முருகன் மாநாடும், தமிழ் முருகன் – புத்தகப் பார்வையும்

தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பாக சமீபத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. மதச்சார்பின்மையை பின்பற்ற வேண்டிய அரசின் சார்பாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது ஏற்புடையது அல்ல. அது மட்டுமல்லாமல், இம்மாநாட்டின் வழியாக பார்ப்பனியப் புரோகிதம் கலக்காத முருக வழிபாட்டின் பின்புலத்தை, முன்வைத்திருக்க வேண்டிய வாய்ப்பையும் தவற விட்டிருக்கிறார்கள்.

உலகத் தமிழர்களின் இறைநம்பிக்கையில் முதலிடம் பெறுவது முருக வழிபாடு ஆகும். ஆனால் பார்ப்பனியத்தின் படிப்படியான சூழ்ச்சிகள் காரணமாக முருகன் ஸ்ரீமுருகனாக, சுப்ரமணியனாக, தண்டாயுதபாணியாக, ஆறுமுகனாக ஆரியமயப் படுத்தப்பட்டே வழிபடுதல் நடக்கிறது. ‘ஒரு திராவிட மாடல் அரசாக, முருகனை ஆரியத்திலிருந்து மீட்கும் முயற்சியில் ஒரு அடி கூட முன்னெடுத்து வைக்காமல், மீண்டும் இப்போதுள்ள வழிபாடுகளுடன் கூடிய நிகழ்வாகவே இந்த மாநாடு நடைபெற்றிருக்கிறது‘. 

சங்ககாலத்தில் மத சாயலற்ற வாழ்வினை வாழ்ந்த தமிழர்களின் வரலாறுகளை மீட்டு ஒப்படைத்தவர்கள் திராவிடக் கொள்கையாளர்கள். பெரியாரின் வழி வந்தவர்கள். அப்படியான திராவிட கொள்கையின்படி நடப்பதாக சொல்லும் ஆட்சியில், முருகனைத் திரித்த வரலாற்றை எடுத்துச் சொல்லும் கடமையை மறந்து, வழிபாட்டு முறைமைகளில் மட்டுமே கவனம் செலுத்தியது, திராவிட கொள்கை கொண்ட அமைப்பாளர்களுக்கே ஒவ்வாமையாக அமைந்தது.

முருகன் கடவுளல்ல, நாடாண்ட மன்னன்’ என்பதையும், அவன் போர்த்திறனையும் பாவலர் அறிவுமதி அவர்கள் தனது தமிழ் முருகன் என்னும் நூலில் சங்கப் பாடல்களின் ஆதாரங்கள் வழியாக தெளிவாக விளக்கியுள்ளார். முருகனுக்கு ‘இன அடையாளம் மட்டுமே உண்டு, மத அடையாளம் கிடையாது’ என்பதிலிருந்து, தாய்த் தெய்வமான கொற்றவையின் மகனே முருகன் என்பது வரை சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.

குறிஞ்சி நிலத்தை மட்டுமல்ல, நெய்தல் நிலத்தையும் ஆண்டு வந்த சிறந்த போர் வீரன். ஆட்சி செய்தவனே ஆண்டவனானான். மலை சார்ந்த இடத்தையும், கடலையும் கட்டியாண்டவன் முருகன். யானைப்படை கட்டி போர் புரிந்ததில் மட்டுமல்ல, நாவாய்களை நகர்த்தும் கடற் போரிலும் சிறந்தவன் என்பதை புறநானூறு, அகநானூறு. மலைபடுகடாம், பதிற்றுப்பத்து, மதுரைக் காஞ்சி, பொருநராற்றுப்படை போன்ற ஏனைய சங்க நூல்களில் பாடப்பட்ட பாடல்களைக் கொண்டு குறிப்பிடுகிறார்.

நெய்தல் நிலமாக இருந்த திருச்செந்தூர் கடல் பகுதிகளையும் ஆண்டவன் முருகன். இன்றளவும் கிருத்துவ மதத்தை தழுவிய மீனவர்கள் கூட மீன் பிடிக்க கடலில் செல்லும் போது திருச்செந்தூர் கோயிலை கடக்கும் நிலையில் கோயிலை பார்த்து வணங்கும் தன்மை உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தங்களின் மரபு வழி வழிமுறையில் ஒன்றாக அந்த பகுதியில் மீனவர்கள் கடைபிடிக்கின்றனர்.

நாடன் என்கோ, ஊரன் என்கோ, பாடு இமிழ் கடற் சேர்ப்பன் என்கோ’ – என்று முருகனைப் பற்றிப் பாடும் புறநானூற்றுப் பாடல், குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்களை கட்டியாண்டவனே முருகன் என்பதை உணர்த்துகிறது. முருகன் ஆண்ட மலையை ஆழிப் பேரலை விழுங்கி விட்டது என்பதை, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எழுதிய ‘குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்கிற பாடல் தெரிவிக்கிறது. ஆழிப் பேரலையின் எச்சரிக்கை காரணமாகவே, நம் முன்னோர்கள் வீட்டின் முன் கற்றாழையுடன் கூடிய படிகாரக்கல், தேங்காய், சங்கு போன்றவற்றை கட்டி இருக்கிறார்கள். குமரிக் கண்டத்து தமிழர்கள் என்பதை உலகிற்கு சொல்ல முனைந்த பழக்கமாக, இது தொன்று தொட்டு இருந்திருக்கிறது. பிற்காலத்தில் அது திருஷ்டிக்காக என்று மாற்றப்பட்டு விட்டது.

குமரிக் கண்டத்தின் வழித்தோன்றல்கள் தமிழர்கள் என்பதை குறிப்பிடவே திருவள்ளுவரும் ‘தென்புலத்தார்’ என்கிறார். முருகப் பேரரசுக்குரிய குறிஞ்சி மலை, கடலின் ஆழிப் பேரலையால் மூழ்கிய வலியை நீக்கவே குன்றுகள் தோறும் முருகனைப் பார்க்கும் பிடிமண் மரபு தமிழர்களின் மரபாக இருக்கிறது. சூரசம்ஹாரம் என்பதை சூரன் என்ற அரக்கனை சுப்ரமணியன் வதம் செய்தான் என திரிபுபடுத்தி சொல்லப்படுகிறது. ஆனால் சூர பன்மன் என்கிற இன்னொரு இனக்குழுத் தலைவனை, முருகன் என்கிற இனக்குழுத் தலைவன் போரினால் வென்ற வரலாறையே திரிபுபடுத்தி இருக்கிறார்கள்.

‘ஒன்னாத் தெவ்வர்

முன்னின்று விலங்கி

ஒளிறேந்தி மருப்பிற்

களிநெறிந்து

வீழ்ந்தெனக்

கல்லே

பரவின் அல்லது

நெல் உகுத்து வழிபடும்

கடவுளும்

இலவே!’

மாங்குடி கிழார் என்னும்

இப் புறநானூற்றுப் பாடல், நெல் தூவி வழிபடுவது என்பது தமிழர் தேசத்தில் அந்நியர் நுழைந்த போது புகுத்தப்பட்டது என்று குறிப்பிடுகிறது. மண்ணை, இனத்தைக் காக்க தம் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு நன்றி செய்கிற மரபுதான் வழிபாட்டு மரபு என என்பதைத் தெளிவாக்குகிறார். அம்மாவீரர்களை புதைத்த இடத்தில் நடுகல் நட்டு வழிபடும் மரபே இருந்தது. அவர்களே இன்றைய சிறு தெய்வங்களாக, நாட்டார் தெய்வங்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட நடுகல் வழிபாட்டு முறைக்கு சொந்தக்காரனே முருகன். மக்களை அரவணைக்க ஆட்சி செய்த நல்லரசன்.

ஆடு அறுத்து முருகனுக்கு படையல் செய்யப்பட்டிருக்கிறது என்பதை குறுந்தொகையில், ‘மறிக்குரல் அறுத்துத் தினைப் பிரப் பிரீஇ’ என்னும் பாடல் மூலம் அறியப்படுகிறது. குறிஞ்சி நில மக்களின் முருக வழிபாடு வேட்டுவ வழிபாடாகும். இதில் வேதம், ஆகமங்கள் கற்ற புரோகிதர்கள் இடம் பெறவில்லை.

பாவலர் அறிவுமதி அவர்கள் எழுதிய இந்நூல், தமிழர்களின் தொன்று தொட்ட முருக வழிபாட்டு மரபின் பின்புலத்தை தொட்டுக் காட்டுகிறது. இந்நூல் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. முருக வழிபாட்டின் உண்மைத் தன்மையை அறிய விரும்புபவர்கள் தரவிறக்கி படித்துக் கொள்ளலாம்.

குருதிப் பலியிட்டு வழிபடும் முருகன், எவ்வாறு பார்ப்பனர்களின் வேத வழிபாட்டு முறைக்கு செல்ல முடியும்? எளிய மக்களின் நடுகல் வழிபாட்டு முறையைக் களவாடியே பேரரசர்கள், அதனை அதிகார மையங்களாக்க பெருங் கோவில்களாக்கினர், பார்ப்பனர்களின் கையில் அளித்தனர்.

போர்க்கால நிலையாமையைப் பயன்படுத்தி தமிழ் மன்னர்களின் மூளைகளிலும் தமிழர் வாழ்வியலிலும் நுழைந்து, கருத்துருவாக்கத் தளத்தில் எவ்வளவோ செய்துவிட்டார்கள் என பாவலர் அறிவுமதி அவர்கள் கூறும் கருத்தினை, இன்றைய முருக வழிபாட்டுக்காரர்களுக்கு அறியப்படுத்தும் பொறுப்பை கைக்கழுவி விட்டதாகவே இம்மாநாட்டை பார்க்க முடிகிறது.

திராவிட மரபில் வந்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை, ஆரியப் பார்ப்பனர்கள் நம் தமிழர் இலக்கியங்களில் புகுந்து செய்த திரிபுகளை, ஆதாரங்களோடு விளக்கி, தமிழர்களின் தொன்ம வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை செய்தவர்களே தவிர, பார்ப்பனியத்தோடு கைகுலுக்கிக் கொண்டவர்கள் அல்ல. ஒரு திராவிட ஆட்சியாக இப்பணியினை மேலதிகமாக செய்திருக்க வேண்டும். ஆனால் முத்தமிழ் முருகன் மாநாட்டில், பெயரில் தமிழ் இருக்கிறதே தவிர, செயலில் திரிபு மரபுப்படியே நடந்திருக்கிறது, தமிழர் மரபு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் உளவியல் துன்பங்கள் சாய்ந்து கொள்ளத் தேடும் ஆறுதலே பக்தி. அந்த பக்தியை முதலீடாகக் கொண்டு இந்துத்துவம் வெறியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மதப் பிரிவினையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அப்படியான இந்துத்துவ அமைப்பான இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்தை சிறப்பு விருந்தினராக அழைத்து அமர வைத்திருக்கிறார் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. மேலும் பழனி கோயிலின் உண்மையான தல வரலாறு குறித்து பெரியாரியத் தோழர்கள் கொண்டு வந்த புத்தகத்தை விற்பனை செய்யவும் மறுப்பு தெரிவித்து, அவர்களை கைது செய்திருக்கிறார்கள். தமிழர்கள் கையிலிருந்த பழனி கோயிலை பார்ப்பனியம் சூழ்ச்சியினால் அபகரித்த வரலாறும் மக்களிடம் சென்று சேர வேண்டாம் என நினைப்பதுதான் திராவிட மாடலா என்கிற கேள்வியும் எழுகிறது.

கருவறையில் தமிழ் மொழி வழிபாடும், அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் எனவும் முதல்வர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அறநிலையத் துறை நிர்வாகப் படிப்பின் கீழ் வழிபாட்டு பாடத்திட்டங்களை இம்மாநாடு மூலம் அறநிலையத்துறை அமைச்சர் நுழைத்தது கண்டிக்கத்தக்கது.

திராவிடம் என்பது, தமிழர் வரலாற்றை மீட்கும் கருத்தியல், பார்ப்பனீயத்தின் பலவகை சூழ்ச்சி கருத்துருவாக்க தளத்தில் இருந்து தமிழர்களை காக்கும் பண்பாட்டு காவல் அரண், மனிதர்களிடையே மதத்தின் வழியாக வெறுப்புணர்வை புகுத்தும் இந்துத்துவ கருத்தியலை எதிர்த்து சமர் புரியும் படை. சமத்துவம் அதன் கவசம். பார்ப்பனீய மேலாதிக்கம் வகுத்து வைத்திருக்கும் சனாதனக் கொள்கையை எதிர்க்கும் திராவிட கொள்கை கொண்ட, திராவிட மாடல் அரசுக்கு, திரிபுகளற்ற உண்மையான தமிழர் வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது திராவிடக் கடமைகளில் ஒன்று. அதனை முத்தமிழ் முருகன் மாநாட்டில் தவற விட்டிருப்பதாக பார்க்க முடிகிறது.        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »