
இந்திய மக்களின் சொத்துக்களான கனிம வளங்களை குஜராத்தி பனியா நிறுவனங்கள் சூறையாட பழங்குடி மக்கள் மோடி அரசால் வேட்டையாடப்படுவதாக பழங்குடியினரின் அமைப்புகள் குமுறுகின்றனர். அரிய வகை கனிமங்களை இந்நிறுவனங்களிடம் வழங்குவதற்காகவே மாவோயிஸ்ட் ஒழிப்பு என்ற பெயரில் ‘ககார் நடவடிக்கை’ மூலம் அப்பாவி பழங்குடி மக்களையும் கொல்வதாக மனித உரிமை அமைப்புகளும் கூறுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் பழனி முருகன் கோயிலில் மாலிப்டினம் என்னும் அரிய வகை கனிமம் கண்டறியப்பட்டிருப்பதும், கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டிருப்பதும், அதைச் சுற்றியுள்ள 100 கிராம மக்களுக்கு பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. பழனி மக்கள் இதனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கனிம வளங்கள் நிறைந்த இடங்களில், இயற்கை வளத்தை பலி கொடுத்து, சுற்றுச் சூழலை நாசமாக்கி, மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளை தருபவையாக கனிம சுரங்கங்கள் விதிமுறைகளை மீறி இயங்குகின்றன. தெலுங்கானா முதல் சத்தீஸ்கர் வரை கனிம சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களில் மக்களின் போராட்டங்களும், அழுகுரல்களும் மட்டுமே சொந்தமாகக் கொண்ட மக்களின் நிலை மாற வேண்டும் என பழங்குடி அமைப்புகள் போராடிக் கொண்டேயிருக்கின்றனர். மேலும் இப்பகுதிகளில் கண்டறியப்படும் அரிய வகைக் கனிமங்களால் பழங்குடிகளில் நிலை பாஜகவினால் மோசமாகிக் கொண்டேயிருக்கிறது.
உலகச் சந்தையின் முதன்மைப் போட்டியாக இந்த அரிய வகைக் கனிமங்களே இருக்கின்றன. இன்றைய தொழில்நுட்ப உலகின் முக்கிய தேவையாக செமி கண்டக்டர் என்னும் பகுதியளவு மின்கடத்தி கனிமங்கள் உள்ளன. தொழில்நுட்ப உலகின் முதுகெலும்பாக இருக்கும் இவை மின்சார வாகனங்கள், 5G தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, செல்போன், ஆட்டோமொபைல் கருவிகள், விண்வெளி கருவிகள், மருத்துவ உபகரணங்கள், மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உபகரணங்களுக்கு அவசியத் தேவையாக உள்ளன. சிலிகான், ஜெர்மேனியம், மாலிப்டினம், போரான், பாஸ்பரஸ், ஆர்சனிக் போன்ற அரிய வகைக் கனிமங்கள் அனைத்தும் அரை மின்கடத்தி (semiConductor) பொருட்கள் தான்.

இவ்வகைக் கனிமங்களின் ஏற்றுமதியில் உலகளாவிய விநியோகத்தில் சீனாவுக்கு 60-70% பங்கு இருந்தது. தொழில்நுட்பத் துறையில் தனது மேலாதிக்கத்தை உறுதி செய்ய நினைத்து இவற்றின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. இதனால் இன்கனிமங்களை சார்ந்திருக்கும் நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்றவை தங்கள் நாட்டின் கனிம வளங்களை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. முயற்சியில் பெருநிறுவனங்களுக்கு சுரங்கங்களை அளிக்கும் ஏற்பாடுகளை தீவிரமாக செய்யும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய அரசு, ஜூலை 21, 2025 அன்று தொடங்கிய கூட்டத் தொடரில் ‘சுரங்க உரிமைகள் மற்றும் கனிமங்கள்’ சட்டத் திருத்த மசோதாவினை அறிமுகப்படுத்த உள்ளது.. இந்தியாவில் சுரங்கம் மற்றும் கனிமங்களை நிர்வகிக்கும் முக்கிய சட்டம் ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1957 (Mines and Minerals Development and Regulation Act, 1957 – MMDR Act)’ ஆகும். இந்த சட்டம் 2015-ம் ஆண்டிலிருந்து பல முறை திருத்தப்பட்டன. குறிப்பாக 2023-ல் திருத்தப்பட்ட சட்டத்தில் இக்கனிமங்களை ஆய்வு செய்யவும், சுரங்கங்கள் அமைப்பதற்கும் தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில் . வெளிநாட்டு முதலீடுகளை குவிக்கும் வகையில் திருத்தப்பட்டன.

வாசிங்டனில், ஜூலை 1, 2025 அன்று கனிம வளத்திற்கான தொழில் நுட்ப பறிமாற்றங்களின் அறிமுகத் துவக்கம் பற்றி(Quad Critical Minerals Initiative) அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா இணைந்திருக்கும் ‘குவாட் (QUAD)’ கூட்டமைப்பில் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது. இதன்படி சுரங்கம், கனிமம் பிரித்தெடுத்தலை, மையமாகக் கொண்டு இப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் சட்டம் மூலமாக, வனப் பாதுகாப்பு சட்டம் மூலம் பழங்குடி மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலங்களும் சுரங்கங்கள் அமைப்பதற்காக பறிக்கப்பட்டன. பொது நலன் என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தனியார் சுரங்க நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. குறிப்பாக ஒரிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் எந்த வித முறையான ஆவணங்களுமின்றி 2021 -ல் பறிக்கப்பட்ட நிலத்தில், சுரங்க நிறுவனங்களால் எந்த எல்லை வரையறையும் இல்லாமல், மிதமிஞ்சிய அளவில் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. கடும் சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் அங்குள்ள மக்கள் அனைவரும் இடம் பெயரும் நிலைக்கு ஆளாகினர். மேலும் பாஜக அரசு திருத்திய சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடு (ElA – 2020)ன்படி, பல திட்டங்களில் பழங்குடி மக்களின் கருத்தைப் புறக்கணிக்கும் வகையில் திருத்தப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அபராதம் செலுத்தி தொடரலாம் என நிறுவனங்களுக்கு ஆதரவளித்தது. மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த EIA ஒழுங்குமுறை அதிகாரங்கள் முற்றிலும் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டன. இவ்வாறு பல சட்ட திருத்தங்களை கொண்டு வந்து கனிம வளத்திற்கான உரிமையை பழங்குடி மக்களிடமிருந்தும், மாநில அரசிடமிருந்தும் பறித்த வேலையை செய்தது மோடி அரசு.

பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களைப் பாதுகாக்க பல இடங்களில் கடும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஒடிசாவின் நியாம்கிரி மலைப்பகுதியில் வேதாந்தா நிறுவனத்தின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராக டோங்கரியா கோண்ட் பழங்குடியினர் போராட்டம், சத்தீசுகர் பஸ்தர் பகுதியில் கோண்ட் மற்றும் மரியா பழங்குடியினர் சுரங்க நிறுவனங்களுக்கு எதிர்ப்பு போராட்டம், ஜார்க்கண்ட்டில் ஜாதுகுடா யுரேனியம் சுரங்கத்திற்கு எதிராக சந்தால் மக்களால் நீண்டகால போராட்டங்கள் எடுக்கப்பட்டன.
இயற்கை வளத்தை காக்கும் சண்டை, அரசுக்கும் அமைதிப் போராட்டமாக மக்களுக்கும், ஆயுதப் போராட்டங்களாக சில மாவோயிஸ்டு அமைப்புகளுக்கும் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. கனிம வள சுரங்கங்கள் தோண்டப்படும் போது அந்நிலப்பரப்பே மக்கள் வாழ முடியாத சூழலுக்கு தள்ளப்படும். நிலத்தடி நீர் மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு இரசாயனங்கள் கலக்கும். காற்று மாசுபாடு அதிகமாகும். காடு அழிப்பால் வன உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கும். மாசடைந்த நீர், நிலம் காரணமாக நோய்கள் தாக்கும். மக்கள் இடப்பெயர்வுக்கு ஆளாவர். இத்தனை காலமும் இயற்கையை நேசித்து வாழ்ந்த மக்கள், இயற்கை சூழலை நாசமாக்கும் நிறுவனங்களால் துரத்தப்படுவார்கள். விவசாயம், மீன்பிடிப்புத் தொழல் முற்றிலும் அழியும்.

இந்தியாவில், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில், நிலக்கரி, எண்ணெய் மற்றும் பிற கனிம சுரங்கங்கள் உள்ளூர் மக்களை பெரிதும் பாதித்துள்ளன. மேலும், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கோவா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாக்சைட், நிலக்கரி மற்றும் இரும்புத் தாது சுரங்கங்கள் பழங்குடி மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக இச்சுரங்கங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பல குழந்தைகள் கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறக்கின்றனர்.
கனிமங்கள் என்பது ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியமானது. ஆனால் இயற்கை, சுற்றுப்புற சூழல், மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பின்னடைவை உருவாக்கும் படியாக, பெரு நிறுவனங்கள் முறையான விதிகளை பின்பற்றாமல் கனிமங்களை சுரண்டுகின்றன. இதனால் மண்ணரிப்பு ஏற்பட்டு இயற்கைப் பேரிடர்களுக்கு காரணமாக அமைகின்றன.
சீனா போன்ற மற்ற நாடுகளிலாவது தனது உள்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு, பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் தொழில்துறைகளை தங்களின் கைப்பிடிக்குள் குவித்து வைத்திருக்கும் அதானி, அம்பானி போன்ற குஜராத், மார்வாடி கும்பல்களே வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப திட்டங்களும், சட்டத் திருத்தங்களும் வகுக்கப்படுகின்றன.
நாட்டின் வளர்ச்சி என்று அப்பகுதிகளில் உள்ள அப்பாவிப் பழங்குடி மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். அவர்களின் இயற்கை காக்கும் போராட்டத்தை நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பயங்கரவாத செயலாகக் கதை கட்டி, பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் அழிப்பதற்குரிய நியாயம் கற்பிக்கின்றனர். காங்கிரசால் நடத்தப்பட்ட ‘பசுமை வேட்டை’ முதல் இன்றைய பிஜேபி அரசின் ‘ககார் நடவடிக்கை’ வரை அதன் தொடர்ச்சியாகவே நீள்கின்றன. சத்தீசுகரில் மட்டும் 300க்கும் மேற்பட்டவர்கள் ககார் நடவடிக்கையினால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் ஏற்படுத்தும் பாதிப்பையே மற்ற மாநிலங்களின் பழங்குடிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எடுத்துக்காட்டாய் சொல்லலாம். நெய்வேலியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் 250 மடங்கு பாதரசம் உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் செய்த ஆய்வு தெரிவிக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளித்த கிராமத்து மக்கள் ஏமாற்றப்பட்டு வடமாநிலத்தவரே நியமிக்கப்பட்டுள்ளனர். மிகவும் குறைந்த ஊதியமுள்ள, அடித்தட்டு வேலைகளில் மட்டுமே அங்குள்ள தமிழர்கள் உள்ளனர். இதற்கான போராட்டமும் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. நெய்வேலி மக்களின் துயரத்தைப் போன்று பழனி முருகன் மலையும், அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களும், கிராமங்களும் பாதிப்புக்குள்ளாவதற்கு தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்திய அளவிற்கு வீரியத்துடன் போராட்டங்கள் எழ வேண்டும்.
இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மலைகளில் இருக்கும் முருகன் கோவிலை மையமாக வைத்து இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் பிரச்சனையை எழுப்புவதையும் இதனுடன் ஒப்பிட வேண்டியிருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்கா பிரச்சனையை எழுப்பியது போல பழனியிலும் பிரச்சனைகளை எழுப்பின. மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கும் சென்று வழிபடுவது தமிழர்கள் மரபாக தொடர்ந்து வரும் போது, சமீபத்தில் பழனி முருகன் கோவிலுக்கு மாற்று மதத்தினர் வரக்கூடாது என சர்ச்சையாக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதற்கேற்றபடி தீர்ப்பும் வாங்கியது பாஜக. அதைப் போல திருப்பதி லட்டு சர்ச்சையில், மாட்டுக் கொழுப்பு கலந்த நெய் விநியோகம் செய்த நிறுவனம் சர்ச்சைக்குள்ளானது. அந்த நிறுவனத்தில் தான் பழனி பஞ்சாமிர்தத்திற்கும் நெய் வாங்கப்பட்டது என்று பாஜக, இந்துத்துவ அமைப்புகள் சர்ச்சைகள் கிளப்பின. இயக்குனர் மோகன் ஜி என்பவர் சமூக வலைதளத்தில் பரப்பி கலவரம் தூண்ட நினைத்ததால் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி பாஜகவிற்கு ஆதரவான பொருளாதார நோக்கத்திற்கு இயங்குவதையே தமிழ்நாட்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ கூட்டம் கொள்கையாக வைத்திருக்கின்றன. அவர்களின் ஆதாயத்திற்கு இயங்கும் செயல்பாடு அல்லாமல், இந்துத்துவ கூட்டம் தமிழர் நலன் என்று எந்த செயலிலும் இறங்காது. அதே சமயம் இந்தக் கூட்டம் மதப் பிரிவினைவாதம் ஊட்டி, குஜராத்திகளுக்கு வணிக ஆதாயம் உருவாக்கித் தரும் என்பதற்கு கோவைக் கலவரமே சாட்சியாகி இருக்கிறது. முருகன் இருக்கும் மலைப்பகுதிகள் யாவும் மக்களுக்கானது. அதில் பழனியும் விதிவிலக்கல்ல என்பதை உணர்ந்து கனிம சுரங்கங்கள் அமைய விடாது போராடுவோம். பெருநிறுவனக் கொள்ளைக்கு பலியிடப்படும் பழங்குடிகளுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் குரல் கொடுப்போம்.