நம்மைப்போல் சாதாரணமாக பிறந்து வளர்ந்த ஒரு தமிழன் 1990களில் இலங்கையின் பாதிப் பகுதியை திறம்பட ஆட்சி செய்த விடயம், புத்தகங்களில் நாம் படித்த தமிழ் மன்னர்களின் வீர வரலாற்றை விட பெரியது. தமிழன் உலகம் முழுவதும் போர் புரிந்து வெற்றிவாகை சூடினான் என்ற வரலாற்றை நினைத்து இன்றும் பெருமை பேசி வருகிறோம். இதெல்லாம் எப்படி சாத்தியம் என நாம் நினைக்கும் இக்காலத்தில், நம் கண்முன்னே நாம் வாழும் இந்த சமகாலத்தில் புறநானூற்றுத் தமிழனின் வீரத்தை நம் கண் முன்பாக நமக்கு காட்டியவர்கள் ஈழத் தமிழர்கள். அந்த மாபெரும் தமிழ்க் கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவீரன் தான் நம் புறநானூற்று வீரன் கரிகாலன்!
ஒட்டுமொத்த தமிழினத்தையும் தனது இதயங்களில் சுமந்து அவர்களின் எதிர்காலத்திற்காக, அவர்கள் அறிவில் சிறந்து அறிவியல் ரீதியாக வளர வேண்டும் என்பதற்காக அல்லும் பகலுமாக அயராது உழைத்தவர். தமிழீழம் விடுதலை பெற்று பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து இங்கு தாயினும் மேலானவராக மாறி நிற்கிறார். பலரை வரலாறு படைக்கின்றது ஆனால் ஒரு சிலரே இங்கு வரலாற்றைப் படைக்கிறார்கள். அப்படிப்பட்ட வெகு சிலரில் ஒருவர் தான் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
இம்மாவீரனின் பிறந்த நாளில், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான நியாயமான காரணத்தையும், தலைவர் பிரபாகரனின் நேர்மையையும் வீரத்தையும், அரசியலையும் ஒட்டுமொத்தமாக அவர் மக்களை நேசித்த விதத்தையும், அதனால் அவரை இலங்கை சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்காக நயவஞ்சகமாக வீழ்த்திய இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாத்திபதிய நாடுகளின் சதிகளையும் பற்றி பார்ப்போம்.
ஈழம், தமிழர்களின் பூர்வீக நிலம் என்றும், வட இந்தியாவிலிருந்து குடியேறிய மன்னன் விஜயனுக்கு உதவியவர் குவேனி எனும் தமிழ் பெண் என்றும் சிங்களவர்களின் புனித நூலான மஹாவம்சம் கூறுகிறது. அப்படியெனில் சிங்கள இனம் குடியேறுவதற்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்துள்ளார்கள் என்றுதானே அர்த்தம். மேலும் அதன் நினைவாக தபால் தலையை வெளியிட்டு, பின்னர் அதை திரும்ப எடுத்தது சிங்கள அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தெற்கு பகுதியை சிங்கள மன்னர்களும், ஈழப் பகுதியை தமிழ் மன்னர்களும் ஆண்டது வரலாறு. ஆங்கிலேய ஆட்சியில் அவர்களின் நிர்வாக நலனுக்காக இலங்கையை ஒன்றினைத்தனர். ஆங்கிலேயருக்கு பிறகு அதிகாரங்கள் அனைத்தும் பெரும்பான்மையான சிங்களவர்களின் கைக்குப் போனது. அவர்கள் தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தார்கள். கல்வி உரிமை, நில உரிமை என தமிழீழ தமிழர்களின் உரிமையை ஒவ்வொன்றாக பறித்து அவர்களை சொந்த நாட்டிலே அகதிகளாக ஆக்கினார்கள்.
இக்காலகட்டத்தில் தான் ஈழத்தமிழர்களின் கண்ணீராலும் செந்நீராலும் நிரம்பிய தமிழர் கடலின் நடுவே அமைந்துள்ள ஒரு சின்னஞ்சிறு தீவின் வல்வெட்டித்துறையில் 1956ம் ஆண்டு நவம்பர் 26 அன்று, வேலுப்பிள்ளை- பார்வதி தம்பதியருக்கு, அத்தீவில் பல அதிசயங்களைத் தனி மனிதராக நிகழ்த்திய விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தார்.
சிங்கள அரசின் கடும் ஒடு்க்கு முறைக்கு தமிழினம் உள்ளான ஒரு சூழலில் தன் உறவினர் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடும் துயரத்தை தந்தை வேலுப்பிள்ளையிடம் கூற அதை தந்தையுடன் கேட்டுக்கொண்டு இருந்த சிறுவனான பிரபாகரன் மனதில் ஏன் அவர் திருப்பித் தாக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது. இதுதான் அவர் தன் இனத்திற்காக மாபெரும் போராளியாக மாற காரணமாக இருந்த ஆரம்ப விதை.
சிங்கள இனவெறியர்களால் ஈழத்தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் மற்றும் பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூர வன்முறைகளை இவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடியிலிருந்து தமிழ் மக்களை எப்பாடுபட்டாவது மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் இவர் மனதில் உருவாகியது.
தந்தை செல்வா உள்ளிட்ட பல அறப்போராட்ட தியாகிகளின் 30 ஆண்டுகால அறப்போராட்டம், உரிமைப் போராட்டத்திற்கான எந்தவித பயனும் இல்லாமல் போன பின்னரே, சுதந்திர வேட்கை கொண்ட இளைஞர்கள் சிறு சிறு குழுக்களாக தங்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பின்னாளில் இக்குழுக்கள் ஒன்றிணைந்து “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பாக மாறியது. எந்தவொரு பெரிய அச்சுறுத்தலைக் கண்டு சிறிதும் அஞ்சாமல், எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலை போகாமல், மக்களின் உரிமைகளை அடகு வைக்காது உறுதியோடு போராடும் துணிவு மிக்க பிரபாகரனை தங்களின் அடையாளமாக ஏற்றார்கள் ஈழத் தமிழர்கள். இபப்படியாத்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரானார்.
போராட்டங்களால் நிகழும் உயிரிழப்புகள் குறித்து அவர் கூறும்போது, “ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்!” என்றார். “ஆயுதப் போராட்டம் என்பது நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல, காலம் எங்களிடம் கையளித்திருப்பது. நாங்கள் போர் வெறியர்களோ, ஆயுத விரும்பிகளோ அல்ல. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மண்ணில் எங்களின் சுதந்திரத்தை மட்டும்தான்.” என்றவர் பிரபாகரன்.
“நாம் இனத்துவேசிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. சிங்கள பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை.” என்ற மாமனிதனைத்தான் இந்திய
பார்ப்பனியத்திற்கு அடிமைப்பட்ட ஒரு சில அறிவிலிகள் அவரின் உன்னதமான நோக்கை புரிந்து கொள்ளாமல் அவரை தீவிரவாதி, பயங்கரவாதி என தூற்றி வருகின்றனர். ஆனால் அதே வேளையிலே, அவரை ஒழுக்க சீலர், நேர்மையாளர், அறவாழ்வு வாழ்ந்தவர் என உலகமே கண்டு வியந்து கொண்டிருக்கிறது.
பிரபாகரனை வெறும் ஆயுதப் போராளியாக மட்டுமே சித்தரித்த உலக ஏகாத்திபதியமும், இந்திய பார்ப்பனியமும் அவரது தலைமையிலான தன்னாட்சி தமிழீழ அரசு (de facto state) குறித்தும் அதன் மக்கள் நல செயல்பாடுகள் குறித்தும், அதனை அவர் செழுமைப் படுத்திய ஆற்றல் குறித்தும் நாம் அறியா வண்ணம் செய்தது. ஆனால் அதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றைய இந்துத்துவ பாசிச பாஜகவின் அரசியலில் மிகவும் அவசியம்.
புலிகள் முப்படைகள் மட்டுமல்லாது, தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல்துறை, குற்றப் புலனாய்வு பிரிவு போன்றவற்றையும் திறம்பட நடத்தி வந்தனர். அங்கு தமிழீழ வைப்பகம், சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி என பல பிரிவுகளும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்காக இயங்கியது.
அதோடு அங்கு ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்காக ‘காந்தரூபன் அறிவுச்சோலை’, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக ‘செஞ்சோலை இல்லம்’, உடல் நலிவுற்றோருக்கு ‘வெற்றிமனை காப்பகம்’ முதியவர்களுக்காக, ‘அன்பு முதியோர் பேணலகம்’, மனநோயாளிகளுக்காக ‘சந்தோசம் உளவள மையம்’, பார்வை இழந்த போராளிகளுக்காக ‘நவம் அறிவுக்கூடம்’ மற்றும தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்தி கழகம் என பல ஆதரவு இல்லங்களையும் நடத்தி வந்தவர் தான் தாயுள்ளம் படைத்த தலைவர் பிரபாகரன்.
மேலும் தந்தை பெரியாரின் தீவிர பற்றாளரான பிரபாகரன் சாதி ஒழிப்பிற்கு முன்னுரிமை அளித்தார். வரதட்சணையை தடைசெய்தார். மத சமத்துவத்தை நடைமுறைப்படுத்தினார். தமிழீழ காவல்துறை மூலம் அங்கு சட்ட ஒழுங்கை அமல்படுத்தினார். இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலாக சென்று பெண்களின் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திய மாபெரும் உன்னத தலைவர் இவரே. பெண்களை வெறும் போக பொருளாக மட்டுமே பார்த்த நாடுகளிடையே பெண்களும் வீரம் நிறைந்த பலசாலிகளே என உலகிற்கே எடுத்துரைக்கும் விதமாக அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளாக உருவாக்கினார். அவர்களையும் ஆண்களுக்கு இணையாக படையணிகளுக்கு தலைவராக்கி அவர்களின் அறிவாற்றலை உலகறிய செய்தார்.
சிங்கள ராணுவம், ஆயுதமேந்திப் போராடிய தமிழர்களையும், அப்பாவி மக்களையும் ஈவு இரக்கமின்றி கொன்ற போதும், சிங்கள மக்களை கொல்லுங்கள் என்ற உத்தரவு பிரபாகரனிடம் இருந்து ஒருபோதும் வந்தது கிடையாது.
”சிங்கள ராணுவம் தமிழர்களைக் கண்மூடித்தனமாக அழிப்பது போல நாங்கள் சிங்கள மக்களை அழிக்க முடிவெடுத்தால், தினம் ஆயிரம்பேரைக் கொல்லமுடியும்.
எங்களுடைய ஒரு தாக்குதல்கூட அப்பாவி சிங்கள மக்களை இலக்கு வைத்து நடத்தப் பட்டதல்ல” என்றும், ”நாங்கள் எதிர்த்து நிற்பது எங்கள் மண்ணில் அதிகாரம் செலுத்தும் சிங்கள ராணுவத்தையே தவிர, அப்பாவி சிங்கள மக்களை அல்ல” என்றும் அறிவித்தவர் தலைைர் பிரபாகரன்.
தலைவர் பிரபாகரனின் அரசியல் சாணக்கிய தனத்திற்கு மற்றும் ஒரு உதாரணமாக 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி மீட்பு பணிகளை கூறலாம். இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகளின் முழு உதவிகளைப் பெற்ற வளரும் நாடுகள் கூட மீட்புப் பணிகளை செய்ய முடியாமல் திணறி, முதல் நாள் வெறுமனே சோக இசையை மட்டுமே ஒலிபரப்பிய நேரத்தில், தெற்காசிய கண்டத்திலே முதன்முதலாக “ஆழிப்பேரலை பேரிடர் மீட்பு” பணியைத் தொடங்கியது விடுதலைப் புலிகள் இயக்கமே!
“இறைவனை மறந்ததால் ஏற்பட்ட தெய்வகுற்றம்” என கொழும்பு வானொலி தன் மூடத்தனதை பரப்பிக் கொண்டிருந்த அந்த நேரம், “ஓலத்துடன் ஒப்பாரி எழுப்புவதால் ஒன்றும் மாறாது, தேசத்தை மீட்க களப்பணியே தேவை” என்றது புலிகளின் குரல் வானொலி.
அடுத்தவர்களுக்காக காத்துக் கொண்டிருக்காமல் தலைவனின் வழி நடத்தலில் போராளிகள் அவசரகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கடற்கரையோரப் பகுதிகளில் மருத்துவப்பிரிவுப் போராளிகள் தொற்றுநோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். புலிகள் உதவியால் தமிழீழ மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீள ஆரம்பித்தனர். தமிழீழத்தின் துயர் துடைக்க உலகம் முழுவதும் பரவி இருந்த ஏதிலித் தமிழர்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர்.
வலிகளை மட்டுமே கண்ட ஈழத் தமிழினம், தங்களை அடக்கி ஒடுக்கி படுகொலை செய்த சிங்கள ராணுவத்திற்கு நட்புக் கரம் நீட்டியதோடு, சிங்கள மக்களுக்கும் உதவியது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அதனை செய்து மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார் தலைவர் பிரபாகரன்.
சுனாமி வந்த சில மாதங்களிலே தமிழர்கள் அதிலிருந்து மீள தேவையான அனைத்து ஆக்கப் பூர்வமான செயல்களையும் விடுதலைப் புலிகள் செய்தனர்.
முதற்கட்டமாக பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக இல்லங்கள் திறக்கப்பட்டன. ஆழிப்பேரலையை நேரடியாகக் கண்ட சிறுவர்களின் மனநலம் கருதி, மனநல பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மின்சாரம் கூட தடை செய்யப்பட்டிருந்த புலிகளின் பகுதிக்குள், வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக சத்தான உலகத் தரம் வாய்ந்த உணவு வகைகள் வந்தடைந்தன என்றால் புலிகள் எத்தகைய மனிதநேயர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
அனைவருக்கும் நீச்சல் தெரிந்து இருந்தால் உயிரிழப்புகளை ஓரளவு குறைத்திருக்கலாம் என்ற தலைவர் பிரபாகரனின் எண்ணப்படி, வள்ளிபுனம் பகுதியில் வளர்ந்த நாடுகளின் தரத்திலான வசதிகளுடன் கூடிய நீச்சல் தடம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக அவர் எப்போதும் நாட்டு மக்களின் விருப்பங்களை, கனவுகளை, எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து வாழ்ந்தார். அவரது கனவு தனது நாட்டின் இளம் தலைமுறையை பற்றியதாகவே இருந்தது.
அதேபோல 2004ம் ஆண்டு, ஐ.நா சபை உலக மொழிகளில் விரைவில் அழியவுள்ள மொழிகளின் பட்டியலில் தமிழை இணைத்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த தகவலை அறிந்தவுடன் சிறிதும் தாமதிக்காமல், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்மொழி பண்பாட்டு ஆளுமைகளை, அறிஞர்களை கிளிநொச்சிக்கு அழைத்து, ‘உலக தமிழ் மானுட கூடல்’ எனும் நிகழ்வை ஒருங்கிணைத்தவர் தலைவர் பிரபாகரன்.
சிங்கள ராணுவ ஜெனரல் கமால் குணரத்னா அவர்கள், தலைவரின் ஒழுக்கத்தை, அறத்தை பலரும் கற்கவேண்டிய பல நல்ல பண்புகளை பார்த்து மிகவும் வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இன்றும் பிரபாகரனை போற்றும் சிங்கள ராணுவத் தலைவர்கள், புத்த மதத் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.
தமிழீழம் கைகூடிவிட்டால் அது எத்தகைய நாடாக அமையுமென கேட்டதற்கு, ”தமிழீழம், ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். இதில், மனித சுதந்திரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதம் உண்டு. எல்லாவித ஒடுக்கு முறையும் சுரண்டலும் ஒழிக்கப் பட்ட மக்களின் உண்மையான சனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து, தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும்.
இந்த சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன், அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கும். இந்தியாவோடு நட்புறவு கொண்டு, அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும்” என்று சொன்ன ஒரு மகத்தான மாமனிதனை தான் உலகமே ஒன்று சேர்ந்து சதி செய்து வஞ்சித்து வீழ்த்தியது.
ஆயுதப் போராட்டம் தான் ஈழ மக்களின் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்தது எனப் பேசியவர்கள், அது கைவிடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆன பின்பும் அதே நிலை நீடிப்பது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்கள். அதோடு யுத்த காலத்தில் இருந்ததை விடவும் தற்போது அதிகமாக தமிழர்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. தமிழரின் கோயிலுக்குள் புத்த விகாரங்கள் முளைக்கின்றன. பலர் இன்னமும் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். இவ்வாறாக பலவிதமான அடக்குமுறைக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ள நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு தமிழர்கள் ஆதரவாக நிற்கவில்லை எனில் நமக்கும் சிங்கள இன வெறியர்களுக்கும் என்ன வித்தியாசம்?