இந்திய ஒன்றியத்தில் நடைபெறும் 2024- பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி மோடி ராஜஸ்தானில் பரப்புரை மேற்கொண்ட பொழுது, இசுலாமியர்களை ஊடுருவல்காரர்கள் எனவும், இந்துக்களின் சொத்தை இசுலாமியர்கள் அபகரிக்கப் போகிறார்கள் எனவும் மதவாதத்தை தூண்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியப் பிரதமர்கள் எவரும் நினைத்துக் கூட பார்க்காத பிரிவினைவாதப் பேச்சை பேசிய மோடிக்கு இந்திய அரசியல் மட்டத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இந்தியா முழுமையும் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 102 மக்களவை தொகுதிகளுக்கு முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் 21ம் நாள், ராஜஸ்தானின் ’பன்ஸ்வாரா’ பகுதியில் மோடி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பேசும் போது, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் சொத்து மீது இசுலாமியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறினர். அதாவது ’இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்ட இசுலாமியர்களுக்கே சொத்துக்களை வழங்குவோம்’ என்கிறார்கள். பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டு வைக்காது” என்று இசுலாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் தோரணையில் பேசியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குஜராத் இனப்படுகொலையைப் போன்று இன்னுமொரு இனப்படுகொலை நிச்சயம் நடக்கும் என்பதற்கு மோடியின் உரைகளே சான்றாக உள்ளன.
இந்தியாவில் இனப்படுகொலை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, இனப்படுகொலை கண்காணிப்பகத்தின் நிறுவனத் தலைவர் கிரிகோரி ஸ்டாண்டன் என்பவர் 2022-ம் ஆண்டிலேயே தெரிவித்திருந்தார்.
அமெரிக்க ஓலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில், ஸ்டாண்டன் அவர்கள் “இந்தியாவில் இனப்படுகொலை நடக்கப் போகிறது” என்றும் அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன எனவும் அறிவித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை பற்றி அறிவித்தவர். அதன்படியே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ருவாண்டாவில் பல்லாயிரக்கணக்கான ’துட்சி’ இன மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலை நடப்பதற்கான அறிகுறிகளாக பத்து நிலைகளை அவர் வகைப்படுத்துகிறார். அவற்றில் எட்டு நிலைகளை இந்தியா தாண்டி விட்டது. இனப்படுகொலைக்கு காரணிகளாக மக்களை வகைப்படுத்துதல், அடையாளப்படுத்துதல், பாகுபாடு செய்தல், வெறுப்பு பேச்சு, மனிதாபிமானம் இல்லாமல் துன்புறுத்தல் செய்வது, பிரிவினைவாதம் ஆகியவற்றை கொண்டு அடையாளம் கண்டு வகைப்படுத்தியுள்ளனர்.
வகைப்படுத்துதல்: ஒரே நாட்டின் குடிமக்களை இனம், மதம் அடிப்படையில் வேறுபடுத்தி பார்த்து மனதளவில் அச்சத்தையும், பெரும்பான்மையினரிடம் அவர்களின் மீது வெறுப்பையும் உருவாக்கும் அளவிற்கு வகைப்படுத்துதலை செய்வது.
இசுலாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக பெரும்பான்மையினரான இந்துக்களை நம்ப வைக்கும் செயல்பாடுகளை நீண்ட நாட்களாக இந்துத்துவ கும்பல் செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் பரப்புரையில் மோடி பேசியதும் அதையே குறிக்கிறது. இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடி “காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற திரைப்படத்திற்கு விளம்பரதாரராய் மாறி, மறைக்கப்பட்ட சரித்திரத்தை வெளிப்படுத்திய படம் என்று புகழ்ந்தார். உலகில் எந்த அரசியல் தலைவரும் செய்திராத வகையில் இந்தத் திரைப்படத்தை பற்றி மோடி பேசிய பேச்சினால் திரையரங்கிலிருந்து பொது இடங்கள் வரை இசுலாமியர்களை தனிமைப்படுத்தி பார்க்கும் எண்ணத்தை இந்து மக்களிடையே விதைத்தார். இந்துத்துவ வெறியர்களால் வன்மப் பேச்சுகள் எழும்புவதற்கும் காரணமானார்.
அடையாளப்படுத்தல் : மக்களின் உடைகள், அவர்கள் வழிபடும் இடங்கள், சடங்குகள் மீதான உரிமையை பறித்தல்.
குடியுரிமை திருத்த சட்டத்தினை எதிர்த்து இசுலாமியர்கள் போராடும் போது, வன்முறையாளர்களின் உடைகளை வைத்தே அடையாளம் கண்டுபிடித்து விடுவோம் என்றார் மோடி. இசுலாமிய உடையில் இருப்பவர்கள் வன்முறையாளர்கள் என்கிற தோற்றத்தை பரப்பியதை எதிர்த்து இந்தியாவின் சனநாயகவாதிகள் கடும் கண்டனம் எழுப்பினர். இசுலாமிய பெண்கள் இத்தனை காலமும் அணிந்து வந்த ஹிஜாப் (முக்காடு) ஆடைக்கு கல்வி நிலையங்களில் தடை என்று கர்நாடகாவில் எழுந்த பிரச்சினையில் துவங்கி இசுலாமியர்கள் வழிபாட்டுத் தளங்களில் ஒலிப்பான்களை தடை செய்ய இந்துத்துவ கும்பல் எழுப்பிய கோரிக்கை வரை மோடியின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த தாக்கமே பிரதிபலித்தன.
பாகுபாடு : குடியுரிமையை பறித்து அவர்களை இரண்டாம் தர குடிகளாக மாற்றுவது.
அண்டை நாடுகளாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், பெளத்தர்கள், சமணர்கள், கிறித்துவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இசுலாமியர்களை வேண்டுமென்றே ஒதுக்கியது மோடி அரசு. இந்துக்களின் விழாக்களில் இசுலாமியர்கள் கடை போடக் கூடாது என்று இந்துத்துவ கும்பல் செய்யும் கலவரங்களும் இந்தப் பாகுபாட்டின் அடிப்படையில் எழுவது தான்.
மனிதாபிமானமற்ற தன்மை : மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்களாக நினைத்து கேவலமான முறையில் நடத்துவது, ஊடகங்கள் வழியாக வெறுப்புணர்வை பரப்புவது.
கொரோனா காலகட்டத்தில் இசுலாமியர்களே நோய்களைப் பரப்புகிறார்கள் எனக் கட்டமைத்து மனிதாபிமானமற்ற போலிச் செய்திகளைப் பரப்பினார்கள். சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பி இசுலாமியர்களின் வீடு மற்றும் கடைகளை சூறையாடினார்கள். சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திலும் திட்டமிடப்பட்ட பட்டியலுடன் இசுலாமியர்களின் கடைகளை நிர்மூலமாக்கினார்கள்.
துன்புறுத்தல் : அடிப்படை உரிமைகளை மறுத்தல், கொலைகள், சித்திரவதைகள், கட்டாய இடப்பெயர்ச்சி போன்றவை.
சிறுபான்மை மக்களுடைய தேவாலயங்கள், மசூதிகள் மீது தாக்குதல்களும், மாட்டுக்கறி வைத்திருப்பதாக இஸ்லாமியர்களை துன்புறுத்தி கொலை செய்வதும் இந்துத்துவ வெறியேற்றப்பட்ட கும்பல்களால் தொடர்கின்றன. காஷ்மீருக்கான (ஆர்டிகள் 370) சிறப்பு மதிப்பை ரத்து செய்து இசுலாமிய தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது மோடி அரசு. உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உட்பட பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் இசுலாமியர் குடியிருப்புகளை புல்டோசர்களால் இடித்து அவர்களை வீடற்றவர்களாக ஆக்கினார்கள். அவர்களின் உரிமைக்கான குரல்கள் எழும்ப இயலாத அளவிற்கு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.
வெறுப்பு பேச்சு : ஒரு குழுவிற்கு அச்சத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வெறுப்பு பரப்புரைகள் மற்றும் பேச்சுகள்.
காவி அணிந்த சாமியார்கள் முதற்கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வரை காவிக் குண்டர்களாக இசுலாமியர்கள் மீது வெறுப்பு வரும் வகையில் பேசுவதையும், வன்மத்தினைப் பரப்புவதும் தொடர்கிறது. அரித்துவாரில் நடைபெற்ற இந்துத்துவ மாநாட்டில் இந்துத்துவ தலைவர்கள், தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இசுலாமியர்களைக் கொல்ல இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ கும்பலை மூளை சலவை செய்து இனப்படுகொலைக்கு தயார் செய்யும் வெறுப்புகளை விதைத்துக் கொண்டேயிருக்கின்றனர். இசுலாமியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று உத்திரப் பிரதேசத்தின் மசூதி முன்பு நின்று ஒருவர் பேசுவதும், அதைக் கேட்டு ஆர்ப்பரித்த காவிக்கும்பலும் சமூக வலைதளத்தில் பரவலாக வெளிவந்தது.
அந்நியப்படுத்தல் : சொந்த நாட்டு குடிமக்களை அந்திய நாட்டினராக வெறுப்புடன் பார்த்தல்.
இந்திய உள்துறை அமைச்சரான அமித்சா இசுலாமியர்களை ‘கரையான்கள்’ என்று அழைத்தார். வங்காள தேசத்தின் இசுலாமிய அகதிகள் ‘வெளிநாட்டினர்’ அல்லது ‘வேற்றுக் கிரகத்தவர்’ என்று இவர்களால் அழைக்கப்படுகிறார்கள், அவர்களை ‘பங்களாதேஷ்க்குத் திருப்பி அனுப்ப வேண்டும்’ அல்லது ‘பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்’ என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.
பிரிவினைவாதம் : குழுக்களாக இணைந்து தவறான தகவல்களைப் பரப்புவது, சட்டம், காதல், திருமணம் போன்றவற்றிலும் புகுந்து பிரிவினைவாதம் உருவாக்குவது.
பிஜேபி ஆளும் மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வந்ததும், மனம் ஒருமித்து விருப்பத்துடன் இணையும் இந்து – முஸ்லிம் காதல் மணங்களையும் ’லவ் ஜிஹாத்’ என்று பெயரில் பிரித்து முசுலிம் ஆண்களைத் தாக்குவதும், இயல்பானதாக மாறிவிட்டது. உத்தரகாண்ட் என்ற மாநிலத்தில் அரித்துவாரில் நடந்த தர்மசான்சா என்ற கூட்டத்தில் இந்துத்துவ கும்பல்கள் “இசுலாமியர்களை கொல்ல இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும், இனப்படுகொலை செய்ய வேண்டும்” என்று கொக்கரித்தனர். மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்து அமைப்புகளை சேர்ந்த மதவாதிகள் அத்தனை பேரும் பிரிவினைவாதம் தூண்டும் வகையில் வெறியுடன் பேசியிருக்கின்றனர்.
இவ்வாறு கிரிகோரி ஸ்டாண்டன் ஆய்வில் கண்டறிந்த இனப்படுகொலை வரையறைகளில், எட்டு நிலைகளை இந்தியா இப்பொழுதே எட்டி விட்டது. இந்த சூழலில் மோடியின், இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்தப் பேச்சு, பாஜக ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால், முஸ்லிம்கள் நிம்மதியுடன் வாழவே இயலாது என்பதை உறுதிப்படுத்துகிறது. மோடி ஆட்சியின் இந்த பத்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்கெனவே கிருத்துவர்கள் மற்றும் இசுலாமியர்களின் மீது இந்துத்துவ கும்பல்களின் தாக்குதல்கள் பெருமளவில் நடக்கின்றன.
மோடி 2002-ம் ஆண்டு குசராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அங்கு இசுலாமியர்கள் மீதான படுகொலை ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார குண்டர்களால் நிகழ்ந்தது. அதில் குறைந்தபட்சமாக இரண்டாயிரம் இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இசுலாமிய பெண்கள் ஈவிரக்கமற்ற முறையில் கூட்டுப் பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தைகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமைகளை நிகழ்த்திக் காட்டிய பிறகே, ஆர்.எஸ்.எஸ் மோடியை பிரதமராக்கும் வேலையை செய்தது.
இப்பொழுது மோடி ஆற்றிய இந்த பிரச்சார உரையும் இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதன் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. காங்கிரசை குற்றம் சாட்டுவது போல, இந்து மக்களின் தாலி முதற்கொண்டு பறித்து இசுலாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என இசுலாமியர்கள் மீதான வன்மத்தை கக்குகிறார் மோடி. நாட்டின் பிரதமரே இப்படிப்பட்ட மதவாதக் கருத்துகள் பேசும் போது, அரசியல் சார்பற்ற வெகுமக்களிடையே அவை உண்மையாகப் பரவும் என்பதை மோடி முதற்கொண்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் அறியாதவர்களில்லை. இதனை அவர்கள் தெரிந்தேதான் செய்கிறார்கள். மதவெறுப்புணர்வுடன் பேசுவது தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி குற்றம். அதற்காக மோடியை தேர்தல் பங்கேற்பிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையமே மோடிக்கு இணக்கமாக செயல்படும் வகையில் இயங்குவது கேலிக்கூத்தாக இருக்கிறது.
இந்திய நாட்டின் விடுதலைக்கு அரும்பாடுபட்டவர்கள் இசுலாமியர்கள் என்பதற்கு ‘இந்தியா கேட்’டினில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளே சாட்சியாக இருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்திய விடுதலைக்காக போரிட்டவர்களையே கொன்றது என்பதுதான் வரலாறாக இருக்கிறது. ஆங்கிலேயரின் விசுவாசியான சாவர்க்கர் திரட்டிய இந்துப்படை, ஆங்கிலேயருக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸ் திரட்டிய இந்துப்படையைக் கொன்றது. சாவர்க்கரின் சீடன் கோட்சே அகிம்சை வழியில் போராடிய காந்தியைக் கொன்றான் என்பதே வரலாறு. இப்படிப்பட்ட நயவஞ்சக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் இருந்து வந்தவரான மோடி, முசுலிம்கள் மீது வன்மத்தை கொட்டுவது ஆச்சரியமானதல்ல.
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து ராம ராச்சியத்தை அமைக்க, அரசியலமைப்பை மனு சாஸ்திரத்தின் படி மாற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல்களுக்கு ஆட்சி அதிகாரம் தேவைப்படுகிறது. இந்துக்களுக்கு ஆபத்து என்று கூறி இந்துக்களிடையே இசுலாமியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தி விட்டால் சுலபமாக ஓட்டுகளைப் பெறலாம் என்கிற குரூர சிந்தனையுடன் மோடி பேசுகிறார். பல தரப்பிலும் எதிர்ப்பு ஏற்பட்ட பிறகு, இசுலாமியர்களின் ’ஹஜ்’ பயணத்திற்கு உதவி புரிந்ததாக நடிக்கிறார்.
இசுலாமியர்கள் நமது சகோதரர்கள். பக்தி மார்க்க வழிபாடு முறையில் வேறுபட்டவர்களே தவிர, அந்தந்த இனத்தை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் தமிழர்களாய், மற்ற மாநிலங்களில் அந்தந்த இனங்களாகவே வாழ்பவர்கள். அவர்களை அந்நிய நாட்டிலிருந்து ஊடுருவியவர்கள் என்று மோடி சொல்வது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். பாஜக என்னும் சனநாயக விரோத கட்சியை தோற்கடிக்க வேண்டியதே தண்டிக்கும் வழியாக இருக்கும்.