தமிழீழ அகதிகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சார்ந்த 9500 அகதிகளின் நிரந்தரக் குடியிருப்பு உரிமைக் கோரிக்கைக்கான போராட்டம் ஆஸ்திரேலியாவில் கடந்த 100 நாட்களாக நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் வசிக்கும் அகதிகளின் தன்னெழுச்சியான முன்னெடுப்பில் அங்கு 12 வருடங்களுக்கும் மேலாக வசிக்கும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவாக 24 மணி நேரப் போராட்டமாக இது நடந்து கொண்டிருக்கிறது.
நிரந்தரக் குடியிருப்பு உரிமை மறுக்கப்படுவதால் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதும், மருத்துவ பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காப்பீடு போன்ற அத்தியாவசிய உரிமைகள் மறுப்பும் நடக்கிறது. ஆஸ்திரேலியாவிற்குள் வசிக்கும் தங்கள் உறவுகளை சந்திக்கும் பயணங்களுக்கு பல சட்ட நெருக்கடிகள் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள். மேலும் ஆஸ்திரேலிய வகுத்துள்ள கடுமையான எல்லைக் கொள்கை மூலம் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டு மனுஸ் மற்றும் நவுரு தீவுகளில் தடுப்புக் காவலில் அடைக்கப்படுகிறார்கள். அகதிகளை விட புகலிடக் கோரிக்கையாளர்கள் மோசமான வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்.
சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறவர்கள் அகதிகள் என அழைக்கப்படுகிறார்கள். சர்வதேச பாதுகாப்பிற்காக விண்ணப்பிப்பவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆவார்கள். ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கு குறுகிய கால விசாவாக பிரிட்ஜிங் விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவின்படி, 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேயாவின் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியுரிமைக் கோரும் அகதிகளின் கோரிக்கைகளை 12 ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டிருக்கிறது.
2023-24 ஆண்டுகளில் 27,229 பேர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்த அகதிகளில் 18,507 பேருக்கு மறுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 2023-ல், பிரதமரான அல்பனீஸ் தலைமையிலான அரசாங்கம், தற்காலிக பாதுகாப்பு விசா (TPV), பாதுகாப்பு புகலிடத்திற்கான நிறுவன விசா (SHEV) ஆகியவற்றில் உள்ள 19,000 அகதிகளை நிரந்தரக் குடியிருப்பாளராக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றது. ஆனால் இந்த வருடம் அறிமுகப்படுத்திய fast Track என்ற அமைப்பினால், ‘எல்லை இறையாண்மையாக்கான நடவடிக்கை‘ என்ற பெயரில், 2013-க்கு முன்பு இங்கு வந்து தற்காலிக விசா பெற்றிருப்பவர்களின் வழக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குழப்ப நிலையில் இருக்கின்றனர். மேலும் புதிய குடிவரவு சட்டத்தின்படி, அவர்கள் நாடு கடத்தப்படும் அச்சத்திலும் உள்ளனர்.
அகதிகள் தொடர்பான சர்வதேச விதிகளுக்கான ஐ.நா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நாடு ஆஸ்திரேலியா. அதன்படி இனம், மதம், தேசியம் போன்ற காரணங்களால் தங்கள் சொந்த நாட்டில் அடக்குமுறையை சந்தித்து அகதியாக வந்தவர்களுக்கு புகலிடம் வழங்க வேண்டும். அதன்படி, அவர்களுக்கு 4 ஆண்டு விசாவிற்கு உரிமை அளிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் முழுமையாக 2 ஆண்டுகள் குடியிருந்த பின்பு விண்ணப்பித்தால் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும் என்கிற சட்டம் இருக்கிறது.
இனவெறி இலங்கை அரசு தமிழர்கள் மீது 2009-ல் நடத்திய இனப்படுகொலைப் போரினால், பெருமளவிலான ஈழத் தமிழர்கள் அகதிகளாக இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். போருக்குப் பின்பும் சிங்களப் பேரினவாத அதிகார மட்டங்கள், தமிழர்களை விசாரணை என்கின்ற பெயரில் பிடித்துச் சென்றுகடுமையான சித்திரவதைகளும், பாலியல் வன்கொடுமைகளும் செய்தன. இதனை ஐ.நா வின் மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அறிக்கை (ITJP) அமைப்பும் அம்பலப்படுத்தி ஆவணப்படுத்தி இருக்கிறது. இந்த துன்புறுத்தல்களுக்கு அஞ்சியும் பலர் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இலங்கை இனவெறி அரசு நடத்திய போரினாலும், போருக்குப் பின்பான சித்திரவதையாலும், 2009 -லிருந்து 2013 வரை மட்டுமே 4500 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்றிருக்கின்றனர். 1983-ல் மனிதாபிமானத்துடன் குடியேற்ற விண்ணப்பங்களை ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி செயல்படுத்தியதாக கூறினாலும், பல கோரிக்கைகள் செயலாக்கம் பெறாமல் தாமதமானதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள். 2013-க்குப் பிறகு அமைந்த லிபரல் ஆட்சி, மேலும் அகதிகளை நீண்ட கால நிச்சயமற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளது. படகில் வந்தவர்களை திருப்பி மீண்டும் இலங்கைக்கே அனுப்பியிருக்கிறது. இரு நாட்டு உறவின் பாதிப்பாக தமிழீழ அகதிகளை நினைத்து திருப்பி அனுப்பும் வேலையை செய்கிறது.
“இலங்கையிலிருந்து அடைக்கலம் தேடி வந்த தமிழீழ அகதிகள் 42 பேரை 2013-ல் ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்பியது. இதற்காக போடப்பட்ட வழக்கில், ஆஸ்திரேலிய நீதிமன்றம், புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புபவர்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது”. 2014- ஜூலையில் மீண்டும் 153 புகலிடம் கோரி வந்தவர்களை திருப்பி அனுப்பியது. இது குறித்து அன்றைய “ஆஸ்திரேலிப் பிரதமர், இலங்கையில் போருக்குப் பின்னர் மனித உரிமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் திருப்பி அனுப்பியதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. ஐ.நா இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது“.
குடியுரிமை விண்ணப்பங்களை முடக்குவது, தற்காலிக பாதுகாப்பு விசாக்களை அறிமுகப்படுத்துவது மற்றும் புதிய ஆங்கில மொழி சோதனைகள் போன்ற பிற தடைகளை அறிமுகப்படுத்தி, சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் உள்ள விதிகளை கடைபிடிப்பதை மறுத்து, அகதிகள் குடியுரிமை பெறுவதை கடினமாக்கி இருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. 12 வருடங்களாக நிரந்தரக் குடியுரிமை மறுக்கப்படும் நிலையில் தான், அகதிகள் இந்த போராட்டத்தை கையிலெடுத்திருக்கின்றனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட, 15 வயதான சிபி என்ற மாணவர் பேசும் போது, குடியுரிமை இல்லாமல் பல்கலைக்கழகத்தில் கட்டணம் மறுக்கப்படுவதால், தனது பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் இருப்பதாகப் பேசுகிறார். அவரும், அவர் சகோதரரும் நாடு கடத்தப்படும் அச்சத்தில் இருப்பதாகவும், அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் பேசினர். இவ்வாறு தங்களின் நிச்சயமற்ற வருங்கால நிலையில் உள்ள அச்சத்தை 100 நாட்களாக பலரும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கும் அகதிகளில் பெருவாரியானவர்கள் ஈழத் தமிழர்கள். தமிழீழத்திலிருந்து 2012-ல் ஆஸ்திரேலியாவில் அகதியாக வந்து மக்களோடு போராட்டத்தில் ஒன்றாக நின்று, போராட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்ற மனோ யோகலிங்கம் என்பவர் தீக்குளித்து இறந்திருக்கிறார். தன் மரணமாவது அகதிகளுக்கு விடிவைத் தர வேண்டும் என்கிற எண்ணத்தில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் மூன்று பேர் இந்த நூறு நாட்களுக்குள் அகால மரணம் அடைந்துள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியா – இலங்கையின் நட்புறவின் ஆழம் காரணமாக, நிரந்தரமற்ற குடியிருப்பு நிலை குறித்து தமிழ் அகதிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். தாங்கள் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை போன்ற இடங்களுக்கு நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்படக்கூடாது என்பதையும் வலியுறுத்தி ஆகஸ்ட் 31, அன்று 500 க்கும் மேற்பட்ட அகதிகள் சிட்னியில் பேரணி நடத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய அரசிடம் இருந்த வேறெந்த சிறப்புரிமையையும் கோரவில்லை, நிரந்தரக் குடியுரிமையே கேட்கிறோம் என்பதையே வலியுறுத்துகின்றனர்.
நூறு நாட்களை எட்டியிருக்கும் இந்த போராட்டம் ஆஸ்திரேலிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 25 -க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய மந்திரிகள் இம்மக்களின் பிரச்சனைக்கு சரியான தீர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பல அரசியல் ஆளுமைகள், செயல்பாட்டாளர்கள், மந்திரிகள் இந்தப் போராட்டக் களங்களில் நேரடியாக இணைந்து இம்மக்களின் போராட்டத்திற்கான ஆதரவு குரல்களை எழுப்பி உள்ளனர்.
அரசியல் ரீதியான ஆதரவுகளைக் கடந்து, போராட்டம் நடைபெற்ற களங்களின் அருகிலுள்ள மக்கள், போராட்டக்காரர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்றனர். உணவு, தேநீர், தண்ணீர் வழங்குவது என பல உதவிகள் செய்திருக்கின்றனர். அகதிகளின் உரிமைப் போராட்டத்திற்கு ஆஸ்திரேலியப் பொது மக்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இத்தனை ஆண்டு கால நிராகரிப்பு புறக்கணிப்புக்கள், இழப்பிற்கு பிறகு ‘இனி இழப்பதற்கு ஏதுமில்லை‘ என்ற சூழலில் தான் இந்தப் போராட்டத்தை இம்மக்கள் தொடங்கி இருப்பதாகவும், நூறு நாட்களுக்குப் பிறகு போராட்டத்தின் முறைகளை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன் அங்கமாக, “வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதிக்கு பிறகு நிரந்தர குடியுரிமை கோரிக்கையை முன்வைத்து தொடர் பிரச்சாரங்கள், முற்றுகைப் போராட்டங்கள், ஊடக செயல்பாடுகள், அரசியல் பரப்புரைகள் என்று தொடர் செயல்பாடுகளில் ஈடுபட போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்”. இத்தகைய சூழலில் தான் தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச் செல்வதில் புலம்பெயர் தேசங்களின் பங்களிப்புகளையும் ஆதரவுகளையும் கேட்பதாக, போராட்டத்தை முன்னின்று நடத்துபவரில் ஒருவரான தோழர். அரண் மயில்வாகனம் கூறுகிறார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலகட்டத்திலிருந்து இதுவரை சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கிய வரலாறு கொண்டதென ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகின்றது. இங்கு ஒன்றரை லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பல துறைகளிலும் பணியாற்றி வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். சமூக ஈடுபாடு, வணிகம், தன்னார்வத் தொண்டு போன்று பலவற்றிலும் ஈடுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளனர். ஆஸ்திரேலியா வளர்ந்த நாடான தகுதியைப் பெற்றிருப்பதற்கு, அந்நாட்டில் அகதிகளாக குடியேறிவர்களும் முக்கியக் காரணம்.
இனவெறி இலங்கையின் இனப்படுகொலைப் போரினால் தமிழ்நாட்டை விட தமிழீழ அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடி பெயர்வதையே விரும்பினர். இந்தியாவின் அரசுகளும், இந்தியப் பார்ப்பனிய அதிகார வட்டமும் தமிழீழ அகதிகளுக்கு எந்த உரிமைகளும் கிடைக்கச் செய்யவில்லை. இதுவரை இலங்கை அகதிகளாகவே வாழ்கின்றனரே தவிர குடியுரிமை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டு அரசின் சில சலுகைகள் தவிர வேறெதுவும் கிடைக்கப்படவில்லை. தடுப்பு முகாம் என்கிற பெயரில் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சித்திரவதைக் கூடங்களில் பல்லாண்டுகள் அடைத்து வைத்திருக்கின்றனர். அண்டை நாட்டு குடிமக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வரத்துடித்த மோடி அரசும், தமிழீழ தமிழர்களை அதில் சேர்க்கவில்லை. இந்தியா, ஐ.நா-வின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வல்லாதிக்க அரசுகளின் இராணுவ, வர்த்தக நலன்களுக்காகத் திணிக்கப்படும் போர்களினால் அகதிகளாக்கப்படுபவர்களை அரவணைக்கும் நாடாக இருந்தது ஆஸ்திரேலியா. ஆனால் காலப்போக்கில் அதன் அரசியல் மாற்றங்கள் இறுகிப் போயிருக்கிறது. ஐநாவின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அகதிகள் போராடுகின்றனர். தங்களுக்கான ஆதரவை உலகத் தமிழர்களிடம் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு ஆதரவளித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு உறுதுணையாக நிற்பது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும்.