சென்னையில் ஐஐடி போன்று பார்ப்பனியத்தின் மற்றுமொரு கோட்டையாக விளங்கும் கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகள் அதன் ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். நல்லொழுக்க சீலர்களாய் தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொள்ளப் பயன்பட்ட பார்ப்பனிய கூடாரம் கிழிந்து தொங்குவதைப் பலரும் இதன் மூலம் பார்க்கின்றனர்.
இந்திய ஒன்றிய அரசின் கலை மற்றும் கலாச்சார நிறுவனத்தின் நிதியின் கீழ் பரதநாட்டியம் மற்றும் இசை செயல்பாடுகளுக்காக இயங்கும் நிறுவனம் கலாஷேத்ரா. கல்விக்கு ஐஐடி-யை உயர்வான தகுதியாக பார்ப்பது போல கலைக்கான தகுதியான நிறுவனமாக கலாஷேத்ராவை பார்ப்பனிய கும்பல் முன்னிறுத்தியது. கடந்த 10 வருடங்களுக்கும் மேல் பாலியல் தொல்லைகள் இருந்து வருவதாக கல்லூரியின் முன்னாள் மாணவிகளும் இப்போது தெரிவிக்கின்றனர். இத்தனை காலமும் உயர் தகுதியில் இருந்த போலித்தனங்கள் இன்று மாணவிகளின் போராட்டத்தினால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் 2022, 22-ந் தேதி கலாஷே,த்ராவின் முன்னாள் இயக்குநராக பதவி வகித்த லீலா சாம்சன் என்னும் பரதநாட்டியக் கலைஞர் டிவிட்டர் வலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து, பின்னர் அதனை நீக்கி விட்டார். அதில் அவர், மிகவும் உயர்ந்த கலை மற்றும் சிந்தனையின் சொர்க்கமாக இருந்த ஒரு பொது நிறுவனமானது, அதில் பணிபுரியும் ஒரு ஆண் ஊழியர் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும், பயமுறுத்துவதையும் கண்டு கொள்ளாமல் கண்மூடித்தனமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு கலாஷேத்ராவையே மறைமுகமாக குறிப்பிட்டிருந்தது.
இந்தப் பதிவு பெருமளவில் சமூக வலைதளத்தில் பேசு பொருளானதால், தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து தனி ஒருவராக ரேகா சர்மா என்பவர் விசாரிக்க வந்தார். அவர், முன்கூட்டியே அந்தக் கல்லூரி ஏற்பாடு செய்த மாணவிகளிடம் மட்டும் பேசி விட்டு, பாலியல் குற்றச்சாட்டு எதுவும் நடைபெறவில்லை என்று அவசரம் அவசரமாக கிளம்பியிருக்கிறார். பேச விரும்பிய மாணவிகளையும் கண்டு கொள்ளாமல் தேசிய மகளிர் ஆணையத் தலைவரான ரேகா சர்மா சென்றதுதான் மாணவிகளை உள்ளிருப்புப் போராட்டம் செய்யும் அளவிற்கு தூண்டியது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலாஷேத்ராவில் பணிபுரியும் நான்கு ஆசிரியர்களான ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் அடிக்கடி பாலியல் தொல்லை அளித்ததாக கூறுகின்றனர். தங்களை வக்கிரமாகப் பார்ப்பது, கொச்சையாகப் பேசுவது, உளவியலாக துன்புறுத்துவது, பாலியல் உறுப்புகளைத் தீண்டுவது, ஆபாசமாக சாட்டிங் செய்வது போன்ற பல துன்புறுத்தல்களை இவர்கள் செய்ததாக கூறுகின்றனர். மாணவிகள் மட்டுமல்ல, அந்த ஆசிரியர்கள் இதே முறையில் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக சில மாணவர்கள் கூறியதும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் சாதிய ரீதியான பாகுபாடும் அதிக அளவில் அங்கிருப்பதாகவும், எந்த சாதி என்று கேட்டு விட்டே மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள் என்றும் மாணவிகள் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு வைக்கின்றனர். மாணவர்களின் செயல்திறன் தகுதியை விட, உயர்சாதி ஆசிரியர்கள் விரும்பும் மாணவர்களுக்கு தான் முதுகலை படிப்பும் கொடுக்கும் அநீதியும் தொடர்ந்திருக்கிறது.
பாலியல் தொல்லைகள் குறித்து, கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரனிடம் புகார் அளித்தாலும், ஆதாரங்களை கேட்டிருக்கிறார். பாலியல் சீண்டலுக்கெல்லாம் எப்படி ஆதாரங்கள் இருக்க முடியும் என்று மாணவிகள் கோவத்துடன் கேட்கின்றனர். இருப்பிலும் வீடியோ சாட்டிங் போன்ற சில ஆதாரங்களை நிர்வாகத்திடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தப்படும் சொன்னதனால் நம்பிக்கை வைத்து, டிசம்பரில் இருந்து காத்திருந்ததாகவும், அதன் பின்னரும் பாலியல் தொல்லைகள் தொடர்ந்தன என்றும் கொதிக்கின்றனர் மாணவிகள். அது மட்டுமின்றி குற்றச்சாட்டு சுமத்தப்படும் ஹரிபத்மன் உள்ளிட்ட நால்வரும் வழக்கம் போல, கல்லுாரியில் மிகவும் மரியாதையாக நடத்தப்படுகின்றனர்; வகுப்பு எடுக்கின்றனர்; நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் என்பதால் தான் போராட்டத்தைத் துவங்கியதாகத் தெரிவித்தனர்.
சென்னையில் இரு பெரும் பார்ப்பனியக் கூடாரங்களாக ஐஐடி-யும், கலாஷேத்ராவும் இயங்குகிறது. இரண்டுமே முழுக்க முழுக்க பார்ப்பனிய பண்பாடுகளை முன்னிறுத்தி ஆதிக்கம் நிறைந்த கல்வி நிறுவனமாக செயல்படுகிறது. இந்த ஆதிக்கத்தினை பார்ப்பனரல்லாத மாணவர்களிடமும் திணிக்கிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவருமே பார்ப்பனிய முகங்கள். சென்னையின் அக்கிரகாரமாக செயல்படும் இதில் தப்பித் தவறியும் பார்ப்பனரல்லாதவர்கள் நுழைந்து விட்டால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உளவியல் ரீதியான தொல்லைகளைத் தொடர்கிறார்கள். சென்னை ஐஐடி-யில் ஒரு முஸ்லிம் என்கிற காரணத்தினால், படிப்பில் சிறந்த மாணவியான பாத்திமா லத்தீப்பிற்கு உளவியல் அழுத்தம் கொடுத்து ஒரு பார்ப்பன ஆசிரியர் தற்கொலை செய்ய வைத்தார். 2021-ல் மேற்கு வங்காளத்தின் பட்டியலின பிரிவைச் சார்ந்த வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட வேதியியல் முனைவர் பட்ட ஆய்வு படித்த மாணவிக்கு இன்னும் ஐஐடி நிர்வாகத்தினால் நீதி கிடைத்த வழியில்லை. தொடர்ந்து சாதி ரீதியான அழுத்தத்தினால் பட்டியலினப் பேராசிரியர்கள் பணியை விட்டு செல்வதும், பார்ப்பனரல்லாத மாணவர்கள் தற்கொலை செய்வதும் தொடரும் சென்னை ஐஐடி-யினைப் போலவே இப்போது கலாஷேத்ராவிலும் இத்தனை காலமும் வெளிவராது அடக்கப்பட்டிருந்த பாலியல் குற்றச்சாட்டுகள் மாணவிகளால் வெளிவந்திருக்கிறது.
மாணவிகளின் இந்தப் போராட்டத்தில் கலாசேத்ராவின் முன்னாள் மாணவிகளும் கலந்து கொண்டு, தங்களுக்கும் கடந்த வருடங்களில் பாலியல் சீண்டல்கள் தொடர்ந்தன என்றும், நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்தது என்றும் தெரிவித்தனர். அப்போது போராடக்கூடிய துணிச்சல் இல்லையென்பதால், இப்பொழுது துணிச்சலுடன் இந்த மாணவிகள் பாலியல் குற்றவாளிகளை வெளிப்படுத்தி இருப்பதால், ஆதரவு அளிக்க வந்ததாகவும் கூறியுள்ளனர்
தமிழ்நாடு முதல்வருக்கு கலாஷேத்ரா மாணவிகள் மின்னஞ்சலில் கடிதமும் அனுப்பியுள்ளனர். சட்டப்பேரவையிலும் மாணவிகளின் போராட்டம் விவாதமானது. மேலும் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக, போராட்டத்திற்கு உறுதுணையாக ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளும் களமிறங்கினர். இதனால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி கூறிய நிலையில் மாநில மகளிர் ஆணையம் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்தது. மாநில மகளிர் ஆணையர் மாணவிகளை மார்ச் 31ல் சந்தித்து, காவல் துறையிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கூறியதையடுத்து, பாலியல் குற்றவாளியான ஆசிரியர்கள் மீது புகார் மனு அளிக்கப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு கூறிய மாணவிகளை தனித் தனியாக விசாரித்த மாநில மகளிர் ஆணையரான குமரி அவர்கள், ஆதாரங்களுடன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
மாணவிகளின் தீர்க்கமான போராட்டத்தினால், போராடிய அமைப்புகள் அளித்த நெருக்கடியினால் இந்த நான்கு ஆசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. முதன்மையான குற்றவாளியான ஹரிபத்மன் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாநில மகளிர் ஆணையர் அளித்த உறுதியை அடுத்து மாணவிகள் போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என மாணவிகள் அறிவித்தனர்.
பெண்களை உடைமையாக எழுதி வைத்திருக்கும் மனுநீதி போற்றும் சனாதனத்தையே பார்ப்பனர்கள் உயிராக மதிக்கின்றனர். ஆளுநர் முதற்கொண்டு நீதிபதிகள் வரை சனாதனத்தையே பரப்புகின்றனர். பெண்களை சமத்துவமாகக் கருதாமல் வெறும் நுகர்வுப் பண்டமாகக் கருதும் பழக்கம் காலம் காலமாக சனாதனத்தினால் வேரூன்றப் பட்டதின் விளைவு தான் இன்றும் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்பங்களுக்கு காரணமாக இருக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவரும் பொழுதெல்லாம், அதனை மூடி மறைக்கவே அந்தந்த நிறுவனங்கள் நினைக்கின்றனவேத் தவிர, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வழிகளை செய்ய வேண்டும் என நினைப்பதில்லை. மிகப் பிரம்மாண்டமான கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களினால் நிகழ்த்தப்படும் இது போன்ற பாலியல் துன்பங்களால் பல மாணவிகள், என்ன செய்வதென்றே தெரியாமல் உளவியல் சிக்கலுக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தாளாளராக இருக்கும் பத்மசேசாத்ரி பள்ளியில் கூட ஒரு ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும் வெளிவந்தது. அங்கும் மாணவிகள் பக்கம் நிற்காத நிர்வாகத்தின் அலட்சியம் வெகுவாக பேசப்பட்டது. மேலும் கோவையில் சின்மயா பள்ளியில் ஆசிரியரின் பாலியல துன்புறுத்தல் காரணமாக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணமும் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்தது தான். இவ்வாறு கல்வி நிறுவன நிர்வாகங்கள் காட்டும் அலட்சியங்களால் பாலியல் வெறி கொண்ட சில ஆசிரியர்கள் மாணவிகள் மீது நிகழ்த்தும் பாலியல் அத்துமீறல்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன. இதனால் மாணவிகள் அடையும் உளவியல் ரீதியான பாதிப்புகள், அவர்களின் கல்வி கற்கும் எண்ணத்தையே சிதைத்து விடும் அளவிற்கு செல்கின்றன.
இவ்வளவு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட பின்பே கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது என்றால், அதன் உண்மையான நோக்கம் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதாக எப்படி இருக்க முடியும்? இந்தப் போராட்டத்தினைக் காரணமாக வைத்து இனியும் நிர்வாக ரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று மாணவிகள் அச்சப்படுகின்றனர். அவர்களின் அச்சத்தைப் போக்க, அரசு உரிய வழிகளை மேற்கொள்ள வேண்டும்.