குடியரசு ஜனநாயகத்திற்கு சவக்குழி தோண்டிய பாஜக மோடி

இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைப்பிதழே வழங்கப்படவில்லை என்னும் செய்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பாஜக மேலிடமும், மோடி அரசின் கைப்பாவை ஊடகங்களும் குடியரசுத் தலைவர் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டார் என்கிற பொய்யை அவிழ்த்துவிட்டது  அம்பலமாயிருக்கிறது. 

தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோரியது.

மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருந்த கொரோனா காலகட்டத்தில் மே10, 2020-ல் மோடி புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.900 கோடி செலவில் 65000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த புதிய நாடாளுமன்றத்தை  மே 28, 2023 அன்று மோடி திறந்து வைத்தார். அரசியல் சட்ட மரபுப்படி அரசியலமைப்பு அமைப்பான நாடாளுமன்றக் கட்டிடத்தை இந்தியாவின் முதல் குடிமகளான திரவுபதி முர்மு திறந்து வைத்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவர் என்பவர் நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் கொண்டவர். பிரதம மந்திரி மற்றும் பிற அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நாடாளுமன்றத்தின் முதன்மையான அதிகாரம் படைத்த அவருக்கு திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. அது மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் கூட அவரை அழைக்காத இந்த செயல், இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடி இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவரையே ஒரு பொருட்டாக மதிக்காமல், அவமானப்படுத்தியதையேக் காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தன. ஒரு பட்டியலின பழங்குடிப் பெண்ணாக இருப்பதனால் தான் அவரைப் புறக்கணித்ததாகச் சொல்லி, நாடாளுமன்றத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார்கள். இருப்பினும் எதையும் கண்டு கொள்ளாமல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை மோடி திறந்து வைத்தார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில், “நாடாளுமன்ற இருப்புக்கு ஜனநாயகமே அடிப்படையானது” என்று மோடி பெருமிதமாகப் பேசினார். ஆனால், அக்கட்டிடத்தை தீவிர இந்துத்துவ சனாதனவாதி சாவர்க்கரின் பிறந்தநாளில் திறந்து வைத்துள்ளார். தேசத்தந்தை எனப் போற்றப்பட்ட மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆத்மார்த்த ஆசானாக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தவர் தான் சாவர்க்கர். வெள்ளையரிடம் பல மன்னிப்பு கடிதங்களை எழுதிக் கொடுத்து, வெள்ளையரின் விசுவாசியாக மாறியதால் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர். இவரையே, வீர சாவர்க்கர் என்று மோடி முதற்கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்கள் கொண்டாடுகின்றன. 

நேதாஜி சுபாசு சந்திரபோசு அவர்கள் இந்திய தேசியப் படையை நிறுவி வெள்ளையருக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், வெள்ளையர்களுக்கு ஆதரவாகப் போரிட சாவர்க்கர் இந்து மகாசபை மூலமாக இந்துக்களையேத் திரட்டினார். வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வந்த சுபாசு சந்திரபோசு படையிலிருந்த இந்துக்களின் மீது வெள்ளையனுக்கு ஆதரவாக இந்து மகாசபை படையை மோத விட்டவர் சாவர்க்கர். இந்த வரலாறை மே 17 இயக்கம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பேசி வருகிறது. இதுவரை இதற்கு இந்துத்துவ அமைப்புகள் எந்த மறுப்பும்  தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இந்துக்களை பிளவுபடுத்தும் கொள்கையுடன் வாழ்ந்து, வெள்ளையருக்கு அடிபணிந்து அவர்களுக்கு படை திரட்டி கொடுத்து சொந்த நாட்டு இந்துக்களை கொன்றொழிக்க உதவிய சாவர்க்கரின் பிறந்தநாளன்று நாடாளுமன்றத்தை திறந்து வைத்து சனநாயகத்தை காக்கப்போவதாக மோடி பேசினார். அரசியலமைப்பு சட்டம்  முகப்புரையில் கூறும் மதசார்பற்ற சனநாயக குடியரசு என்பதற்கு இணங்க நடத்த வேண்டிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை மோடி கேலிக்கூத்தாக மாற்றினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பார்ப்பனர்கள் குறித்த நேரத்தில், புரோகிதப் பார்ப்பனர் கூட்டம் வேத மந்திரங்களை முழங்க இந்து வேத முறைப்படி திறக்கப்பட்டது. இந்தியா மதச்சார்பற்ற சனநாயக நாடு என்கிற  அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு மோடி நாடாளுமன்றத்தை திறந்து வைத்து சனநாயகத்தை பாதுகாப்பேன் என்று பேசுவது வேடிக்கை தான். கணவரை இழந்தவரான ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களை அழைக்க பாஜக மோடி அரசு பின்பற்றிய சனாதன விதிகள் அனுமதிக்காது என்கிற பேச்சும் இருந்தது.

நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சைவ ஆதீனங்கள் வழங்கிய செங்கோலை பயபக்தியுடன் மோடிபெற்றுக்கொண்டார். முடியாட்சியின் அடையாளமான செங்கோலை பெற்றுக்கொண்டு அம்முறைக்கு எதிரான “குடியரசு சனநாயகத்தை” காப்பாற்றப்போவதாக மோடியின் இந்துத்துவ கும்பல் நடத்தும் கூத்துக்கு எல்லை இல்லை. இன்றும் மனிதனை மனிதனே சுமக்கும் பல்லக்கு முறைகளைக் கடைபிடித்து வரும் திருவாடுதுறை ஆதினம் உட்பட 19 ஆதீனங்களின் நிலக்கிழார்களும் தங்களுக்கு ஒவ்வாத வேத மந்திர உச்சாடனங்களை கேட்கும்படி ஒரு ஓரமாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். வைதீக மறுப்பை கடைபிடிக்காத சைவ ஆதீனங்களின் சுயமரியாதைகெட்ட செயல் சிவபக்தர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தாமரை இதழ் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் நாடாளுமன்றத்தின் உட்புறத் தோற்றத்தின் காட்சிகள் யாவும் சனாதனத்தை, சமஸ்கிருதத்தை போற்றுவதாக இருப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் போல இருப்பதாகவும் கூறியுள்ளார். 

புதிய நாடாளுமன்றத்தில் சாணக்கியர் உருவம்

மேலும் அவர், 

“புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சாணக்கியரின் உருவத்தை பொறித்துள்ளார்கள். கையில் தண்டம் ஏந்தி இன்னொரு விரலை ஆவேசத்தோடு நீட்டி இருக்கும் சாணக்கியரின் உருவம் ஏறக்குறைய 30 அடி உயரத்திற்கு வடிவமைத்துள்ளார்கள். சாணக்கியருக்கும், ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? அரசியல் சாசன சட்டம் போற்றப்பட வேண்டிய இடத்தில் அர்த்த சாஸ்திரத்தை நினைவுபடுத்த வேண்டிய தேவை என்ன? என்பது முக்கிய கேள்விகள். அதைக் கடந்து உள்ளே சென்றால் மைய வளாகத்தில் சுமார் 250 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாக விஷ்ணு புராணத்தில் வரும் பாற்கடலை கடையும் சிற்ப காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேரு மலையை மத்தாக ஆதிசேசனை கயிறாகக் கொண்டு தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் ஒருபுறமும் பாற்கடலை கடைகிற இந்த காட்சிக்கும் நாடாளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அப்படிப்பட்ட மையமான இடத்தில் பிரிட்டிசுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி காட்சிப்படுத்தினால் தங்களது துரோக வரலாறு நினைவுபடுத்தப்படும் என்ற அச்சத்தில் (ஆர்எஸ்எஸ் பாஜக வினர்) புராணங்களை காட்சிப் படுத்தியுள்ளனர். 

இதையெல்லாம் அடுத்து உள்ளே சென்றால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அரசியல் சாசனத்தின் நூல் வைக்கப்பட்டு அதை காட்சிப்படுத்தும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன புத்தகத்தின் கோட்டோவியத்தை நந்தலால் போஷ் வரைந்துள்ளார். அதில் 22 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அந்த 22 ஓவியங்களும் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை நினைவுபடுத்தவும், இந்தியாவின் பன்மைத்துவத்தை நினைவு படுத்தவும் வரையப்பட்ட ஓவியங்கள். அதில் 16 ஓவியங்களை நாங்கள் காட்சிப்படுத்த மெருகூட்டியுள்ளோம் என சொல்லி 16 காட்சிகளை உருவாக்கியுள்ளார்கள். நந்தலால் போஷின் முதல் படம் சிந்துவெளி நாகரிகம் என்று சொல்லக்கூடிய எருதில் இருந்து துவங்கும். ஆனால், இவர்கள் வரைந்துள்ள முதல் படம் தவமிருக்கும் முனிவரில் இருந்து துவங்குகிறது. வேத காலத்தில் இருந்து இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டு, இராமாயண ஓவியங்கள் நந்தலால் போஷின் ஓவியங்களில் இருந்தாலும் அது காவிய காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றையெல்லாம் இவர்கள் வரலாறு என கட்டமைத்துள்ளார்கள்.

சிந்துவெளி நாகரிகம், புத்தர்கள் காலம், மௌரியர்கள் காலம், முகலாயர்கள் காலம் என அனைத்திலும் இருந்து இந்திய ஜனநாயகம் எப்படி வளர்ந்தது என்று நந்தலால் போஷ் காட்சிப்படுத்தியிருப்பார். அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டது. ஒற்றைத் தத்துவமாக ஒற்றைக் கோட்பாடாக இந்துத்துவா கோட்பாடு மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் காட்சியாக தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. வேதனை என்னவென்றால், சவார்க்கரின் பிறந்த நாளில் சாஸ்திர, சம்பிரதாயங்கள் முழங்க மன்னராட்சியின் அடையாளமான செங்கோல் ஏந்தி நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது என்று தான் நாம் நினைத்திருந்தோம். திறக்கப்பட்டது மட்டுமல்ல, இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த கட்டிடத்தையே அவர்கள் வடிவமைத்துள்ளார்கள்” என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால் “பேச்சளவில் ஜனநாயகம், செயலளவில் சனாதனம்” என்பதையே அனைத்து அரசியல் நடைமுறைகளிலும் பின்பற்றும் ஆர்எஸ்எஸ் பாஜக அரசு, நாடாளுமன்றக் கட்டிடத்தையும் சனாதனத்தை பறைசாற்றும் படியே அமைத்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமரக்கூடிய இருக்கைகளை அதிகமாக நிறுவியுள்ளதும் வலுத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மக்களவை இடங்கள் 888, மாநிலங்களவை இடங்கள் 384 என அமைத்துள்ளார்கள். மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 தான் என்கிறபோது கூடுதலாக 345 இடங்கள் எதற்காக அமைத்திருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 1971 மக்கள் தொகை அடிப்படையில் இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. 1976-க்குப் பிறகு, இவ்வாறு பிரிக்கப்பட்ட தொகுதிகள் இதே நிலையிலேயே நீடிக்கட்டும் என சட்டத்திருத்தம் ஏற்படுத்தினார்கள். ஆனால், மக்கள் தொகைக்கேற்ப மாநிலங்களின் தொகுதிகளைப் பிரிக்க வேண்டும் என்பது பாஜக-வின் நீண்ட நாள் கோரிக்கை. இதன்படி, நாடாளுமன்றத்தின் தொகுதிகளைப் பிரித்தால் இந்தி பேசும் மாநிலங்களே மேலும் அதிக தொகுதிகளைப் பெறும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்னாடுகள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை பின்பற்றிய அதே வேளையில், வட நாடுகளுக்கு அந்த எண்ணமே எழவில்லை. வடநாட்டில் மக்களின் பக்தியை, மதவெறியைப் புகுத்தி வாக்குகளை அறுவடை செய்து கொண்டிருக்கும் பாஜகவிற்கு, இதன் மூலமாக நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மையான இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்  என்கிற எண்ணம் உள்ளது. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் மேலதிகமான இடங்களை புதிய நாடாளுமன்றத்தில் அமைத்திருக்கிறார்கள் என்பது அரசியல் திறனாய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

அரசியலமைப்பு மரபை மதிக்காமல் குடியரசுத் தலைவரை நிராகரித்து, சனாதனத்தின் முழு உருவமாக நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்து, மூலவர் சாவர்க்கரின் பிறந்த நாளன்று மதச்சார்பின்மையை அழிக்க பார்ப்பனர் வேத மந்திரங்கள் முழங்க செங்கோலை பெற்று மக்களாட்சியை குழிதோண்டி புதைத்து முடியாட்சியை நிறுவிட மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார். 

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நாடாளுமன்றத்தில் அந்த சட்டத்தை மதிக்காமல் செயல்படும் இந்துத்துவ ஆர்எஸ்எஸ் பாஜக மீதம் விட்டு வைத்திருப்பது அந்த அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமே. சனாதன வர்ணாசிரமத்தின் கோட்டையாக நிறுவப்பெற்றுள்ள புதிய நாடாளுமன்றத்தில் ஆரிய பார்ப்பன கூட்டம் அமர்ந்து இந்து ராஷ்டிரத்திற்கான சனாதன தர்ம சட்டங்களை நிறுவிட இனி முற்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »