மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உட்பட தமிழ்நாட்டின் அரசியல்-சமூக செயல்பாட்டாளர்களை வெளிநாட்டு கூலிப்படைகள் கொலை செய்வதற்கு உதவி செய்வதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியிருப்பது தொடர்பாக, அனைத்து கட்சி பொறுப்பாளர்களின் ஊடக சந்திப்பு அக்டோபர் 24, 2024 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
இந்துத்துவ சமூகவிரோதி அர்ஜூன் சம்பத் ’தமிழ்நாட்டில் அரசியல் செயற்பாட்டாளர்களை படுகொலை செய்ய வேண்டுமெனவும், அதற்கு அவர்களுக்கு துணை செய்ய தயாராக இருப்பதாவும் வெளிப்படையாக X தளத்தில் பதிவு செய்ததின் மீது நடவடிக்கை எடுக்ககோரி’ மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களின் ஊடக சந்திப்பு அக்டோபர் 24, 2024 அன்று நடைபெற்றது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். பிரவீன் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் தோழர். செல்லத்துரை, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர். குடந்தை அரசன், மக்கள் அதிகாரத்தின் தோழர். வெற்றிவேல் செழியன், தந்தை பெரியார் திகவின் தோழர். குமரன், தமிழக மக்கள் சனநாயக கட்சியின் தோழர். சண்முகராஜா, தமிழக படைப்பாளர்கள் மக்கள் கட்சியின் தோழர். திரு சரவணன் ஆகியோர் பங்கெடுத்தனர்.
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஆற்றிய உரை :
இந்த ஊடக சந்திப்பு என்பது தமிழ்நாட்டிலே மிக மோசமான சூழலை உருவாக்கி வருகிற இந்துத்துவ அமைப்புகள் குறித்தான ஒரு கவனத்தை அரசுக்கும், காவல்துறைக்கும் கொண்டுவரவும், சமூக செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமல்ல, ஊடகவியலாளர்கள் பாதுகாப்பையும் சேர்த்து கவனத்தில் எடுக்கவேண்டும் என்கிற அடிப்படையிலும் நடத்துகிறோம்.
கடந்த அக்டோபர் 17, 2024 அன்று இந்து மக்கள் கட்சியினுடைய மாநில தலைவர் திரு. அர்ஜூன் சம்பத் எக்ஸ்(X) தளத்தில் இரண்டு பதிவுகள் செய்கின்றார். முதல் பதிவில் ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் X தள கணக்குடன் இணைத்து (Tag), கனடா நாட்டில் காலிஸ்தான் போராளி கொல்லப்பட்ட செயலை வரவேற்று பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்குள்ளாகவும் பிரிவினைவாத சக்திகள் இருக்கின்றன, இதை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் திமுக அரசு பாதுகாத்து வருகிறது எனக் குறிப்பிட்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழ்நாட்டின் பங்கு இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் தமிழ்நாட்டிற்கென தனியான வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும் என நான் பேசியதை, தேச நலனுக்கு எதிரானதாக இருப்பதாக செய்தியை பதிவிட்டிருக்கிறார். மேலும், ”இப்படிப்பட்ட நபர்கள் கனடா நாட்டில் எவ்வாறு கையாளப்பட்டார்களோ, அதுபோல தமிழ்நாட்டிற்குள்ளும் தீவிரமான முறையில் கையாளப்பட வேண்டும் எனவும், இதற்கு மிகப்பெரிய அளவிற்கு ஆற்றலை செலவு செய்ய வேண்டும் என்கிற தேவையில்லை, மாறாக குறைந்த ஆற்றலை பயன்படுத்தினாலே போதும். இது உங்களால் முடியும்” என பதிவிட்டிருக்கிறார்.
மேலும், அதற்கடுத்த பதிவில், “எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் இருக்கட்டும், எல்லைக்கு உட்பட்ட பயங்கரவாதமும் மர்மான முறையில் வேரறுக்க வேண்டும், மாணவர்கள், பத்திரிக்கையாளர், புரட்சியாளர், அரசியல்வாதி என முகமூடிகள் அணிந்திருக்கும் உள்நாட்டு பயங்கரவாதிகளையும் அழித்தொழிக்க மர்மான நபர்களுக்கு ’ஸ்கெட்ச்’ போட்டுத் தரப்படும்” என்று எழுதி, அதில் ஒரு படத்தை இணைத்துள்ளார். அதில் கனடா நாட்டில் கொல்லப்பட்டவர்கள் படத்தை போட்டு, ”இதேபோல இங்கு பல தேச விரோதிகளை முடித்து வைக்க கடல்தாண்டி பட்டையை கிளப்பும் மர்மநபர்களையும் எதிர்நோக்குகிறோம் என வெளிப்படையாக போட்டுள்ளார்”.
கனடா நாட்டில் மர்மநபர்கள் சீக்கிய தலைவர்களை கொலை செய்திருக்கிறார்கள், அதற்கு பாஜக கட்சியும் மோடி அரசும் துணை செய்திருக்கிறது. அதனை வெற்றிகரமாக செய்திருக்கிறீர்கள். வெளிநாட்டில் மட்டுமல்ல உள்நாட்டிலும் படுகொலை செய்ய வேண்டி இருக்கிறது என்று செய்தி பதிவிட்டிருக்கிறார் என்றால், உள்நாட்டில் யாரை படுகொலை செய்ய வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் குறிப்பிடுகிறார்? அந்த பட்டியலில் மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், புரட்சியாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் என்று முகமூடி போட்டிருப்பவர்களை படுகொலை செய்வதற்கு நாங்கள் ‘ஸ்கெட்ச்’ போட்டு தருகிறோம் என்றும் வெளிப்படையாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இப்படியான ஒரு வன்முறையான/படுகொலை செய்வதற்கான அறைகூவலை தமிழ்நாட்டிலே இந்து மக்கள் கட்சி தலைவர் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். இந்த செய்தி பதிவுசெய்து கிட்டத்தட்ட ஐந்து/ஆறு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில் நேரடியாக நரேந்திர மோடியின் பெயரை இணைத்து(tag) குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் அலுவலகம் இதுகுறித்து பார்க்காமல் இருந்திருக்காது. அதுவும் ஆங்கிலத்தில் எழுதி உள்ளார், அவர்களுக்கும் நன்றாக தெரியும்.
இதனோடு சேர்த்து எங்கே இருந்தது? யார் எழுதியது என்று தெரியாத ஒரு செய்தியை புகைப்படத்துடன் இணைத்து வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியா நீட்டை திணித்தால், தமிழ்நாடு இந்தியாவை விட்டு வெளியேறும் என்று யாரோ ஆங்கிலத்தில் எழுதியதை, ஒரு செய்தியாக போட்டுவிட்டு, நரேந்திர மோடி கனடாவில் செய்த மாதிரி இந்தியாவிலும் செய்ய வேண்டும் என்று எழுதுகிறார். ஆனால் மோடி அரசோ நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார். அர்ஜூன் சம்பத்தோ கனடாவில் செய்ததைபோல இங்கேயும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? கனடா நாட்டில் பாஜக மோடி அரசு இந்த படுகொலையை செய்திருக்கிறது என்று வெளிப்படையாக ஒப்புதல் அளிக்கிறார் என்றே அர்த்தம். இதுவே பெரிய வாக்குமூலம்.
அடுத்தபடியாக இங்கே தமிழ்நாட்டில் தேச விரோத சக்திகளாக வளர்ந்திருப்பவர்கள் என்று எழுதி, திமுகவின் அறிவாலயம் (tag) எக்ஸ் ஐடியும் இணைத்துவிட்டு, அதற்கு பிறகு எனது (திருமுருகன் காந்தி) பெயர் போட்டு விட்டு, தமிழ்நாட்டில் ஒரு வெளியுறவுக்கொள்கை வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டதை, தேசப்பிரிவினைப் போல எழுதி, இவரை அழிக்க வேண்டும் /படுகொலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக பதிவிட்டிருக்கிறார்.
நாங்கள் என்ன கேட்க வேண்டும் என்றால் விரும்புகிறோம் என்றால், கர்நாடகத்தில் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேசை படுகொலை செய்தவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர். ஆக இப்படி இருக்கக்கூடிய சூழலில், தமிழ்நாட்டில் ஊடகவியாளர்கள், மாணவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு தருவோம் என்று கூறுகிறார்.
எங்கள் கேள்வியென்பது ’சில மாதங்களுக்கு முன்பு மரியாதைக்குரிய தோழர். ’ஆம்ஸ்ட்ராங்’ அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். அதில் பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டது பாஜக கட்சியினருடைய ஆருத்ரா பாஜக நிர்வாகிகள் தான்’. அப்போது, தோழர் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்வதற்கு அர்ஜூன் சம்பத் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாரா? இதை தமிழ்நாடு காவல்துறை ஏன் கவனிக்கவில்லை? வெளிப்படையாக அரசியல்வாதிகள் படுகொலைக்கும் ஸ்கெட்ச் போட்டு தருகிறாரா? வெளிநாட்டிலிருந்து கூலிப்படையை இந்தியாவில் (தமிழ்நாட்டிற்கு) கொண்டு வந்து, இங்கு இருக்கக்கூடிய இந்தியாவில் குடிமகனை தமிழ்நாட்டில் படுகொலை செய்வதற்கு, வெளிநாட்டு கூலிப்படைகளுக்கு ஸ்கெட்ச் போட்டு தருவதற்கு அர்ஜூன் சம்பத் யார்? அர்ஜூன் சம்பத்திற்கும் வெளிநாட்டு கூலிப்படைக்கும் தொடர்பு என்ன? தமிழ்நாட்டில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கும், அர்ஜூன் சம்பத்துக்குமான தொடர்பு என்ன? இதனை கேள்வி எழுப்புகிறோம், இது ரகசியமாக எங்களுக்கு மட்டும் செய்தி அனுப்பியது அல்ல, இது வெளிப்படையாக எக்ஸ் தளத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் காவல்துறைக்கு கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றிருக்கிறோம். இது புகாராக மனு அளிக்க இருக்கிறோம். ஆனால் காவல்துறைக்கு ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம், இதே போல ஒரு பதிவை இங்கு இருக்கிற நபர்களோ அல்லது இஸ்லாமியர்களோ பதிவு செய்திருந்தால், தமிழ்நாடு காவல்துறை சும்மா இருந்திருக்குமா? தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருக்குமா? ஏற்கனவே தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை எல்லாரையும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது, துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எப்படி இப்படிப்பட்ட கொலை முதலமைச்சர் தொகுதியில் நடைபெற்றிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் எப்படி நடந்தது? என்கிற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
அர்ஜூன் சம்பத் ஒரு கட்சியின் தலைவர், வெளிப்படையாக வன்முறையை பற்றி பேசக்கூடியவர். ஒரு வாரங்களுக்கு முன்பாக சென்னையிலே தி.நகரில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே சக பேச்சாளரை அடிப்பதற்கு எழுந்து சென்றவர். அப்படி வன்முறையை செய்யக்கூடிய ஒரு நபர், நாளைக்கு தமிழ்நாட்டில் ஏதோ ஒரு அரசியல் படுகொலை நடந்தால், அதற்கு தமிழ்நாட்டினுடைய காவல்துறையின் தலைமை (DGP) தான் பொறுப்பு ஏற்கவேண்டும். இந்த கொலைமிரட்டல் விடும்போது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, அவருக்கு சம்மன் அனுப்பவில்லை, எதுவும் செய்யவில்லை. நாளை கூட ஏதாவது அரசியல் படுகொலை நடக்கிறது என்றால், தமிழ்நாடு காவல்துறை, அர்ஜூன் சம்பத் வழியாக இந்த கொலையை நடத்தியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுமா? எழாதா? ஏனெனில் ஏற்கெனவே ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையை தடுத்து நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் அர்ஜூன் சம்பத் ஸ்கெட்ச் போட்டுத்தரப்படும் என செய்தி வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதியவில்லை, எச்சரிக்கை விடுக்கவில்லை, சம்மன் அனுப்பவில்லை, இதை போல எதையுமே செய்யவில்லையெனில், தமிழ்நாட்டு காவல்துறை இதுபோன்ற கொலைகள் நடக்க வேண்டும் என்று விரும்புகிறதா?
திமுகவினுடைய தலைமையகத்தை இணைத்து(tag) போட்டிருக்கிறார். நாங்கள் திமுக அரசை பார்த்து கேள்வி எழுப்புகிறோம். உங்களுடைய தலைமையகத்தை இணைத்து போட்டுள்ளார்களே, திமுக கவலைப்படவில்லையா? திமுகவின் பொறுப்பாளர்கள் கவலைப்படவில்லையா? அர்ஜூன் சம்பத் மேடையிலே பெண் தோழர் மீது மிரட்டல் தெரிவித்தபோதும், எக்ஸ் தளத்தில் பாராட்டுகிறீர்கள், ஒரு நடவடிக்கையும் செய்யவில்லை. தோழர் மதிவதனி துணிச்சலை பாராட்டும் அமைச்சர்களிடம் கேட்கிறோம், உங்கள் ஆட்சியில் திராவிட கழகத்தினுடைய முதன்மை பேச்சாளருக்கு இப்படி ஒரு இந்துத்துவ அமைப்பினர் மிரட்டல் கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, துணிச்சலான பெண்ணென்று பாராட்டினால் மட்டும் போதுமா?
திமுக அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்த அர்ஜூன் சம்பத்தை தான் முருகன் மாநாட்டிற்கு அழைத்து சிறப்பாக கவுரவம் செய்தார்கள். ஆக திமுகவுக்கு இதில் உடன்பாடு இருக்கிறதா என்ற கேள்வியும், அச்சமும் அனைவருக்கும் வருமா, இல்லையா? திமுக ஆளும் கட்சி இது. உங்களையும்(திமுக) குற்றம் சாட்டியுள்ளனர். இங்கே ஏதேனும் ஒரு கொலை நிகழ்ந்தால் அதை அனுமதிக்கப் போகிறீர்களா?
நாங்கள் ஒன்று கேட்க விரும்புகிறோம் அர்ஜூன் சம்பத் எழுதுவது போல் நாங்கள் எழுதுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? தமிழ்நாடு காவல்துறைக்கு சொல்ல விரும்புகிறோம், அர்ஜூன் சம்பத் எழுதியதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், இதேபோல நாங்கள் எழுதினால் தமிழ்நாடு காவல்துறை எங்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, எங்கள் மேல் வழக்கு பதியக்கூடாது, எந்த அர்ஜூன் சம்பத்தை பாதுக்காக்கிறீர்களோ, நடவடிக்கை எடுக்காமல், வழக்கு போடாமல், எதையும் விசாரிக்காமல் இருக்கிறீர்களோ, அதேபோல் எங்களையும் செய்ய வேண்டும், பரவாயில்லையா என சொல்லுங்கள். ஊடகவியலாளர்கள், மாணவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் பெயரை போட்டு பதிவு செய்துள்ளார். இவர்களுக்கு பொது இடத்தில் ஏதாவது/யாருக்கோ நடந்தாலும் யார் பொறுப்பு ஏற்பது? ஆக தமிழ்நாடு காவல்துறை தான் பாதுகாக்க கூடியவர்கள், அவர்களை நாங்கள் நம்புகிறோம். காவல்துறை மீது ஒரு சில விமர்சனம் இருக்கலாம், ஆனால் சட்ட ஒழுங்கு என்று வந்தால் காவல்துறை சரியாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.
அரசியல் செயற்பாட்டாளர்கள் சாதாரணமாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் வழக்கு போடுகிறீர்கள். பொதுக்கூட்டம் போட்டால் அதற்கு அனுமதி வழங்காமல் தடுக்கிறீர்கள். இவ்வளவு தூரம் கறாராக இருக்கும் தமிழ்நாடு காவல்துறை கொலை செய்கிறோம் என்று மிரட்டல் விடும்போது, அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் மேடையில் மிரட்டுகிறார் அவர் மீது வழக்கு பதியவில்லை, ஆக இதை ஊடகத்தின் வழியாக இந்த சமூக விரோதிகளை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காக ஊடக சந்திப்பு நடத்துகிறோம்.
இதை போல எங்களுக்கு செய்யத் தெரியாதா, நாங்கள் மிரட்டல் விடும் ஆட்களல்ல, சட்டம் ஒழுங்கை நம்புகிறோம், காவல்துறை ஆட்சி சனநாயக முறையில் நடக்கும் என்று நம்புகிறோம். சட்டமன்றத்தில் முறையாக இதற்கான சட்டங்கள் வகுக்க வேண்டும் என நம்புகிறோம். ஆனால் வெளிநாட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்வோம் என மிரட்டுகிறார்களே, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும், ஏன் திமுக அரசும், காவல்துறையும் எடுக்கவில்லை? என்பதை இச்சமயத்தில் கேள்வியாக முன்வைக்கிறோம்.
இது தொடர்பாக இனிவரும் நாளில் தமிழ்நாட்டின் தலைமை காவல்துறையின் தலைவரை நேரடியாக சென்று அனைத்து கட்சி பிரமுகர்களை சந்தித்து, இதுகுறித்து புகார் அளிக்க இருக்கின்றோம். புகாரை வாங்கிவிட்டு அதன்பின் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீங்கள் அர்ஜூன் சம்பத்தின் கொலை முயற்சிகள் அனுமதி அளித்ததாக புரிந்து கொள்ள முடிகிறது,
ஆக இவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், இவரை மாதிரி நாங்களும் எழுதுவோம். மேடை போட்டு நாங்கள் பேசுவோம், பொதுமேடையில் மிரட்டுபவர்கள், ஒலிப்பெருக்கியை அணைப்பவர்கள், அடிக்க வருபவர்களை எல்லாம் காவல்துறை வேடிக்கை பார்க்குமானால், நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்.
ஆக தோழர்களே, ஊடக நண்பர்களே, நாங்கள் உங்களுடைய பாதுக்காப்பையும் சேர்த்துதான் ஊடக சந்திப்பை நடத்துகின்றோம். தயவு செய்து இந்த தகவலை வெளியில் கொண்டு சென்று பொது மக்களுக்கு சேருங்கள். சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகக் கூடாது என்ற கவலையில் நாங்கள் சந்திப்பை நடத்துகிறோம். தமிழ்நாட்டு காவல்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றம் பல விசயங்களுக்கு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். மனது புண்படுகிறது என்று பேசுகிறார்கள், இங்கு ஏழரை கோடி பேருக்கு மனது புண்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு காதுகளுக்கு போய் சேருமா! கண்களுக்கு தெரியுமா! என தெரியவில்லை. நீதிபதிகள் இது குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. மக்களுடைய பாதுகாப்பின் பொறுப்பாளர்களாக இருக்கும் அதிகாரம் முழுமையாக பேச வேண்டும். நீதித்துறை பேச வேண்டும், திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக மூன்று துறைகளும் இது சார்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றோம்.
சனநாயக அமைப்புகள் ஒன்றுபட்டு இந்த விசயத்தில் சேர்ந்து நிற்க வேண்டும் கண்டனத்தையும், அழுத்தத்தையும் தர வேண்டும் என்று முன்வைக்கிறோம். தமிழ்நாடு அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். காவல்துறை பெயரளவில் FlR அல்லது வழக்கு மட்டும் பதியும் எனில், இது போன்று நாங்களும் எழுதுகிறோம், வெறும் FIR அல்லது வழக்கு மட்டும் வாங்கிக் கொள்கிறோம்.
ஒரு இசுலாமியர் இப்படி எழுதியிருந்தால், இந்நேரம் NIA அனுப்பியிருப்பீர்கள், UAPA வழக்கு போட்டிருப்பீர்கள். தோழர். மன்சூர் அவர்கள் எதுவும் பேசவில்லை, அவரை ஆறு மாதமாக UAPA வழக்கில் சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.
ஆகவே இப்படிப்பட்ட நபர்களை இனிமேலும் அனுமதித்தால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலை உருவாக்கி விடுவார்கள் என்கிற கவனத்தை திமுக அரசுக்கும்/மாண்புமிகு முதல்வருக்கும் கொண்டு வந்திருக்கிறோம். எனவே இந்த கோரிக்கையை முன்வைத்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்
விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் தோழர் செல்லத்துரை அவர்களின் பதிவு:
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள், தமிழ்நாடு அரசை என்ன சொல்ல வருகிறார் எனில், ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மாணவர்கள் என்கிற பெயரில் இயங்கும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் எனக் குறிப்பிடுகிறார். அதில் தோழர். திருமுருகன் காந்தி அவர்களை குறிப்பிடுகிறார். திமுக அரசையும் இவர்களை ஊக்குவிப்பதாக போகிற போக்கில் சொல்கிறார். அப்படி சொல்லக்கூடிய நபர் மீது வழக்கு பதியாமல், சிறைப்படுத்தாமல் இருப்பது திமுக அரசையும், காவல்துறையையும் சந்தேகம் படும்படியாக அல்லது குறைசொல்லும் படியாக வைக்கிறது.
அடுத்த என்ன சொல்கிறார் என்றால் நரேந்திர மோடியை இணைத்து(Tag) செய்து கனடாவில் நடந்த கொலையை (எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை குறிப்பாக கொலை செய்த்தாக) இந்திய அரசு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். இந்த பதிவை பிரதமர் அலுவலகம் கண்டிப்பாக பார்த்திருக்கும். அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை, அவர் மாநில அரசையும் குற்றம் சுமத்துகிறார். அதை தாண்டி தன்னுடைய அடியாளாக பயங்கரவாதிகளை வழிநடத்தக்கூடிய அளவுக்கு தகுதியுள்ள நபராக ஸ்கெட்ச் போட்டு தரப்படும் என்கிறார். கனடாவில் மர்ம கொலைகள் செய்ததுபோல தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும், அதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என சொல்கிறாமென்றால், ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? மற்றும் மர்மநபர்களுடன் தொடர்பில் இருக்கிறாரா? என்கிற கேள்வியும் எழுகிறது. இது மாதிரி பதிவு போட்டும் சுதந்திரமாக செயல்படுகிறார் எனில் காவல்துறை மீது மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.
தமிழக அரசுக்கு தன்மையாகக் கோரிக்கையை வைக்கிறோம், அர்ஜூன் சம்பத்தின் பதிவிற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும். ஆகவே தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலமாக அர்ஜூன் சம்பத் தன்னுடைய பதிவின் மூலம் பயங்கரவாதிகளை வழிநடத்துவதாக ஒப்புதல் வாக்குமூலமாக குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழக காவல்துறை அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்து வெளியில் வரமுடியாத அளவில் சிறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகவியலாளர்களிடையே உரையாடிய காணொளி.
யுட்யூப் இணைப்பு
மே பதினேழு இயக்கம்
9884864010