மோடி பிரதமராக பதவியேற்ற மறுநாளில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ‘வன்முறைக்கு தீர்வு காண மணிப்பூர் ஏங்கிக் கொண்டிருக்கிறது’ என ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார். மோடியின் பிம்ப சரிவிற்கும், ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்த நிலைநிறுத்தலுக்கும் இடையேயான மோதலாக இது பார்க்கப்பட்டாலும், மணிப்பூர் பற்றி எரிவதற்கு பின்புலமாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரே மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு தேடுகிறார் என்பது நகைமுரணாக மாறியிருக்கிறது.
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அழகிய மாநிலமான மணிப்பூரை இரண்டு மெய்தி இனவெறி அமைப்புகளே சிதைத்தன. அரம்பை தெங்கோல், மெய்தி லீபுன் என்கிற அமைப்புகளே மணிப்பூரின் வன்முறைக்கு காரணம் என்பது மக்களின் நேரடி குற்றச்சாட்டாக இருக்கிறது. இவை இரண்டையும் வழிநடத்துபவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட நபர்கள்.
பெரும்பான்மை சமூகத்தினரை (இந்து) பாதுகாப்பின்மையாக நம்ப வைக்கும் உணர்ச்சிகளைத் தூண்டி சிறுபான்மையினரே (கிறித்துவர், இஸ்லாமியர்) அதற்கு காரணம் என நச்சுப் பரப்புரைகளை சிறிது சிறிதாக ஊட்டி தங்களது கனவான இந்து தேசத்தைக் கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது ராசுடிரிய சேவா சங்கம் (RSS). வட இந்தியாவில் பஜ்ரங்தள், அனுமன் சேனா, விசுவ இந்து பரிசத் போன்ற இந்துத்துவ மதவெறி அமைப்புகள் ராசுடிரிய சேவா சங்கத்தின் (RSS) முகமூடி அமைப்புகளாக செயல்படுகின்றன. அது போல தமிழ்நாட்டில் இந்து முன்னணி, இந்து மக்கள் இயக்கம், இந்து சேனா போன்ற இந்துத்துவ அடிப்படைவாத இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ்-சின் முகமூடி அமைப்புகளாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இது போன்ற அமைப்புகளே சங்பரிவாரங்கள் எனப்படுகின்றன. மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ்-சின் முகமூடி அமைப்பாக செயல்படுபவையே அரம்பை தெங்கோல், மெய்தி லீபுன் அமைப்புகள்.
மணிப்பூரில் நடந்த வன்முறை வெறியாட்டத்திற்கு மணிப்பூரை ஆளும் பாரதிய ஜனதா கட்சியே காரணம் என மணிப்பூரின் முதல் குக்கி இனப் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான கிம் காங்டே, ‘நியூஸ் கிளிக்‘ இணைய ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் முதல்வரான பைரேன் சிங்தான் மெய்தி இன மக்களுக்கும், குக்கி இன மக்களுக்கும் இடையே பிளவினை உருவாக்கியதாகக் காட்டமாகக் கூறினார். மணிப்பூரில் மே 3, 2023-ந் தேதிக்குப் பின்பு நடந்த வன்முறையின் போது தனது உயிரைக் காக்க இவரும் வீட்டை விட்டு தப்பியோடி இருக்கிறார்.
மேலும் அவர், மணிப்பூரில் வன்முறை துவங்கிய மே 3- 2023 அன்று, அரம்பை தெங்கோல் அமைப்பினர் தங்களின் சீருடையான கருப்பு ஆடை, சிவப்பு பேட்ச் அணிந்து தங்கள் கும்பலை வழிநடத்த, அக்கும்பல் பல வீடுகளை எரித்ததாகவும், பலரைக் கொன்று கொண்டே வருவதாகவும் மக்கள் அவரிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார். தனது பெற்றோரைக் காக்க ஓடி வந்த உறவினர் ஒருவரை, எரிந்து கொண்டிருந்த வீட்டிற்குள் வெறியுடன் அந்த கும்பல் தூக்கி எறிந்ததைத் தானே பார்த்ததாகவும் சொல்கிறார்.
குக்கி மக்களைப் பற்றி பர்மிய குடியேறிகள், போதைச் செடி வளர்ப்பவர்கள் எனப் பரப்பியவரே ஆர்.எஸ்.எஸ்-காரரான மணிப்பூர் முதல்வர்தான் எனக் குற்றம் சாட்டுகிறார். இந்த வன்முறை கும்பலுக்கு அரசாங்கத்தின் துணையின்றி நிதியும், ஆயுதமும் எப்படிக் கிடைக்க முடியும்? இந்த இரு அமைப்புகளும் ஆர்.எஸ்.எஸ்-சின் படைப்புகள் என்பதே மக்களின் கருத்தாக இருப்பதாக அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
அரம்பை தெங்கோல் அமைப்பு, 2000-ம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டு செயல்படுகிறது. இதன் தலைவராக காரௌன்ங்கம்பா குமன் என்பவர் இருக்கிறார். கருப்பு டீசர்ட்டுடன் கும்பலாக இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிவது இவர்களின் அடையாளம். தங்களின் பழமையான சனாமகி வழிபாட்டை மீளக் கட்டமைக்க நினைக்கும் கலாச்சார அமைப்பாக சொல்லிக் கொண்டாலும், இளைஞர்களைத் திரட்டி இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் கொள்கைகளை ஊட்டும் அமைப்பாகவே இது இருக்கிறது. பெரும்பான்மையினரான நம்முடைய மெய்தி இனத்தின் வளங்களை வந்தேறிகளான குக்கி இன சிறுபான்மையினர் ஆக்கிரமிக்கிறார்கள் என்னும் நச்சுப் பிரச்சாரத்தை செய்து, மெய்தி இன இளைஞர்களிடம் தன்னினத்திற்கு ஆபத்து என்னும் கருத்தாக்கத்தை உருவாக்கி, அதிகப்படியானவர்களை இணைத்துக் கொண்ட அமைப்பே அரம்பை தெங்கோல்.
மெய்தி லீபுன் அமைப்பு பிரமோத் சிங் என்னும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு குக்கி இனத்தை சட்டவிரோத குடியேறிகள், போதை செடி வளர்ப்பவர்கள் என பிரச்சாரம் செய்து மெய்தி இளைஞர்களுக்கு இனவெறி ஊட்டும் அமைப்பாக செயல்படுகிறது. மேலும் இதிலுள்ளவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இம்பாலில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் இருப்பதாக தெரிவிக்கிறார். அவர்களுக்கு ‘லலோய்ஸ்‘ என்று பெயரும் வைத்து அழைக்கிறார். ‘ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசியவாத இயக்கம், எங்கள் பணியும் தேசியவாதத்துடன் இணைந்துள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்துள்ளோம் என்பதில்லை’ என்று ஆர்.எஸ்.எஸ் முகமூடியை மறைக்க மழுப்பலாகத் தெரிவித்தவர்.
இந்த அமைப்புகளின் தலைவர்கள் இருவரும் மணிப்பூர் முதலமைச்சருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. மூவரும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் இம்பாலில் கடந்த சில ஆண்டுகளாக, பூர்வீகமாய் இருக்கக் கூடிய குடியமைப்புகளின் செயல்பாடுகள் குறைக்கப்பட்டு, இந்த இனவெறி அமைப்புகளான அரம்பை தெங்கோல், மெய்தி லீபுன் அமைப்புகளின் கருத்துக்களே மணிப்பூர் மெய்தி மக்களிடம் திணிக்கப்படுவதாகவும், அது ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கைகளுக்கு இணையானதாக செயல்படுகிறது என்றும் வழக்கறிஞரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான பப்லு லொய்டங்பம் என்பவர் தெரிவிக்கிறார்..
இது இரு இனங்களின் மோதல் என்று கூறப்பட்டாலும், குக்கி இன மக்களின் கிறித்துவ தேவாலயங்கள் மட்டுமல்ல, மெய்தி இன மக்களின் கிறித்துவ தேவாலயங்களும் மெய்தி வன்முறைக் கும்பலால் எரிக்கப்பட்டன. இனவெறியுடன் மதவெறியும் கொண்ட இந்த கும்பல் 36 மணி நேரத்திற்குள் 249 மெய்தி தேவாலயங்களை அழித்துள்ளது என இம்பாலில் உள்ள கிறித்துவப் பாதிரியார் 2023, ஜூன் மாதமே வெளிப்படுத்தியுள்ளார். மெய்தி – குக்கி மக்கள் இடையேயான மோதல் என்றால் மெய்தி வன்முறைக் கும்பல் ஏன் மெய்தி தேவாலயங்களையே எரிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். இந்த ஆர்.எஸ்.எஸ் முகமூடி அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ் கற்றுக் கொடுத்த மதவெறியுடன், இனவெறியையும் சேர்த்து மெய்தி இனம் வழிபடும் கிறித்துவ தேவாலயங்களையுமே எரித்து மகிழ்ந்திருக்கின்றன.
பழங்குடியினரின் ஒற்றுமை ஊர்வலம் நடந்த மே 3 அன்று, அவ்வூர்வலத்தில் புகுந்த இந்த ஆர்.எஸ்.எஸ்-சின் கிளைக் கும்பல்களால்தான் கலவரமே துவங்கி இருக்கிறது. அமைதியாய் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து விட்டு வந்த பேரணியில் மெய்தி இனவெறிக் கும்பல் வந்து அவர்களை வம்பிழுத்து சண்டையிட்டிருக்கிறது. சுராசந்த்பூர் பகுதியில் குக்கி மக்கள் பெரிதும் மதிப்புடையதாகக் கருதும் ஆங்கிலோ – குக்கி போர் நூற்றாண்டு வாயிலை எரித்தது. இதைத் தொடர்ந்தே வன்முறை கட்டுக்கடங்காமல் பரவியது. 200க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று 54000 மக்களை ஏதிலியாக்கிய கொடுஞ்செயல் நடந்தேறியது. பல ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும், தோட்டாக்களும், நவீன ரக ஆயுதங்களும் வன்முறைக் கும்பல்களால் காவல்துறைக் களஞ்சியங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்றன.
“இது தான் சரியான தருணம் மலைப்பகுதியில் இருக்கும் நமது பாரம்பரிய எதிரிகளை (குக்கி) அழித்து விட்டு நிம்மதியாக வாழ்வோம்” என ஏப்ரல் 28ந் தேதியே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மெய்தி லீபுன் தலைவரான பிரமோத் சிங். இதனை குக்கி மக்களின் மேல் வன்முறையைத் திட்டமிட்டு தூண்டியதற்கான ஆதாரமாக குக்கி மாணவ அமைப்பு(KSO) உட்பட 5 பழங்குடி மாணவ அமைப்புகள் ஜூன் 13ந் தேதி காவல் துறையில் புகார் அளித்தது. மெய்தி லீபுன், அரம்பை தெங்கோலுடன் சேர்ந்து வன்முறையைத் தூண்டியதாக மாணவர் அமைப்புகள் புகாரில் கூறியிருந்தன.
வன்முறைத் துவங்கப்பட்ட மே 3 அன்று இரவு, தாக்குதல் தொடங்கும் முன்பே இம்பாலில் இருந்த குக்கி மக்களின் வீடுகளைத் தாக்குவதற்கு ஏதுவாக அடையாளப்படுத்த முன்கூட்டியே சிவப்பு நிற சாயம் தெளித்திருந்தனர் எனவும் புகாரில் தெரிவித்தனர். அரம்பை தெங்கோல் அமைப்பின் சீருடையான கருப்பு டீ-சர்ட் கலவரக்காரர்கள் அணிந்திருந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் கூறியதாக விவரித்தனர். இவ்வளவு விரிவாக முன்னாள் மாணவர் அமைப்புகள் புகாரளித்தும் 20 நாள் கழித்து ஜூலை 8-ந் தேதியே காவல் துறை இதன் மீது முதல் தகவல் அறிக்கையை(FIR) பதிவு செய்தது. இரு குழுக்களுக்கிடையில் பகைமையைத் தூண்டுதல், குற்றவியல் சதி போன்ற பிரிவின் கீழ் பிரமோத் சிங்கின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
‘தி வயர்‘ இணைய ஊடகத்தின் கரண் தப்பாருடன் நடந்த நேர்காணலில் மெய்தி லீபுனை வழிநடத்தும் பிரமோத் சிங் குக்கி இனத்தின் மீது உமிழ்ந்த வன்மங்களே தெள்ளத் தெளிவாக அவரின் இனவெறியை அம்பலப்படுத்தியது. அரசாங்கத் தரவுகளையே பொய்யென்று கூறினார். குக்கி இனத்தை துடைத்தழிப்போம் என்கிறார்.
இந்த இரு இனவெறி அமைப்புகளாலும் வழிநடத்தப்பட்ட மெய்தி வன்முறைக் கும்பல் எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கொடூரங்களை குக்கி இளைஞர்கள் மேல் நடத்தியிருப்பது இணைய முடக்கம் நீக்கப்பட்ட பின்புதான் தெரிய வந்தது. குக்கி இனத்தைச் சார்ந்தவர்கள் பலரைக் காட்டுமிராண்டித்தனமாக கொன்றுள்ளனர். டேவிட் தீக் என்கிற ஒரு குக்கி இளைஞரின் கண்களைப் பிடுங்கி, உடல் உறுப்புகள் அனைத்தையும் உயிருடனே துண்டு துண்டாக வெட்டி, தலையை மட்டும் உயிருடன் இருக்கும் போதே மூங்கில் வேலியில் தொங்க விட்டு சென்றது இந்த காட்டுமிராண்டிக் கும்பல். இதற்கெல்லாம் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் விசாரணை தொடர்ந்ததே தவிர எவரும் கைது செய்யப்படவில்லை.
பெண்கள் மீதாக நிகழ்த்தும் பாலியல் வன்முறையை வெற்றியாகக் கருதுவது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் குணம் என்பது குஜராத் கலவரத்தின் போது இஸ்லாமிய பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளே சான்றாக இருக்கிறது. அதே போலவே மணிப்பூரிலும் குக்கி இனப் பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தியிருக்கிறது இந்த வன்முறைக் கும்பல். மே 4ந் தேதி இரு குக்கி இனப் பெண்களை ஆடைகளற்று இந்த கும்பல் இழுத்துச் சென்றதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. இது குறித்து மணிப்பூர் முதல்வரிடம் கேட்ட பொழுது, இதே போல் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடக்கின்றன எனக் கூறியது மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. பெண்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட 11 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவாகியுள்ளதாக காவல்துறை கூறுகிறது. மேலும் இதையெல்லாம் விட அதிகபட்சமான கொடூரமாக ஒரு தாயையும், குழந்தையும் சேர்த்து மருத்துவ அவசர ஊர்தியில்(Ambulance) வைத்து எரித்து மகிழ்ந்திருக்கிறது இந்த இனவெறிக் கும்பல்.
சட்டவிரோத குடியேறிகள் என்பதே குக்கி இனத்தவர் மீது இந்த மெய்தி இனவெறிக் கும்பல் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால் தரவுகளின் அடிப்படையில் 1901-லிருந்து 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 110 வருடங்கள் கழித்தும் 2% கீழ் தான் குக்கி இனத்தவரின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் இருக்கிறது.
போதைக் கடத்தல்காரர்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு. முதல்வரான பைரேன் சிங்கே ஒரு போதைப் பொருள் கடத்தல் குற்றவாளியை விடுவிக்க ஒரு பெண் காவல்துறை அதிகாரியான துனோஜம் பிருந்தாவிற்கு கொடுத்த நெருக்கடிகளை அவரே அம்பலப்படுத்துகிறார். மேலும் ஆரம்பை தெங்கோல் மெய்தி வீடுகளை எரித்ததாக குற்றம் சாட்டிய பிருந்தாவின் வீடு எரித்து சேதப்படுத்தப்பட்டது. மெய்தியின் ஆளும் தரப்பும், அதிகார மட்டமும் இணைந்து நடத்தும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு வாழ்வாதாரத்திற்காக போதைச் செடி வளர்க்கும் சில குக்கியின் ஏழை மக்களைக் கொண்டு மொத்த குக்கி இனத்தையும் இந்த குற்றச்சாட்டிற்கு பலிகடாவாக்கினார்கள்.
மேலும் மணிப்பூர் தலைநகரான மெய்திகள் வாழும் பகுதியில்தான் அனைத்து வளர்ச்சிக் கூறுகளும் இருக்கின்றன. இருப்பினும் இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ் கிளைக் கும்பல்களும் ’குக்கி’ இனத்தை மலைப்பகுதியிலிருந்து விரட்டுவதற்காக போலியான குற்றச்சாட்டுகளைப் பின்னுவதற்கு பின்னணி காரணம் இல்லாமல் இல்லை. மலைப் பகுதிகளில் எண்ணற்ற கனிம வளங்கள் இருக்கின்றன. அதை ஆக்கிரமிக்கத் துடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு ஏதுவாக மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கால் சட்டத் திருத்தங்கள் உருவாக்கப்படுகிறது. அதற்கு அடியாட்களாக இந்த இரண்டு மெய்தி இனவெறிக் கும்பல்களும் குக்கி மக்கள் மீது வெறுப்புணர்வை கட்டமைக்கும் வழிகளில் ஈடுபடுகின்றனர். இந்த வலைப்பின்னலை அறியாத மெய்தி இளைஞர்களும் தன்னினத்தின் மீதான இனப்பற்று என நினைத்து இந்தக் கும்பலில் கைக்கோர்க்கின்றனர்.
“எங்கள் மகள்கள் மீண்டும் வன்புணர்வு செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் குழந்தைகள், அப்பாவி தாய்மார்கள் மீண்டும் எரிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் மகன்கள், மகள்கள் சமூக வலைதளக் கருத்துகளுக்காக கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. சனநாயகத்தின் கீழ் சர்வாதிகாரத்தை விரும்பவில்லை. அரம்பை தெங்கோல், மெய்தி லீபுன் போன்ற தீவிரவாதிகளிடமிருந்து எங்களைக் காத்துக் கொள்ள தனி நிர்வாகமே தீர்வு, தனி மாநிலமே தீர்வு” – என்பதே குக்கி போராளிகளின் எண்ணமாக இருக்கிறது. குக்கி சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
“ஜெர்மனியின் ஹிட்லர் தன் சமூகம் மட்டும் கலாச்சார தூய்மையை காப்பாற்ற வேண்டிய தன் நாட்டில் இருந்த செமிட்டிக் இனத்தின் யூதர்களை அடியோடு அழித்தது உலகையே அதிர வைத்தது. இங்கு மிக உச்சகட்ட இனப்பற்று தென்படுகிறது. இந்துஸ்தானத்தில் இருக்கும் நாம் இந்த சிறந்த செயலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் பயனடைய வேண்டும்” – என்றவர் ஆர்.எஸ்.எஸ்-சின் நிறுவனரான கோல்வால்கர். மணிப்பூரில் நிகழ்ந்து கொண்டிருப்பதும் இதுதான். மெய்தி இனவெறிக் கும்பல் குக்கி மக்களை இனவழிப்பு செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குக்கி மக்களின் கோரிக்கைகளே நியாயமானதாக இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் காலூன்றும் இடம் வருங்காலப் பேரழிவுகளின் இருப்பிடம் என்பதை மணிப்பூரின் சிதைவு நமக்கு சொல்லியிருக்கிறது. சிறுபான்மையின மக்கள் மீது வெறுப்புணர்வை உமிழ்வதை செயல்திட்டமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையே சங்பரிவாரக் கிளை அமைப்புகள். முகமூடிகள் பலவானாலும் முகம் ஒன்று தான். இனத்தால், சாதியால், மதத்தால் மக்களைக் கூறு போட்டு தங்களது இந்து தேசம் அமைக்கும் சித்தாந்த கனவை அடைய விரும்புவதே ஆர்.எஸ்.எஸ்-சின் முகமாக இருக்கிறது. காந்தியார் கொலையிலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் தூவப்படும் வன்முறை வரை வரலாறு ஆர்.எஸ்.எஸ்-சினை அம்பலப்படுத்திக் கொண்டே இருந்தும் வெறுப்புணர்வை பற்ற வைத்து வளர்ந்து கொண்டேயிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் கிளைகள்.
ஆர்.எஸ்.எஸ்-சையும், அதன் கிளைகளையும் வேரோடு சாய்க்க வேண்டிய தேவையை ஒவ்வொரு வன்முறைகளும் சொல்லிக் கொண்டிருக்கிறது. மணிப்பூர் வன்முறைகளும் இதையே உணர்த்தி இருக்கிறது. ஆனால் மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு காண ஏங்குகிறது என்று மோகன் பகவத் சொல்வது, வீட்டையும் கொளுத்தி விட்டு அணைப்பதற்கு தண்ணீரை ஊற்றுவதற்கு சமமானதாக இருக்கிறது.