பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டம்

பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்பத்தூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள பாக்ஸ்கான் (Foxconn Technology India Private Limited) நிறுவனம் உலக அளவில் செல்போன் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்திடும் நிறுவனமாகும். இந்நிறுவனம் உலக அளவில் தொழிலாளர் விரோத போக்கிற்காகவும் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம்,   சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) அமைத்திருக்கும் ஆலையில் மட்டும் 15,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் ஒப்பந்த பெண்  தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் தங்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பல விடுதிகள் ஆலையின் சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லியில் அமைந்துள்ள அப்படியான ஒரு விடுதியில் கடந்த புதன்கிழமை (15-12-2021) நச்சுத்தன்மை உடைய உணவு வழங்கப்பட்டதால் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், விடுதி நிர்வாகிகளின் அலட்சியப் போக்கால் அவர்களை 6 மணி நேரம் காலதாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களில் எட்டு பேரின் நிலைமை மிகவும் மோசமாகிய செய்தியை அறிந்த பிற ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை அறிய வேண்டியும், கவனக்குறைவாக இருந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வெள்ளிக்கிழமையன்று (17-12-2021) சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் சிறு குறு தொழில்துறை அமைச்சகத்தின் (MSME) அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை கலைந்து போகக் கேட்டுக் கொண்டனர். ஆனால், “நிறுவனத்தின் மீதும், விடுதி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல், பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் நிலைமையும் தெரியவராத வரை  போராட்டம் தொடரும்” என அறிவித்து 3000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இரண்டு நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த  நிலையில் சனிக்கிழமையன்று (18.12.2021) மாநில அரசு காவல்துறையை கொண்டு பெண் தொழிலாளர்களின்  மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தது.

போராடிய தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் காவல்துறையைக் கொண்டு ஆர்பாட்டத்தைக் கலைத்து, 60க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களையும், 23 ஆண்களையும் காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட 83 தொழிலாளர்களை வழக்குரைஞர்கள் ஏனைய அரசியல் செயல்பாட்டாளர்கள் சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், அப்போராட்டக்களத்திற்கு சென்ற அரசியல் செயல்பாட்டாளர் வளர்மதியை சட்டத்திற்குப்புறம்பாக இரவு நேரத்தில் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த  அராஜகப் போக்கும் நடைபெற்றது.

தங்கள் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களை காவல்துறை தடியடி நடத்தி அவர்களின் மீது வழக்குப்பதியும் தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்தில் இருக்கும் குளறுபடிகளைக் களைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்லாயிரம் கோடிகளை லாபமாகச் சுருட்டும் பன்னாட்டுக் கம்பெனிகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களைக் வன்முறைக் கொண்டு கலைப்பதும், சிறைபிடிப்பதுமான சனநாயக விரோத போக்கை அரசு கையாள்கிறது. மேலும், இவ்விவகாரத்தை ஒரு விபத்து எனும் அடிப்படியில் கடந்து போக முனைகிறது. தற்போது நிகழ்ந்திருப்பதை விபத்து என கூறி கடந்து செல்வது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில் பாக்ஸ்கான்  நிறுவன வரலாற்றில் இது வாடிக்கையாக நிகழக்கூடியதாக உள்ளது. மோசமான பணிச்சூழலுக்கும், உழைப்பு சுரண்டலுக்கும் பாக்ஸ்கான் பெயர் பெற்ற நிறுவனம் ஆகும்.

தொழிலாளர் விரோத போக்கு
தாய்வான் நாட்டைத் தலைமையிடமாக்க கொண்ட இந்நிறுவனம் ஐபோன், ஐபாட், ஜியோமி, நோக்கியா போன்ற நிருவனங்களுக்கு பாக்ஸ்கான் உதிரிப் பாகங்கள் தயாரித்து தருகிறது. சீனா, பிரேசில், இந்தியா, அமெரிக்கா, மலேசியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் என சர்வதேச அளவில் பல கிளைகளைக் கொண்டு மின்னணு மற்றும் உதிரிப் பாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட இந்நிறுவனம் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனமாகும்.

பாக்ஸ்கானின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து போராட்டம். தைவான்.

2012-ம் ஆண்டில் பாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் டெரி கவ் “மனிதர்களும் ஒரு வகையில் விலங்குகள் தான், அந்த வகையில் இந்நிறுவனத்தில் இருக்கும் 10 இலட்சம் விலங்குகளை நிர்வகிப்பது எனக்குத் தலைவலியைக் கொடுக்கிறது.” என்றார். பின்னர் தான் பேசியது தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது என்றார். இதுதான் உலகின் பெரும்பாலான கார்பரேட்டுகளின் தொழிலாளர்களைப் பற்றிய கருத்தாக இருக்கிறது. ஆனால், தொழில் கொள்கையளவிலும் நாங்கள் இப்படித்தான் என்று சொல்லும் அளவிற்கு கார்போரேட்டுகள் செல்வதில்லை.

2010 ஆம் ஆண்டு சீனாவில் பாக்ஸ்கான் நிறுவனத் தொழிலாளர்கள் 14 பேர் மோசமான பணிச் சூழல், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் தற்கொலை செய்து கொண்டனர். அதில் ஒருவர் தொடர்ச்சியாக 34 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து நடைபெறும் தற்கொலைகளால் தூண்டப்பட்டு தாய்வான், சீனா ஆகிய நாடுகளின் 20 பல்கலைக் கழகங்கள் இணைந்து 12 இடங்களில் அமைந்திருக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் 1800  பணியாளர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இரண்டு-மூன்று மடங்கு “கூடுதல் பணி நேரம்” (over time) ஈடுபடுத்தப்படுவது தெரிய வந்தது. மேலும் வயது வரம்புக்குக் கீழே உள்ளவர்களைப் பணியில் அமர்த்தியது, வேலையின்போது ஏற்பட்ட காயங்களை கணக்கிற்குற்படுத்தாமல் அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நிவாரணத்தொகையை கிடைக்காமல் செய்தது ஆகியவை வெளி உலகிற்கு தெரிய வந்தது. இருப்பினும் பாக்ஸ்கான் அசரவில்லை!

ஆப்பில் நிறுவனம் தனது உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அவப்பெயர் தன் மீது வந்து சேரும் என்ற அச்சத்தில் சில தொழிலாளர் நலன் நடவடிக்கைகளை எடுக்குமாறு பாக்ஸ்கானை கட்டாயப்படுத்தியது. இருந்த போதும், தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் அக்கறைக்கொள்ளாமல் தனது ஆலை பணியாளர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுத்திட மாடிக்கு செல்லும் வழிகளை கண்காணிக்க காவலர்களை நியமிப்பது, மனநல மருத்துவர்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்விளைவாக, இன்றுவரை அந்நிறுவனம் சார்ந்த தற்கொலைகளும், தொழிலாளர் சார்ந்த பிரச்சனைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. 2012 ஆம் ஆண்டு சீனாவில் ஒரு பாக்ஸ்கான் நிறுவனத்தில் 150 தொழிலாளர்கள் ஒன்றாகத் தற்கொலை செய்யப் போவதாக அறிவித்து போராட்டம் நடத்தினார்கள். இவ்வாறு உலகெங்கிலுமுள்ள பாக்ஸ்கான் நிறுவன ஆலைகளில்  கடுமையான தொழிலாளர் விரோத போக்கு தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பாக்ஸ்கானில் தற்போது நடந்திருப்பது முதல் தடவை அல்ல.

ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கானை கண்டித்து போராட்டம்

சென்னையில் பாக்ஸ்கான்
2006ஆம் ஆண்டு திருபெரம்பத்தூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) நோக்கியா தொழிற்சாலை வளாகத்தில் ஒரு உதிரிப்பாக உற்பத்தியாளராக தனது இரு உற்பத்தி கிளைகளுடன் பாக்ஸ்கான் சென்னையில் உற்பத்தியைத் துவங்கியது. தொடங்கிய காலத்திலிருந்தே ஊதிய குறைவு, மோசமான பணிச்சூழல் ஆகியவை நிலவி வந்ததால் 2010 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் அனைவரும் 58 நாட்கள் வேலை நிருத்தப்போராட்டம் நடத்தினார்கள். அந்த சமயத்தில் நோக்கியாவின் சரிவை காரணம் கூறி 2015ஆம் ஆண்டு தனது உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால் ஜியோமி போன்ற நிருவனங்களுடன் அதே காலகட்டத்தில் புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. சென்னை ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 1306 தொழிலாளர்கள் நேரடியாக வேலையிழந்தார்கள். அதில் 700 தொழிலாளர்கள் வேறு வழியின்றி தன்னார்வ பணி மூப்பினை (VRS) பெற்றுக் கொண்டனர். மீதமுள்ளவர்கள் அதை ஏற்காமல் வேலை கேட்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும், இங்கே ஆலை மூடப்பட்ட காலத்தில் ஆந்திராவில் ஆலையைத் தொடங்கிடும் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

சென்னையில் ஆலை திறக்கப்படும்போது அதே பணியாளர்களுக்கு வேலை அளிக்கப்படும் என்னும்

மீண்டும் வேலைக்கு சேர்க்க வேண்டி தொழிலாளர் போராட்டம். 2017

உறுதியளிக்கப்பட்டது. ஆனால், 2017ல் மீண்டும் “ரைசிங் ஸ்டார்” என்ற பெயரில் பாக்ஸ்கான் செயல்பட தொடங்கியபோது பழைய தொழிலாளர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை. தொழிற்சங்களுடன் இருந்த நிறுவன தொழிலாளர்களைப் புறக்கணித்துவிட்டு புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமனம் செய்து உற்பத்தியைத் துவங்கியது. புதிதாக சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் இருந்தனர். பழைய தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலையினை வழங்க கேட்டு 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அந்நிறுவனம் அவர்களைக் கை கழுவிவிட்டது. மாநில அரசும் கண்டும் காணாமலும் கடந்து சென்றது. ஒப்பந்தத் தொழிலாளர்களை, பெரும்பான்மையாக பெண்களை, வைத்து ஐபோன் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் பாக்ஸ்கானில் ஆரம்பத்திலிருந்தே இது போன்ற மோசமான பணிச்சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவு தான் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உயிரைக் குடிக்கப் பார்த்த கடந்த வார சம்பவம்.

தமிழ்நாட்டின் பெருநிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்களில் அந்நிறுவனங்கள் அக்கரைக் கொள்வதில்லை. தனியார் நிறுவனம் அதன் லாபநோக்கினை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது. மறுபுறம், மாநில அரசும் தொழிலாளர்களின் கூக்குரலுக்கு செவி மடுப்பதில்லை. கடந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் உற்பத்திக்காக மேலும் 7000 கோடி முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்தபோது, இதனால் மேலும் 7000 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படவுள்ளதாகவும், பாக்ஸ்கான் நிறுவனத்துடன் சாம்சங் போன்ற நிறுவனங்கள் சென்னையை மையப்படுத்தி குவிந்து கொண்டிருப்பதாக அரசு பெருமை பேசியது. ஆட்சி மாறினாலும் இதில் வித்தியாசமில்லை. மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் இங்கு ஆலையை அமைக்க முதலீட்டினை ஈர்த்துவிட்டோம், இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்துவிட்டோம் என பெருமையாக பரப்புரை செய்துவிட்டு, தொழிலாளர் உரிமைகள் ஒடுக்கப்படும் போது கண்டு கொள்ளாமல் இருந்துவிடுகின்றன.

பன்னாட்டு பெருநிறுவனங்கள் இதுநாள் வரை சட்டவிரோதமாக மறுத்து வந்த தொழிலாளர்கள் உரிமைகள், கடைபிடித்த தொழிலாளர் விரோத போக்கு அனைத்தையும் ஒன்றிய மோடி அரசு சட்டபூர்வமாக செய்திட வழிவகுத்துள்ளது. சுதந்திர இந்தியாவில், தொழிலாளர் சட்டத்தை முதன்முறையாக முற்றிலுமாக பெருநிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றி மோடி சட்டம் இயற்றியுள்ளார். பெருநிருவனங்களின் லாபவேட்கைக்காக ஒப்பந்தக் கால வேலைவாய்ப்பு (Fixed Term Employment- FTE), பயிற்சியாளர் ஊக்குவிப்பு (National Employability Enhancement Mission – NEEM) போன்ற புதிய பெயர்களில் கடுமையான உழைப்பு சுரண்டலுக்கான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு இயற்றியுள்ளது. எதிர்வரும் காலத்தில் தொழிலாளர் ஊதியம், உரிமைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்துறை பூங்காக்கள் ஆகியவற்றின் மூலம் சிறப்புப் பொருளாதார நலன்களைப் பெற்று லாபமடையும் பெருநிறுவனங்கள் இம்மண்ணின் மக்களுக்கு என்ன திருப்பி தருகின்றன? இந்நிறுவனங்களை தமிழ்நாட்டில் அமைத்திட மாநில அரசு மானிய விலையில் நிலம், நீர், மின்சாரம், சாலை உள்கட்டமைப்பு வசதி, வரி விலக்கு என அனைத்தையும் ஏற்படுத்தி தருகிறது. மாநிலத்தின் இந்த இழப்புகளை வேலைவாய்ப்புகள் மூலம் ஈடு செய்துவிடலாம் என்று அரசு அறிவிக்கிறது. ஆனால், மாநில அரசின் இந்த சலுகைகளை எல்லாம் உண்டு பெருச்சாளியாக வளரும் இந்நிறுவனங்கள் அம்மாநில மக்களையே நசுக்கி மேலும் சக்கையாக பிழிகிறது. சிறுநீர் கழிக்க நேரம் தராமல்; கர்ப்பிணி பெண்களை நாள் முழுவதும் நின்றபடியே பணி செய்திடும் அரை அடிமைகளாக நடத்துகின்றன.

முதலாளிகள் தங்கள் லாபத்தை தொழிலாளர்களை ஏமாற்றுவதன் மூலமே பெறுகிறார்கள் என்பதை உணர்ந்தும் தொழிலாளர்கள் அனைவரும் வலுவான தொழில் சங்க அமைப்பாக திரளாமல் உதிரிகளாக இருப்பது மிகுந்த வேதனைக்குரிய விடயம். மேலும், பெண் தொழிலாளர்களை  குறைந்த ஊதியத்திற்கு, அமைப்பாக திரளவிடாமல், எதிர்ப்புகளின்றி சுரண்டலாம் என்று முதலாளிகள் அவர்களை அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். அனைத்து தொழிலாளர்களும்  தங்கள் நலன்களை பாதுகாத்துக்கொள்ள அமைப்பாக திரள்வது மிகவும் அவசியம். அது நடந்திடாமல் இன்றைய முதலாளிகளையும் அவர்கள் கட்டளைக்கு ஆடும் ஆட்சியாளர்களையும் எதிர்த்து கேள்வி எழுப்பிட சாத்தியமில்லை. குறிப்பாக, மோடியின் புதிய தொழிலாளர் சட்டத்திருத்தங்களை எதிர்கொள்ள தொழிலாளர்கள் ஒன்று திரள வேண்டியது கட்டாயமாகிறது.

கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், இயற்கை வளம், சமூகம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ள தமிழ்நாடு தனது பொருளாதார கொள்கையை தொடர்ந்து அந்நிய முதலீட்டுகள் மீது அமைப்பது ஏற்புடையதல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் மக்கள் வளங்களை அந்நிய முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் தொழில் கொள்கையை மறுப்பறுசீலினை செய்திட வேண்டிய சூழலை எட்டியுள்ளோம். தமிழர்களின் முதலீட்டில் தொழில் உற்பத்தியை அமைத்திட அரசு கொள்கைகளை மாற்றி அமைத்திட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »