காமரூன் மக்களை பிளவுபடுத்திய காலனிய மொழிகள்

காமரூன் மக்களை பிளவுபடுத்திய காலனிய மொழிகள்

மொழி என்பது வெறும் எழுத்தோ ஓசையோ அல்ல அது அந்த மக்களின் சுயமரியாதை. மொழிசார் உரிமையினையும், பிற மொழிகள் தம்மொழியின் மீது செலுத்தத் துவங்கும் ஆதிக்கத்தினையும் அறிந்திராத மக்கள் பிற மொழி ஆதிக்கத்தினால்  தம் மொழியின் வீழ்ச்சியையும் அதனைத் தொடர்ந்து வாழ்வாதாரத்தினையும் நிலத்தினையும் ஏன் மானத்தைக்  கூட துறந்து வாழவேண்டியிருக்கும். வரலாற்றில் மொழி சார் பிரச்சனைகளை தொடர்ச்சியாக கண்டுகொண்டிருக்கும் நாம் இது போன்ற நிலையில் தள்ளப்பட்டு நிற்கும் எளிய  மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டியதன் தேவை நமக்கு இருக்கிறது.

மொழி எதுவாக இருப்பினும் அது அழிக்கப்படும் பொழுது அதன் பின்னணியில் ஒரு வாழ்வியலும் அவர்களின் வரலாறும் அழிக்கப்படும் என்பதற்கு நாமே இங்கு ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறோம். கேமரூனியன் நாட்டின் பழங்குடி இன மக்கள் பேசும் பல மொழிகளில் ஒரு மொழியில் உள்ள வார்த்தைகள் தமிழ் மொழியைப் போன்று இருப்பதாக சில ஆண்டுகளாக ஒரு காணொளி அதிகமாகப் பகிரப்பட்டது. அதில் அவர்கள் பயன்படுத்துகின்ற சொற்கள் அதன் அர்த்தத்தோடு தமிழ் மொழியுடன் ஒத்துப் போகின்றன. தொன்மையான மொழிகள் அனைத்திற்கும் ஒரே வகையான இசைவொலிகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை தான். இம்மக்கள் 60 ஆண்டுகளாக மொழி சார் உரிமை பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் இவர்களது பிரச்சனை கொஞ்சம் தனித்துவம் வாய்ந்தது.

இந்த கேமரூன் இன மக்கள் வடமேற்கு மற்றும் தென்மேற்கு என இரு மொழி பிரதேசங்களாகப் பிரிந்து இருக்கின்றனர். இவர்களில் சிறுபான்மையினர் ஆங்கிலம் பேசும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவும் மற்றைய நிலப்பரப்பில் வாழ்பவர்கள் பிரெஞ்சு பேசும் மக்களாகவும்  இருக்கின்றனர். இந்த ஆங்கிலம் பேசும் நிலப்பரப்பு மக்கள் இவர்கள் தங்களை அம்பசோனியர் (Ambazonia) என்று அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் மொழி சார் பிரச்சினைகளை சுமார் 1960-களின் தொடக்கத்திலிருந்தே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்பொழுது இவர்கள் தங்கள் மொழியின் மீது பிரெஞ்சு மொழி பெரும்பான்மை அரசு ஆதிக்கத்தைச் செலுத்துவதை எதிர்த்து 5 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது  தீவிரமாகியிருக்கும்  போராட்டம் 2016-ஆம் ஆண்டு துவங்கியது. அன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் கல்வி, வாழ்வாதாரம் என அனைத்தும் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு மொழி பெரும்பான்மை காமரூன் அரசு, அம்பசோனியர்களின் அலுவல் மொழியான ஆங்கிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதோடு, நியாயப்படி கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகளும் கல்வியும் மறுக்கப்படும் நிலையை உருவாக்கி இருக்கிறது. துவக்கத்தில் மொழி சார் சீர்திருத்தக்  கோரிக்கையில் ஆரம்பித்த இப்போராட்டம் தனி நாடு கோரிக்கையில் வந்து நின்று கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்கான நாட்டிற்கு அம்பசோனியா என்று பெயர் வைத்து தனியாக ஒரு கொடியினையும் வடிவமைத்துக் கொண்டுள்ளனர்.

பல நூறு மக்கள் உயிரிழந்து, பல லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளாக வெளியேறிய நிலையிலும் மக்கள் உரிமைக்குரலுக்குச் செவி சாய்க்காத கேமரூனிய அரசினை 39 ஆண்டுகளாக ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் பவுல் பியா (Paul Biya) பிரென்ச் மொழி பிரதேசத்தைச் சேர்ந்தவர். பிரான்ஸ் நாட்டு அரசு பவுல் பியாவின் கேமரூனிய அரசுக்கு ஏகோபித்த ஆதரவை தெரிவித்து வருகிறது.

போராடும் மக்களை வன்முறையால் ஒடுக்கும் ராணுவத்துக்கு ஆயுதங்களும் ராணுவப் பயிற்சியும் தொடர்ச்சியாக பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து தான் கிடைத்துவருகிறது. கேமரூன் நாட்டின் அந்நிய முதலீடுகளில் பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது. இரண்டாமிடத்தில் இருப்பது அமெரிக்கா. எண்ணெய், மரம், உள்கட்டுமானம், தொலைத்தொடர்புத் துறை, போக்குவரத்து, வங்கி, என அனைத்துத் துறைகளிலும் இவ்விரு நாடுகளின் முதலீடும் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2017 ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் சபைக்கு அதிபர் பால் பியா வந்த போது அந்த அவையினை அம்பசோனிய மக்கள் முற்றுகையிட்டனர். இப்பிரச்சினை உலகளாவிய கவனத்தை ஈர்த்தது அதன் பின்னரே.

லண்டனில் நடைபெற்ற போராட்டம்

2016-ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் ஆதிக்கத்தினை எதிர்த்து காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஆசிரியர்களும் மாணவர்களும் இறங்கியிருக்கிறார். தங்களின் பகுதியை அம்பசோனியா நாடென அறிவித்துக் கொள்ள உரிமை கோரிய இம்மக்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மட்டுமே தெரிந்த ஆசிரியர்களை அரசு அனுப்புவதை நிறுத்த வேண்டுமென கோரியே போராட்டத்தினை தொடங்கினர். நல்ல தகுதியுடையவர்களாக இருந்தும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தும் வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக அம்பசோனிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர். வேலை வாய்ப்புகளில் பின்னடைவுக்குப் பிரெஞ்சு மொழி கல்லாமை ஒரு காரணமாகக் காட்டப்படும் போக்கை எதிர்த்து மாணவர்கள் பெருமளவில் போராட்டத்தில் குதித்தனர்.

அம்பசோனியா வழக்கறிஞர்களும் தங்களுடைய நீதிமன்றங்களுக்குப் பிரெஞ்சு மட்டுமே அறிந்த பிரெஞ்சில் வழக்காடும் வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தினை துவங்கித் தொடர்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் பகுதிகளில் வழக்காடும் ஆங்கில பொதுச்சட்டம் புரிவதில்லை என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. இதனை இவ்வாறே தொடர விட்டால் நீதிமன்றங்கள் பிரெஞ்சு மொழி ஆதிக்கம் பெரும் இடங்களாக மாறுமென்று கூறி நீதிமன்றங்களைப் புறக்கணித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒரு பொதுவான அங்கீகாரமும் மதிப்பும்  இரு மொழிப் பிரதேசங்களுக்கும் கிடைக்க வேண்டுமெனில் 1960-களில் ஆரம்பிக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்ட கூட்டாட்சி அரசியலமைப்பு சட்ட வரைவினை   துவங்க வேண்டியதன் அவசியம் உள்ளதாகவும், அதுவே  ஒரே தீர்வு என்று  கூறுகின்றனர் வழக்கறிஞர்கள். தற்போது நடந்துவரும் இப்போராட்டங்கள் வழக்கறிஞர்களும் ஆசிரியர்களும் 2016-ஆம் ஆண்டு நடத்திய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்தே துவங்கியது.

பிரான்ஸ்-ஆங்கிலேயே காலனியாதிக்கத்தில்

கேமரூன் குடியரசு மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நாடு. அதன் மேற்கில் நைஜீரியாவும், வடகிழக்கில் சாட் (CHAD) நாடும், கிழக்கில் மத்திய ஆப்ரிக்கா குடியரசும், தெற்கில் காங்கோவும் உள்ளது. சுமார் 23 கோடி மக்கள் தொகையினை கொண்ட இந்நாடு 1960-களில் அப்போது காலனி ஆட்சி  புரிந்து வந்த பிரான்ஸ் மற்றும் ஆங்கிலேயே அரசிடமிருந்து விடுதலை பெற்றது. அதன் பிறகு இவ்விரு அரசுகள் தனித்தனியே ஆட்சி செய்த பிரதேசங்களில் அலுவல் மொழியாக இருந்த பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தை அப்படியே தங்களது அலுவல் மொழியாக இரு பிரதேசங்களும் ஏற்றுக்கொண்டன. பிரென்ச் மற்றும் ஆங்கிலம் கேமரூன் மக்களுக்கு காலனியாதிக்க மொழி. அவ்வளவே. தற்போதைய காமெரூன் நிலப்பரப்பில் மக்கள் கற்காலத்தில் வாழ்ந்ததற்குரிய தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய தொல்பழங்குடிகளான இவர்கள் பல்வேறு பழம்பெரும் மொழிகளை தங்கள் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றார்கள். 55 ஆசிய ஆப்ரிக்கா மொழிகளுக்கும் 2 நிலோ சாஸறன் மொழிகளுக்கும், 173 நைஜீரியா காங்கோ மொழிகளுக்கும் தாயகம்  இந்த கேமரூன்.

ஜெர்மானிய காலனியாதிக்கத்தின் போது

1860-களிலிருந்தே வணிகத் தேவைக்காக கேமரூனை தன்வயப்படுத்த ஆரம்பித்திருந்தது ஜெர்மனி. 1880-களில் கேமரூனை கைப்பற்றிய ஜெர்மானிய அரசு மக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஜெர்மானிய வணிக நிறுவனங்களைக்கொண்டு உள்ளூர் நிர்வாகத்தை மேற்கொண்டது.  ஜெர்மானிய  பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்தவும் காலனிய விரிவாக்கத்திற்காகவும் ஆப்ரிக்க மக்களின் உழைப்பைச் சுரண்டி ரப்பர், பாமாயில், கோக்கோ மற்றும் வாழைத் தோட்டங்களைப் பயிரிட்டு லாபம் பார்த்தது. ஆனால் முதல் உலகப்போரில் தோல்வியைத் தழுவிய ஜெர்மனி 1919-ல் காமெரூனை பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. 1884-லில் இருந்தே ஜெர்மனி தனது காலனிய நாடாக காமெரூனை அறிவித்து வியாபாரம் செய்துவந்த போதிலும் அது மொழிசார் ஆதிக்கத்தினை அங்கே நிகழ்த்தவில்லை. கேமரூனில் ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றார்கள். அது நிகழ்ந்தது பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் தான்.

1919இல் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசிற்கு உட்பட்ட கேமரூன் நாடு.

1961 வரையில் காலணிய ஆட்சியிலிருந்த பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசு வெளியேறியவுடன் நைஜீரியாவிடமோ (நைஜீரியாவும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்து 1960 ஆம் ஆண்டு விடுதலைப் பெற்றது) அல்லது  பிரெஞ்சு பேசும் கேமரூன் பிரதேசத்திடமோ இணைந்து கொள்ளும் முடிவினை எடுக்க ஆங்கிலம் பேசும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அம்பசோனியர்கள் பிரெஞ்சு பேசும் காமெரூனியர்களுடன் இணைந்து கொள்ளும் முடிவை எடுத்தனர். வெறும் 20% இருந்த அவர்கள் அலுவல் மொழி அடிப்படையில் சிறுபான்மையாகினர். மொழிப் பிரச்சனைகள் அன்றிலிருந்து துளிர் விட ஆரம்பித்தது.

இன்றைய அம்பசோனியர்களின் போராட்டங்கள் தீவிர நிலையினை அடையத் துவங்கியவுடன் அதை கட்டுக்குள் கொண்டுவர இணையத்தை முடக்கியது அரசு. இணையம்  முடக்கப்பட்ட நிலையில் மக்கள் தொடர்ந்து 5 வருடங்களாகத் தனித்தீவாக இருந்து கொண்டு போராடி வருகின்றனர். கேமரூன் அரசு அரசியல் மற்றும் சிவில் உரிமை ஆணையத்திடமும் உலகளாவிய மனித உரிமை ஆணையத்திலும் கையெழுத்திட்டிருக்கும் நிலையிலும் இவ்வாணையங்கள் காக்கின்ற கருத்துரிமை மற்றும் தொலைத்தொடர்பு உரிமையினையும், மின்வெளி தகவல் பரிமாற்ற உரிமையினையும்  ஆம்பசோனியா மக்களிடம் மறுத்து வருகிறது அந்நாட்டு அரசு.

நைஜீரிய எல்லையில் அகதிகளாக

சீர்திருத்தக் கோரிக்கைகள் தனி நாட்டிற்கான விடுதலை கோரிக்கையாக மாறியதற்கு அரச வன்முறைகளே காரணம். இந்தப் பிரச்சனையில்  சுமார் 7 லட்சம் பொது மக்கள் தம் வாழ் நிலத்தில் இருந்து நைஜீரியாவிற்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். சுமார் 63,800 பேர் நைஜீரிய எல்லையில் முகாமிட்டு வாழ்ந்துக்  கொண்டிருக்கின்றனர். வாழவும் உணவு உண்ணவும் தகுதியற்ற இடங்களில் நைஜீரியா அரசு அகதிகளைத் தங்க வைத்திருக்கிறது. அங்கே ஆண்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனியே சுமார் 7 கி மீ இடைவெளியில் முகாமிடப்பட்டுப்  பிரித்துத் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கேமரூனிய பாதுகாப்புப் படைகள் பிரிவினைவாதிகள் என்று கூறி இளைஞர்களையும் பொதுமக்களையும் தாக்குவதையும் கொலை செய்வதையும் நிறுத்தாவிட்டால் விடுதலைக்காக வன்முறையை தங்கள் கையிலேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம் எனவும் இளைஞர்கள்  இயற்கையின் தற்காப்பு விதிகளுக்கு உட்பட்டுத் திருப்பி அடிக்கும் நிலை வரும் எனவும் பிரிவினைக்கோரும் தலைமையிடமிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அரசு அதை ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. அம்பசோனியர்களுக்கு மொழி பிரதிநிதித்துவம் தருவதற்கான எந்த நடவடிக்கையோ அதற்கான பிரயத்தனங்களோ எடுக்கப்படவில்லை. மாறாக வன்முறையைக் கட்டவிழ்த்தது. போராட்டக்காரர்கள் எதிரிகளின் ஆயுதங்களையே எடுக்க வேண்டியதாகியது. இன்றைய நிலையில் அம்பசோனியர்களில் 30 ஆயுதங்கள் தாங்கிய குழுக்கள் உருவாகியிருக்கின்றனர்.

இந்த மாதத்துடன் பிரிவினை கோரிக்கை 5 வருடங்களாக ஆகியுள்ள நிலையில் விடுதலை கோரிக்கை செயல்பாட்டாளர்கள் பல பேர் காவல் படையினால் சுட்டுக் கொள்ளப்பட்டும் தாக்குதலுக்கு உள்ளாகியும் இறந்து போயுள்ளனர். பொதுமக்கள் மீது அரசு கட்டவிழ்த்த வன்முறையை பொது இணைய தளங்களில் பதிவிட்டு ஆதரவு தேடி வந்த அம்பசோனியர்களின் இணையமும் தொலைத்தொடர்பும் பல ஆண்டுகளாகவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருபக்கம் அரசு எந்தவிதத்திலும் வளைந்து கொடுக்காமல் வன்முறையைக் கட்டவிழ்த்து அதன் போக்கில் சென்று கொண்டிருக்க உரிமைக்கான பிரச்சனைகளின் மத்தியில் ஒரு பெரும்பான்மை மக்கள் உணவின்றியும் இருக்க நிலையான இடமின்றியும் உயிருக்கு உத்திரவாதமின்றியும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  பொது மக்களின் கோரிக்கைகளுக்கு  இன்றளவும் தீர்வு ஏற்படாமல்  இன்றளவும் போராட்டம் தொடர்கிறது. ஆனால் இதிலிருக்கும் முரன் என்னவெனில் ஆதிக்கம் செலுத்தும் அரசுக்கு உட்பட்ட பிரன்ச் பகுதி மக்களுக்கு பிரென்ச் மொழி அவர்களது தாய் மொழியில்லை, ஒடுக்கப்படும் பகுதியினருக்கும் ஆங்கிலம் அவர்களது தாய் மொழியில்லை என்பதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »