சே குவேராவிற்கு உதவியதால் கொல்லப்பட்ட பொலிவிய தொழிலாளர்கள்

சே குவேராவிற்கு உதவியதால் கொல்லப்பட்ட பொலிவிய தொழிலாளர்கள்

ஜூன் திங்கள் 24-ம் நாள் சான் யுவான் படுகொலையின் (San Juan massacre) நினைவுநாள். இது பொலிவிய மக்களைப் பொறுத்தவரையில், இருபதாம் நூற்றாண்டின் இராணுவ காலகட்டத்தின் மிகக் கொடூரமான செயல்களில் ஒன்றாகும். 1967-ஆம் ஆண்டு, வடக்கு போடோசியின் (North Potosi) லல்லாகுவா (Llallagua) நகரின் நள்ளிரவில், அமெரிக்க கைப்பாவையான சர்வாதிகாரி பரியன்தோசின் (Barrientos) கொடுங்கோன்மையை பொலீவியா மக்கள் சந்தித்தனர். அதில் 27 பேருக்கு மேல் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.

அன்று பொலிவியாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த சே குவேராவின் கொரில்லா இராணுவப்படைக்கு இவர்களது தொழிற்சங்கம் பொருளுதவி செய்து வந்ததற்கான தண்டனைதான் இது.

படுகொலை செய்யப்படுவாதற்கு முன்னால் கொண்டாட்டதிலிருக்கும் தொழிலாளர்கள்

ஆண்டுதோறும் ஜூன் 23 இரவிலிருந்து 24ம் தேதி அதிகாலை வரை கொண்டாடப்படும் பொலிவிய மக்களின் பாரம்பரிய பண்டிகை தான் சான் யுவான். அந்த இரவில் தான் அக்கொடூர தாக்குதல் நடந்தேறியது. அந்த ஆண்டின் மிகக் குளிர்ந்த இரவான அன்று, பொலிவிய மக்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் நெருப்பேற்றி அக்கம்பக்கத்தினருடன் இலவங்கப்பட்டைத் தேநீர் மற்றும் சிங்காணி எனப்படும் உள்ளூர் மதுவுடன் கொண்டாடிக் களிப்பர்.

லல்லாகுவா நகரானது சிக்லோ 20 (Siglo XX) மற்றும் கடாவி (Catavi) சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் வாழ்விடமாயிருந்தது. அந்த இரவின் கொண்டாட்டத்தை ஒட்டி, அப்பகுதியின் உள்ளூர் வானொலி நிலையங்களான ‘லா வோஸ் டெல் மினெரோ’ (La Vos Del Minero) மற்றும் ‘ரேடியோ பியோ XII’ அதிகாலை 2 மணிவரை தங்கள் ஒலிபரப்பை நீட்டித்து பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தன. பெரும்பாலானோர் உறங்கச் சென்றுகொண்டிருந்த அதிகாலை 4 மணியளவில் ஊருக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள், மக்களை நோக்கி கண்மூடித்தனமாக தாக்கத் துவங்கினர்.

படுகொலைக்கு உத்தரவிட்ட சர்வாதிகாரி பரியன்தோஸ்

கண்ணில் படும் அனைவரையும் கொன்று, தொழிற்சங்கக் கூடம் மற்றும் வானொலி நிலையங்களை கைப்பற்றுமாறு அவர்களுக்கு கட்டளைகள் வழங்கப்பட்டிருந்தன. மூர்க்கத்தனத்துடன் ஊருக்குள் நுழைந்த வீரர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டே, தப்பியோடி தஞ்சம் புகுந்த மக்களின் வீடுகளுக்குள் ஜன்னல்கள் வழியாக வெடிகுண்டுகளை வீசினர்.

சுரங்கத் தொழிலாளர்களின் வானொலி நிலையமான ‘லா வோஸ் டெல் மினெரோ’வை (La Voz del Minero) பாதுகாக்கும் முயற்சியிலிருந்த பொதுவுடைமைக் கட்சிப் போராளியும் சிக்லோ XX சுரங்கத் தொழிலாளர் சங்கத்தலைவருமான ரோசென்டோ கார்சியா (Rosendo Garcia) சுட்டுக் கொல்லப்பட்டார். குறைந்தது 27 பேர் கொல்லப்பட்ட இக்கொடூர நிகழ்வின் சரியான பலி எண்ணிக்கை இதுவரையிலும் உறுதிபடுத்தப்படவில்லை. பலத்த காயமடைந்த சுமார் 70 பேரில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே. அதே எண்ணிக்கை அளவிளானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்டவர்கள்

ஊரில் இல்லாத கொரில்லா படையினரிடமிருந்து தங்களைக் காப்பற்றிக் கொள்வதற்காகவே சுட்டதாக அப்படுகொலையை நியாயப்படுத்தியது அரசு. பின்னணியில் அமெரிக்காவின், குறிப்பாக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் கூட்டணியுடன் சே குவேராவின் விடுதலைப்படையை எதிர்த்து போரிட்டு வந்தவர்களுக்கு, அமெரிக்காவும் ஆதரவாக நின்றது.

அமெரிக்க பின்புலத்தால் இயக்கப்பட்ட சர்வாதிகாரம், எந்தவித பாதுகாப்புமற்று இருந்த மக்களின் மீது இரக்கமற்ற தாக்குலைத் தொடுத்து இந்தப் படுகொலையை நடத்தியது. இத்தகைய கொடுங்கோலாட்சிகள் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதன் சான்றாக நிற்கும் இந்நாளில் பொலிவிய மக்கள் நினைவேந்துகின்றனர்.

படுகொலையானவர்களுக்கு இறுதிசடங்கு

இத்துயர நிகழ்வை நினைவுகூர்ந்த தற்போதைய பொலிவிய அதிபர் லூயிஸ் ஆர்சே (Luis Arce), “நாம் இன்று முன்னாள் அதிபர் ரெனே பரியன்தோசால் அனுப்பப்பட்ட படை, சிக்லோ XX மற்றும் கட்டாவி சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டு வீழ்த்திய சான் யுவான் படுகொலையை நினைவுகூருகிறோம். இப்படுகொலையானது பலரை கொன்றது, பலரை படுகாயப்படுத்தியது. சே குவேராவை ஆதரித்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு துயரமான அத்தியாயமிது. நம் ஈகியருக்கு புகழ் வணக்கம்!”, என்று தனது அதிகாரப்பூர்வ தளங்களின் வழியே குறிப்பிட்டார்.

இப்படுகொலை குறித்து தரிஜாவைச் சேர்ந்த பொலிவிய பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினரும் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகருமான நிலோ சொருக்கோ (Nilo Soruco) பாடிய பாடல், காலமெல்லாம் இக்கோரச்சம்பவத்தைத் தாங்கி நிற்கும். இப்பாடலை எழுதிய சில ஆண்டுகளில் அமெரிக்க கைப்பாவையான முன்னாள் அதிபர்  ஹியூகோ பன்சரின் (Hugo Banzer) அரசால், சொருக்கே சிறையிலடைக்கப்பட்டு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தி நைட் ஆஃப் சான் யுவான் என்ற ஒரு திரைப்படம் 1971-இல் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »