தமிழ்த்தாய் வாழ்த்துக்கான மரியாதை: பார்ப்பன திமிருக்கு எதிர்வினை
தமிழ் தாய் வாழ்த்து இறை வணக்க பாடல், அதனால் அதற்க்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் ஒரு நீதிபதி கருத்து தெரிவித்திருந்த நிலையில் நேற்று (17-12-21, வெள்ளியன்று) “தமிழ்த்தாய் வாழ்த்து, மாநிலப் பாடல்” என்று தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்.1037 வெளியிட்டிருக்கிறது. இது வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருக்கிறது.
அதாவது,
1. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
2. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
3. பொதுநிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைவட்டுக்களைக் கொண்டு இசைக்கப்படுவதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் 55வினாடிகளில் முல்லைப்பாணியில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்பட வேண்டும்.
இந்த வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி அன்னைத்தமிழின் பெருமையை பொதுத்துறை மற்றும் தனியார்துறை அலுவலகங்கள் மேன்மையுறச் செய்ய வேண்டுமென்று அந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த” என்ற பாடல் பாடப்பட வேண்டுமென்ற கோரிக்கை கரந்தை தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 1913ஆம் ஆண்டிலிருந்தே வைக்கப்பட்டு வந்தது. அதன்படி, 1970ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் இனி தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமென்று அறிவிப்பு செய்ததோடு இதற்கான அரசாணையை 1970 நவம்பர் 23ஆம் தேதி வெளியிட்டார்.
இப்படிப்பட்ட நடைமுறை இருக்கிற சூழலில் சமீபகாலமாக ஆதிக்க மனப்பான்மையோடு சென்னை ஐ.ஐ.டி. போன்ற அரசு நிறுவனங்கள், தமிழகத்தில் இருக்கும் சங்கரமடத்தின் பீடாதிபதி சங்கராச்சியார், அதிகாரம் தங்களிடமிருகிறது, தங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்ற ஆதிக்க நினைப்பில் இருப்பவர்கள் சிலர் வேண்டுமென்றே தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்றாமலும் இருந்து வருகின்றனர்.
உதாரணமாக, 1959ல் தமிழக அரசு வழங்கிய 250 ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் சென்னை ஐ.ஐ.டி.யில், கடந்த மாதம் நவம்பர் 20ஆம் தேதி நடந்த 58ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. இதை பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்தனர். தமிழ்நாடு அரசின் உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இனி வரும் காலங்களில் சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடப்படுவதை உறுதி செய்யுமாறு ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், பட்டமளிப்பு விழாவில் நடந்த தவறுக்கு வருத்தமோ அல்லது அமைச்சரின் கடிதத்திற்கு ஒப்புதலையோ இதுவரை சென்னை ஐ.ஐ.டி தெரிவிக்கவில்லை.
தமிழ்நாட்டில் இயங்கும் அரசுத்துறைகள் இவ்வாறு இருக்க, காஞ்சிபுரத்தில் இயங்கும் வேத மத சங்கரமடத்தின் பீடாதிபதியான சங்கராச்சியார், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கும் மரபு எங்களுக்கு இல்லை என்று தமிழ் மொழி வெறுப்பு, தமிழின விரோத்தோடு பேசுகிறார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சென்றால் “தமிழ்த்தாய் வாழ்த்து கடவுள் வாழ்த்து பாடல் தான். அதற்கு எழுந்து நிற்கும் அவசியமில்லை.” என்று நீதிபதி உள்நோக்கத்தோடு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் தேசிய கீதத்திற்குக்கூட எழுந்து நிற்கவேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஆனால் ஒரு மரியாதைக்கு மக்கள் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். அப்படி எழுந்து நிற்காதவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் போக்கை இந்திய ஒன்றியம் முழுவதிற்க்கும் பார்ப்பனிய- பனியா அரசான பாஜக ஏற்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்று மரியாதை கொடுங்கள் என்றால் அதென்ன தேசிய கீதமா? கடவுள் வாழ்த்துதானே! என்று ஆதிக்கமனோபாவத்துடன் அணுகும் போக்கு தமிழகத்திலேயே அதிகரித்து வருகிறது. இதை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டுமென்ற தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்திற்கான செயல்பாட்டு வழிமுறைகளை நேற்று வெளியிட்டிருக்கிறது.
அதே போல், கவிஞர் மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் பாட்டில் சில பகுதியை வெட்டிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக பயன்படுத்தப்படுகிறது என்றும், அரசு முழுப்பாடலையும் பாடுவதற்கு உத்தரவிட வேண்டும் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட வலதுசாரி ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதரவாளர்கள் கோரிக்கை வைக்கின்றன.
சுந்தரனார் இயற்றிய மெய்ப்பாடல் கீழே உள்ளது.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
இதில், ஆரிய மொழியான சமஸ்கிருதம் போல் தமிழ்மொழி உலக வழக்கிலிருந்து அழிந்து போகாமல், சிதையாமல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இது, வலதுசாரி ஆர்எஸ்எஸ்-பாஜகவினரின் தமிழ் விரோத சித்தாந்தத்திற்கு எதிரானதாகும். இருந்தும், முழுப்பாடலையும் பாட வேண்டும் என்று கோருவதற்கு காரணம், அதிலுள்ள ஆரியத்திற்கு எதிரான சொல் பயன்பாட்டை வைத்து, மனோன்மணியனாரின் “நீராரும் கடலுடுத்த” பாடலையே தடை செய்துவிட முடியும் என்ற எண்ணத்தினால் தான். அதிகாரப்பூர்வ பாடலில் சில வரிகள் நீக்கப்பட்டிருந்தாலும், பாடல் ஆரியத்திற்கு எதிரான கருத்து உள்ளீடாக உள்ளது என்பதை ஏறக்குறைய அனைவரும் அறிவர். அதனாலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது ஆரிய-பார்ப்பனிய-இந்துத்துவவாதிகள் எழுந்து நிற்காமல் தமிழ் மொழியை அவமதிக்கின்றனர்.
தற்போது, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டிற்கான அதிகாரப்பூர்வ பாடல் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டவுடன், அதனை எதிர்க்க முடியாத காரணத்தினால் முழுப்பாடலை பாட வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதன்மூலம், இனி தமிழ்நாட்டில் இயங்கும் அரசு மற்றும் தனியார்துறை அலுவலக நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயமென்பதும், அப்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் அரசு உறுதி செய்து அதற்கு சட்ட பாதுகாப்பும் கொடுத்திருக்கிறது. இனி, தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய கீதம் ஆதிக்க மனங்களை அடித்து நொறுக்கி தடையின்றி ஒலிக்கட்டும்.