பள்ளிகள் திறப்பை அச்சுறுத்தும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம்
தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் (Literacy Rate) என்பது கடந்த 50 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. தமிழ்நாட்டின் இந்த முன்னேற்றம் என்பது இந்திய ஒன்றியத்தின் சராசரி விகிதத்தைவிட அதிகம். இதற்கு காரணம் நீதிக்கட்சி ஆட்சி முதல் காமராசர் ஆட்சி காலம், பின் தொடர்ந்த திராவிடக் கட்சி ஆட்சிக்காலங்களிலும் சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் விளிம்பு நிலை குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு அரசு செயல்திட்டங்கள் வகுக்குத்தன. அரசுப்பள்ளிகளில் மதிய – சத்துணவு திட்டம், விலையில்லா பாடநூல்கள், குறிப்பேடுகள், வண்ணப்பொருட்கள், கணித உபகரணப்பெட்டி, உலக வரைபடம், புத்தகப்பை, மடிக்கணினி, மிதி வண்டி ஆகிய நலத்திட்டங்கள் மூலம் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்தது.
நலத்திட்டங்களோடு மட்டுமில்லாமல் ஆசிரியர்கள் நியமனமும் கல்வித்தரம் உயர முக்கிய காரணமாகும். எனவே தான் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை இந்திய ஒன்றியத்திலுள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது. இதனை அசோசம் (ASSOCHAM – The Associated Chambers of Commerce and Industries of India) நிறுவனம் ஆய்வில் உறுதி செய்தது.
கல்வித் தரத்தை உயர்த்த அடித்தளமாக விளங்கும் 2009 கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் (RTE Act 2009) இன்றியமையாத கூறாக உள்ள மாணவர் – ஆசிரியர் (PTR – Pupil Teacher Ratio) விகிதாச்சாரத்தை சிதைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு பாஜக-வின் கைப்பாவையாக விளங்கியது எடப்பாடி அரசு. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆரம்பப்பள்ளியில் 30:1 எனவும் நடுநிலைப்பள்ளியில் 35:1 எனவும் உயர்நிலைப்பள்ளியில் 30:1 என்ற விகிதாச்சாரத்தின் படி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் பல ஆண்டுகள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே காலத்தை கழித்தது முந்தைய எடப்பாடி அரசு.
மேலும் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் 814 கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்ததிலும் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கென அறிவிக்கப்பட்ட தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டது முந்தைய எடப்பாடி அரசு. இவ்வாறு பாஜக-வின் ஒத்திசைவோடு ஆட்சி புரிந்த அதிமுக அரசு மாணவர்களின் நலனை பாராமல் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்தை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்ற பல ஆசிரியர் சங்கங்கள் தங்கள் போராட்டத்தின் போதே தெரிவித்தனர். ஆனால் ஆசிரியர்கள் வெறும் பணத்திற்காக மட்டுமே போராடுவதாக மக்களிடத்தில் திசை திருப்பி வழக்கம்போல ஆசிரியர்களை கொச்சைப்படுத்தியது.
கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பே சில ஆண்டுகளாகவே எடப்பாடி அரசு ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தில், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் வகையில் செயல்பட்டது. உதாரணத்திற்கு, உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் கூடுதல் தேவை உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு , பின் கலந்தாய்வின் போது உபரி ஆசிரியர்களை கூடுதல் தேவை உள்ள பள்ளிகளில் பணிநிரவல் (Deployment transfer) மூலம் பணியிடத்துடன் மறுதல் அளிக்கப்படும். பணிநிரவல் முடிந்தப்பின் இருக்கும் கூடுதல் தேவை பணியிடங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்கள் ஏதும் நிரப்பப்படவில்லை. இது அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்ற எண்ணத்தை மட்டுமே மக்கள் மத்தியில் விதைத்தது. ஆனால் கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு எவ்வித முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. 2014-க்கு பிறகு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனமும் செய்யப்படவில்லை.
அங்கன்வாடிகள் – தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுடன் இணைப்பு
2019ல் தமிழ்நாடு முழுவதும் தோராயமாக 20-30% அங்கன்வாடி மையங்களை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியுடன் இணைக்க அரசு ஆணையிட்டது. அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேம்படுத்த தொடக்க பள்ளிகளுடன் இணைக்க முடிவெடுத்த அரசு, அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏதும் ஏற்படுத்தவில்லை. மேலும் ஒரே அறையில் LKG மற்றும் UKG வகுப்புகள் நடைபெற்றது. அவசர அவசரமாக அங்கன்வாடி பள்ளிகளை தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுடன் இணைத்து உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் அங்கன்வாடியில் பணிபுரிய ஆணையிடப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் அரசு அறிவித்த அங்கன்வாடி பள்ளிகளுக்கு உபரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாற்றுப் பணியிலும் (Deputation) ஒரு சில ஆசிரியர்கள் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
அரசுப்பள்ளியில் கேள்விக்குறியாகும் மாணவர் ஆசிரியர் விகிதாசாரம்:
2018-19 கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றாலும் மாணவர்கள் எண்ணிக்கைக் கேற்ப போதுமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தொடக்கநிலைப் பள்ளியில் 2014-க்கு பிறகு ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேலும் உபரி ஆசிரியர்களைக் கொண்டு பகுதி கூடுதல் தேவை பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.
மேலும், கூடுதல் தேவை பணியிடம் நிர்ணயம் செய்யும் போது ஆவணத்தின் அடிப்படையில் மட்டுமே மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் பின்பற்றப்படும். உதாரணத்திற்கு 60 மாணவர்கள் வரை இரண்டு ஆசிரியர்கள் எனில் 61 மாணவர்களுக்கு மூன்றாவதாக நியமனம் செய்யப்பட வேண்டும். முன்பெல்லாம் 61 மாணவர்கள் எனில் ஒரு சில மாணவர்கள், கல்வியாண்டின் இடையே வேறுப் பள்ளிக்குச் செல்லலாம். எனவே, 61 முதல் 70 அல்லது 75 மாணவர்களுக்கு 3வது ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில், எடப்பாடி அரசு பதவி ஏற்பதற்கு வாய்மொழியாகவே கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 90 வரை மாணவர்கள் இருந்தால் மட்டுமே மூன்றாவது ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என்ற நிலை இருந்தது.
இதனால் பல மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் முரண் ஏற்பட்டது. இவ்வாறு கடந்த பா.ஜ.க வின் கைக்கூலியாக செயல்பட்ட எடப்பாடி அரசு மாணவர்கள் கல்வித் தரத்தினை பற்றி சற்றும் பொருட்படுத்தாமல், ஆசிரியர்களின் முழு கோரிக்கைகளையும் மறைத்து சம்பள உயர்வுக்காக மட்டுமே போராடுவதாக ஆசிரியர்களை கொச்சைப்படுத்தியது.
கல்வி என்பது ஒரு இயக்கமாக வேண்டும் என்றும் கல்வியின் நோக்கம் மனிதத் தன்மையை போற்றுவதும், ஞானத்தை வளர்ப்பதும், சமத்துவத்தை நடைமுறைப்படுத்திடவும் ஊக்குவிக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் நம்பினார். அது போல் கல்வி, பகுத்தறிவு சுயமரியாதை ஆகிய மூன்றும் மட்டும் தான் விளிம்பு நிலையில் உள்ள மக்களை முன்னேற்றும் என்று தந்தை பெரியார் முழங்கினார். அதைத்தான் சிதைக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக எடப்பாடி அரசின் மூலம் மேற்கொண்டது. எனவே தற்போது பதவியேற்றுள்ள திமுக அரசு, கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட்த்தின் முக்கிய கூறாக விளங்கும் மாணவர் – ஆசிரியர் விகிதாச்சாரத்தை கடைபிடித்து, கடந்த ஆட்சியினால் நிரப்பப்படாத காலிப்பணியிடங்களையும், மாணவர் – ஆசிரியர் விகிதத்தின் அடிப்படையில் உபரி பணியிடங்களை, கூடுதல் தேவை பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு மீதமுள்ள கூடுதல் தேவை பணியிடங்களையும் நிரப்பினால் மட்டுமே மாணவர்கள் கல்வித் தரம் உயரும்.
மேலும், தொடக்க நடுநிலைப்பள்ளியுடன் இணைக்கப்பட்ட அங்கன்வாடி பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் நடைபெற போதிய உட்கட்டமைப்புடன் இவர்களுக்கான அங்கன்வாடி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணவர் – ஆசிரியர் விகிதாசார அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இல்லையேல், பள்ளிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள சூழலில் மாணவர்கள் கல்வித் தரம் என்பது கேள்வி குறியாகும் என்பதை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.