்கென்று வாங்கப்படும் செஸ் வரி, ஒன்றிய அரசிற்கு கிடைக்கும் உபரி போன்ற 28% வரிகள் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. மீதியுள்ள 72% மட்டுமே நிதிப் பகிர்வு நடக்கிறது. அவற்றிலும் 41% மட்டுமே மாநிலங்களுக்காக பகிரப்படுகிறது” என்று சொல்கிறார்.
தமிழ்நாட்டை இந்த அளவிற்கு சுரண்டியும், தமிழ்நாட்டுக்கென்று புதிய திட்டங்களோ, தற்போது நடைபெறும் திட்டங்களுக்கான நிதிகளோ ஒதுக்கப்படவில்லை என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் வரிப் பங்கீட்டில், 1 ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே திருப்பி வழங்கும் மோடி அரசு, உத்திரப் பிரதேசத்திற்கு 2. 20 பைசா கொடுக்கிறது. இது மக்கள் தொகை கணக்கீட்டின் அளவில் பிரித்து வழங்கப்படும் பெருந் துரோகமாகும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வளர்ச்சிக்கு உதவிய தமிழக மக்களுக்கு, இந்திய ஒன்றிய அரசினால் வழங்கப்படும் தண்டனையாகும்.
தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழ் மொழியும் மோடி அரசுக்கு கசக்கிறது. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளே சொல்லப்படாத அறிக்கைகளாக வெளிவந்திருக்கிறது. மேலும் நிர்மலா சீதாராமன் எப்போதும் நிதிநிலை அறிக்கை வாசிப்பதற்கு முன்பாக திருக்குறள் சொல்லுவார். அது இம்முறை இல்லை. தமிழ்மொழியின் மேல் பற்று கொண்டிருந்ததாய் இதுவரை நடித்த இவர்களின் கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ₹2,435 கோடியும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெறும் ரூ 100 கோடியும் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மீது சுமையையே இந்த நிதிநிலை அறிக்கை சுமத்தியுள்ளது. இந்தியாவில், தனி நபரின் மாத ஊதியமாக 30 ஆயிரத்துக்கு மேல் ஈட்டும் ஒவ்வொருவரும் 5% வரியும், 60000 ஈட்டுபவர் 10% வரியும் வருமான வரியாக கட்ட வேண்டும்.
சொத்துகள், நகைகள், நிலங்கள், வீட்டு மனைகள் போன்றவற்றை விற்றாலும் வரி செலுத்த வேண்டும். மேலும் பங்குச்சந்தையில் பங்குகளை விற்றாலும் வரி செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு 1 லட்சத்திற்கு பங்குகளை வாங்கி, 1.50 லட்சத்திற்கு விற்றால், மீதியுள்ள 50 ஆயிரத்திற்கான வரியாக 12.5% வரி கட்ட வேண்டும். குடும்பத்தில் பெருகும் செலவினங்களுக்காக மாத ஊதியத்தைத் தவிர வேறு வகையில் பணம் ஈட்டலாம் என்று நினைக்கும் நடுத்தர மக்களின் கனவுகளைப் பிடுங்கி எறிந்துள்ளது மோடி அரசு.
முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை வழங்குவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கெனவே வழங்கிய முத்ரா கடன் என்பது, அவர்களது கட்சியை வளர்க்கும் ஊக்க நிதியாகவே செயல்பட்டது என்பதற்கான மே 17 இயக்க கட்டுரை :
உணவு, உரம், பெட்ரோலுக்கான மானியங்களில் குறைக்கப்பட்ட மானியத்தின் அளவு :
இதனால் இந்த மானியங்களால் பலனடைந்த விவசாயிகளுக்கே பெரும் பாதிப்பாக முடியும். மேலும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை வழங்கும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ 86000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதிப் பயன்பாட்டுக்குரிய ஊழியர்கள் இன்மையால், இதில் நடைபெறும் ஊழல்களே அதிகரித்திருப்பதாகவும், மொத்தமாக தேவைப்படும் நிதி 1.2 லட்சம் கோடியென்றும், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆசிரியரான நாராயணன் தனது ஆய்வில் கண்டறிந்து கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் கோடி பற்றாக்குறையாகவே ஒதுக்கப்படும் நிலையே இருக்கிறது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான மொத்த இறக்குமதி வரி 15% சதவீதத்தில் இருந்து 6% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்தின் மீதான வரி 6.4% ஆக குறைந்துள்ளது. மேலும் வைரம் இறக்குமதியில், வெளிநாட்டு நிறுவனங்களுடனான கடின முறையை எளிமையாக்கும் படியாக வழிமுறைளை அறிமுகப்படுத்துவதாக சொல்லப்பட்டது. குசராத்தின் சூரத் மாநகரத்தின் பனியா கும்பலே தங்கம் வைர உற்பத்தியில் ஈடுபடுகிறது. அவர்களுக்கான வரியை குறைத்ததன் மூலமாக, தங்கத்தின் மூலப் பொருள்களை குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கலாம். ஆனால் தொலைத் தொடர்பு சாதனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை ஏற்றப்பட்டிருக்கிறது
இந்த 2024-25-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை தனி நபர் வருமானத்தை கறப்பதிலேயே குறியாக இருக்க, மோடி ஆட்சி அமைத்ததில் இருந்தே பெருநிறுவனங்களின் வரியைக் குறைப்பதில் ஊக்கத்துடன் செயல்பட்டு இருப்பதும் பல ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டு இருக்கிறது. 2018 லிருந்து 2023 வரை தனி நபர் வருமான வரி மற்றும் பத்திரங்கள் வாயிலான பெறப்பட்ட வரிகளுக்கும், பெருநிறுவனங்களின் மூலமான கிடைத்த வரிகளுக்கும் இடையே பல மடங்கு வித்தியாசங்கள் உள்ளது.
இந்த 5 வருடங்களில் மட்டும், மாத ஊதியதாரர்களிடம் இருந்து சுமார் 76% கொள்ளை வரிகளை அபகரித்துள்ளது மோடி அரசு. ஆனால் பெருநிறுவனங்களிடமிருந்து 25% மட்டுமே வாங்கியிருக்கிறது. இவ்வாறு பெருநிறுவனங்களுக்கான வரிச்சலுகைகளும், குறைவான விழுக்காடு அளவே வரி உயர்த்தலும் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்திருக்கிறது. ஆனால் நடுத்தர மக்களின் ஊதியத்திலிருந்து இரண்டு மடங்கு அளவுக்கான வரி பிடுங்கப்பட்டுள்ளது.
பெருநிறுவனங்களின் வரி விகிதத்தை, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும், முதலீடுகளைக் குவிக்கும் என 35%-த்திலிருந்து 26% வரை குறைத்தார்கள். இவ்வாறு குறைத்ததால், அரசுக்கு ஆண்டுக்கு 1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இழப்பு 8 லட்சம் கோடிக்கும் மேலாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு குறைத்தன் மூலம் அவர்கள் எவ்வளவு முதலீடுகள் செய்திருக்கிறார்கள் மற்றும் எவ்வளவு வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறார்கள் என்பது குறித்தான தரவுகளே மோடி அரசிடம் இல்லை. மாறாக வேலைவாய்ப்பின்மை பெருகியிருப்பதும், பெருநிறுவன முதலாளிகளின் வராக்கடனான 25 லட்சம் கோடி வங்கியிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் தான் மோடியின் கடந்த 10 ஆண்டுகளில் நடந்திருக்கிறது.
பயிற்சி மையங்கள், அறக்கட்டளைகள், கலைக் கூடங்கள், பொழுதுபோக்கு மையங்கள், மத நிறுவனங்கள் எனப் பலவற்றிற்கு, சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் வழக்கறிஞர்களுக்கு விலக்கு உள்ளது. பெரும் வர்த்தகர்களோ, தொழிற்சாலை அதிபர்களோ, சினிமாப் பிரபலங்களோ, விளையாட்டு வீரர்களோ தங்கள் வருமானத்தை முழுதாகக் காட்டி வரிகளை செலுத்துவதில்லை. மாறாக பெருமளவில் குறைவாகக் காட்டியே வரி செலுத்துகின்றனர். அதிலும் கோடிக்கணக்கான வரி பாக்கிகள் இருக்கின்றன. ஆனால் 40 ஆயிரத்திற்கும் குறைவாக மாத ஊதியம் பெறும் நடுத்தர குடும்பத்தில் தனி நபரிடமிருந்து வரிகள் பிடுங்கப்படுகிறது. எளிய மக்களிடமிருந்தோ, அவர்களின் அடிப்படைத் தேவைகளான உணவுப் பொருட்களில் இருந்து பெட்ரோல் முதலான பொருட்கள் வரை வரிகள் சுரண்டப்படுகிறது. ஆக மாத ஊதியம் 10,000 கூட பெற முடியாத 80% மக்களும், 40000 வரை மட்டுமே பெறும் 15% மக்களாலும் தான் இந்திய ஒன்றியத்தின் ஆட்சிக்கான வரி வருமானம் கிடைக்கிறது. மீதி 5% மட்டுமே பெருநிறுவனம், நடுத்தர நிறுவனம், சிறு நிறுவனங்கள் ஆகியவை மூலம் பெறப்படும் வரிகள். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கு பெரு நிறுவனங்களே காரணம் என மோடி அளந்து விடுவதும் தொடர்கிறது.
மோடி ஆட்சியின் கடந்த பத்தாண்டுகளில் மட்டுமல்ல, இனி வரும் ஐந்தாண்டுகளிலும் எளிய, நடுத்தர மக்களின் மேல் வரிச்சுமையும், பனியா குசராத்தி நிறுவனங்களுக்கான வரிச்சலுகையும் நிரந்தரம் என்பதையே இந்த 2024-25 நிதிநிலை அறிக்கையும் உணர்த்தியுள்ளது.