
தமிழ்நாட்டின் மத ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி, மக்கள் அதிகாரக் கழகம், தந்தைபெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலை கழகம், மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட சனநாயக அமைப்புகள் திசம்பர் 4, 2025 அன்று மாலை 4:00 மணிக்கு ஊடகச் சந்திப்பை சென்னை ப்ரஸ் க்ளப் மன்றத்தில் நடத்தின.
இதில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கூறியவை :
“ஊடக நண்பர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டிலே இப்பொழுது திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்தான தேவையற்ற சர்ச்சையை இந்துத்துவ அமைப்புகள் உருவாக்கி வருகின்றன. காலம் காலமாக அங்கே தீபம் ஏற்றப்பட்டு கொண்டுதான் வருகிறது. நாங்களும் மதுரையைச் சார்ந்தவர்கள் தான். நாங்களும் சிறுவயதிலிருந்து அந்த கோவிலுக்கு சென்று வந்தவர்கள். இப்படிப்பட்ட கோரிக்கையை எந்த காலகட்டத்திலும் பக்தர்கள் எழுப்பியதாக எங்களுக்கு நினைவில் இல்லை. இப்பொழுது கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில் தீபம் ஏற்றுகின்ற இடத்தை மாற்றி வேறொரு இடத்தில் ஏற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்து முன்னணி என்கின்ற ஒரு மதவாத அமைப்பு முன்வைத்திருக்கிறது.
இந்து முன்னணி என்கின்ற மதவாத அமைப்பு இதற்கு முன்பு கோயம்புத்தூர் கலவரத்தில் பல்வேறு வன்முறைகள் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அமைப்பு. கோயம்புத்தூரில் சதீஷ்குமார் என்கின்ற ஒரு இளைஞனை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பொறுப்பாளர்களை கொண்டிருக்கக்கூடிய அமைப்பு இந்து முன்னணி அமைப்பு. இந்த இந்து முன்னணி அமைப்பினுடைய செயல்கள் வன்முறையானவை. அதன் பொறுப்பாளர்கள் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. கொலை வழக்கு முதல் பல்வேறு சட்ட விரோத வழக்குகள் இந்து முன்னணி அமைப்பின் மீது இருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரை எந்த நல்ல விடயத்தையும் செய்ததாக இந்து முன்னணிக்கு வரலாறு கிடையாது. கலவரம் செய்ததாக மட்டும்தான் இந்து முன்னணி மீது காவல் துறையில் வழக்குகள் இருக்கின்றன. இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகின்றது. எனவே இந்து முன்னணி என்கின்ற அமைப்பு எழுப்பக்கூடிய கோரிக்கை என்பது இந்து மக்களினுடைய கோரிக்கை அல்ல, அது மதுரை மக்களின் கோரிக்கையும் அல்ல.
கலவரம் செய்யக்கூடிய, கொலை செய்யக்கூடிய ஒரு அமைப்பினுடைய கோரிக்கைக்கு நீதிமன்றம் ஏன் செவி மடுக்க வேண்டும்? என்ற கேள்வியை நாங்கள் நீதிமன்றத்துக்கு வைக்க விரும்புகின்றோம். நீதிமன்றம் கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல. இது இந்து மக்களினுடைய கோரிக்கை அல்ல. வரலாறு ரீதியாக இந்து மக்கள் அப்படி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் தர்கா பக்கத்தில் தான் தீபத்தை ஏற்றி எங்களுக்கு மோட்சத்தை கொண்டு வர வேண்டும் என்று எந்த பக்தனும் இத்தனை ஆண்டு காலத்தில் கேட்கவில்லை.
இந்து முன்னணி என்கின்ற ஒற்றை குற்றவாளி அமைப்பு, கோயம்புத்தூரில் பல வன்முறைகளை செய்த அமைப்பு, சட்ட விரோத செயல்களை செய்த அமைப்பு. அந்த அமைப்பினுடைய கோரிக்கைக்கு வக்காலத்து வாங்குகின்ற வகையில் நீதிமன்றம் ஏன் செயல்படுகிறது? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம். நீதிமன்றம் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டி இருக்கின்றது. ஒருவர் மனு போடுவதாலேயே அதற்கு தீர்ப்பு தரவேண்டிய அவசியம் கிடையாது.
ஒரு கலவரத்தை செய்யக்கூடிய, மதவெறியை தூண்டுகின்ற அமைப்புக்கு ஆதரவாக எந்த அடிப்படையில் நீதிமன்றம் இருக்கிறது? என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகிறோம். ஏற்கனவே குற்றப்பட்டியலில் இருக்கக்கூடிய அமைப்பு அது. ஏற்கனவே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இவர்கள் சொல்லுகின்ற இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எந்த பக்தனும் கூறவில்லை, வரலாற்று ரீதியாக கோயில் ஆகம விதியிலும் அப்படி எந்த கோரிக்கையும் இல்லை. அறநிலையத் துறையும் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைக்கவில்லை. பக்தர்கள் அமைப்பும் அந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை.
திருப்பரங்குன்றத்தைச் சுற்றி இருக்கக்கூடிய எந்த கிராமத்திலும் அந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. எந்த முருக பக்தனும் இந்த இடத்தில் தான் தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது இந்து முன்னணிதான் முருக பக்தனுக்கு அதிகாரம் என்று நீதிமன்றம் எப்படி முடிவு செய்தது? இந்து முன்னணி கேட்டதற்காக நீதிமன்றம் இவ்வளவு தூரம் இறங்கி வந்து களஆய்வு முதல் எல்லா வேலைகளையும் செய்வதற்கு என்ன காரணம்? ஏழைகளுடைய வீடுகள் இடிக்கப்படும் வழக்கு வரும்பொழுது அந்த ஏழைகளுடைய வீட்டுக்கு நீதிபதி சென்று பார்த்திருக்கின்றார்களா? அரசு அதிகாரிகள் சொல்லக்கூடிய தகவல்கள் உண்மையா பொய்யா என்று நீதிபதிகள் களஆய்வு செய்திருக்கிறார்களா? மீனவர் கொலை வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்தபோது அந்த மீனவர் குடும்பத்தினரை சந்திக்க நீதிமன்றம் போயிருக்கிறதா?
இந்து முன்னணி என்ற ஒரு கலவர கும்பல் கொடுக்கக்கூடிய ஒரு வழக்குக்காக நீதிபதி நேரடியாக சென்று களஆய்வு செய்வதை நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம். சாமானிய மக்கள், ஏழை மக்கள், பாதிக்கப்படுகின்ற மக்கள் தொடர்பாக களஆய்வு போன்ற எந்த வழிமுறையும் செய்யாமல் பாகுபாடு காட்டுவதை தமிழ் மக்கள் எப்படி பார்த்துக் கொண்டு இருப்பார்கள்?
தர்கா அருகில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள் என்ற கேள்வியை நீதிபதி கேட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்ற மலையில் பிரச்சினை செய்யும் இந்து முன்னணி மருதமலை, திருத்தணி போன்ற இடங்களில் பிரச்சினை செய்வதில்லை. ஏனென்றால் அங்கெல்லாம் தர்கா கிடையாது. வேறு வழிபாட்டுத் தளம் கிடையாது. அதனால் இந்து முன்னணிக்கு அங்கு அக்கறை கிடையாது. திருப்பரங்குன்றத்தில் இசுலாமியரோடு பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்கின்ற திட்டமிட்ட நோக்கம் இந்து முன்னணிக்கு இருக்கின்றது. அத்தகைய இந்து முன்னணியுடைய கோரிக்கைக்கு ஒரு நீதிமன்றம் செவிமெடுத்து, சிஐஎஸ்எப் எனும் தொழிற்கூடங்களை பாதுகாக்கக்கூடிய பாதுகாப்பு படையை எவ்வாறு அனுப்ப இயலும்?
சிஐஎஸ்எப் பாதுகாப்புப் படையை கையாளக்கூடிய அதிகாரம் நீதிமன்றத்திற்கு வந்தது என்றால் அதற்கான அரசியல் சாசன பின்புலத்தை அந்த நீதிமன்றம் பொதுமக்களிடத்தில் காட்ட வேண்டும். இத்தகைய பொறுப்பு நீதிமன்றத்துக்கு இருக்கிறது. வருங்காலத்தில் நீதிபதி ராணுவத்தை அனுப்புவதாகக் கூறினால், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு என்ன வேலை?
நீதிமன்றம் வெளிப்படையாக இருப்பதைக் காட்டுவதற்கான பொறுப்பு இருக்கின்றது. எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது கவலையும் அச்சமும் வருகிறது. நீதிமன்றத்தைப் பார்த்தல் எங்களுக்கு பயமாக இருக்கின்றது என்று வெளிப்படையாக சொல்லுகின்றோம். இது போன்ற தீர்ப்பை தருவதனால் ஏற்படக்கூடிய விளைவு குறித்து எல்லாரும் பேசி விட்டோம். திமுக அரசும் இதுகுறித்து பேசி விட்டது.
தர்கா வழிபாட்டில் சாமானிய இந்து மக்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்க கூடியவர்கள். அது தமிழ் பண்பாட்டுக்குரிய அடையாளமாகவும் இருக்கிறது. நாகூர் தர்காவுக்கு மராத்தி அரசர் சந்தன கூடு கட்டி கொடுத்தார். ஏர்வாடி தர்காவுக்கு தமிழ் சாதிகளை சேர்ந்தவர்கள் சந்தனத்தை கொடுப்பார்கள். திருப்பத்தூர் தர்காவுக்கு மருதுபாண்டியர்கள் கொடை கொடுத்திருக்கிறார்கள். வைகை ஆற்றங்கரையில் இருக்கும் தர்காவுக்கு பாண்டிய அரசர் 15000 பொன் கொடை கொடுத்தது கல்வெட்டாக இருக்கின்றது.
இப்படி தர்கா முறை என்பது தமிழர் வழிபாட்டு முறையோடு அங்கமாக இருக்கும் சூழலில், அங்கு தீபத்தை ஏற்ற வேண்டிய தேவை இந்து முன்னணிக்கு ஏன் வருகிறது? இதுதான் எங்கள் கேள்வியாக இருக்கின்றது. நீதிபதி ஜிஆர்.சாமிநாதன் அவர்களை அந்த பதவியில் இருப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற வகையில் அவருக்கு எதிரான நடவடிக்கையை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும். இந்த கோரிக்கையை தோழர். திருமா அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள், அதை நாங்களும் வழிமொழிகின்றோம். இப்படிப்பட்ட ஒரு நீதிபதியின் மூலமாக நாளைக்கு சமுதாயத்தில் கலவரம் வந்தால் இவர் பொறுப்பெடுப்பாரா? இவர் பணிஓய்வு பெற்று பென்ஷன் வாங்கி சென்றுவிடுவார். ஆனால் சமூகத்தின் பிரச்சனையை யார் பார்ப்பது?
சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, சமூகத்தில் சிக்கல் வரக்கூடாது என்பதற்கான தீர்ப்பு வர வேண்டுமே ஒழிய, விருப்பத்தின் அடிப்படையில் அல்ல.
இந்து முன்னணி பற்றி கேள்வி கேட்காமல் ஒரு நீதிபதி இருக்கிறார் என்கின்ற சந்தேகத்தை நாங்கள் எழுப்ப விரும்புகிறோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் கையாளக்கூடிய அரசு நிர்வாகமும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் இது தேவையற்றது என்று சொல்கிறோம். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி, நீண்ட காலமாக மக்களிடத்தில் பணியாற்றுகின்ற மாநிலக் கட்சி போன்ற எந்தக் கட்சியும் இதுபோன்ற கோரிக்கையை வைக்கவில்லை. இப்படி யாருமே ஆதரிக்காத ஒன்றுக்காக வக்காலத்து வாங்கக்கூடிய ஒற்றை நீதிபதிக்காக தமிழ்நாட்டினுடைய சமூக அமைதி சீர்குலைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கர்நாடகம் காவிரியை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது கர்நாடக அரசு அதை செவி மடுக்கவில்லை. அன்று நீதிமன்ற அவமதிப்பு என்ன ஆனது? காவிரி உரிமையில் தமிழ்நாடு உரிமையை உறுதி செய்யக்கூடிய வகையிலே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பொழுது கர்நாடக அரசு அதை கடைபிடிக்கவில்லை. உச்ச நீதிமன்றமே CISF-ஐ கையில் எடுத்துக்கொண்டு எந்த உத்தரவும் இடவில்லை.
கலவரத்தை கொண்டு வர வேண்டும் என்று இந்து முன்னணி விரும்புகிறது. அதற்கு துணை செய்யக்கூடிய வகையில் இந்த தீர்ப்பு அமைகிறது என்கின்ற கவலையை இந்த சமயத்தில் முன் வைக்கிறேன். நில அளவை கல்லில் தீபம் ஏற்ற அனுமதித்தால் நாளை மைல் கல், அம்மி கல் போன்றவற்றில் ஏற்ற வேண்டும் என்று கூறுவார்கள்.
மதுரைக்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் இந்த இரண்டும் வராததற்கு பிஜேபி இதுவரைக்கும் குரல் கொடுக்கவில்லை. இந்து முன்னணியும் குரல் கொடுக்கவில்லை. தற்போது இந்த தீபத்தை ஏற்றினால் மெட்ரோ ரயில் வந்துவிடுமா? எய்ம்ஸ்(AIIMS) மருத்துவமனை கட்டி முடித்துவிடுமா? தமிழ்நாட்டு மீனவர்களுடைய பிரச்சனை தீர்ந்து விடுமா? ஜிஎஸ்டி வரிக்கணக்கு பணம் கொடுத்துவிடுமா? நீட் விலக்கு கொடுத்துவிடுமா?
விளக்கு ஏற்றுவதற்காக ஒரு கும்பல் கலவரம் செய்கிறது. இதற்கு நீதிமன்றம் துணை போவது என்பது வருத்தத்துக்குரியது. நாங்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்கள். நீதிமன்றம் இதுபோன்ற செயல்களை ஊக்குவித்தால், நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை வந்துவிட்டால், எப்படி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்கின்ற கேள்வியை எழுப்புகின்றோம்.
திருப்பரங்குன்றம் விடயத்தில் தமிழ்நாடு திமுக அரசு நேற்று எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் கலவரம் வரக்கூடாது என்பதற்காகவும் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடு இல்லாமல் இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். பிஜேபி மற்றும் இந்து முன்னணியோடு நிற்கக் கூடிய பக்தர்கள் அமைப்பு என்று எதுவுமே கிடையாது. ஆகவே இது போன்ற கலவரத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதை ஒரு காலத்திலும் அனுமதிக்க முடியாது. அந்த நீதிபதி பதவி நீக்கம் பெற வேண்டும். அவர் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்தான்.
இந்த அரசாங்கத்தில் அனைத்து துறைகளிலும் வேலை செய்யக்கூடியவர்கள் கடவுள்கள் அல்ல. உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. மக்களின் வரிப்பணத்திலே சம்பளம் பெறக்கூடியவர்கள். ஆகவே மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அதனால் அவர்களும் மக்களின் நலன் சார்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். இதுபோல மக்கள் விரோத முடிவுகளை எடுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
அந்த நீதிபதி பதவி நீக்கம் பெற வேண்டும். அந்த நீதிபதிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்திலே அந்த நீதிபதிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. நாளை இதே போல் ஒவ்வொரு ஊரிலும் பிரச்சனை உருவானால் அதுக்கு யார் பொறுப்பு?
அதனால் நாங்கள் வன்மையான கண்டனம் தெரிவிக்கிறோம். நீதிமன்றம் என்பது விசாரணைக்கு அப்பாற்பட்டது அல்ல. நீதிமன்றம் என்பது விசாரணைக்கு அப்பாற்பட்டது அல்ல. நீதிமன்றமும் பொறுப்புக்கூறல் செயல்முறையில் (Accountability Process) உள்ளதுதான். ஜனநாயகத்திற்கு கீழாக அனைவரும் கேள்விக்கு உட்படுத்தப்படக் கூடியவர்கள் தான். இந்த பிரச்சனையிலே நீதிமன்றத்தினுடைய நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக இருக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஒரு தனி நீதிபதி கலவரத்தை செய்யக்கூடிய ஒரு அமைப்புக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள கூடாது.
இந்த திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுகின்ற பிரச்சனையிலே மக்களுடைய முடிவு என்பது சட்டசபையின் முடிவுதான். நாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய சட்டசபை எம்எல்ஏக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அந்த முடிவுதான் தமிழ்நாட்டினுடைய முடிவு. அதை மீறி வேறு யாரும் இதில் தலையிடுவார்கள் என்றால் தமிழ் மக்களினுடைய பண்பாட்டு உரிமையின் மீது கை வைப்பதாக அர்த்தம்.
எங்களுடைய பழக்க வழக்கங்களின் மீது கை வைப்பதற்கு நீதிமன்றமோ நீதிபதிக்கோ அனுமதி கிடையாது. அதை மீறினால் அவர்கள் தமிழர் விரோதமாகவும் அரசியல் சாசன விரோதமாகவும் ஜனநாயக விரோதமாகவும் செயல்படுகிறார்கள் என்றுதான் நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். ஆகவே இந்த நீதிமன்ற தீர்ப்பு என்பது சமூக அமைதிக்கு நேர் எதிரானது என்பதை ஜனநாயக அமைப்புகளாகிய நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கிறோம். எங்களுக்கு இதில் எந்த அச்சமும் கிடையாது ” என்று கூறினார்.
ஊடகவியலாளர் கேள்வி: இன்றைக்கு அந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததை தள்ளுபடி பண்ணியிருக்கிறார்கள். தமிழக அரசு தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மத்திய தரைப்படை வீர்ரகளை நீதிபதி அனுப்பியிருக்கிறார், அதில் எந்த தவறும் இல்லை என இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
தோழர் திருமுருகன் காந்தி பதில்: தமிழ்நாடு அரசு உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றி இருக்கிறது. நூறு ஆண்டுகளாக அங்கேதான் தீபம் ஏற்றி இருக்கின்றார்கள். உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றக் கூடாது என நீதிமன்றம் சொல்கிறதா? அங்கே ஏற்றுவதில் என்ன சிக்கல்? அப்படி நீதிபதிக்கு விருப்பம் இருந்தால் அவர் வீட்டில் ஏற்றிக்கொள்ளட்டும். நாங்கள் கும்பிடும் கோவிலில் எங்கே ஏற்றவேண்டும் என நாங்கள் முடிவு பண்ணுகிறோம். அதையெல்லாம் நீதிமன்றம், நீதிபதி முடிவு பண்ண முடியாது. இவர் சி.ஐ.எஸ்.எப்.-ஐ எப்படி அனுப்பினார்? இதன் அரசியலமைப்பு பின்புலம் என்ன? நீதிபதி, நீதிமன்றம் அவமதிப்பு என்று சொல்லி பாதுகாப்புப் படையை அனுப்ப முடியுமா?
காவல் துறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. இதை எந்த மாநிலம் நிறைவேற்றி இருக்கிறது? அப்போது உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு இராணுவத்தை அனுப்புவீர்களா? அதற்காக இராணுவத்தை சட்டசபை நோக்கி அனுப்புவீர்களா? இதுப்போல ஏகப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு இருக்கிறது. இங்கே நெடுஞ்சாலையில் அல்லது பள்ளிக்கூடத்தின் அருகில் சாராயக்கடை வைக்கக்கூடாது என சட்டம் இருக்கிறது அல்லவா? அதையெல்லாம் நீதிபதி போய் கள ஆய்வு செய்தாரா? அது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? இதற்காக துணை ராணுவப் படை அனுப்புவாரா?
இந்து முன்னணி கலவர கும்பல் சொன்னதற்காக ஒரு நீதிபதி திருப்பரங்குன்ற மலை மேலே ஏறி கள ஆய்வு செய்கிறார். அனகாபுத்தூரில் அத்தனை ஆயிரம் மக்களை துள்ளத் துடிக்க வீடுகளை இடித்து வெளியில் கொண்டு போய் குப்பை மாதிரி போட்டார்கள். அது நீதிபதி உத்தரவின் அடிப்படையில்தான் நடந்தது. அங்கே குடிசைகள் அகற்றப்பட்டதற்கு எந்த நீதிபதியாவது வீதியில் சென்று ஆய்வு செய்து உள்ளார்களா? அத்தனை ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவதை சென்று களஆய்வு செய்து உள்ளார்களா? உண்மையான ஆவணத்தை சரி பார்த்தார்களா? நீதிமன்றம் தவறு செய்தால் நீதிமன்றம் தவறு செய்துவிட்டது என்று சொல்வதற்கு எந்த பயமும் கிடையாது.
தமிழ்நாட்டுக்குள் கலவர சூழலை உருவாக்குவதில் நீதிமன்றம் பங்கு வகிக்கக் கூடாது என்பதைத்தான் இந்த சமயத்தில் சொல்லிக் கொள்கிறோம்.
கேள்வி: தமிழக அரசு நேற்று அறிவித்த 144 உத்தரவு முடிவுகளை நீங்கள் பாராட்டினீர்கள். திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து பேசி வருகிறீர்கள். தமிழக அரசு முன்கூட்டியே இதை தடுப்பதற்காக என்ன நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
தோழர் திருமுருகன் காந்தி: ஒன்று செய்திருக்கலாம். எச்.ராஜா போன்றோரை குண்டர் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறை உள்ளே வைத்திருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். அவர்களை வெளியே விட்டதுதான் இந்தப் பிரச்சனைக்கான காரணம். அவர்களுக்கும் முருக வழிபாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எச்.ராஜாவுக்கும் பாண்டேவுக்கும் முருக வழிபாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எங்கள் குடும்பத்தில் திருப்பரங்குன்றம் ஒரு முக்கியமான கோவில். எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எல்லாரும் முருகன் கோவிலில் கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள்.
எங்களுக்குத் தெரியாத புது வழிபாட்டு முறையா எச்.ராஜாவுக்கும் பாண்டேவுக்கும் தெரியப் போகிறது? இந்த கலவர இந்துத்துவ கும்பலுக்கும் முருகன் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? என்றாவது எச்.ராஜா அலகு குத்தி இருக்கிறாரா? அல்லது பாண்டே குத்துவாரா? காவடி தூக்குவாரா? அரோகரா அரோகரா என ஓடுவாரா? இதையெல்லாம் அவர்கள் செய்தது இல்லை. ஆனால் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அலகு, காவடி எடுத்து போயிருக்கிறார்கள். இங்குள்ள பலரும் போயிருக்கிறார்கள். நாங்கள் வேண்டுமெனில் போட்டோவே காண்பிக்கிறோம். எச்.ராஜா அல்லது பாண்டே குடும்பத்தில் இதே போன்று செய்ததை காண்பிக்க சொல்லுங்கள் பார்ப்போம்.
ராம.ரவிக்குமார் என்ன இந்துக்களின் பிரதிநிதியா? கலவரம் செய்வதை ஒரு வேலையாக வைத்துக்கொண்டு இருப்பவர். அதனால் தான் கலவரத்தை செய்கிறார்கள். இதை எதிர்கொள்வதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். திருப்பரங்குன்றத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என எங்களுக்குத் தெரியும். கலவரக் கும்பலை எப்படி விரட்ட வேண்டும் என்பதும் தெரியும். திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற இந்த பிஜேபி கும்பல் பேசிக்கொண்டு இருக்கின்றது. அவர்கள் மேல் உடனடியாக வழக்கு பாய்ந்து அவர்கள் சிறைப்படுத்தப்பட வேண்டும்.
அயோத்தி பிரச்சனைக்கு பிறகு இந்தியாவில் நடந்த கலவரம் குறித்து நமக்குத் தெரியும். அதில் எத்தனை மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதும் தெரியும். இப்படி கலவரம் செய்யக்கூடிய வேலைக்குத் துணையாக நீதிபதிகள் இருந்தார்கள் என்றால், நீதிபதி மேலேயும் வழக்கு பதிவது தவறு கிடையாது. நாளைக்கு இதனால் கலவரம் வந்தால் எங்கள் மேல் குண்டர் சட்டம் போடுகின்ற மாதிரி, இந்த நீதிபதி மேலேயும் வழக்கு பதியுமாறு கேட்க வேண்டி வரும்.
அதனால் தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு தான் நீதிமன்றம் உதவ வேண்டுமே ஒழிய, இதுபோன்ற கலவரக்காரர்களை நீதிமன்றம் ஒருபொழுதும் அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் வேண்டுகோள் வைக்கின்றோம். நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை இதோடு முடித்து, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு உதவுகின்ற வகையில் தீர்ப்புகளைத் தர வேண்டும் என்பதை நாங்கள் வேண்டுகோளாக வைக்கின்றோம்.