நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தந்தை பெரியார் குறித்து அவதூறான செய்திகளை பத்திரிக்கையாளர் சந்திப்புகள் தோறும் பேசி வருகிறார். அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அவருடைய வீட்டினை முற்றுகை இடும் போராட்டம் அறிவிப்பு குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக சனவரி 11, 2025 அன்று நடந்தது.
இந்த சந்திப்பில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர். குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயக கட்சியின் தோழர். கே.எம். ஷெரிப், தமிழர் விடியல் கட்சியின் தோழர். இளமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர். குமரன் மற்றும் சனநாயக முற்போக்கு அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பேசியவை:
நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், தந்தை பெரியார் குறித்து உண்மைக்கு மாறான பொய்யான அவதூறான செய்திகளை தொடர்ச்சியாக பேசி வருவதை கண்டிக்கின்ற வகையிலே நாங்கள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஒருங்கிணைத்திருக்கின்றோம். தந்தை பெரியார் குறித்தான அவதூறுகள் நீண்ட காலமாகவே பரப்பப்பட்டு வருகின்றன. அதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் அவர் பேசிய கருத்துக்களை திரித்து அதை அவதூறாக பரப்புவதை பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ்-சும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அந்த செய்திகளை கையில் எடுத்து சீமான் தந்தை பெரியாருக்கு எதிரான குற்றச்சாட்டாக முன்வைக்கின்றார். அது குறித்தான ஆதாரங்களை கேட்டபொழுது அந்த ஆதாரங்கள் தன்னிடத்தில் இல்லை என்றும், அந்த ஆதாரங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டால் உலகத்திற்கு தெரியவரும் என்பதாக அவர் பேசுகின்றார். ஆக அவரிடத்தில் எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாமல், மூல ஆவணங்களை வாசிக்காமல் அவர் இந்த அவதூறுகளை வேறு எங்கோ படித்து பரப்புகிறார் என்பது அவரது வாயிலாகவே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
சீமான் திரும்பத் திரும்பப் பேசுவது தந்தை பெரியார் கருத்துக்களை நாட்டுடைமை ஆக்கினால் அந்த தகவலை எல்லாம் சொல்லுகிறேன் என்று சொல்கிறார். நாட்டுடைமை ஆக்குவது என்பது என்னவென்றால் ஒருவருடைய கருத்துக்களை அனைவரும், அனைத்து பதிப்பகங்களும் பதிப்பிக்கலாம். தந்தை பெரியாரினுடைய எழுத்துக்களை திராவிடர் கழகத்தின் சுயமரியாதை பதிப்பகம் புத்தகமாக நூல்களாக வெளியிட்டு இருக்கிறார்கள். பெரியாரிய அறிஞர்கள் அதை புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதிலே நீங்கள் அது குறித்தான தகவலைத் தேடி எடுக்க முடியும். நாட்டுடைமை ஆக்குவது என்பது யார் வேண்டுமானாலும் அந்த புத்தகத்தை போடலாம் என்கிற அர்த்தம் கொண்டது. ஆக நாட்டுடைமை ஆக்குவது என்பது வேறு, ஒரு தகவலை தேடித் தெரிந்து கொள்வது என்பது வேறு. ஆகவே இந்த தகவலைத் தேடி தெரிந்து கொள்வதற்கு பெரியாரினுடைய இயக்கமாக இருக்கக்கூடிய திராவிடர் கழகம் சுயமரியாதை பதிப்பகம் வெளியிடும் புத்தகத்தில் இருந்து எடுக்கலாம் அல்லது பெரியாரிய அறிஞர்கள் குடியரசு இதழை, விடுதலை இதழை படியெடுத்து அப்படியே புத்தகமாக வெளியிட்டிருப்பதில் இருந்து எடுத்து மேற்கோள் காட்டலாம். இப்படி எதுவுமே இல்லாமல் இவர்களாகவே பெரியார் சொன்னதாக ஒரு செய்தியை அச்சடிக்கிறார்கள். அதை செய்து இதுதான் ஆதாரம் என்று எடுத்து பரப்புகிறார்கள். அவர்கள் சொன்ன ஆதாரம் என்று சொல்லக்கூடிய அந்த நான்கு ஐந்து வரிகளுடைய மொத்த பக்கத்தையும் அல்லது புத்தகத்தையும் கொடுங்களென்றால் இதுவரைக்கும் கொடுக்கவில்லை. நாட்டுடைமை ஆக்கினால் தருகிறோம் என்று சொல்கிறார்கள்.
சீமானுக்கு உண்மையாகவே நாட்டுடைமை ஆக்குவது என்றால் என்னவென்று தெரியுமா? பேராசிரியர் தொ. பரமசிவன்(தொ.ப) அவர்கள் சீமானுக்கு பேராசிரியராக இருந்தவர். அவருடைய புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. அதன் பிறகு என்ன என்ன ஆனது என்றால் அனைத்து பதிப்பகங்களும் பேராசிரியர் தொ.ப-வினுடைய புத்தகங்களை பதிப்பித்திருக்கிறார்கள். புத்தக சந்தைக்கு போனால் பல்வேறு பதிப்பகங்கள் அவருடைய புத்தகங்களை பதிப்பித்திருப்பதைப் பார்க்க முடியும். இதுதான் நாட்டுடைமையாக்கப்படுவது என்பதன் அர்த்தம். யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்று திராவிடர் கழகம் தந்தை பெரியாருடைய கருத்துக்களை தொகுத்து பதிப்பித்திருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான பக்கங்களிலே அந்த கருத்துக்கள் பதியப்பட்டிருக்கின்றன. நாட்டுடைமையாக்கப்பட்டால் தந்தை பெரியாரின் கருத்து என்று சொல்லி சீமானே பெரியாருடைய கருத்தைத் திரித்து ஒரு புத்தகமாக வெளியிடலாம், அண்ணாமலை ஒரு புத்தகத்தை வெளியிடலாம், ரங்கராஜ பாண்டே ஒரு புத்தகத்தை வெளியிடலாம், ஆர்எஸ்எஸ் ஒரு புத்தகத்தை வெளியிடுவார்கள். இதெல்லாம் தந்தை பெரியாருடைய உண்மையான கருத்தா இல்லையா என்பதை மறுபடியும் மூல புத்தகத்தைத் தேடி நாம் போக வேண்டி இருக்கும்.
இப்போது நம் கண்ணிற்கு முன்பே மூல ஆவணங்கள் இருக்கக்கூடிய கருத்துக்களையே திரித்து இவர்கள் அவதூறாக பரப்புகிறார் சீமான். ஒரு கட்சியினுடைய தலைவர், 6% – 7% வாக்கு வாங்கி இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய அவரே இவ்வளவு தூரம் பொய்யாக ஒரு தகவலை பரப்பும் பொழுது, நாட்டுடைமை ஆக்கினால் தந்தை பெரியாருடைய கருத்துக்களை வரிக்கு வரி திருத்தி இவர்கள் திரிப்பார்கள் என்பதே நிச்சயமாகத் தெரிகிறது. ஆகவே நாட்டுடைமை ஆக்குவது என்பதற்கும், ஆதாரம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சீமான் கையில் ஆதாரம் இல்லை. வாய்க்கு வந்ததையும், ஆர்எஸ்எஸ் அமைப்பு பாரதிய ஜனதா கட்சி அமைப்பு வெளியிட்ட புத்தகத்திலிருந்தும் அல்லது அவர்கள் வெளியிட்ட பரப்பிய அவதூறிலிருந்தும் எடுத்து சீமான் பேசியிருக்கிறார். ஆக, பாரதிய ஜனதா கட்சியினுடைய முகவராக, பிரதிநிதியாக சீமான் பேசியிருப்பது என்பது அம்பலமாய் இருக்கிறது.
தந்தை பெரியார் சீமான் சொன்னதைப் போன்று எந்த கருத்தையும் சொல்லவில்லை. அவருடைய புத்தகங்கள் எல்லாம் வெளியில் வந்திருக்கின்றன. தந்தை பெரியார் என்ன சொல்லுகிறார் என்றால் உலகத்திலே திருமண முறை என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும் வேறு வேறாக இருக்கிறது. இங்கே அத்தை மகளை திருமணம் செய்வது ஒரு முறை என்று சொல்லுகிறார்கள். வேறு சமூகத்தில் சித்தப்பா மகளை திருமணம் செய்வது ஒரு முறை என்று சொல்லுகிறார்கள். பர்மா போன்ற தேசங்களிலே தங்கை உறவு முறையில் வருபவரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முறையை வைத்திருக்கிறார்கள். இது மாதிரி பல முறைகள் உலகெங்கிலும் இருக்கின்றன. இதற்கென்று ஒரு பொதுமுறை இல்லை என்று அவர் சொல்லுகிறார். சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு ஊரிலும் என்ன மாதிரியான திருமண முறைகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறார். இவைகளை குறித்துத்தான் தந்தை பெரியார் சொல்கிறார்
புராணங்களில், இதிகாசங்களில் ஆபாசமான கருத்துக்கள், கதைகள் இருக்கின்றன. அதைக் கண்டித்து பேசுகின்றார் பெரியார். பிரம்மா தனது மகளையே திருமணம் செய்து கொண்டார். குருவினுடைய மனைவியை மாணவனாக வந்து பகவான் வன்புணர்வு செய்தார் என இப்படி எல்லாம் பல கருத்துக்கள் வருகிறது. இதெல்லாம் சமூகத்துக்கு ஒவ்வாதது, சமூகத்துக்கு கேடு விளைவிப்பது, இந்த புராணங்களை எல்லாம் நிராகரியுங்கள் என்றுதான் தந்தை பெரியார் சொல்லி இருக்கிறார். இதெல்லாம் புராணத்தில் இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். இவையெல்லாம் புராணத்தில் இருக்கிறதே, யாராவது மறுத்து இருக்கிறார்களா? அதைத்தான் எடுத்து கண்டிக்கிறார் பெரியார். இந்த மாதிரி கதையெல்லாம் சொன்னால் சின்ன பிள்ளைகள் மனம் கெட்டு போய் விடுமே, இளைஞர்களுடைய மனது கெட்டு போய் விடுமே, சமூகம் கெட்டு போய் விடுமே என்று எடுத்து சொல்லி இருக்கிறார்.
உண்மையாகவே சீமானுக்கும், அண்ணாமலைக்கும் அக்கறை இருந்தது என்றால் அந்த புராணத்தை கேள்வி கேட்கட்டும். அந்த புராணத்தில் இருக்கக்கூடிய அந்த ஆபாசமான கதைகள் அச்சிடப்படக்கூடாது, தடை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்கட்டும். அது பொய்யாக திரிக்கப்பட்டதாக இருந்தால் அதன் விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஒரு ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு இந்த மாதிரி மோசடியான, தவறான போலியான தயாரிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டால் என்ன ஆகும் என்று தெரியும். அண்ணாமலைக்கு தெரியும் என்பதனால்தான், கேட்டால் வெளியிடுகிறோம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்.
இதைப் போல ரங்கராஜ் பாண்டே தொடர்ச்சியாக பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். பொய்யை பரப்புவதைத் தவிர வேறு வேலை ஒன்றும் அவருக்கு இல்லை. அவர் என்ன சொல்கிறார் என்றால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் படையெடுத்து வரும் போது அந்த கோயிலுக்குள்ள வரக்கூடாது என்று தடுத்த பக்தர்கள் 12000 பேர் தலையை வெட்டினார்கள் என்று அவர் பேசுகிறார். அறிஞர் பொ. வேல்சாமி அவர்கள், அந்த ஆவணங்களை எடுத்து, எந்த ஆவணங்கள் என்றால் ஸ்ரீரங்கம் கோவிலினுடைய அந்த ஜீயர்களாக இருக்கக்கூடியவர்கள் வைத்திருக்கும் ஆவணங்கள், ஆயிரம் ஆண்டுகளாக தொகுக்கப்பட்ட அந்த கோவிலினுடைய ஆவணங்களில் இருந்து எடுத்துச் சொல்கிறார். அதில் 12000 பேர் தலை வெட்டப்படவில்லை, 12000 பேருக்கு மொட்டை அடிக்கிறார்கள் என்று தானிருக்கிறது. இன்றைக்கும் வைணவ கோவிலிலேயே மொட்டை அடிக்கக்கூடிய இடம் இருக்கக்கூடிய ஒரே கோவில் ஸ்ரீரங்கம் கோவில்தான். அதற்குப் பிறகு அந்த கோவிலில் இருந்த ஒரு பார்ப்பனர் படையெடுத்து வந்த இஸ்லாமிய மன்னனின் படைத் தளபதிக்கு உதவியாளராக போய் சேர்ந்திருக்கிறார். இதெல்லாம் ஆவணமாக அந்த கோவிலில் இருக்கக்கூடிய ஆவணத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் அறிஞர் பொ. வேல்சாமி அவர்கள்.
ஆனால் ரங்கராஜ் பாண்டே என்ன சொல்கிறார் என்றால் 12000 பேர் தலையை வெட்டினார்கள் என்று பேசுகிறார். இந்த ரங்கராஜ் பாண்டே மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் திமுக அரசு செய்யவில்லை. சீமானை இந்நேரம் சிறையில் தள்ளி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. இது மாதிரியான பொய்யான தகவலை மக்களுக்குள்ளாக பரப்பி பதட்டத்தை உருவாக்குவதும், சமூகத்திற்குள்ளாக முரண்பாடுகளைக் கொண்டு வருவதும், தமிழ்நாட்டில் எல்லோரும் முன்னேறுவதற்காக கல்வி உரிமைக்காக, வேலை உரிமைக்காக, வேலைவாய்ப்பு உரிமைக்காக பாடுபட்ட, சுயமரியாதைக்கு பாடுபட்ட தந்தை பெரியார் இழிவு செய்வதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது திமுக அரசு. இந்த நபர்களை எல்லாம் பிடித்து உள்ளே போட வேண்டாமா? இவர்களை கைது செய்ய வேண்டாமா? ரங்கராஜ் பாண்டேவை கைது செய்ய வேண்டாமா?
இப்படி ஒரு அவதூறாக 12000 பேரை இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் தலையை வெட்டிக் கொன்றார்கள் என்கின்ற ஒரு அபத்தமான, அபாண்டமான பொய்யைப் பரப்புகிறார். இதைக் கேட்கக்கூடியவர்கள் என்ன நினைப்பார்கள்? சக இஸ்லாமியர்களை விரோதியாக நினைப்பார்கள். ஆனால் ஆவணத்தில் அப்படி இல்லை. கோயில் ஆவணத்தில் அப்படி இல்லை. ரங்கராஜ் பாண்டேவினுடைய அப்பா தவறியதற்காக நேராக வீட்டுக்கு போய் துக்கம் கேட்கிறார் முதல்வர். இப்படி ஒரு அபாண்டமான ஒரு பொய்யை இஸ்லாமியர்களுக்கு எதிராக ரங்கராஜ் பாண்டே பரப்புகிறார். பெரியாரைக் குறித்து அபாண்டமாக சீமான் பரப்பி வருகிறார். இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த தாய், மகள், சகோதரியோடு உறவு வைத்துக் கொள்ளலாம் என்று பெரியார் சொன்னதாக சீமான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? பெரியாரைப் பற்றி பல அவதூறுகள் இருக்கின்றன. ஆனால் இந்த ஒரு குறிப்பிட்ட அவதூறை மட்டும் எடுத்து சீமான் பேசுவதற்கான காரணம், ஒருவேளை சீமானுக்கு இப்படியான விருப்பம் இருந்திருக்கலாம். நான் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறேன், சீமானுக்கு இதுபோல விருப்பம் இருந்திருக்கலாம். அவர் மீது பெண்கள் குறித்தான பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆகவே அவர் அமைப்பில் இருக்கக்கூடிய பெண்கள், அவரோடு பழகக்கூடிய பெண்கள், கவனமாக இருப்பது நல்லது என்பதை இச்சமயத்தில் சொல்லிக் கொள்கின்றேன். ஏனென்றால் சீமான் இதுவரை எந்த ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் பெரியாரின் மீது அவதூறை வீசுகின்றார். ஆகவே இது அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் என்கின்ற சந்தேகத்தின் அடிப்படையிலே நான் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றேன்.
அதைப் போல, சீமான் பேசியவுடன் ஒட்டுமொத்த பாரதிய ஜனதா கட்சி கும்பலும் அவருக்கு ஆதரவாக வருகிறது. ஆகவே அவர்களுக்குள் நெருக்கமாக இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. தந்தை பெரியாரைப் பற்றி சீமான் பேசியதற்கு இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்கள் கண்டித்துப் பேசவில்லை. அதிமுக தரப்பிலிருந்து கண்டனம் வரவில்லை. நாங்கள் அதை கேள்வி எழுப்ப விரும்புகின்றோம்.
சீமான், திராவிடன் என்று சொன்னால் திருடன் என்று பொய் சொல்லுகிறார். அப்படி எல்லாம் எந்த இடத்திலும் ஆதாரம் இல்லை. அவர் வாய்க்கு வந்ததை பேசுகிறார். ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வைத்திருப்பவர்கள் தயவு செய்து பேசுங்கள். தமிழ்நாட்டில் கட்சி மாறுபாடு இன்றி எல்லோருமே பேசியாக வேண்டும். எல்லோருமே பெரியாரை ஏற்றுக்கொண்ட கட்சிகள் தான் இங்கு இருக்கின்றன. பெரியாரை ஏற்றுக்கொள்ளாத ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான்.
சீமான் பெரியாரை விமர்சிக்கிறார் என்றால், பெரியார் மீது அவதூறு பேசுகிறார் என்றால், அவர் யாரிடமிருந்து தனக்கு ஆதாயம் வரும் என்று எதிர்பார்க்கிறார்? அது பாஜக – விடமிருந்து, சங்கிகளிடமிருந்து, மோடியிடமிருந்து, அண்ணாமலையிடமிருந்து, ஆர்எஸ்எஸ்-இடமிருந்து தனக்கு ஆதாயம் வரவேண்டும் என்பதற்காக பேசுகிறார். தமிழ்நாட்டில் எந்த கட்சியும் பெரியாரிடம் முரண்பட்டு இருக்கலாம். ஆனால் பெரியார் மீது அவதூறு சொன்னதில்லை. அவர் சொல்லாத கருத்தை சொன்னார் என்று யாரும் பேசியதில்லை. அவர் கருத்தோடு முரண்படுவது என்பது வேறு. அது தந்தை பெரியார் காலத்திலே கூட இருந்திருக்கிறது. ஆனால் தந்தை பெரியாரை யாரும் இழிவு செய்ததில்லை. சீமானுக்கு பாரதிய ஜனதா கட்சியோடு நெருக்கமாக வேண்டும் என்கின்ற ஒற்றை காரணத்திற்காக பெரியாரை இழிவு செய்கின்றார். பிஜேபி-யில் ஆர்எஸ்எஸ்-ல் சேர கோமியத்தை வைத்து ஞானஸ்தானம் செய்வார்கள். அது போல சீமானுக்கு ஞானஸ்தானத்தை கோமியத்தை வைத்து அண்ணாமலை செய்வார் அல்லது ஆர்எஸ்எஸ்-காரர்கள் செய்வார்கள்.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசியதற்கு எதிராக சீமான் அவர்களுடைய இல்லத்தை வருகின்ற 20 (பின்னர் 22 தேதியாக மாற்றப்பட்டது) ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் அமைப்புகள் ஒன்று திரண்டு முற்றுகையிடுவதாக இருக்கின்றோம். சீமான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டு போவதை, இது போன்று இழிவுபடுத்துவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் பொய்யாக பேசுறார்.
மேதகு பிரபாகரனை பார்த்ததற்கு பிறகு தான் நான் இப்படி பேசுகிறேன் என்கிறார். மேதகு பிரபாகரன் அவர்களோ, விடுதலைப் புலிகளோ என்றைக்குமே தந்தை பெரியாரை, திராவிட இயக்கத்தவரை விமர்சித்து பேசியதில்லை. தோழர் கே. எம். ஷெரீப் அவர்கள் என்னோடு இருக்கிறார். அவர் திராவிட இயக்க மரபிலே வந்தவர். தந்தை பெரியாருடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு 40 ஆண்டுகளாக அரசியல் பணி செய்யக்கூடியவர் மட்டுமல்ல விடுதலைப் புலிகளோடு நெருக்கமாக இருந்தவர். அவருக்கு அந்த வரலாறு தெரியும். 1980களில் இருந்து விடுதலைப் புலிகளோடு இயங்கியவர் அவர். ஆக, எந்த இடத்திலும் விடுதலைப் புலிகளோ, மேதகு பிரபாகரன் அவர்களோ திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் குறை சொன்னதோ, இழிவுபடுத்தியதோ, அவதூறு பேசியதோ இல்லை.
சீமான் பிஜேபிகாரர்களிடம் சென்று பிச்சை எடுப்பதற்காக ஈழ போராட்டத்தை இழுக்குறார். ஆக, ஈழப் போராட்டத்தையும் இழிவுபடுத்துவது, தமிழ்நாட்டில் நடந்த சுயமரியாதை போராட்டத்தையும் இழிவுபடுத்துவது என இரண்டையுமே செய்யக்கூடிய சீமானுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம். இதுபோல அவதூறுகளின் அடிப்படையில் விமர்சனம் இருந்தால், ஆதாரங்கள் வையுங்கள். அதற்கு பதில் சொல்வதற்கு எல்லாம் தயாராக இருக்கிறோம். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டு இருந்தால் இனிமேல் பார்த்துக கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. ஆகவே அவர் வீடு முற்றுகை என்பது வருகின்ற 20 ஆம் தேதிக்கு பிறகு நடக்க இருக்கிறது. சீமானை அம்பலப்படுத்துவதற்காக இந்த முற்றுகை இடுகின்றோம். இனி வரும் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து அவருக்கு அவர் பிஜேபியில் போய் சேர்ந்ததை அடையாளப்படுத்தும் விதமாக, அவர் சங்கியாக மாறியதை சொல்லும் விதமாக, அவருக்கு பாட்டில் பாட்டிலாக கோமியம் அனுப்பலாம்என்று முடிவு செய்து இருக்கிறோம்.
நாம் தமிழர் கட்சியில் இருக்கக்கூடிய தம்பிகள் தயவுசெய்து சீமானுடைய சந்தர்ப்பவாதத்திற்கு பலியாகி விடக்கூடாது. நீங்கள் தமிழ் மண்ணினுடைய உரிமைக்காக போராட வேண்டும் என்று வந்திருக்கிறீர்கள். உங்களை வைத்து அவர் இது போன்ற இழிவான அரசியல் செய்து கொண்டிருக்கின்றார். உங்கள் பெயரையும் மதிப்பையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் எதிர்காலத்தை பலியிட்டு விடாதீர்கள் என்று நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம். தமிழ் தேசிய அரசியலில் இணைந்து பணியாற்ற வாருங்கள் என்று நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
நாம் தமிழர் கட்சியில் இருக்கக்கூடிய மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைப் பொறுப்பாளர்கள், செயல்பாட்டாளர்கள், தமிழின உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்கின்றோம். உங்களுக்கு உங்களுடைய எதிர்காலத்தையும், தமிழினத்தினுடைய எதிர்காலத்தையும் பொறுத்து நீங்கள் அந்த கட்சியிலிருந்து வெளியேறி எங்களைப் போன்ற அச்சம் இல்லாமல் இயங்கக்கூடிய அமைப்புகளில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கும் என்றால், உங்கள் கட்சி உங்களுக்கு தவறான கருத்துக்களை சொல்லி இருக்கும் என்றால் அது குறித்து எங்களிடம் நீங்கள் வாதம் செய்ய உங்களுக்கான உரிமை இருக்கிறது, அதற்கு விளக்கம் அளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். சீமான் உங்களிடத்தில் சொல்லிய பொய்களை நாங்கள் விளக்குவதற்கும், தெளிவுபடுத்துவதற்கும் தயாராக இருக்கிறோம். இதற்கு மேலும் அந்த கட்சியிலே தயவு செய்து பயணிக்க வேண்டாம் என்று சொல்கிறோம். நாங்கள் சமூக களத்திலே, அரசியல் களத்திலே, தமிழ் தேசிய உணர்வுக்காகவும், தமிழ் தேசிய அரசியலுக்காகவும் நீண்ட காலமாக செயல்படக்கூடியவர்கள். எங்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் சீமானால் சொல்லிட முடியாது, அவதூறு எதையும் சீமானால் சொல்லிட முடியாது, எங்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் சீமானால் சொல்ல முடியாது.
நாங்கள் சொல்லுகின்றோம், சீமான் ஒரு அயோக்கியன். நாங்கள் 15 ஆண்டு காலமாக பார்த்துட்டோம் ஈழ அரசியலில் போராட்டம் நடத்துவதற்காக அழைப்பு கொடுத்த பொழுது வரவில்லை. விடுதலைப் புலிகள் மீது நெருக்கடி வருகிறது அதற்கு எதிராக போராட வேண்டும் என்று சொன்னபொழுதும் சீமான் வரவில்லை. ராஜபட்சேவுக்கு எதிராக எல்லோரும் ஒன்று கூடி போராடுவோம் என்று சொன்னபொழுதும் வரவில்லை. அன்றைய காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு எதிராக போராடுவோம், அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம் என்று சொன்னபொழுதும் வரவில்லை. திமுக அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அரசியலை கட்டி எழுப்புவோம் என்று நாங்கள் சொன்னோம், அறைகூவல் விடுத்தோம், நீங்களே முதன்மையாக நில்லுங்கள், நாங்கள் எல்லாம் அணியமாக நிற்கிறோம், உடனாக நிற்கிறோம் என்று சொன்னோம், அதற்கும் சீமான் வரவில்லை. திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று சொல்கிறாரே ஒழிய, இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக நாங்களும் வருகிறோம், சேர்ந்து செய்வோம் என்று கூறியதற்கு ஏன் வரவில்லை? இதனை 15 ஆண்டு காலம் கழித்து நான் பேசுகின்றேன். 15 வருடமாக நாங்கள் பேசவில்லை. இன்றைக்கு நாங்கள் பேசுகிறோம். நான் இது குறித்து பல பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெளிவாக சொல்லிட்டேன்.
திமுக, அதிமுக மாற்றாக நாம் உருவாக்குவோம் என்று சொன்னதற்கு ஏன் சீமான் உடன்படவில்லை என்றால், அவர் பாரதிய ஜனதா கட்சியோடு கைகோர்த்து 2014 லிருந்து தனது பலத்தை பணபலத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார். அதற்கு முன்பு அதிமுக கட்சியோடு, ஜெயலலிதா அம்மையாருடன் அரசியலில் நெருக்கமாக வேண்டும் என்பதற்காக, அவர் இரட்டை இலைக்காக வாக்கு கேட்டார். இதுதான் நடந்தது. அவர் ஒருபுறத்தில் திராவிடத்தை ஒழிப்பேன் என்று சொல்லிட்டு அதிமுகவிற்கு ஓட்டு கேட்கப் போவார். திமுக அதிமுகவுக்கு மாற்று என்று சொல்லிவிட்டு இங்கு மாற்றாக இருக்கக்கூடிய எந்த அமைப்போடும் சேர்ந்து வேலை செய்ய மாட்டார். ஆக, அவருக்கு நன்றாகத் தெரிந்தே, தன்னுடைய லாபத்திற்காக இளைஞர்களுடைய உணர்வை பயன்படுத்தி சுரண்டுகிறார். அந்த இளைஞர்கள் அந்த கட்சியை விட்டு வெளியேற வேண்டும். தமிழ் தேசிய இயக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. இளைஞர்களான நீங்கள் எங்கள் அமைப்பில்தான் சேர வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ் தேசிய அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன. தமிழின உணர்வோடு இயங்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் சீமானைக் குறித்து கேளுங்கள்.
சீமான் இளைஞர்கள் இடத்தில் வேறு கட்சி கூட்டங்கள் எதிர்க்கும் போகாதீர்கள் வேறு எந்த கட்சித் தலைவரையும் எங்கள் மேடையில் நாங்கள் ஏற்ற மாட்டோம் என்று தொடர்ச்சியாக சீமான் பேசக் காரணம், சீமானுடைய பொய்முகம் அம்பலமாகிவிடும் என்பதற்காகத்தான். யார் உண்மையாக உழைக்கிறார்கள், எது உண்மையான வரலாறு என்பதை தனது தொண்டர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த சதியை தொடர்ச்சியாக செய்திருக்கிறார். அதனால்தான் சீமான் எந்த தலைவரோடும் மேடையில் ஏறுவதில்லை.
அண்ணாமலையை பார்த்தால் கட்டித் தழுவிக் கொள்வார். ஆனால் அப்படி எந்த இடத்திலும் தமிழினத்திற்காக போராடியவர்களோடு அவர் கைகோர்த்ததில்லை. ஆக, சீமானினுடைய இந்த பித்தலாட்டத்தை தயவுசெய்து இளைஞர்கள் புரிந்து கொண்டு, அவருக்கு வாக்களித்தவர்கள் புரிந்து கொண்டு, அவருடைய இந்த பித்தலாட்ட அரசியலை நீங்களும் அம்பலப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். சீமானுடைய அரசியலை, அது தமிழ் தேசிய அரசியலை பாழ்படுத்துவதாக இருக்கின்ற காரணத்தினால், சீமான் எங்கெல்லாம் தேர்தலில் அவர் எங்கெல்லாம் வேட்பாளராக இறக்குகிறாரோ, அவருக்கு எதிராக தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள் களம் இறங்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் முதலில் துரோகியை ஒழித்தாக வேண்டும். அந்த துரோகி இப்பொழுது எதிரியோடு நேரடியாக கைகோர்த்து விட்டார். சீமான் துரோகம் செய்திருக்கிறார். தமிழகத்தின் எதிரியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. இரண்டும் கைகோர்த்து இருக்கிறது. ஆகவே இரண்டு நபர்களையும் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
ஆகவே தமிழ் தேசிய செயல்பாட்டாளராகிய நாங்கள் வெளிப்படையாக பகிரங்கமாக சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். நாங்கள் இனிமேல் சீமானை திருந்துங்கள் என்று சொல்லும் நிலைமையில் இல்லை. அவர் திருந்தினாலும் திருந்தவில்லை என்றாலும் அதைப்பற்றியான கவலை எங்களுக்கு இல்லை. அந்த நபர் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய, அம்பலப்படுத்த வேண்டிய நபர். நாங்கள் 20 ஆம் தேதிக்கு பிறகு முற்றுகையிடுகின்றோம். அதற்குப் பிறகான தொடர்ச்சியான செயல்பாடுகள் தெரிவிக்கப்படும். அவரிடமிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை பாதுகாப்பதற்காக, அவர் செய்யக்கூடிய இந்த பித்தலாட்டத்திலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை பாதுகாப்பதற்கான பிரச்சாரங்களை, தமிழ்நாடு முழுவதும் நாங்கள் எடுக்க இருக்கின்றோம். அவர் எந்த இடத்திலும் இது போன்ற அவதூறுகளை பேசினால் கடுமையான விளைவுகளையும், கடுமையான எதிர்ப்புகளையும் தமிழ்நாடு முழுவதும் அவர் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதையும் இச்சமயத்தில் சொல்லிக் கொள்கின்றோம்.
அதே சமயத்திலே திராவிட மாடல் அரசு என்று சொல்லுகின்ற திமுக அரசு தந்தை பெரியாரை நாங்கள் வழிகாட்டியாக வைத்திருக்கிறோம் என்று பேசுகின்ற திமுக அரசு இதுவரை சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றம் கேட்கும் வரை அமைதியாக இருக்கிறது. அப்படியென்றால் சீமானுக்கும் திமுகவுக்கும் என்ன உறவு என்று நாங்கள் கேட்க வேண்டிய நிலைக்கு எங்கள் தள்ளிவிடாதீர்கள். போராடுகிறவர்கள் அனைவரையும் கைது செய்கிறீர்கள். ஆனால் இது மாதிரியாக கீழ்த்தரமாக பேசுகின்ற சீமான் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ரங்கராஜ் பாண்டே மீது இதுவரை நடவடிக்கை இல்லை. நாங்கள் அனைவரும் சென்று வழக்கு கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?
இதைப் போல, அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் என்கின்ற அந்த ராணுவ மேஜரை ஒரு நபரை சுட்டுக் கொள்வதாக காட்டுகிறீர்களே, அது போர்க் குற்றம் ஆயிற்றே, எப்படி இதை செய்தீர்கள் என்று நான் கேள்வியை இயக்குனரிடம் கேட்டிருந்தேன். ஆனால் தமிழ் ஜனம் என்கின்ற ஒரு யுடியுபர் மேஜர் முகுந்த் வரதராஜனை நான் போர் குற்றவாளி என்று சொன்னதாக படம் போட்டு தமிழ்நாடு முழுவதும் செய்தியை பரப்பி விட்டார். அதற்கு எதிரான பல்வேறு மிரட்டல்களை எனக்கு கொண்டு வந்தார்கள். இது கண் முன்னாடி நடந்தது. அந்த வீடியோ எல்லாரும் பார்த்திருப்பீர்கள். அந்த youtube சேனல் பிஜேபி-யினுடைய ஆர்எஸ்எஸ்-யினுடைய youtube சேனல். விஜயபாரதம் என்கின்ற ஆர்எஸ்எஸ்-யினுடைய youtube சேனல். தமிழ் ஜனம் என்கின்ற அந்த சேனல் இந்த செய்தியை பரப்பியது எல்லோருக்கும் தெரியும். பத்திரிக்கையாளர்களான நீங்கள் எல்லாரும் சாட்சியாக இருக்குறீர்கள். உங்கள் கண் முன்னால் நடக்கக்கூடிய இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோவாக, எவிடன்சாக எல்லா இடத்திலும் இருக்கும் போதே அதை மாற்றி, பொய் பரப்புகிறது பிஜேபி கூட்டம். அந்த யூடியூபர் மேல் வழக்கு பதிவு செய்து இருக்கிறோம்.
இதைப் போல, மாரிதாஸ் என்கின்ற ஒருவர் தொடர்ச்சியாக பொய் செய்தியை பரப்புறார். அவர் மேலும் நாங்கள் வழக்கு கொடுத்திருக்கிறோம். இதுவரைக்கும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியான அவதூறு பரப்புரையும் செய்யும் பாதுகாப்பதற்கான காரணம் என்ன என்று திமுக அரசு சொல்ல வேண்டும். இங்கு இருக்கும் செயல்பாட்டாளர்கள் மீதெல்லாம் அவதூறு பரப்புவதை கைகட்டி வேடிக்கை பார்ப்பதற்கு திமுக அரசு எதற்கு? உங்கள் காவல்துறை வேலை செய்யாதா? அவதூறு பரப்பக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான சூழலை நாங்கள் பார்க்கின்றோம். நேற்று வேலூரில் புகார் கொடுக்கப் திராவிட விடுதலைக் கழகத் தோழர்களை மிகக் கடுமையாக அந்த மாவட்ட டிஎஸ்பி நடத்தியதாக அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். சீமான் மேல் வழக்குப் பதிவு செய்யுங்கள் என்று புகார் கொடுத்ததற்காக இப்படி செய்திருக்கிறார்கள் என்றால் இங்கு என்ன விதமான சட்ட ஒழுங்கு அல்லது காவல்துறையினுடைய செயல்பாடு இருக்கிறது என்று நாங்கள் கேள்வி எழுப்ப விரும்புகின்றோம்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் இணைந்து சீமானுடைய இந்த அவதூறுக்கு கடுமையான எதிர்ப்பை வருகின்ற 20 ஆம் தேதிக்கு பிறகான ஒரு தேதியிலே முற்றுகை போராட்டமாக நடத்த இருக்கின்றோம். அவருக்கு கோமியம் அனுப்புகின்ற பணியையும் தோழர்கள் செய்வார்கள். அவர் கோமியத்தை குடித்துவிட்டு அண்ணாமலையோடும் அவருக்கு நண்பராக இருக்கக்கூடிய இதர பாஜகவினரோடும் சேர்ந்து என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஏனென்றால் அவருக்கு சாப்பாடு மிகவும் பிடிக்கும். குடிக்கிறதும் மிகவும் பிடிக்கும். அதனால் கோமியத்தை குடித்து விட்டு வாய்க்கு வந்த பொய் பேசுவது குறித்து எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அவர் பாரதிய ஜனதா கட்சியின் முகவர் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்பதற்காகத்தான் இதை சொல்லுகின்றோம். தொடர்ச்சியாக போராட்டம் நடக்கும் என்பதை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். ரங்கராஜ் பாண்டேவின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொள்கின்றோம்.
குறிப்பு: சனவரி 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த முற்றுகை போராட்டத்தை 22-ஆம் தேதியாக மாற்றப்பட்டது.