
உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை முழுமையாக தமிழில் நடத்திட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
மேற்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக கோவை அருகிலுள்ள பழைமை வாய்ந்த பேரூர் பட்டீசுவரர் கோவில் விளங்குகிறது. இந்த திருக்கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற பிப்ரவரி 10ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு நிகழ்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
பேரூர் திருத்தலத்தில் எல்லோரும் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி வழிபட்டு வந்துள்ளனர். சுந்தரர் காலத்திலும் கூட, ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வழிபட்டதாக பேரூர் புராணத்தில் கூறப்படவில்லை. அப்போதே எல்லோரும் சமமாக வழிபாடு நடத்தியுள்ளனர். இப்போதும் அதே சம உரிமை தரப்பட வேண்டும் என்றும் குடமுழுக்கு வழிபாட்டு நிகழ்வுகளை தமிழிலும் நடத்திட வேண்டும் என்று தமிழக அரசின் அறநிலையத்துறையின் உயர் நிலைக்குழு உறுப்பினராக உள்ள பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் கூறுகிறார்.
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் 1954-ஆம் ஆண்டிலிருந்து தமிழில் வழிபாடு துவக்கப்பட்டது. பல கோவில்களின் திருக்குட நன்னீராட்டு விழா பேரூர் சிரவை ஆதீனங்களால் தமிழில் நடத்தப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்ட பேரூர் ஆதீனம், வடமொழிக்கு இணையாக தமிழுக்கும் அங்கீகாரம் அளித்து திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்த வேண்டுமென்று நீதிமன்றத்திலும் கூட, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் தீப்பந்தம் வைத்து முதல் மரியாதையாக பட்டீசுவரனுக்கு செய்யப்பட்டும். இந்த பூசைக்கு பெயர் ‘தீவட்டி-சலாம்’. திப்புசுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்தபோது பேரூர் கோவிலுக்கு மரியாதை செய்யும்விதமாக திப்புசுல்தான் உத்திரவிட்டதால் இன்றும் (230 ஆண்டுகளாக) தீவட்டிசலாம் நடப்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இப்படியாக சமய சமத்துவம் பேணும் திருத்தலமாக விளங்கும் பட்டீசுவரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்துவதே சிறப்பானதாக இருக்கும்.
இந்நிலையில், பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கு நிகழ்வுகளில் சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறி கோவையை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் தரப்பு மற்றும் ஆன்மீகவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு, தமிழில் வழிபாடு நடத்த அனுமதி கோரியதை ஏற்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், திருக்கோவில் யாகசாலையில் பூஜை நடைபெறும் காலங்களின் போது, வேதங்கள் மற்றும் தமிழில் திருமுறைகளை ஓதிட தனியாக இடத்தினை ஒதுக்கீடு செய்யவும், தனித்தனியாக உரிய கால நேரம் ஒதுக்கீடு செய்திடவும் உதவி ஆணையருக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் இணை ஆணையர் தன் ஆணையில் குறிப்பிட்டிருந்தார்.
அறநிலையத்துறையின் செயல்பாடுகளை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர். கு. இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பெரியாரிய தமிழ்த்தேசிய அமைப்புகளும் மற்றும் கட்சிகள் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்ற போராட்டம் கடந்த பிப்ரவரி 7 அன்று கோவையில் நடைபெற்றது. எங்கள் நிலம், எங்கள் கோவில், எங்கள் இறைவன், எங்கள் மொழியிலேயே, தமிழில் குடமுழுக்கு நடத்தி வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழில் ஓதுவதற்கு தனியிடம் ஒதுக்குவதை ஏற்க முடியாது என்றும், யாகசாலையில் தமிழுக்கு சமபங்கு தர வேண்டுமென்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.
திருமலை நாயக்கர் ஆட்சிக்கு முன்வரை பழனி முருகன் கோவிலில் பண்டாரங்களால் தமிழில் மந்திரம் ஓதப்பட்டு வந்ததை, நாயக்கர் படை தளபதிகளில் ஒருவரான இராமப்பய்யன் எனும் பார்ப்பனரே வடமொழி வழிபாடு திணித்தார். இதனால் பண்டாரங்கள் தற்கொலை செய்தது கல்வெட்டில் உள்ளது. இப்படியாக கோவில்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு சமஸ்கிருதம் திணிக்கப்பட்டது.
தமிழில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. குடமுழுக்கில் தமிழை புறக்கணிப்பது தமிழை அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு திமுக அரசின் இந்து சமய அறநிலையத் துறை இதற்கு துணைபோவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை முழுமையாக தமிழில் நடத்திட வழிவகை செய்திட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வழியுறுத்துகிறது. தமிழர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
08/02/2025