இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி?

இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி?

சமூக நீதி என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல இந்தியாவில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல. அது, “Social justice” என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அரசியல் பொருளாதார சொல்லாடலாக இருக்கக்கூடிய இந்த “Social justice” என்கிற சொல்லை அமெரிக்கத் தத்துவவியலாளர் ஜான் ராவல்ஸ் (John Rawls) என்பவரோடு தான் உலகம் தொடர்புபடுத்துகிறது. அவர் 1971 இல் தனது கோட்பாடு ஒன்றை வெளியிட்டார். Rawls Theory என்று அறியப்படுகிற அதன் சாரம் என்பது “Distribution of Goods in a Society”. அதாவது, சமூகத்தில் உள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். கோட்பாடு ரீதியாக, உண்மையில் இதுதான் சமூக நீதி.

ஆனால், தமிழ்நாட்டில் 1920களிலேயே நீதிக்கட்சியும் பெரியாரும் அந்த சமூகநீதியை தங்கள் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டனர் என்பது தான் நம் வரலாறாக இருக்கிறது. அவர்கள் சமூக நீதி என்ற சொல்லை அப்போது பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம், ஆனால் விகிதாச்சார வகுப்புவாரி  இடப்பங்கீடு உரிமையை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்கள், அவர்கள். சமூக நீதி என்ற சொல் தனக்குள் ஒரு இயங்கியல் தன்மையை கொண்டுள்ளது. அதனால் தான் அது தன்னை தானே ஒரு கோட்பாடாக நிறுவிக்கொண்டது. பெரியாரும் அதை கோட்பாடாக சரியாக உள்வாங்கி இருந்தார் என்பதை நாம் அவரின் பேச்சுக்களில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.

தந்தை பெரியார்

பெரியாரின் மொழியிலே சொல்வதென்றால், “ஒரு பார்ப்பனர் தனது சாதியின் பெயரால் ஒரு செல்வந்தரை அவமானப்படுத்தினால், நான் செல்வந்தர் பக்கம் இருப்பேன். அதே செல்வந்தர் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளியை துன்பப்படுத்தினால், நான் தொழிலாளி பக்கம் இருப்பேன். அதே தொழிலாளி தனது மனைவியைக் கொடுமைப்படுத்தினால், நான் அந்த பெண்ணின் பக்கம் இருப்பேன். அடிமைத்தனம் ஒழிய வேண்டுமென்பதே என் குறிக்கோளே தவிர யார் பக்கம் இருப்பது என்பது அல்ல”.  சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் பக்கம் நிற்பது தான் சமூகநீதி என்று அதை அவர் உள்வாங்கி இருந்தார்.

பெரியாரின் அனைத்து அரசியல் நடவடிக்கைக்கும் அடிப்படை கோட்பாடு இதுதான். அவரை அதுதான்  சுயமரியாதை இயக்கத்தை  தொடங்க செய்தது. “Social Justice” கோட்பாட்டை அறிமுகம் செய்த  ராவல்ஸ் பிறந்த ஆண்டு 1920. அதே ஆண்டில் பெரியார் திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் விகிதாச்சார வகுப்புவாரி உரிமைக் கோரிக்கையை வைத்தார். ஆனால் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது தனிச் செய்தி. அதேபோல 1927இல் Communal GO என்கிற இடப்பங்கீடு அரசானையே தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை மாகாணத்தில்) அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

இதுவரை இக்கட்டுரையில் சொல்லப்பட்ட செய்திகளில் நாம் கோட்பாட்டு ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. அது, சமூக நீதி (Social Justice) என்பது ‘பங்கீடு’ தான் ‘ஒதுக்கீடு’ அல்ல. பெரியாரோ, நீதிக்கட்சி முன்னோர்களோ இட ஒதுக்கீடு கோரவில்லை அவர்கள் கேட்டதும் வென்றெடுத்ததும் விகிதாச்சார இடப்பங்கீடு தான்.

விகிதாச்சார இட பங்கீடு என்றால் என்ன?
  சமூகத்தில் உள்ள கல்வி, வேலை மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் அவரவர் மக்கள் தொகை விகிதத்திற்கு (Proportionate) ஏற்றார்போல் பங்கிட்டுக் கொள்வது தான் இடப்பங்கீடு (Distribution of Seats). தமிழ் நாட்டில் இந்த இடப்பங்கீடு முறை தான் 1951 முதல் சட்ட திருத்தம் நடக்கும் வரை நடைமுறையில் இருந்தது.

இடஒதுக்கீடு என்றால் என்ன?
  இடஒதுக்கீடு என்னும் சொல் இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950ல் நடைமுறைக்கு வந்த பிறகு தான் பயன்பாட்டில் உள்ளது. இந்த சொல் சமூகத்தில் உள்ள கல்வி, வேலை மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் வாய்ப்புகளை அவரவருக்கு போதுமான அளவு ஒதுக்கீடு (Reservation) செய்து தருவதைக் குறிக்கிறது. உண்மையில் அதிகார வலிமை உடைய சிலர் பெரும் பகுதியைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு அதிகாரம் அற்றவர்கள் மீது “பரிவு காட்டி” சிறிது ஒதுக்கி கொடுப்பதை தான் குறிக்கிறது. தமிழ் நாட்டில் அது வரை நடைமுறையில் இருந்த வகுப்புரிமை அரசாணை 1950ல் உச்ச நீதிமன்றத்தால் செல்லாது என்று சொல்லபட்டது. பெரியார் நடத்திய மிக பெரிய மக்கள் போராட்டத்தால் அது மீண்டும் கிடைத்தது. ஆனால், இடப்பங்கீடாக இல்லாமல் இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி இட ஒதுக்கீடாக மாறியது!

இடப்பங்கீடு மற்றும் இட ஒதுக்கீடு எது சமூக நீதி?
நூற்றாண்டு கால வகுப்பு வாரி உரிமை போராட்ட வரலாற்றில் இட ஒதுக்கீட்டின் மூலம் உண்மையில் நாம் வீழ்த்தப்பட்டுள்ளோம். அதிர்ச்சி அடைய வேண்டாம்! நாம் எப்படி வீழ்தப்பட்டோம் என்பதை ஆதாரத்துடன் பார்ப்போம்.

தமிழ் நாட்டில் 1927 முதல் 1950 வரை வெற்றிகரமாக இடப்பங்கீடு அதாவது மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்றார்போல் இடப்பங்கிட்டு (Proportionate distribution of seats) அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 16(4)ல்  இந்த இரண்டு வார்த்தைகளும் வரவே இல்லை. மேலும் அதற்கு பதிலாக ‘போதுமான'(Adequately) மற்றும் ‘இட ஒதுக்கீடு’ (Reservation) என்று அது மாற்றம் அடைந்திருந்தது. இது பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதியாக தான் வரலாறு நமக்கு இன்று பாடம் சொல்லிக் கொடுக்கிறது.

அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 16(4)
Article 16(4) ” Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any Backward Class of citizens which, in the opinion of the state, is not Adequately represented in the services under the state.”

இந்த வார்த்தைகள் நம் வகுப்புரிமை போராட்ட வரலாற்றில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை மக்கள் தொகை அடிப்படையில் இடப்பங்கீடு மற்றும் இட ஒதுக்கீடு புள்ளி விவரங்களை ஆய்ந்து பார்த்தால்  எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

விளக்கப் படம் 1. 1947 ல் அன்றைய சென்னை மாகாணத்தில் வழங்கப்பட்ட வகுப்புவாரி இடப்பங்கீடு விவரங்கள்.

விளக்கப் படம் 2. 1951 இந்திய அரசியல் அமைப்பு சட்ட திருத்ததிற்கு பின்னர்  சென்னை மாகாணத்தில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு விவரங்கள்.

விளக்கப் படம் 1 ல் மக்கள் ஆறு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்ப்பனரல்லாத மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஓரளவேனும் விகிதாச்சார அடிப்படையில் பங்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, விளக்கப் படம் 2ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் காரணமாக சென்னை மாகாணத்தில் வழங்கப்பட்ட வகுப்புவாரி இடப் பங்கீடானது இட ஒதுக்கீடு என்று மாறியது. இந்த சொல் மாற்றம் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய சமூக அநீதியை இழைத்துள்ளதை வி.படம் 1 மற்றும் 2 யை ஒப்பிடுகையில் விளங்கும். இந்த அவலம் தற்போது தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படும் சூழலிலும் தொடர்கிறது.

விளக்கப் படம் 3.  இந்தியளவில் தற்போது நடைமுறையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு விவரங்கள்.

இந்திய அளவில் 1990ல் மண்டல் ஆணைக்குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்த பின்னர் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மண்டல் ஆணையம் தன் அறிக்கையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. ஆனால் அதன் படி வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புகளில் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில சாதியினர் சேர்க்கப்பட்டு மக்கள் தொகை 57% ஆனது.

சிந்தித்து பாருங்கள் 3% உள்ள பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினருக்கு பொதுப்போட்டி என்கிற பெயரில் 50.5% என்பதும்  57% சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வெறும் 27% என்பது எவ்வளவு பெரிய அநீதி (விளக்கப் படம் 3.). ஒரு வேளை சட்டத்தில் விகிதாச்சாரம் என்ற வார்த்தையும் இட பங்கீடு என்கிற வார்த்தையும் இருந்தால் இந்த அநீதி நடந்திருக்குமா? நம் (சூத்திரர்கள்) அனைவருக்கும் இட ஒதுக்கீடு 50% உச்ச வரம்பை மீறக்கூடாது என்று அவர்கள் இதன் அடிப்படையில் தான் தீர்ப்பு எழுதுகிறார்கள். நமக்கு இது போதும் என்று அவர்கள் முடிவு செய்யும் வாய்ப்பைச் சட்ட விதி 16(4) தான் அவர்களுக்கு தருகிறது. பார்ப்பனர்கள் சட்டரீதியாகவே நம் உரிமைகளை பறிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

அய்யா வே. ஆனைமுத்து

இந்த ‘போதுமான’ மற்றும் ‘இட ஒதுக்கீடு’ என்ற சொற்கள் தான்  நம் போராட்ட வரலாற்றில் நம்மை தடுப்பாட்டம் மட்டுமே ஆட வைக்கிறது. நாம் கடைசியாக எதிர்த்து நின்று திருப்பி அடித்தது என்பது முதல் சட்ட திருத்தம் மூலம் பெரியார் அடித்தது தான். அதற்கு பிறகு எல்லா போராட்டங்களும் இருப்பதை தற்காத்துக் கொள்வதற்கான போராட்டங்கள் தான்.  ஏன் என்றால் இந்த சட்டகம் (“போதுமான” மற்றும் “இட ஒதுக்கீடு” போன்ற வார்த்தைகள்) பார்ப்பனர்கள் வைத்தது. பெரியாரோ, நீதி கட்சி முன்னோர்களோ நமக்கு பெற்று தந்தது இடப்பங்கீடு மற்றும் விகிதாச்சாரம் என்பது தான். நாம் அந்த இலக்கை மறந்து விட்டு பார்ப்பனர்கள் உருவாக்கிய மைதானத்தில் நம் இலக்கை அடைய போராடி வருகிறோம். அதை தான் பார்ப்பனர்களும் விரும்புகிறார்கள். இதை உணராமல் தான் நாம் தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை வைத்துள்ளோம் என்று பெருமை பேசுகிறோமா? என்று கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

இந்த சட்ட ரீதியான சதி வலைகளை நாமும் சட்ட ரீதியாகவே தான் முறியடிக்க வேண்டும். அதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவுகளில் அவசியமான திருத்தங்கள் வேண்டும். இது வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம். இது நம் கோரிக்கையை மாற்ற வேண்டிய நேரம். தந்தை பெரியாரின் கோரிக்கையான மக்கள் தொகைக்கு ஏற்ப வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட பங்கீட்டு முறையை நாம் மீண்டும் கேட்போம். பெரியாரியல் ஆய்வாளர் அய்யா வே. ஆனைமுத்து அவர்களின் வழியில் தமிழ் நாட்டின் கோரிக்கையை மாற்றி அமைப்போம்.

இனி, நம் கோரிக்கை இட ஒதுக்கீடு அல்ல விகிதாச்சார இட பங்கீடே!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் “போதுமான” என்னும் சொல்லையும் “இட ஒதுக்கீடு” என்னும் சொல்லையும் நீக்கி அதற்கு பதிலாக விகிதாச்சார மற்றும் இட பங்கீடு என்ற சொற்களை சேர்க்க கோருவோம். அதன் மூலம்தான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.

Leave a Reply

Your email address will not be published.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »