இக்கட்டுரை ஐயா வே.ஆனைமுத்து குறித்து தொடராக வரும் கட்டுரையின் இரண்டாம் பாகம். முதல் பாகம் வாசிக்க.
‘இந்திய ஒன்றியம் என்பதே பார்ப்பன-பனியா நலனுக்காக உருவானதே’ என்பதில் உறுதியான கருத்துக் கொண்டவர் தந்தை பெரியார் அவர்கள். இந்து மதம், அது சார்ந்த வருண-சாதி அமைப்பு, அவற்றின் வழியே சமூக-பொருளாதார சுரண்டல் ஆகியவற்றை உடைத்தெறியும் வேலைத்திட்டமாக இட ஒதுக்கீட்டை முன்வைத்தார். அதன்பின் இந்திய ஒன்றியம் முழுவதும் பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டம் மூலம் பெரும் எழுச்சித்தீயை மூட்டியவர் அய்யா ஆனைமுத்து அவர்களே.
முதன் முதலில் இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டபின் மாகாண அரசுக் கல்வி, மாகாண அரசு வேலைகளில் எல்லா வகுப்புகளுக்கும் விகிதாச்சார ஒதுக்கீடு கோரியது. அதை ஏற்க மறுத்தது அன்றைய காங்கிரஸ் அரசு. இதே காரணத்திற்காக 22-11-1925 அன்று காங்கிரசிலிருந்து தந்தை பெரியார் வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற தனி இயக்கம் கண்டார்.
1921 முதல் 1923 வரை நீதிக்கட்சி வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணைகளைப் பிறப்பித்த போதும் 1926 வரை பார்ப்பனர்களின் எதிர்ப்பால் நடைமுறைப்படுத்த இயலவில்லை. இந்நிலையில்தான் பெரியார் “வகுப்புவாரி உரிமை நம் பிறப்புரிமை” என்ற முழக்கத்தை வைத்தார் (நூல்: திருச்சி வே.ஆனைமுத்து கருத்து கருவூலம் – தொகுதி 4; பக்கம் – VI).
அதன் பிறகு 1976-ம் ஆண்டு அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் ‘பெரியார் சம உரிமை கழகம்’ தொடங்கியபோது அதன் வேலைத்திட்டங்களில் ஒன்றாக “விகிதாச்சார வகுப்புவாரி உரிமையை வென்றெடுப்பது” என்று முழங்கினார். இதன் அடுத்த கட்ட வேலையாக வட இந்தியாவில் இட ஒதுக்கீடு பற்றிய புரிதலை ஏற்படுத்துவதும், அதன் வழியே இந்திய ஒன்றியம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வழியமைப்பதும் என்று முடிவெடுத்து அங்குப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதல் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு – காலேல்கர் ஆணையம்
1953 ம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் முன்னெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் குறித்து அமைக்கப்பட்ட ‘காகா காலேல்கர் ஆணையம்’ பல நல்ல பரிந்துரைகளைத் தந்தாலும், கலேக்கர் தனது முன்னுரையில் இட ஒதுக்கீட்டுக்கு நச்சுக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். “எந்த ஒரு வகுப்புக்கும் அரசு ஊழியத்தில் ஊழியத்தில் இட ஒதுக்கீடு அளிப்பதை நான் உறுதியாகவே மறுதலிக்கிறேன். ஏனெனில் அரசு ஊழியம் என்பது “வேலைக்காரர்’களுக்காக என்று இல்லை; அரசு ஊழியம் மொத்தச் சமூகத்துக்கும் சேவை செய்வதற்கானதாகும்.” (சான்று: பிற்பட்டோர் குழு அறிக்கை – மண்டல்குழு அறிக்கை)
இருப்பினும் மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது உட்சாதிகளின் கணக்கெடுப்பு தேவை, முதல் வகுப்பு (Class I) வேலைகளில் 25%, இரண்டாம் வகுப்பு (Class II) வேலைகளில் 33%, மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு (Class III & IV) வேலைகளில் 40% இட ஒதுக்கீடு போன்ற பரிந்துரைகள் அதில் கொடுக்கப்பட்டன. ஆனால் இப்பரிந்துரைகள் எதுவும் அன்றைய ஒன்றிய அரசான காங்கிரசால் முன்னெடுக்கப்படவேயில்லை.
பெரியார் நூற்றாண்டு முன்னெடுப்பும் பீகார் மாநில போராட்டங்களும்
இந்நிலையில் பெரியாரின் நூற்றாண்டு விழாக்களை வடமாநிலங்களில் முன்னெடுத்து அதன் மூலம் இட ஒதுக்கீடு விழிப்புணர்வை ஏற்படுத்த அய்யா ஆனைமுத்து அவர்கள் உள்ளிட்ட தோழர்கள் பலரும் முடிவெடுத்தனர். இதுதொடர்பாக 1978-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பி.பி.மண்டல் அவர்களைச் சந்தித்து வகுப்புரிமை போராட்டத்தின் காரணத்தையும், தமிழ்நாட்டில் முன்னரே பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீடு 31% இருப்பதைச் சுட்டிக்காட்டி விளக்கி வந்தனர்.
மேலும் இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஒன்றிய அரசு எவ்வித சட்டத்திருத்தமும் செய்யத்தேவையில்லை என்பதையும், அரசாணை மூலமே நிறைவேற்ற முடியும் என்பதையும் விளக்கிக் கூறி இருந்தனர். அதற்கு முன் மாதிரியாக 1936 முதல் 1947 வரை தென்னக ரயில்வே வேலைகளில் பார்ப்பனரல்லாதோருக்கு இட ஒதுக்கீடு இத்தகைய ஒன்றிய அரசின் அரசாணை மூலமே செயல்படுத்தப்பட்டிருந்தது என்பதையும்
சுட்டிக்காட்டினர் (நூல்: திருச்சி வே.ஆனைமுத்து கருத்து கருவூலம் – தொகுதி 4; பக்கம் – 156).
இதற்கு ஒரு வருடம் முன் (அதாவது 1977 ம் ஆண்டு) தேர்தலைச் சந்தித்த ஜனதா கட்சி காலேல்கர் ஆணையம் முன்மொழிந்த பரிந்துரைகள் படி பிற்படுத்தப்பட்டோருக்கு 33% வரை தனி இட ஒதுக்கீடு தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தமையால் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராம் அவதேஷ்சிங் அவர்களை மே 1978-ல் சந்தித்து இது பற்றிய முன்னெடுப்புகளை முடிவெடுத்தனர். ஏற்கனவே இது தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டிருந்த அவரும் சம்மதித்தார்.
இதனை அடுத்து உத்திர பிரதேசத்தின் முசாபர் நகரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டு இடஒதுக்கீடு பற்றி பெரியாரிய பார்வையிலான நீண்டதொரு உரையை அய்யா ஆனைமுத்து அவர்கள் நிகழ்த்தினார். அது முதல் வடமாநிலங்களில் இடஒதுக்கீடு பற்றிய போராட்டங்கள் காட்டுத்தீ போல் பரவத் தொடங்கின.
1978-ம் ஆண்டு செப்டம்பர் 17 முதல், பீகார் மாநிலம் பாட்னாவில் தொடங்கி, அக்டோபர் 18 வரை முப்பத்து இரண்டு மாவட்டங்களிலும் பெரியார் நூற்றாண்டு விழாக் கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமை பத்தி விரிவாக பேசினார் அய்யா ஆனைமுத்து அவர்கள். அக்டோபர் 19, 1978 அன்று பாட்னாவில் சிறை நிரப்பும் போராட்டம் இதே கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்டு அக்டோபர் 31-க்குள் அம்மாநிலத்தை சேர்ந்த 10,000 பேர் கைதானார்கள்.
இதற்கிடையில் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களுக்கு இக்கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதற்குப் பதில் கூறும் விதமாக ‘காலேல்கர் ஆணையம் 1955-ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் வரை மட்டுமே. எனவே 22 ஆண்டுகள் கடந்துவிட்டமையால் அவற்றைச் செயல்படுத்த முடியாது” என்று பிரதமர் அலுவலகம் கூறியது. அதற்கு மறுமொழியாக “அப்படியென்றால் 1977-ம் ஆண்டு தேர்தலில் 21 வருடம் கழிந்து காலாவதியான பின்பும் ‘காலேல்கர் ஆணையம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம்’ என்று வாக்குறுதி கொடுத்தது எப்படி என்று கேட்டபோது ஒன்றிய அரசு பதில் சொல்ல இயலாமல் தடுமாறியது (நூல்: திருச்சி வே.ஆனைமுத்து கருத்து கருவூலம் – தொகுதி 4; பக்கம் – 159).
நிலைமையை சமாளிக்க பீகாரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களை பீகார் மக்கள் எந்த இடத்திலும் பேச விடாமல் போராட்டம் நடத்தினர். அவரும் எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேசாமல் திரும்பிச் சென்றார்.
அதன் பின்னும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதான் விளைவாக 10-11-1978 அன்று பீகார் மாநில பிற்படுத்தப்பட்டோருக்காக இடஒதுக்கீடு 20% அரசு வேலைகளில் தரப்பட்டது.
மண்டல் குழு – ஓர் வரலாற்றுச் சாதனை
பீகாரில் தொடங்கிய இந்த மாற்றம் பஞ்சாப் மற்றும் அரியானவிலும் ஏற்படத்தொடங்கியது. இப்படிப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களைக் கண்ட ஆதிக்க சாதியினர் இதனை தடுக்க, ‘ஒடுக்கப்பட்ட மக்கள் பேரவை (Oppressed People’s Federation)’ என்ற ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கலவரங்கள் செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில் கலேல்கர் ஆணையம் மீதான மக்களின் பார்வையை திசைதிருப்ப பிரதமர் மொரார்ஜி தேசாய் ‘இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு’ ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்தார். அக்குழுவே பி.பி.மண்டல் அவர்களின் தலைமையிலான வரலாற்றில் சிறப்புமிக்க ‘மண்டல் குழு’ ஆகும். மண்டல் குழு உருவாக்கப்பட்டதில் திரு மொரார்ஜி தேசாய் அவர்களுக்கு உள்நோக்கம் இருந்தாலும் இக்குழுவின் பரிந்துரைகள் பிற்படுத்தப்பட்டவருக்கான இடஓதுக்கீட்டை ஆதரித்தும், அதை சரியான முறையில் செயல்படுத்தும் திட்ட அமைப்புகளை உள்ளடக்கியும் இருந்தது. அவ்வகையில் மண்டல் குழு அமைப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைக்குரலை மடைமாற்றி விடலாம் என்று கனவு கண்ட பார்ப்பனர்களின் திட்டம் தவிடுபொடியானது. இக்குழு அமைய காரணமாய் அமைந்தவர்களில் முகாமையானவர் அய்யா ஆனைமுத்து அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் அல்லாமல் இடஒதுக்கீடு தொடர்பாக தொடர்ச்சியாக மண்டல் குழுவிடமும் நேரில் சான்றுகளை கொடுத்து பெரியாரின் பெரும் கனவை எப்படியாகினும் நிறைவேறச் செய்ய தன் ஆற்றல் அனைத்தையும் செலவிட்ட சமரசமில்லா சமூகநீதி போராளி அய்யா வே.ஆனைமுத்து அவர்களே ஆவார்.
இக்கட்டுரை ஐயா வே.ஆனைமுத்து குறித்து தொடராக வரும் கட்டுரையின் இரண்டாம் பாகம். முதல் பாகம் வாசிக்க.